Press "Enter" to skip to content

GameStop என்றால் என்ன? அது இணையத்தில் டிரண்டாகி வருவது ஏன்? – எளிய விளக்கம்

  • கிர்ஸ்டி கிராண்ட்
  • பிபிசி நியூஸ்பீட்

சில தினங்களாக கேம்ஸ்டாப் (GameStop) என்றும், பங்குச் சந்தை என்றும், ரெட்டிட் என்றும், வால் ஸ்ட்ரீட் என்றும் நீங்கள் அதிகம் கேள்விப்பட்டிருக்கலாம். திடீரென்று இவை ஏன் இணையத்தில் விவாதிக்கப்படுகின்றன, கேம்ஸ்டாப் என்றால் என்ன என நீங்கள் யோசித்தால் இதோ இந்த கட்டுரை உங்களுக்கானது.

கேம்ஸ்டாப் என்றால் என்ன?

கேம்ஸ்டாப் என்பது அமெரிக்காவில் காணொளி கேம் கேசட்டுகள், கன்சோல்கள் மற்றும் மின்னணு சாதனங்களை விற்பனை செய்யும் நிறுவனம்.

சொல்லப்போனால் இது பெருந்தொற்று காலத்தில் பெரும் அடிவாங்கிய ஒரு கடை என்று சொல்ல வேண்டும்.

ரெட்டிட் வலைதளத்துக்கு என்ன தொடர்பா?

ரெட்டிட்( Reddit) என்பது ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற ஒரு சமூக வலைதளம். அதில் நீங்கள் உங்களுக்கு பிடித்த தலைப்புகள் கொண்ட குழுக்களில் இணைந்து கொள்ளலாம். கால்பந்து, வரலாறு என எதுவாக வேண்டுமானாலும் அது இருக்கலாம்.

அதில் ஒன்றுதான் `வால்ஸ்ட்ரீட்பெட்ஸ்` (wallstreetbets) இதில் 40 லட்சத்துக்கும் மேலானோர் உள்ளனர். இதில் பங்குச் சந்தை குறித்து பெரிதும் விவாதிக்கப்படும். அதேபோல முதலீடுகள் குறித்தும் இதில் விவாதிப்பர்.

உங்களுக்கு வால்ஸ்ட்ரீட் என்றால் என்னவென்று தெரிந்திருக்கும்.

அமெரிக்காவின் மன்ஹாட்டனில் உள்ள இந்த வால் ஸ்ட்ரீட்டில்தான் நியூயார்க் பங்குச் சந்தை என்று சொல்லப்படும் NYSE அமைந்துள்ளது. மேலும் பல முக்கிய நிதி நிறுவனங்கள் இங்கு உள்ளன. காலப்போக்கில் அமெரிக்காவின் நிதிச் சந்தையை வால் ஸ்ட்ரீட் என்றும் குறிப்பிட்டனர்.

என்ன நடந்தது?

நாம் முன்னர் சொன்னதுபோல கேம்ஸ்டாப் என்பது லாபம் ஈட்டும் நிறுவனமாக இல்லை.

பலர் இந்த பெருந்தொற்றால் நேரில் வந்து கேம்களை வாங்கவில்லை. எனவே இந்த நிறுவனம் பெரும் அடியை சந்தித்தது.

பங்குகளை வாங்குபவர்கள், விற்பவர்கள் பொதுவாக எதிர்காலத்தில் எந்த நிறுவனம் லாபத்தில் இயங்காதோ அதன் பங்குகளை வாங்குவது இயல்பு.

வால் ஸ்ட்ரீட்

அவர்கள் அந்த நிறுவனத்தில் மீண்டும் பங்கை வாங்குவோம் என உறுதியளித்து பங்கை கடன் வாங்கி அதை விற்பார்கள்.

அந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு சரியும் என்று உறுதியாக உங்களுக்கு தெரிந்தால் அதை நீங்கள் மீண்டும் வாங்கும்போது குறைந்த விலையே இருக்கும் அதுவே லாபமாக அமையும்.

இன்னும் புரியவில்லையா?

சரி மேலும் எளிமையான விளக்கம் இதோ.

உங்கள் நண்பரிடமிருந்து நீங்கள் ஒரு போக்கிமான் கார்டை கடன் வாங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் உங்களுக்கு எதிர்காலத்தில் அதன் விலை குறையும் என தெரிந்திருக்கும். எனவே அதை ஒரு மாதத்தில் நீங்கள் திருப்பி தருவதாக உறுதி அளிப்பீர்கள். பின் அதை ஒருவருக்கு ஐந்து ரூபாய்க்கு விற்கிறீர்கள் என்று வைத்து கொள்ளுங்கள். சிறிது காலத்தில் அதன் மீது உள்ள ஆர்வம் குறைந்து அதன் விலை மதிப்பு குறையும் என நீங்கள் நம்புகிறீர்கள். அதேபோல அது விலை குறைந்துவிடும் அப்போது அதை நீங்கள் மூன்று ரூபாய்க்கு வாங்குவீர்கள்.

இப்போது உங்களுக்கு இரண்டு ரூபாய் லாபம். இதுதான் இந்த கேம்ஸ்டாப் விஷயத்தைப் புரிந்து கொள்வதற்கான ஒரு எளிமையான விளக்கம்.

இது ஒரு சூதாட்டம் போன்று என வைத்துக் கொள்ளலாம். இங்கு உங்கள் கணிப்பு தவறாகி அந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு குறையாமல் அதன் மதிப்பு அதிகரித்தால் உங்களுக்கு லாபத்திற்கு பதிலாக நஷ்டமே மிஞ்சும்.

இதேபோலதான் இம்மாதிரியாக கேம்ஸ்டாப் பங்குகளின் மீது பந்தயம் வைத்தனர். ஆனால் ரெட்டிட்டில் உள்ள வால்ஸ்ட்ரீட்பெட்ஸ் என்ற குழுவில் உள்ள சிறிய முதலீட்டாளர்கள் பலர் பேசி வைத்துக் கொண்டு கேம்ஸ்டாப்பின் பங்குகளை வாங்கினர்.

எனவே தேவை இருக்கும் இடத்தில் பங்கின் விலை அதிகரித்தது. அதை யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு குறைந்துபோகும் என நினைத்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆம் அதன் பங்குச் சந்தை மதிப்பு உயர்ந்தது ஆனால் அதைத் திரும்ப வாங்குவதாக உறுதியளித்தவர்கள் அதை வாங்கியே ஆக வேண்டும்.

எலான் மஸ்க்

ஈலோன் மஸ்கிற்கு என்ன தொடர்பா?

சரி இதில் ஈலோன் மஸ்க் எங்கிருந்து வந்தார் என நீங்கள் யோசிக்கலாம்.

டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் ஈலோன் மஸ்க் என்ன செய்தாலும் அது கூர்ந்து கவனிக்கப்படும். அதேதான் இந்த விஷயத்திலும் நடந்துள்ளது. அதாவது அவர் ட்விட்டரில் `Gamestonk!!` என்று ஒரு வார்த்தையில் பதிவு செய்திருந்தார். அதன்பின் கேம்ஸ்டாப்பின் பங்கு மதிப்பு மேலும் அதிகரித்தது.

சரி இவற்றால் என்ன பயன்?

இது ஒரு நல்ல கேள்வி. பலருக்கு இது ஆச்சரியத்தை அளிக்கலாம். பலருக்கு இது சிரிக்கும் ஒரு விஷயமாக இருக்கலாம். சிலருக்கு இது ஒரு டைம் பாஸாகக்கூட இருக்கலாம். ஏன் இணையத்தில் குழுக்களாக உள்ள மக்களின் சக்தியாகக்கூட இதனை பார்க்கலாம்.

ஆனால் இது முன்னெப்போதும் நிகழாத ஒன்று என வர்ணிக்கின்றனர் துறைசார் நிபுணர்கள்.

இதில் ஈடுபட்டவர்கள் அதாவது சிறிய முதலீட்டாளர்களின் இலக்கு பெரும் பங்கு தரகர்கள்.

ஆம் ரெட்டிட் தளத்தில் இடுகைகளில் 2008ஆம் ஆண்டு பல பெரிய நிறுவனங்கள் ஏற்படுத்திய நிதி நெருக்கடிக்கு பழிவாங்கும் செயல்தான் இது என்று பேசி வருகின்றனர்.

இது ஒரு தலைமுறை சண்டை. பணம் படைத்தவர்களிடமிருந்து பணத்தை பெற்று அதை ஏழைகளுக்கு கொடுக்கும் ஒரு நடவடிக்கை என்றும் சில பேசி வருகின்றனர்.

ஒரு சிலர் ரெட்டிட் குழுவில், இதன்மூலம் தாங்கள் சம்பாதித்த பணத்தை தொண்டு நிறுவனங்களுக்கு கொடுத்ததாக கூறிவருகின்றனர். இது எல்லாம் ஒருபக்கம் இருக்க இதுகுறித்த மீம்களுக்கும் இணையத்தில் பஞ்சமில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »