Press "Enter" to skip to content

மியான்மரில் ஃபேஸ்புக்கை முடக்கியது ராணுவம் – என்ன நடக்கிறது அங்கே?

மியான்மரில் ராணுவம் ஆட்சியைக் கவிழ்த்த பிறகு, தற்போது ஃபேஸ்புக்கை மக்கள் பார்க்கக் கூடாது என தடை செய்திருக்கிறது அந்நாட்டு ராணுவம்.

ஃபேஸ்புக் தான் மியான்மரில் உள்ள பலருக்கு இணையம் வழியாக செய்திகளைக் கொண்டு சேர்க்கும் முக்கிய தளம், அதை மியான்மரின் `நிலையானத்தன்மைக்காக` ராணுவம் தடை செய்திருப்பதாக ஃபேஸ்புக் தரப்பிலிருந்தே கூறப்பட்டிருக்கிறது.

கடந்த திங்கட்கிழமை நடந்த ஆட்சிக்கவிழ்ப்பை எதிர்ப்பவர்கள் அணிதிரளும் முக்கிய புள்ளியாக ஃபேஸ்புக் இருக்கிறது.

அரசியல் தலைவர்கள் தலைநகரில் தங்களின் இருப்பிடத்தை விட்டு வெளியேற மறுக்கிறார்கள். யங்கூனில் ராணுவ ஆட்சிக்கு எதிராக பாத்திர பண்டங்களை அடித்து ஒலி எழுப்புவது அதிகரித்திருக்கிறது.

ஆங் சாங் சூச்சி மீது ஏற்றுமதி இறக்குமதி மோசடி குற்றச்சாட்டுகளும், தடை செய்யப்பட்ட தொலைத் தொடர்பு சாதனங்களை வைத்திருந்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டு விசாரணைக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.

மியான்மரின் அதிபர் வின் மின்ட், கடந்த நவம்பர் 2020 தேர்தல் பிரசாரத்தின் போது கொரோனா விதிமுறைகளை மீறியதாக குற்றம் சுமத்தபட்டு காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.

ஃபேஸ்புக்கின் பங்கு என்ன?

மியான்மரின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் அமைச்சகம் வரும் பிப்ரவரி 07-ம் தேதி வரை ஃபேஸ்புக் தடை செய்யப்படும் எனக் கூறியுள்ளது. ஆனால் அவ்வப்போது ஃபேஸ்புக்கை பயன்படுத்த முடிந்ததாக கூறப்பட்டது.

“செல்லூலர் தரவு தவிர்த்து வை-ஃபை மூலம் ஃபேஸ்புக்கை பயன்படுத்த முடிந்ததது. என்னைச் சுற்றியுள்ளவர்கள் என்னை வேறு சில மாற்று செயலிகளையும், வி.பி.என் போன்றவைகளையும் பதிவிறக்கம் செய்யச் சொல்கிறார்கள்,” என்கிறார் யங்கூனில் சுற்றுலா முகமை நடத்திக் கொண்டிருக்கும் அன்தோனி ஆங்.

சில மணி நேரம் கழித்து “ஃபேஸ்புக்கைத் தற்போது கொஞ்சம் கூட பயன்படுத்த முடியவில்லை” என்றார் ஆங்.

ஏற்கனவே கொரோனா பிரச்னையால் தன் கல்வி பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறார் யங்கூனில் இருக்கும் மாணவி மின் ஹ்டெட். “இன்று ஃபேஸ்புக் செயலிக்கு தடை விதிக்கப்படுவது இளைஞர்களின் சுதந்திரத்துக்கு தடை விதிப்பதாகப் பொருள்,” என ராய்டர்ஸ் முகமையிடம் கூறினார்.

மியான்மரில் வாழும் 5.4 கோடி பேரில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஃபேஸ்புக்கைப் பயன்படுத்துகிறார்கள். ராணுவ ஆட்சியை எதிர்ப்பவர்களை ஒருங்கிணைக்க ஒரு ஃபேஸ்புக் பக்கம் தொடங்கப்பட்டது. அதற்கு பல்லாயிரக் கணக்கில் லைக்குகள் குவிந்தன.

மியான்மரில் தொடக்கத்தில் ஃபேஸ்புக்கை எந்த ஒரு இணைய செலவும் இல்லாமல் பயன்படுத்தும் ரீதியில் கொண்டு வரப்பட்டது. எனவே மியான்மரில் ஃபேஸ்புக் மிகவும் பிரபலமானது.

மியான்மரில் ஃபேஸ்புக்கின் சேவை துண்டிக்கப்பட்டிருப்பதை, அந்நிறுவனமே (ஃபேஸ்புக்) உறுதி செய்திருக்கிறது.

மியான்மரில் இருக்கும் தொலைத் தொடர்பு நிறுவனமான டெலினார் மியான்மர் என்கிற நிறுவனமும், மியான்மரில் ஃபேஸ்புக் செயலியைத் தடை செய்ய ராணுவம் உத்தரவு பிறப்பித்திருப்பதை உறுதி செய்தது.

`நிச்சயமாக ஏற்றுக் கொள்ளமுடியாது`

மியான்மரில் அரசமைப்புபடி மீண்டும் ஆணை பிறப்பிக்கப்பட வேண்டும் என ஐநா பொதுச் செயலர் அன்டொனியோ குட்டாரெஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் மியான்மரில் கடந்த திங்கட்கிழமை நடந்த ஆட்சிக் கவிழ்ப்பு தோல்வியடைவதை உலக நாடுகள் உறுதி செய்ய வேண்டும் என அவர் தெரிவித்திருந்தார்.

தேர்தல் முடிவுகளைப் புறக்கணிப்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என்றும், ஒரு நாட்டை இப்படி ஆட்சி செய்யக் கூடாது எனவும் ஆட்சிக்கவிழ்ப்பு நடத்திய தலைவர்களுக்குப் புரிய வைக்க வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.

தொடரும் போராட்டம்

போராட்டம்

மண்டலே நகரத்தில், மியான்மர் பல்கலைக்கழகத்தின் முன் ராணுவத்தை எதிர்த்து ஒரு சிறு போராட்டம் நடந்தது. அதில் நான்கு பேர் கைது செய்யப்பட்டார்கள்.

யங்கூனில் பாத்திர பண்டங்களை அடித்து ஒலி எழுப்பி, ராணுவத்துக்கு எதிரான தங்கள் குரலைப் பதிவு செய்வது இரண்டாவது நாளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.

தேசிய ஜனநாயக லீக் கட்சியைச் சேர்ந்த, சட்டமன்ற உறுப்பினர்கள் 70 பேர், மியான்மரின் புதிய தலைநகரான நேபிடவ் நகரத்தில் இருக்கும் தங்களின் அரசு விருந்தினர் இல்லத்தில் இருந்து போக மறுக்கிறார்கள். அதோடு அவர்கள் பாராளுமன்ற கூட்டத் தொடருக்கு அழைப்பு விடுத்திருப்பதாக பிபிசி பர்மிய சேவை குறிப்பிடுகிறது.

மியான்மரில் சாலைகளில் பெரும்பாலும் அமைதி நிலவுகிறது, பெரிய அளவில் போராட்டங்களுக்கான அறிகுறிகள் இல்லை. இரவு நேரத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் மருத்துவமனைகளில் போராட்டங்கள் நடந்தன. பல மருத்துவர்கள் தங்கள் பணியைச் செய்யாமல் நிறுத்தினர் அல்லது தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்யும் விதத்தில் சில இலச்சிணைகளை அணிந்து கொண்டு பணியில் ஈடுபட்டனர்.

ராணுவ ஆட்சியை ஆதரிக்கும் விதத்தில் ஆயிரக் கணக்கானவர்கள் பங்கெடுத்த பேரணி நேபிடவ் நகரத்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

மியான்மரில் என்ன பிரச்னை?

சூச்சி

கடந்த திங்கட்கிழமை முதல் ஆங் சாங் சூச்சி மற்றும் மியான்மரின் அதிபர் வின் மின்ட் ராணுவத்தினரால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

அடுத்த ஓராண்டுக்கு ராணுவம் அவசர நிலையை அறிவித்திருக்கிறது. 2020ஆம் ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலில் மோசடி நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டி, தன் ராணுவ ஆட்சிக்கவிழ்ப்பை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறது மியான்மர் ராணுவம்.

அத்தேர்தலில் ஆங் சாங் சூச்சி அழுத்தமாக தன் வெற்றியைப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. தற்போது ராணுவ ஆட்சியின் நிலைத்தன்மையை உறுதி செய்யவும், ராணுவத்துக்கு எதிராக மக்கள் திரள்வதைத் தடுக்கவும் அதிகாரபூர்வமாக ஃபேஸ்புக் செயலியையும் தடை செய்திருக்கிறது மியான்மர் ராணுவம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »