Press "Enter" to skip to content

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அலுவலகம் எவ்வாறு மாற்றப்பட்டுள்ளது?

புகைப்படத்தில் இருப்பவை:

1. அமெரிக்கக் கொடி

2. சீசர் சாவேஸ் சிலை

3. அதிபர் முத்திரையிடப்பட்ட கொடி

4. குடும்பப் புகைப்படங்கள்

5. நிர்வாக உத்தரவுகள்

6. ரிசல்யூட் மேஜை

7. பெஞ்சமின் பிராங்க்ளின் ஓவியம்

8. ஹேரி ட்ரூமென் சிலை

வெள்ளை மாளிகையில் இருக்கும் அமெரிக்க அதிபரின் அலுவலகம் ஓவல் ஆஃபிஸ் என்று அழைக்கப்படும். புதிய அதிபராக பதவியேற்கும் நபர், ஓவல் அலுவலகத்தில் தனக்கு ஏற்றவாறு மாற்றம் செய்து கொள்வார்.

அந்த வகையில், புதிதாக அதிபர் பதவி ஏற்று இருக்கும் ஜோ பைடன், தனது அலுவலகத்தை எப்படி மாற்றிருக்கிறார் என்று பார்க்கலாம்.

அதிபர் ஜோ பைடன் அலுவலகம் முழுக்க அமெரிக்க வரலாற்றின் முக்கிய மற்றும் செல்வாக்கு மிக்க தலைவர்களின் படங்களாலும் கற்சிலைகளாலும் நிரம்பியிருக்கிறது.

“தனது அலுவலகம் அமெரிக்காவை பிரதிபலிக்க வேண்டும் என்பது அதிபர் பைடனுக்கு முக்கியமானதாக இருந்தது. அவர் எந்த மாதிரியான அதிபராக இருக்கப்போகிறார் என்பதும் அதில் இருந்து தெரிய வேண்டும் என்று எண்ணினார்.” என ஓவல் அலுவலக செயல்பாடுகளின் துணை இயக்குநர் ஆஷ்லே வில்லியம்ஸ் வாஷிங்டன் போஸ்டுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்தார்.

அதிபர் டிரம்ப் சுவற்றில் மாட்டியிருந்த அமெரிக்காவின் ஏழாவது அதிபரும் ஜனரஞ்சகவாதியுமான ஆண்ட்ரூ ஜாக்சன் புகைப்படத்தை அகற்றிவிட்டு தற்போது அங்கு பென்ஜமின் பிராங்க்ளினின் புகைப்படம் மாட்டப்பட்டுள்ளது.

டிரம்ப்

புகழ்பெற்ற எழுத்தாளர், விஞ்ஞானி மற்றும் தத்துவவாதியான பெஞ்சமின் பிராங்க்ளின் புகைப்படம், கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பெருந்தொற்றை பைடன் அறிவியல் ரீதியாக அணுகும் ஆர்வம் உள்ளவர் என்பதை குறிக்கவே அங்கு மாட்டப்பட்டுள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் கூறுகிறது.

அதோடு அதிபர் பைடனின் அலுவலகத்தில் புரட்சியாளர் மார்டின் லூத்தர் கிங் ஜூனியர் மற்றும் ராபர்ட் எஃப் கென்னடி ஆகிய இருவரின் சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. இவர்கள் இருவருமே சிவில் உரிமைகள் இயக்கத்தை முன்னெடுத்தவர்கள். இருவரையும் அதிபர் பைடன் அடிக்கடி குறிப்பிடுவார்.

சிவில் உரிமைகள் இயக்கத்தின் மற்றுமொரு முக்கிய நபரான ரோசா பார்க்கின் சிலையும் உள்ளது.

மேலும் பெருமந்தம் மற்றும் இரண்டாம் உலகப்போரில் அமெரிக்காவை வழிநடத்திய பிராங்க்ளின் டி ரூஸ்வெட்டின் பெரிய புகைப்படம் ஒன்றும் அதிபர் பைடனின் அலுவலகத்தில் மாட்டப்பட்டுள்ளது.

அதேபோல கொண்டாடப்படும் இரு முன்னாள் அதிபர்களான ஜார்ஜ் வாஷிங்டன் மற்றும் ஆப்ரகாம் லிங்கன் புகைப்படங்களும் அங்கு இடம்பெற்றுள்ளது.

பைடன் அலுவலகத்தில் இருக்கும் ரோசா பார்க் மற்றும் அப்ரஹாம் லிங்கன் சிலைகள்

1960கள் மற்றும் 70களில் விவசாயப் பணியாளர்களின் உரிமைக்காக போராடிய மெக்சிக – அமெரிக்க தொழிலாளர் தலைவரான சீஸர் சாவேஸின் சிலையும் பைடன் அலுவகத்தில் இருக்கிறது.

அதன் அருகே பைடன் குடும்ப புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன.

குடும்ப புகைப்படங்கள்

ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளுக்கான கொடிகள் அகற்றப்பட்டு அங்கே அமெரிக்கக் கொடியும், அதிபர் இலச்சினை தாங்கிய கொடியும் வைக்கப்பட்டுள்ளன.

சர்ச்சைக்குரிய பிரிட்டனின் போர்க்கால தலைவர் சர் வின்ஸ்டன் சர்ச்சிலின் கற்சிலையும் அகற்றப்பட்டுள்ளது.

பராக் ஒபாமா அவரது சிலையை ஓவல் அலுவலகத்தில் இருந்து அகற்றினார் என்பதும் அந்த சிலையை மீண்டும் டிரம்ப் வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒபாமா அந்த சிலையை அகற்றிய போது, அது குறித்து கருத்து தெரிவித்த அப்போதைய வெளியுறவுத்துறை செயலாளரும் தற்போதைய பிரிட்டன் பிரதமருமான போரிஸ் ஜான்சன், “பிரிட்டிஷ் பேரரசின் மீது முன்னோர்கள் காலத்தில் இருந்தே ஒபாமாவுக்கு மனக்கசப்பு இருக்கிறது” என்று விமர்சித்தார்.

இந்நிலையில்,”ஓவல் அலுவலகம் என்பது அதிபரின் தனிப்பட்ட அலுவலகம். அதை எவ்வாறு அழகுபடுத்த வேண்டும் என்பது அவரது விருப்பம்” என அதிபர் பைடனின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »