Press "Enter" to skip to content

மார்க் சக்கர்பெர்க்கிற்கு எதிராக அமெரிக்க அதிபர் பைடன் செயல்பட நினைப்பது ஏன்?

கேம்பிரிட்ஜ் அனலிடிகா சம்பவம் வெளியாவதற்கு முன், மியான்மரில் ஒரு இனத்தையே அழிக்க ஃபேஸ்புக் தளம் உதவியதாக அந்நிறுவனம் ஒப்புக் கொள்வதற்கு முன், இந்தியாவில் வாட்சாப் மூலம் பரவிய வதந்திகளால் ஏற்பட்ட கொலை சம்பவங்களுக்கு முன், கியூ அனான் & ப்ரவுட் பாய்ஸ் என்கிற வலது சாரி இயக்கங்களுக்கு முன், மார்க் சக்கர்பெர்க்-கின் காலடியில் உலகம் இருந்தது.

கடந்த 2017-ம் ஆண்டின் தொடக்கத்தில், அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளத் தீர்மானித்திருந்தார் மார்க் சக்கர்பெர்க்.

“அமெரிக்கர்கள் எப்படி வாழ்கிறார்கள், எப்படி வேலை செய்கிறார்கள், எதிர்காலத்தைக் குறித்து அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய மக்களிடம் நிறைய பேச விரும்பினேன்” என தன் ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருந்தார்.

அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களிலும், மக்களுடன் பேச வேண்டும் என்பது தான் அவரின் இலக்கு.

அது 2020-ம் ஆண்டில் நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலுடன் அது தொடர்புடையது என சிலரால் பார்க்கப்பட்டது, ஆனால் அதைத் தொடர்ந்து மறுத்தார் மார்க்.

அவரை அமெரிக்க அதிபர் வேட்பாளராக நிறுத்துவது குறித்து ஊடகங்களில் தீவிரமாக விவாதிக்கப்பட்டன. அவரிடம் பணம், அதிகாரம் என எல்லாமே இருந்தது.

ரகசியமாக மார்க் அடைய விரும்பும் அல்லது அடைய விரும்பியதாக பலரும் நம்பும் அமெரிக்க அதிபர் பதவியை, இந்த வருடம் ஜோ பைடன் ஏற்றுக் கொண்டார்.

அப்படி பதவி ஏற்றுக் கொண்டதன் மூலம், சக்கர்பெர்க்கு ஒரு தலைகீழ் மாற்றத்தை கொடுத்து முடித்தார் பைடன்.

மார்க்

“பல்வேறு கூட்டங்கள் மற்றும் பார்ட்டிகளில் மார்க் ஒரு வரவேற்கத்தக்க விருந்தினராக இனி இருக்கப்போவதில்லை. ” என்கிறார் அமெரிக்கன் எகனாமிக் லிபர்ட்டீஸ் திட்டத்தின் இயக்குநர் சாரா மில்லர். இவரும் பைடனின் பதவி மாற்ற ஏற்பாடுகளை கவனிக்கும் குழுவில் ஒருவராக இருக்க வேண்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

“தொழில்நுட்ப முற்றொருமை நிறுவனங்களுக்கு மத்தியில், ஃபேஸ்புக் ஒரு முக்கிய பகைவனாகத் தான் பார்க்கப்படுகிறது” என்கிறார் சாரா.

ஃபேஸ்புக் நிறுவனத்துக்கும், சிலிகான் வேலிக்கும் ஒபாமா நிர்வாகம் நெருக்கமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. பைடன் கூட அவர்களுக்கு நண்பர்களாக கருதப்பட்டிருக்கலாம், ஆனால் இப்போது இல்லை.

உண்மையில், இணையத்தின் தீமைகளுக்கான ஒரு சொல்லாகத் தான் ஃபேஸ்புக்கைப் பயன்படுத்தினார் அதிபர் பைடன்.

ஒராண்டுக்கு முன் நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகையிடம் பேசிய பைடன் “உங்களுக்குத் தெரிந்தது போல, நான் ஃபேஸ்புக்கின் பெரிய ரசிகனல்ல. நான் எப்போதும் மார்க் சக்கர்பெர்க்கின் பெரிய ரசிகனாக இருந்தது கிடையாது. அவர் தான் உண்மையான பிரச்னை என நான் நினைக்கிறேன்,” என்றார் பைடன்.

பைடன் மட்டும் அவ்வாறு கூறவில்லை. அவரின் தொலைத்தொடர்பு பிரிவின் துணை தலைவர் பில் ரஸ்ஸோவும் ஃபேஸ்புக்கிற்கு எதிரான கருத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.”அமெரிக்க அதிபர் தேர்தலின் போது, ஃபேஸ்புக் தளத்தில் பரவும் போலிச் செய்திகள் ஒரு பிரச்னை என நீங்கள் கருதினால், இனி வருங்காலங்களில், ஃபேஸ்புக் எப்படி நம் நாட்டின் ஜனநாயகத்தை கிழித்தெரியும் என்பதைப் பொருத்திருந்து பாருங்கள்,” பின் பில் ரஸ்ஸோ ட்வீட் செய்திருந்தார்.

2016-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் நடந்தவைகளுக்கு ஃபேஸ்புக் தான் காரணம் என ஜனநாயகக் கட்சியினர் குற்றஞ்சாட்டினர். குடியரசுக் கட்சியினர் கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனத்தைப் பயன்படுத்தி வாக்காளர்களை இலக்கு வைத்து பிரசாரம் செய்தது, டிரம்பின் வெற்றிக்கு முக்கிய காரணமாக கருதப்பட்டது. இதில் சில பழைய கணக்குகளைத் தீர்த்துக் கொள்வதும் அடக்கம்.

அது தான் திருப்புமுனை என்றால், ஜனநாயகக் கட்சி மற்றும் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு இடையிலான உறவு தற்போது இன்னும் மோசமாக இருக்கிறது. ஃபேஸ்புக் தன் தளத்தில் அனுமதித்த விஷயங்கள் குறித்து மொத்த ஜனநாயகக் கட்சியும், பைடன் உட்பட திகைத்துப் போயினர்.

2019-ம் ஆண்டு சிஎன்என் பத்திரிகையாளரிடம் பேசிய போது, “பேஸ்புக் தளத்தில் அவர்கள் செய்வது போல நீங்கள் செய்ய முடியாது. எதை வேண்டுமானாலும் கூறலாம். அது அடிப்படையில் தவறாக இருந்தால் நீங்கள் அதை ஒப்புக் கொள்ளக்கூட வேண்டாம். நிலைமை கைமீறி சென்றுவிட்டது.” என ஃபேஸ்புக்கை சாடினார் பைடன்.

ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு சிக்கல்

நீங்கள் ஒரு பில்லியனராக இருக்கும் போது, உங்களை அதிபர் அதிகம் விரும்பவில்லை என்பது உங்களுக்கு பெரிய பிரச்னையாக இருக்காது.

ஆனால் தற்போது ஜோ பைடன் என்ன செய்ய வாய்ப்பிருக்கிறது என்றால், பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களை மறுகட்டமைப்பது மற்றும் சமூக வலைதள நிறுவனங்களுக்கு பயனர்களுடன் இருக்கும் உறவுமுறையை மறுசீரமைப்பது போன்ற நடவடிக்கைகளை எடுக்க முடியும். அது ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு பேரழிவைக் கொடுப்பதாக இருக்கும்.

சட்டப் பிரிவு 230 நீக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பது ஃபேஸ்புக்கின் முக்கிய பிரச்னையாக இருக்கும்.

ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதள நிறுவனங்கள் மீது, பயனர்கள் பதிவிடும் கருத்துக்களுக்கு வழக்கு தொடுப்பதிலிருந்து பாதுகாக்கும் சிறிய, ஆனால் முக்கியமான சட்டம் இது.

ஜோ பைடன் இந்த சட்டத்தை நீக்க வேண்டும் என்கிறார். உண்மையில், ஓர் ஆண்டுக்கு முன் நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகையிடம் பேசிய போதே அதை உடனடியாக நீக்க வேண்டும் எனக் கூறினார்.

இது மார்க் சக்கர்பெர்க்குக்கு பேரழிவைக் கொடுக்கும். திடீரென ஃபேஸ்புக் தளத்தில் பயனர்கள் பதிவிடும் அத்தனை விஷயத்துக்கும் மார்க் சக்கர்பெர்க்கும் அவரது நிறுவனமும் பொறுப்பாகும். சட்டப் பிரிவு 230 ரத்து செய்யப்பட்டால் தற்போது ஃபேஸ்புக் செயல்படுவது போல செயல்படுமா என்பது சிரமமே.

இதற்கு முன்பு, மற்றொரு கவனிக்க வேண்டிய விஷயம், ஃபேஸ்புக் நிறுவனம் மீது மத்திய வர்த்தக கமிஷன் மற்றும் 46 அமெரிக்க மாகாணங்கள் சட்டத்துக்கு முரணாக, தன் போட்டி நிறுவனங்களை வாங்கி, தன் முற்றொருமையை பராமரிப்பதாக வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது என்பது.

“ஃபேஸ்புக் நிறுவனம் கைப்பற்றிய இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்சப் சேவைகளை” எல்லாம், முந்தைய நிலைக்குக் கொண்டு செல்லும் வழியைப் பார்ப்பதாக மத்திய வர்த்தக கமிஷன் கூறியுள்ளது. அதாவது ஃபேஸ்புக் நிறுவனத்தை உடைப்பது.

ஃபேஸ்புக் அதை நிச்சயம் எதிர்க்கும். ஆனால் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களை பிரிக்க விரும்புபவர்களுடன் கூட்டணி அமைக்க பைடன் விரும்புவார் எனத் தோன்றுகிறது.

“ஃபேஸ்புக் போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களை உடைப்பது போன்ற விவரங்களில் நாம் உண்மையிலேயே அதிக கவனம் செலுத்த வேண்டும்” என கடந்த 2019-ம் ஆண்டு கூறினார் பைடன்.

“ஆன்டி உடைட் விதிமுறைகளை பைடன் அரசு மிகக் கடுமையாக நடைமுறைப்படுத்தும் என நான் எதிர்பார்க்கிறேன். ஜனநாயகச் சிக்கல் மட்டுமின்றி தனியுரிமை மற்றும் நுகர்வோர் நலம் சார்ந்த பிரச்னைகள் என பல பிரச்னைகள் இருக்கின்றன,” என்கிறார் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ஊடக சட்ட நிபுணர் ஜமீல் ஜாஃபர்.

பைடன்

அதிபர் பைடன், தொழில்நுட்ப நிறுவனங்களில் போட்டியை மீண்டும் கொண்டு வர, பிரத்யேகமாக ஒரு புதிய ஆன்டி உடைட் சார் (Anti Trust Tsar) கொள்கையை கொண்டு வர இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

ஃபேஸ்புக் நிறுவனம் எப்போதும் கூடுதலாக தாராளமாக இருந்தது, பழமைவாதிகளுக்கு எதிராகவே நடந்து கொண்டது என டொனால்ட் டிரம்ப் மற்றும் குடியரசுக் கட்சியினர் கூறிவந்தனர். ஆனால் ஃபேஸ்புக்கை டிரம்ப் நன்றாகவே பயன்படுத்திக் கொண்டார். ஃபேஸ்புக்கில் அதிகம் பகிரப்பட்ட முதன்மையான 10 பதிவுகளில், டிரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பலரும் பலமுறை இடம் பிடித்தனர்.

டிரம்பின் இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் கணக்குகள் காலவரையின்றி ரத்து செய்யப்பட்டிருப்பது மாற்றத்தை உணர்த்துகிறது. தற்போது டிரம்ப் பதவியிலிருந்து வெளியேறுவதற்கு ஒரு வார காலத்துக்கு முன் கணக்கை முடக்கியவர்கள், டிரம்ப் ஒரு வருடத்துக்கு முன் பதவியில் இருக்கும் போது இப்படி கணக்குகளை ரத்து செய்திருப்பார்களா?

எனவே டிரம்பின் கணக்குகள் முடக்கப்பட்டதை இந்த கண் கொண்டு தான் பார்க்க வேண்டி இருக்கிறது. ஃபேஸ்புக் தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொள்ளும் என்பதைக் காட்டுகிறது. அதோடு கட்டுப்பாடுகளற்ற இணைய சேவை மிகப் பெரிய விஷயமாகவும், போற்றத்தக்கதாகவும் மட்டுமே இருக்க வேண்டுமென்கிற அவசியமில்லை என்கிற பைடனின் பார்வையை ஆமோதிப்பதைக் காட்டும் வகையில் இருக்கிறது.

அதை, அதிபரின் (டிரம்ப்) கணக்கை முடக்குவதை விட சிறப்பாக எப்படிக் காட்ட முடியும்?

இப்போது ஜோ பைடன் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு என்ன செய்வதாக இருந்தாலும், ஃபேஸ்புக் நிறுவன சாம்ராஜ்யம் மற்றும் மார்க் சக்கர்பெர்க்குக்கு எதிரான வெறுப்புணர்வைச் சுற்றியே அது இருக்கும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »