Press "Enter" to skip to content

கேப்பிட்டல் வன்முறை: 3ஆம் உலக நாடுகளோடு ஒப்பிடப்படும் அமெரிக்கா

  • வினீத் கரே
  • பிபிசி செய்தியாளர்

அமெரிக்க நாடாளுமன்ற கட்டடமான கேப்பிட்டல், டிரம்பின் ஆதரவாளர்களால் சில தினங்களுக்கு முன் தாக்கப்பட்டது. இந்த சம்பவம் மூன்றாம் உலக நாடுகளோடு அமெரிக்காவை ஒப்பிடச் செய்திருக்கிறது.

“டொனால்ட் டிரம்ப் மூன்றாம் உலக நாடு அல்லது கம்யூனிஸ சர்வாதிகாரி போல நடந்து கொள்கிறார். வாக்குகளை எண்ணி முடிப்பதற்கு முன்பே தான் வெற்றி பெற்றதாகக் கூறுகிறார்” என ஒரு ட்வீட் பதிவு கூறியது.

கடந்த ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி நடந்த அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை, பல நாட்களாக அதிபர் டிரம்ப் ஏற்றுக் கொள்ளாதது பலராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் மோசடி நடந்திருப்பதாக அதிபர் டிரம்ப் கூறியதை, அவரைப் பின்பற்றக் கூடியவர்களும், ஆளும் குடியரசு கட்சி உறுப்பினர்களும் வலுவாக நம்பினார்கள்.

அமெரிக்காவில் அரசியல் ரீதியாகவும் கருத்தியல் ரீதியாகவும் பிரிவினைகள் இருப்பதன் உச்சம் தான் கடந்த புதன்கிழமை நடந்த தாக்குதல்.

இந்த நேரத்தில் “மூன்றாம் உலக நாடுகள்” என்கிற சொல் மீண்டும் எழத் தொடங்கியிருக்கிறது. பொதுவாக மூன்றாம் உலக நாடுகள் என்றால், அந்த நாடுகள் இருக்கும் அமைப்புகள் குழப்பத்திலும் வலுவற்றதுமாக இருக்கும். குழப்பமான ஆட்சிகள் தொடர்ந்து மாற்றம் கண்டு வரும்.

“இதில் தேசப் பற்று எனக் கூறிக் கொள்ள ஒன்றுமில்லை. இது மூன்றாம் உலக நாடுகள் பின்பற்றும் வழக்கம். இது அமெரிக்க ஆட்சிக்கு எதிரானது” என ஃப்ளோரிடாவின் செனட்டர் மார்கோ ரூபியோ தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

மூன்றாம் உலக நாடுகள் என்ற சொல் அத்தனை மோசமான வார்த்தையா?

அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தில் நடந்த வன்முறைப் படங்களைப் பார்த்துவிட்டு “மூன்றாம் உலக நாடுகளில் கூட இப்படி எல்லாம் நடக்காது. நான் பாகிஸ்தான் தேர்தலைப் பார்த்திருக்கிறேன், தேர்தலின் போது மக்கள் கொல்லப்படுவார்கள். தேர்தலில் மோசடி நடந்திருக்கிறது, அங்கு அப்படித் தான் தேர்தல் நடக்கும்” என எழுதி இருந்தார் ஆதிஷ் தசீர்.

“நான் மூன்றாம் உலக நாடுகளில் தான் வளர்ந்தேன். ஆனால் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அமெரிக்காவில் நடந்ததைப் போல அதிகாரம் கைமாறாது என என்னால் உறுதியாகக் கூற முடியும்” என மார்கோ ரூபியோவின் ட்வீட்டுக்கு பதிலளித்திருந்தார் ஸ்ருதி ராஜகோபாலன்.

“தயவு செய்து இந்த ஒப்பீடுகளை நிறுத்துங்கள்” என மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த ஒருவர் ட்விட்டில் குறிப்பிட்டிருந்தார்.

பனிப்போர் காலத்தில் எந்த பக்கமும் அணி சேராமல் இருந்த நாடுகளைத் தான், மூன்றாம் உலக நாடுகள் என்றார்கள். ஆனால் அது தற்போது வளர்ந்து வரும் நாடுகள், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளைக் குறிப்பிடுவதாக `மூன்றாம் உலக நாடுகள்` என்கிற சொல் பயன்படுத்தப்படுகிறது.

மேலை நாடுகளைப் போல நாகரிகமான அரசுகள் இல்லாத, ஒரு நிலையற்ற, அடிக்கடி அரசியல் சூழ்ச்சி, ஆட்சிக் கவிழ்ப்பு போன்றவைகள் நடக்கும் நாடுகளையும் மூன்றாம் உலக நாடுகள் என அழைக்கிறார்கள்.

அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளில் இது போன்ற பிரச்சனைகள் உச்சம் தொட்டதில்லையா?

Donald Trump

100 ஆண்டுகளுக்கு முன், பெரும்பாலான மேற்கத்திய நாடுகள் கலவரங்களும், மோசமான ஆட்சிக் கவிழ்புகளும் நிகழ்ந்ததாக, அமெரிக்காவில் பிறந்த, ஜெருசலேம் போஸ்ட் என்கிற பத்திரிகையின் ஆசிரியர் சேத் ஜே.ஃப்ரான்ட்ஸ்மென் ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறார்.

“ஐரோப்பிய நாடுகளில் 1920 மற்றும் 1930-களில் நிலவிய குழப்பங்கள் தான் உலகப் போருக்கு வித்திட்டன. கூட்டங்கூட்டமாக குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டனர். அதே காலகட்டத்தில் அமெரிக்காவிலும் தொடர்ந்து வன்முறைகளும் தீவிரவாத நடவடிக்கைகளும் தலையெடுத்திருந்தன” என தன் கட்டுரையில் குறிப்பிடுகிறார் சேத்.

1971ஆம் ஆண்டில் தான் சுவிட்சர்லாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. 1978இல் தான் ஸ்பெயின் ஜனநாயகத்தின் பக்கம் திரும்பியது. கிரீஸ் நாட்டை கர்னல்கள் தான் 1974-ம் ஆண்டு வரை ஆட்சி புரிந்தார்கள். 1990-களில் தான் வடக்கு அயர்லாந்தில் நடந்த அரசியல் வன்முறைகள் ஒரு முடிவுக்கு வந்தன. 1990 கால கட்டங்களில் தான் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஜனநாயகம் மலர்ந்தது எனவும் குறிப்பிடுகிறார்.

அமெரிக்காவில் நடந்த வன்முறை சம்பவத்தால், அந்நாட்டை எளிதில் மூன்றாம் உலக நாடுகள் போல் நடந்து கொண்டது என குறை சொல்ல முடியும்.

கேப்பிட்டலைப் பாதுகாக்கும் வீரர்கள்

அமெரிக்கா பொதுவாகவே மனித உரிமைகள், தொழில்முறையாக நடந்துகொள்வது, ஜனநாயக பண்புகளைப் பின்பற்றுவது போன்ற விஷயங்களை மற்ற நாடுகளுக்கு போதிக்கும்.

ஆனால் சமீப காலங்களில் ஜார்ஜ் ஃப்ளாய்ட், ப்ரெயோனா டெய்லர் போன்றவர்களின் மரணத்துப் பிறகு `கருப்பின மக்களின் உயிர் முக்கியம்` என மக்கள் போராடத் தொடங்கினர். அப்போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் மீது கடுமையாக நடந்து கொண்டதற்கு அமெரிக்க காவல் துறையினர் விமர்சனத்துக்குள்ளாயினர்.

ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க காவல் துறையினர் பல நூறு பேரை சுட்டுக் கொல்கின்றனர். அதில் வெகு சில வழக்குகளில் மட்டுமே குற்றம் செய்த காவல் துறை அதிகாரி தண்டனை பெறுகிறார்.

கடந்த 2019-ம் ஆண்டு ஒரு கருப்பினப் பெண்ணின் படுக்கை அறை ஜன்னல் வழியாக சுட்டுக் கொல்லப்பட்டார். அந்தப் பெண் நலமாக இருக்கிறாரா? எனப் பார்க்கச் சென்ற காவல் துறை அதிகாரியே சுட்டுக் கொன்றது குறிப்பிடத்தக்கது.

அதே போல ஒரு கருப்பின ஆண், ஒரு காவல் துறை அதிகாரியால் பல முறை சுட்டுக் கொல்லப்பட்டார். அது சொந்தக் காரணங்கள் எனக் கூறப்பட்டது.

கேப்பிட்டல்

பெரும்பாலும் வெள்ளையினத்தைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான டிரம்பின் ஆதரவாளர்கள், அமெரிக்க நாடாளுமன்றத்தின் உட் பகுதியைச் சூரையாடி இருக்கிறார்கள், அதன் பக்கச் சுவர்கள் வழியாக ஏறிக் குதித்திருக்கிறார்கள், ஜன்னல்களை உடைத்திருக்கிறார்கள், வெள்ளை மாளிகையில் நிதானமாக உலவினார்கள். இவர்கள் மீது காவல் துறை என்ன நடவடிக்கை எடுத்ததார்கள் என்பதை ஒப்பிட்டுப் பாருங்கள்.

ஒரு குறிப்பிட்ட இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் பாதுகாக்கப்படுவகிறார்கள், மற்ற இனக் குழுவைச் சேர்ந்தவர்கள் அந்த அளவுக்கு பாதுகாக்கப்படுவதில்லை என்கிறார் தசீர்.

ஜெஸ்ஸி ஜேம்ஸ் தன் முகத்தை டிரம்புக்கு ஆதரவான வாசகங்களைக் கொண்ட பேனர்களைக் கொண்டு மூடிக் கொண்டார். இவர் சமீபத்தில் நடந்த கேப்பிட்டல் கட்டட வன்முறையின் போது சம்பவ இடத்தில் இருந்தார். ஆனால் தான் எந்த வித அசம்பாவிதங்களையும் செய்யவில்லை என்கிறார் ஜேம்ஸ்.

கேப்பிட்டல் கட்டடத்தின் படிக்கட்டில் நின்று கொண்டிருந்தோம். அங்கு நாங்கள் நிற்கக் கூடாது என அறிவுறுத்தக் கூட யாரும் இல்லை என்கிறார் ஜேம்ஸ். தேசிய பாதுகாப்புப் படையினரைக் கேட்டால், நாங்கள் அங்கு இருந்தோம், இங்கு இருந்தோம், நாங்கள் அவர்களைக் காணவில்லை என விளக்கம் கொடுக்கிறார்கள்.

சமூக செயற்பாட்டாளர்களோ, அமெரிக்க காவல் துறையினர் செய்வது இரட்டை நிலைப்பாடு என விமர்சிக்கிறார்கள். அதை மூன்றாம் உலக நாடுகளும் கவனித்துக் கொண்டு இருக்கின்றன.

அபர்ணா பாண்டே

இதுவே, ஒர் கருப்பினத்தைச் சேர்ந்தவர், அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒரு கண்ணாடியை உடைத்திருந்தால் கூட, காவல் துறை & தேசிய பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகள் வேறு மாதிரி இருந்திருக்கும். அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடம் தாக்கப்பட்டது எல்லாம் ஒரு கந்துடைப்பு தான். அமெரிக்காவில் பிரிவினை வாதம் வலுத்துவிட்டது. இரு பிரிவினர்களுக்கிடையில் ஒரு ஆழமான கோட்டை கிழித்துவிட்டார்கள் என்கிறார் குடியரசு கட்சியைச் சேர்ந்த சஹப் கர்னி.

அமெரிக்க நாடாளுமன்றத் தாக்குதல், வாஷிங்டன் டி சி நகரத்தின் பிம்பத்தை நிர்ணயிக்குமா? என நேஷனல் ஜியாக்ராஃபி பத்திரிகையில், ரானியா அபோசெய்தி என்பவர் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

பெங்காசி, பெய்ரூட், பொகோட்டா போன்ற நகரங்கள் அடிக்கடி அரசியல் பிரச்சனைகளுக்கு உள்ளாகும். அந்த கசப்பான சம்பவங்கள் தான், அந்த நகரத்தை விவரிப்பவைகளாக இருக்கும். இந்த பட்டியலில் தற்போது வாஷிங்டன் டி சி நகரமும் சேர்ந்துவிடுமா? எனக் கேள்வி எழுப்புகிறார் ரானியா.

“ஒரு சிலரின் மோசமான செயல்களால் அனைத்து வெள்ளை அமெரிக்கர்களும் கலகக்காரர்களாகக் கருதப்பட வேண்டுமா? சில வெள்ளையின மக்கள் செய்த தவறுக்காக, மற்ற வெள்ளையின அமெரிக்கர்களை மன்னிப்பு கேட்கச் சொல்ல முடியுமா?” எனவும் கேள்வி கேட்கிறார் ரானியா.

அதிபர் தனது சொந்த கட்சியின் மீது அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்தார், அதே கட்சியைச் சேர்ந்த துணை அதிபர், அமெரிக்க அதிபர் தேர்தலின் முடிவுகளை அறிவிக்க உதவிக் கொண்டிருந்தார். இது நடந்து கொண்டிருந்த போது பார்க்க மோசமாக இருந்தது. அமெரிக்க அரசமைப்பின் மீதான நம்பிக்கையைக் குறைக்கிறது என்கிறார் ஆதிஷ் தசீர்.

“உலக அளவில் ஜனநாயகம் எல்லா இடங்களிலும் உடைந்து சிதறக் கூடிய நிலையில் தான் இருக்கிறது” என ஹட்சன் நிறுவனத்தின் அபர்னா பாண்டே என்னிடம் கூறினார்.

“பல வருடங்களுக்கு முன், அமெரிக்காவின் நட்சத்திர அதிபர்களில் ஒருவரான பெஞ்சமின் பிராங்க்ளினிடம், அமெரிக்கா என்றால் என்ன? எனக் கேட்கப்பட்டது. உங்களால் அமெரிக்காவை வைத்திருக்க முடியுமென்றால் அது ஒரு குடியரசு என்றார் முன்னாள் அதிபர்”.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »