Press "Enter" to skip to content

அரச குடும்பத்தைப் பற்றி விமர்சித்த தாய்லாந்து பெண்ணுக்கு 43 ஆண்டு சிறை

அரச குடும்பத்தை விமர்சனம் செய்த ஒரு தாய்லாந்து பெண்ணுக்கு 43 ஆண்டுகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அரச குடும்பத்தை அவமதித்த குற்றச்சாட்டில் தாய்லாந்தில் இதுவரை விதிக்கப்பட்ட தண்டனைகளிலேயே மிகக் கடுமையான தண்டனை இது என்று கூறப்படுகிறது.

அஞ்சன் என்ற அந்த 63 வயது பெண் முன்னாள் குடிமைப் பணியாளர். அவர் சமூக ஊடகப் பக்கங்களில் போட்காஸ்ட் முறையில் ஒலிநாடா பதிவுகளை வெளியிட்டார்.

தாம் வெறுமனே ஒலிநாடா கோப்புகளை மட்டுமே வெளியிட்டதாகவும், அவற்றின் உள்ளடக்கம் குறித்து கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தாய்லாந்தின் ‘லெசே மெஜஸ்டி’ என்ற சட்டம் முடியரசுக்கு அவமதிப்பு ஏற்படுத்துவதை தடை செய்கிறது. உலகில் உள்ள இத்தகைய சட்டங்களிலேயே இது கடுமையான ஒன்று.

மூன்றாண்டு கால இடைவெளிக்குப் பிறகு சர்ச்சைக்குரிய இந்த சட்டத்தை கடந்த ஆண்டு கடைசியில் பயன்படுத்தத் தொடங்கியது தாய்லாந்து. முடியாட்சியில் மாற்றங்களைக் கோரி பல மாதங்கள் நடந்த அரசு எதிர்ப்புப் போராட்டங்களை ஒடுக்கும் நோக்கத்தோடு இந்த சட்டம் மீண்டும் பயன்படுத்தப்பட்டது.

2014 – 2015 ஆகிய இரு ஆண்டுகளில் ஃபேஸ்புக், யூடியூப் ஆகிய தளங்களில் அஞ்சன் பகிர்ந்த ஒலிநாடா பதிவுகளில் 29 வெவ்வேறு பதிவுகள் இந்த சட்டத்தை மீறும் வகையில் இருந்ததாக அவர் ஏற்றுக்கொண்டார்.

இதையடுத்து அவருக்கு விதிக்கப்பட்ட 87 ஆண்டு கால சிறைத் தண்டனை பாதியாகக் குறைக்கப்பட்டது.

2014ல் ராணுவ ஜன்டா அதிகாரத்தை எடுத்துக்கொண்ட பிறகு முடியரசு மீதான விமர்சனங்களை நசுக்க உறுதியேற்று 14 பேர் மீது லெசே மெஜெஸ்டி சட்டத்தை பயன்படுத்தியது. அவர்களில் அஞ்சனும் ஒருவர்.

line
line

எதிர்ப்பாளர்கள் வட்டாரத்தில் வரவேற்பைப் பெற்ற போட்காஸ்ட் குரல் பதிவுகளை வெளியிட்டதாக இந்தக் குழு மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த குரல் பதிவுகள் முடியரசு தொடர்பான நிர்வாகத்தின் கருத்துகளை கேள்விக்குள்ளாக்கின. அப்போது இரண்டாண்டு சிறையில் இருந்தபிறகு அவர் விடுவிக்கப்பட்டார்.

Protesters hold up the three-finger salute during a rally in Bangkok, 21 November 2020

அஞ்சனுக்கு எதிரான விசாரணை மூடிய அறைகளுக்குள் நடத்தப்பட்டது. அவருக்கு எதிரான ஆதாரங்கள் தேசப்பாதுகாப்பு காரணத்தின் பேரில் ரகசியமாக வைக்கப்பட்டது.

“பிற எதிர்ப்பாளர்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை”

வெறும் ஒலிநாடா பதிவேற்றியதற்காக, அதுவும் முதல் முறை கைது செய்யப்பட்டு, இவ்வளவு காலத்துக்குப் பிறகு, இவ்வளவு கடுமையான தண்டனை தரப்படுவது என்பது, பிற அதிருப்தியாளர்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கையாகவே தெரிகிறது என தம் பகுப்பாய்வில் தெரிவிக்கிறார் பிபிசி நியூஸின் ஜொனாதன் ஹெட்.

முடியாட்சியைப் பற்றி பேசுவதை நிறுத்துங்கள் என்ற எச்சரிக்கையை பிற அதிருப்தியாளர்களுக்கு அதிகாரத்தில் இருப்போர் தரவிரும்புகிறார்கள் என்று தெரிகிறது என்கிறார் அவர்.

கடந்த ஆண்டு மாணவர்கள் வழிநடத்திய போராட்ட அலையில் அரசர் வஜிரலாங்கோர்ன் வசமுள்ள செல்வம், அவரது அரசியல் வகிபாகம், தனிப்பட்ட வாழ்வு ஆகியவை குறித்து முன்னெப்போதும் இல்லாத வகையில் கேள்வி எழுப்பப்பட்டது.

கடந்த சில வாரங்களில் 40 செயற்பாட்டாளர்கள் மீது லெசே மெஜெஸ்டி சட்டம் பயன்படுத்தப்பட்டது. இவர்களில் பெரும்பாலோர் இளைஞர்கள். சிலர் மீது இந்த சட்டம் பல முறை பாய்ந்துள்ளது.

மிகவும் கடுமையாக இருப்பதாக ஐ.நா. மனித உரிமை அதிகாரிகளால் கண்டிக்கப்பட்ட இந்த சட்டம், அரசரின் வேண்டுகோளை ஏற்று 3 ஆண்டுகாலத்துக்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த அரசெதிர்ப்புப் போராட்டங்களை அடுத்து இந்த சட்டத்துக்குப் புத்துயிர் அளிக்கப்பட்டது என்கிறார் ஜொனாதன் ஹெட்.

அரசியல் கொந்தளிப்பும், போராட்டங்களும் தாய்லாந்துக்குப் புதியதில்லை. அதற்கொரு நீண்ட வரலாறு உள்ளது. சமீபத்திய அரசியல் கொந்தளிப்பு கடந்த பிப்ரவரியில் தொடங்கியது. மிக ஆரம்ப கட்டத்தில் இருந்த தாய்லாந்தின் ஜனநாயக ஆதரவு, எதிர்க்கட்சியை கலைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து இந்த கொந்தளிப்பு உருப்பெற்றது என்கிறார் ஜொனாதன் ஹெட்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »