Press "Enter" to skip to content

பெண்ணுரிமைக்காகப் போராடும் ஆண்கள் ஓரங்கட்டப்படுகிறார்களா?

பாலின சமத்துவத்தை ஆதரிப்பதாக பல ஆண்கள் கூறுகின்றனர் – அதற்கு அவர்கள் அதிகம் உதவி செய்யாதது ஏன்? “ஆண் பெண்ணியவாதிகள்” என தங்களை கூறிக்கொள்பவர்கள் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண விரும்புகின்றனர்.

யூஜீன் ஹங் பெருமைக்குரிய பெண்ணியவாதி.

கலிபோர்னியாவில் கணித ஆசிரியராக இருக்கும் அவர், 14 ஆண்டுகளுக்கு முன்பு தனது மூத்த மகள் பிறந்தபோது, பெண்களுக்கு இந்த உலகம் எப்படி இருக்க வேண்டும் என்ற சிந்தனையில் “தீவிரம் காட்டினார்.”

கல்லூரி நூலகத்தில் இருந்து தங்கள் வீட்டிற்கு பாதுகாப்பாக நடந்து செல்ல தன்னுடைய பெண் சகாக்கள் தயங்கும் நிலை குறித்து அவர் யோசித்தார்.

“அந்தப் பெண்கள் அதை (பாதுகாப்பற்ற உணர்வை) சமாளிக்க வேண்டியிருந்தது. எனக்கு அந்த நிலை கிடையாது. எனக்கு ஏராளமான சாதகங்கள் இருந்தன. அதனால் மற்ற பிரச்னைகள் பற்றி நான் கவலைப்படாமல் இருந்தேன்” என்று பிபிசியிடம் ஹங் கூறினார்.

“சமூகத்தில் ஓர் ஆண் என்ற முறையில், அதை நான் இயல்பானதாகவே எடுத்துக் கொண்டேன்” என்றார் அவர்.

`பெண்ணியவாதி தந்தை’

அதை உணர்ந்து கொண்டதை அடுத்து, பெண்களின் உரிமைகளுக்கான போராளியாக அவர் மாறினார். பெண்களுக்கு அதிகாரம் கிடைக்கச் செய்வதற்காக Feminist Asian Dad என்ற வலைப்பூ தளத்தை அவர் தொடங்கினார்.

பெண் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் தந்திருக்கும் முலான் என்ற டிஸ்னி திரைப்படம் முதல், முதலாவது ஆசிய அமெரிக்க பெண்ணாக கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டிருப்பது வரையில் பல விஷயங்கள் குறித்த கட்டுரைகளை அதில் அவர் வெளியிட்டு வருகிறார்.

பணியிடத்தில் மன ஒப்புதலுடனான பாலுறவு, பாலியல் அத்துமீறல், பாலியல் வன்முறைகள் குறித்து பல கட்டுரைகள் அதில் இடம் பெற்றுள்ளன. இந்த கலந்தாடல்களில் ஆண்கள் பங்குபெற வேண்டும் என்பதில் ஹங் அதிக ஆர்வம் காட்டுகிறார்.

“இதை ஆண்கள் உணர வேண்டும். அமெரிக்காவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் 90 சதவீத சம்பவங்கள் ஆண்களால் தான் நிகழ்கின்றன என்பதை குறைந்தபட்சம் அவர்கள் அறிந்திட வேண்டும்” என்று அவர் கூறுகிறார்.

“பெரும்பாலும் இது பெண்களின் பிரச்சினைகள் என்று கருதிவிடுகிறார்கள். ஆனால், ஆண்களால் தான் இது உருவாகிறது என்ற நிலையில், பிரச்சினை எங்கே இருக்கிறது? நல்லது, பிரச்சினை நம்மிடம் தான் உள்ளது. இதுபற்றி ஏன் நாம் பேசுவதில்லை?” என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.

எண்ணங்களும் செயல்பாடுகளும்

சில தலைமுறைகளாக ஆண்களின் மனப்போக்கில் கணிசமான மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை அவர் ஒப்புக்கொள்கிறார். ஆனால் அப்பட்டமான பாலின பாகுபாடுகள் சாதாரண வாழ்க்கையில் ஓர் அங்கமாக இன்னும் நீடிக்கிறது.

உலக அளவில் ஒரே மாதிரியான வேலைக்கு ஆண்களைவிட பெண்களுக்கு 23 சதவீதம் குறைவான ஊதியமே தரப்படுகிறது என்று ஐ.நா. தெரிவித்துள்ளது. ஊதியம் இல்லாத பராமரிப்பு மற்றும் வீட்டு வேலைகளில், ஆண்களைவிட பெண்கள் இரு மடங்கிற்கும் அதிகமான நேரத்தை செலவிடுகிறார்கள்.

நூறுக்கும் மேற்பட்ட நாடுகளில், குறிப்பிட்ட சில பணிகளில் பெண்கள் பங்கேற்க சட்டபூர்வமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

“இவையெல்லாம் பெண்களின் பிரச்னைகள் என்றால், நீண்டகாலத்துக்கு முன்பே இவற்றைத் தீர்த்திருக்க வேண்டும்” என்று ஹங் கூறினார்.

ஆனால், இவற்றைத் தீர்ப்பதற்கு ஆண்களின் ஒத்துழைப்பு தேவை என்கிறார் அவர். “இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதில் உண்மையில் ஆண்கள் ஈடுபாடு காட்டவில்லை” என்று அவர் குறிப்பிடுகிறார்.

“அவர்களைப் பற்றி ஆண்களான நாம் நமது குடும்பங்களில், நண்பர்களுடன், அயலாருடன், சமுதாய அளவில், சமூக அளவில் பேசாத வரையில், குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை நம்மால் எட்ட முடியாது” என்று ஹங் கூறியுள்ளார்.

ஆகவே – ஆண்கள் ஏன் எதுவும் செய்வதில்லை?

பயம் என்ற காரணி

“பெண்களின் பழக்கவழக்கங்கள் என்பதில் இருந்து மாறுபட்டதாக ஆண்கள் மிக சீக்கிரமாகவே சமுதாயத்தில் இணைந்து பழகிவிடுகிறார்கள்” என்று ஆண்மைத்தனம் மற்றும் தந்தைநிலை குறித்த வலைப்பூ நடத்தி வரும் லூடோ கேப்ரியல் கூறுகிறார்.

“இதனால் பணியிடத்தில் ஒரு சூழ்நிலை உருவாகும்போது, பெண்களுக்கு நீங்கள் ஆதரவு காட்டினால், தன்னுடைய இனத்தவருக்கு (ஆண்களுக்கு) துரோகம் செய்பவரைப் போல பார்க்கிறார்கள்” என்று பிபிசியிடம் அவர் கூறினார்.

மார்க் என்ற (உண்மையான மாற்றத்திற்குக் குரல் கொடுக்கும் ஆண்கள்) உலக அளவிலான லாப நோக்கற்ற அமைப்பில் பொறுப்பாளராக இருக்கும் கேப்ரியல், பணியிடத்தில் பாலியல் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதில் ஆண்கள் மற்றும் பெண்களை ஈடுபடுத்தி வருகிறார்.

பெண்களை தலைமைப் பதவிகளுக்கு முன்னிறுத்த வலியுறுத்தும் லாப நோக்கற்ற கேட்டலிஸ்ட் அமைப்பின் ஒரு தசாப்த கால ஆய்வின் தொடர்ச்சியாக மார்க் என்ற அமைப்பு தொடங்கப்பட்டது.

2020-ல் கேட்டலிஸ்ட் அமைப்பு கனடாவில் 1,500 ஆண்களிடம், பணியிடத்தில் பாலியல் அம்சங்கள் குறித்து ஆய்வு நடத்தியது. பாலின பாகுபாட்டைத் தடுத்து நிறுத்துவதற்கு பெரும்பாலானவர்கள் ஏன் முன்வருவதில்லை என்பதற்கு, அந்த ஆய்வில் பல விளக்கங்கள் கிடைத்தன.

பணியிடத்தில் பாலியல் ரீதியிலான செயல்பாடுகளைப் பார்க்கும் போது அதைத் தடுக்க வேண்டும் என்று ஆய்வில் பங்கேற்றவர்களில் 86 சதவீதம் பேர் விருப்பம் தெரிவித்தனர். ஆனால் 31 சதவீதம் பேர் மட்டுமே அதை செயல்படுத்தும் தைரியம் பெற்றவர்களாக இருந்தனர்.

வார்சாவில் நடந்த பெண்ணியவாதிகளின் நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டத்தில் முழக்கம் எழுப்பும் ஓர் ஆண். நவம்பர் 18, 2020

“அறியாமை, அக்கறையின்மை, அச்சம் என்ற மூன்று முக்கிய தடைகளை எங்கள் ஆய்வுகள் மூலம் கண்டறிந்தோம்” என்று மார்க் அமைப்பின் துணைத் தலைவர் அலிச்சாண்ட்ரா போலாக் பிபிசியிடம் தெரிவித்தார்.

“மற்ற ஆண்கள் என்ன நினைப்பார்களோ என்ற அச்சம், மற்ற ஆண்களிடம் தன் அந்தஸ்து குறைந்துவிடுமோ என்ற அச்சம், வேலை செய்யும் இடத்தில் அந்தஸ்து போய்விடுமோ என்ற அச்சம் ஆண் பணியாளர்களிடம் உள்ளது” என்று அவர் விளக்கினார்.

“பெரும்பான்மையானவர்கள் அத்துமீறலில் ஈடுபடும் பிரிவினராக இருக்கும்போது, அவர்களுடன் சேர்ந்து செயல்படாமல் போனால் விடுபட்டுப் போவோம் என்ற அச்சம் காணப்படுகிறது” என்றார் அவர்.

“பல ஆண்களுக்கு நல்ல எண்ணம் இருக்கிறது. ஆனால் எங்கே தொடங்குவது என தெரியாமல் பிரச்னையை அணுகி, பிறகு ஓரம் கட்டப்படும் நிலைமை வந்துவிடக் கூடாதே என்பதும் பெரிய அச்சமாகக் காணப்படுகிறது” என்றும் அவர் கூறினார்.

தெளிவு பெறுவதற்கான தருணம்

இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண குறுகிய கால பயிற்சி அமர்வுகள் அல்லது ஓராண்டு கால பயிற்சிகளில் அலுவலர்களைப் பதிவு செய்ய வைப்பதற்காக செவ்ரான் மற்றும் பி அண்ட் ஜி போன்ற நிறுவனங்களுடன் மார்க் அமைப்பு இணைந்து முயற்சி மேற்கொண்டுள்ளது.

“கொஞ்சம் அறியாமையில்” இருப்பவர்களுக்கு ஆரம்பத்தில் இந்தப் பயிற்சிகள் சிறிது அசௌகரியத்தை ஏற்படுத்தக் கூடும் என்று பெண்களிடம் கடுமையான வார்த்தைகளைப் பேசக் கூடிய ஒருவர் இதில் பங்கேற்ற பிறகு கருத்து தெரிவித்துள்ளார்.

The New Woman, Wash Day

“ஆனால் சிறிதுநேர சங்கடத்தை நாம் கடந்துவிடுவோம். பிறகு அது பெரிய அனுபவக் கல்வியாக இருக்கும்” என்று அவர் கூறினார்.

பயிற்சி நடைபெறும் இடத்தைக் கடந்து செல்லுமாறு பெண்களை அனுப்பி, ஆண்களிடம் இருந்து தகாத வகையிலான போக்கு காணப்படுகிறதா, பாலியல் ரீதியில் ஏதும் பாரபட்சம் காட்டுகிறார்களா என கேட்கப்பட்டது. அப்படி எதுவும் இல்லை என்பதை உணர்வது “வலிமையான தருணமாக” இருந்தது என்று ஒரு பெண் பங்கேற்பாளர் கூறினார்.

“பணியிடத்தில் எல்லா பெண்களும் பாலியல் ரீதியில் அத்துமீறலுக்கு ஆளாகியுள்ளனர் என்பதை அறியும்போது அதிர்ச்சியாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். அவர்கள் அதை ஆழ்ந்து யோசிப்பார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை. ஆனால் யோசித்தாக வேண்டும்” என்று அந்தப் பெண் கூறினார்.

`அறைக்குள் இருக்கும் யானை’

“இந்தப் பிரச்னைக்கு நாமும் ஒரு காரணமாக இருக்கிறோம். எனவே தீர்வு காண்பதிலும் நாம் பங்கு வகிக்க வேண்டும்” என்று ஆண்கள் உணர வேண்டும் என்பது ஹங் மற்றும் கேபிரியலின் விருப்பமாக உள்ளது. கேப்ரியல் தனது முதலாவது வலைப்பூ பதிவுகளில் இதை எழுதியுள்ளார்.

“பெண்ணியவாதியாக ஓர் ஆண் உருவாதல் மற்றும் அதற்கான தேவை என்ன” என்பது அதன் தலைப்பாகும்.

2017-ல் தனது மகள் சோபியா பிறந்து இரண்டு மாதங்கள் கழித்து WokeDaddy என்ற தலைப்பில் கேப்ரியல் எழுதத் தொடங்கினார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, கார்ப்பரேட் நிறுவனத்தில் டைரக்டர் பொறுப்பில் இருந்து அவர் விலகிெணக் கொண்டார்.

அவருடைய வயது 31, வீடு, மனைவி, மகன் இருந்தனர். கொஞ்சம் நேரமும் இருந்தது. “மனநிறைவு இல்லாதது” மற்றும் “வருத்தமான” உணர்வு அவருக்கு இருந்தது.

பிறகு “ஆண் வரம்பு” என்ற வகையில் வாழ்ந்ததால் ஏற்பட்ட மகிழ்ச்சிக் குறைபாடுதான் அதற்குக் காரணம் என்று கேப்ரியல் உணர்ந்து கொண்டார்.

ஆண்மைத்தனம் என்பதன் குறுகிய பார்வையாக அது இருந்தது. எதிர்பாலினர் குறித்து சந்தேகத்துடன் பார்ப்பது, தகுதிக்கு மிஞ்சிய உணர்வுகள், அந்தஸ்து மற்றும் மதிப்புகள் இருப்பதாகக் கருதிக் கொள்ளும் மோசமான தன்மையாக அது இருந்தது. இன்றைய காலத்தில் நிறைய ஆண்கள் இதில் அதிருப்தி கொண்டிருக்கிறார்கள்.

ஆரோக்கியமான ஆண்மைத்தனம் என்பது குறித்த விஷயங்களை வலியுறுத்தக்கூடிய டோவ் அண்ட் ப்ரமண்டோ என்ற என்.ஜி.ஓ. சமீபத்தில் நடத்திய ஆய்வில், தங்கள் பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்திற்காக, இயல்பான பாதுகாப்பிற்காக, தாங்கள் எதையும் செய்யத் தயார் என்று, ஏழு நாடுகளைச் (பிரேசில், அர்ஜென்டினா, அமெரிக்கா, பிரிட்டன், கனடா, நெதர்லாந்து, ஜப்பான்) சேர்ந்த தந்தையரில் 85 சதவீதம் பேர் கூறியிருந்தனர்.

இருந்தாலும் தங்கள் குழந்தை பிறந்த போது அல்லது குழந்தையை தத்தெடுத்த சமயத்தில் பெரும்பாலானவர்கள் அலுவலகத்தில் இருந்து விடுப்பு எடுத்துக் கொள்ளவில்லை. உடன் பணிபுரிபவர்கள் மற்றும் மேலாளர்களின் மனப்போக்கு காரணமாக, தங்களால் விடுமுறை எடுத்துக் கொள்ள முடியவில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர்.

“குடும்பங்களுக்கு வாய்ப்பு தாருங்கள்’

“ஆண்கள் சோம்பேறிகள், ஈடுபாடு காட்டாதவர்கள் என்று தவறான தகவல் பரப்பப்படுகிறது” என்று மேலாளர்கள் கூறுவதாக தொழில் மற்றும் பாலின சமத்துவத்துக்கான உலக அளவிலான ஜோஷ் லீவ்ஸ் அமைப்பு கூறியுள்ளது.

அதிகம் விற்பனையான All-In புத்தகத்தை எழுதிய லீவ்ஸ், ஐ.நா.வின் உலகளாவிய பாலின சாம்பியன் என்ற பாராட்டும் பெற்றிருக்கிறார்.

தந்தைக்கான விடுமுறை அல்லது சௌகரியமான பணி நேர அனுமதி கேட்கும் ஆண்கள் “ஓய்வெடுத்துக் கொண்டு, டி.வி.யில் விளையாட்டு நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று மேலதிகாரிகள் நம்புவதாக பிபிசியிடம் அவர் தெரிவித்தார்.

“பெண்கள் வீட்டிலும், ஆண்கள் அலுவலகத்திலும் இருக்கும் வகையிலான ஒரு நடைமுறையை நாம் வைத்திருக்கிறோம்” என்று அவர் குறிப்பிட்டார்.

இதை மாற்ற வேண்டுமானால், சட்டங்கள் மற்றும் கொள்கைகள் குறித்து சமூகம் மறு ஆய்வு செய்ய வேண்டும். பெற்றோருக்கான விடுமுறை மற்றும் ஆண்கள், பெண்களுக்கு சம வாய்ப்புகள் போன்றவற்றை மறு ஆய்வு செய்வதுடன், காலம் காலமாக இருந்து வரும் பாலின நடைமுறைகளுடன் ஒட்டியிருக்கும் எண்ணங்களையும் மாற்ற வேண்டும்.

“அதைத் தீர்க்காத வரையில், வேலை செய்யும் இடத்தில் நம்மால் சமமான வாய்ப்புகளை அளிக்க முடியாது” என்று லீவ்ஸ் தெரிவித்தார்.

பார்சிலோனாவில் பாலின சமத்துவத்துக்காக ஆண்கள் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஆண்கள்.

மக்களுக்கு மட்டுமின்றி, தொழில்களுக்கும் இந்த நடைமுறை கெடுதலாக உள்ளது என்கிறார் அவர்.

பெண்களுக்கு அதிகாரம் அளித்துள்ள நாடுகள், மக்களுக்கு சம வாய்ப்புகள் அளித்தல், சமத்துவமற்ற நிலை குறித்த பிரச்சினைகளைத் தீர்ப்பதில் “நன்கு செயல்படுகின்றன” என்றும் லீவிஸ் கூறினார்.

“வீட்டை யார் கவனிப்பது, யார் வேலைக்குப் போவது, யார் தொழிலில் ஈடுபடுவது, யார் பொருளாதார விஷயங்களை கவனிப்பது என்பதில் முடிவு செய்யும் வாய்ப்புகளை குடும்பங்களுக்கு அளிக்கும்போது,நாடு சிறப்பாக அமைகிறது, குடும்பங்களும் சிறப்பாக அமைகின்றன” என்று அவர் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »