Press "Enter" to skip to content

பூமி – திரைப்படம் விமர்சனம்

  • முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்

ரோமியோ ஜூலியட், போகன் திரைப்படங்களை இயக்கிய லக்ஷ்மணின் அடுத்த படம். ஜெயம் ரவிக்கு இது 25வது படம். லக்ஷ்மண், ஜெயம் ரவி ஆகிய இருவரும் இணைந்திருக்கும் மூன்றாவது படம்.

நாசாவில் பணியாற்றும் பூமிநாதன் விடுமுறைக்காக சொந்த கிராமத்திற்கு வருகிறார். அங்கே விவசாயிகள் படும் துன்பத்தை பார்த்து, இங்கேயே தங்கிவிட முடிவுசெய்கிறார். ஆனால், சொந்தமாக விவசாயம் செய்யவிடாமல் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஏகப்பட்ட பிரச்சனைகளை ஏற்படுத்த, பூமிநாதன் என்ன செய்கிறார் என்பதுதான் கதை.

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயி கடனால் துன்பத்திற்குள்ளாகும் நிஜமான ஒரு பிரச்சனையில் படம் துவங்குகிறது. ஆனால், நேரம் செல்லச்செல்ல பிரச்சனையை விரிவாக அணுகும் முயற்சியில் எங்கெங்கோ செல்கிறது படம்.

முதல் 15 நிமிடங்களுக்குள் இரண்டு பாடல்கள். இதற்குப் பிறகு விவசாயிகள் பிரச்சனையை கையில் எடுக்கிறார் இயக்குனர். உலகத்தையே 13 குடும்பங்கள்தான் கட்டுப்படுத்துகின்றன (?); இலவச மின்சாரம் தேவையில்லை; கடன் தள்ளுபடி தேவையில்லை; டென்மார்க் நாடு விவசாயம் செய்தே முன்னேறி வருகிறது என்பதுபோன்ற தகவல்களுடன் படம் நகர ஆரம்பிக்கும்போதே சற்று கண்ணைக்கட்டுகிறது.

படம் நெடுக கதாநாயகன் விவசாயத்தின் சிறப்பு, அதற்கு எதிரான சதி என்று தொடர்ந்து வசனங்களைப் பேசிக்கொண்டேயிருக்கிறார். வாட்சாப்களில் வரும் விவசாயம் தொடர்பான கருத்துகள் காட்சிகளாக விரிகின்றன. முடிவில், ஒருவழியாக வந்தே மாதரம் கோஷத்துடன் வெற்றிபெறுகிறார் கதாநாயகன்.

விவசாயம் VS கார்ப்பரேட் நிறுவனங்கள் என்று கதையை உருவாக்கியிருக்கும் இயக்குனர், அதற்கு ஏற்றபடி நம்பக்கூடிய வகையில் திரைக்கதையை அமைக்காததால் பெரும் ஏமாற்றமளிக்கிறது படம்.

மண் அள்ளும் கை. பூமி படம்

கதாநாயகனாக நடித்திருக்கும் ஜெயம் ரவி, படம் நெடுக உணர்ச்சிகரமாக வருகிறார். கதாநாயகி உட்பட மற்றவர்கள் யாருக்கும் பெரிதாக நடிப்பதற்கு வாய்ப்பில்லை.

இமானின் பின்னணி இசையும் சில பாடல்களும் நன்றாக இருக்கின்றன. ஆனால், படத்தின் பிற பிரச்சனைகள் இதனை ரசிக்கவிடாமல் செய்கின்றன.

இயக்குனர் விவசாயிகள் பிரச்சனையை மிகை உணர்ச்சியுடன் அணுகியிருக்கிறாரே தவிர, அதனை சுவாரஸ்யமான திரைப்படமாக்கவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »