Press "Enter" to skip to content

கம்யூனிச கோட்டையான கியூபாவில் பெரும்பாலான தொழில்களில் தனியாருக்கு அனுமதி

கியூபாவின் வரலாற்றில் முதல் முறையாக பொருளாதாரத்தில் மிகப் பெரிய சீர்திருத்தமாக, தன் நாட்டின் பெரும்பாலான தொழில்களில் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.

கியூபாவில் 127 வகையான தொழில்களில் மட்டுமே தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி இருந்து வரும் நிலையில், அது தற்போது 2,000க்கும் மேற்பட்ட தொழில்களாக அதிகரித்து அனுமதி வழங்கப்படுவதாக கியூபாவின் தொழிலாளர் துறை அமைச்சர் மார்டா எலெனா ஃபிடோ கூறினார்.

இதன் மூலம், மிகக் குறைவான தொழில்துறைகள் மட்டுமே அரசின் முழுமையான கட்டுப்பாட்டில் இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் விதித்த பொருளாதாரத் தடை மற்றும் கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்றால் கியூபா பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு கம்யூனிச நாடான கியூபாவின் பொருளாதாரம் 11 சதவீதம் சரிவை சந்தித்தது. இது கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய சரிவு. இந்த சூழலில் கியூபாவின் மக்கள் அடிப்படை பொருட்களின் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளனர்.

கம்யூனிச கோட்டையான கியூபாவில் பெரும்பாலான தொழில்களில் தனியாருக்கு அனுமதி

கியூபாவில் 124 வகையான தொழில்கள் மட்டுமே அரசின் வசம் இருக்கும் என அந்த நாட்டின் தொழிலாளர் துறை அமைச்சரான மார்டா எலெனா ஃபிடோ கூறினார்.

ஆனால், அவை எந்தெந்த துறைகள் என்று அவர் குறிப்பிவில்லை. கியூபா நாட்டுக்கு ராஜாங்க ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த ஊடகம், பாதுகாப்பு, சுகாதாரம் போன்ற துறைகள் அரசின் வசமே இருக்க வாய்ப்பிருக்கிறது என ஏ.எஃப்.பி செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

“தனியார் பணிகள் தொடர்ந்து மேம்பட வேண்டும் என்பதுதான் இந்த சீர்திருத்தத்தின் நோக்கம். மேலும், இந்த சீர்திருத்தம் மூலம் தனியார் துறை முழுவீச்சில் செயல்பட உதவும்” எனக் குறிப்பிட்டுள்ளார் அமைச்சர் மார்டா.

பல்லாயிரக்கணக்கான சிறு பண்ணைகளை தவிர்த்து, இதுவரை கியூபாவில் சிறு-குறு தனியார் தொழில்களை கலைஞர்கள், வாகன ஓட்டுநர்கள், வியாபாரிகள் உள்ளிட்டோர் மட்டுமே மேற்கொண்டு வந்தார்கள்.

எனினும், இந்த சீர்திருத்தங்கள் நடைமுறைக்கு வந்து, வேலைவாய்ப்புகளும் உற்பத்தியும் பெருக நேரம் பிடிக்கும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். தனிநபர் தொழில்கள் மற்றும் குடும்ப தொழில்கள் அடுத்த கட்டத்தை நோக்கி செல்வதற்கு இந்த சீர்திருத்தம் பெரிதும் உதவும் என்று கருதப்படுகிறது.

கியூபாவில் கிட்டத்தட்ட 40 சதவீத தனியார் தொழில்கள், சுற்றுலா துறையை சார்ந்தே இயங்கி வந்தது. இந்த நிலையில், கொரோனா பிரச்சனை மற்றும் பொருளாதார தடையால் நாட்டின் சுற்றுலாத்துறை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கம்யூனிச கோட்டையான கியூபாவில் பெரும்பாலான தொழில்களில் தனியாருக்கு அனுமதி

கடந்த 60 ஆண்டுகளாக அமெரிக்கா மற்றும் கியூபாவுக்கு இடையில் ஒரு பிரச்சனைக்குரிய உறவுமுறையே நிலவி வந்தது. அதை சரிசெய்யும் வகையில், கடந்த 2015ஆம் ஆண்டு, அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும்,கியூபாவின் தலைவர் ரவுல் காஸ்ட்ரோவும் ஒப்புக் கொண்டார்கள். அமெரிக்க குடிமக்கள் கியூபாவுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டார்கள்.

ஆனால், ஒபாமாவின் நடவடிக்கைகள், அவரைத் தொடர்ந்து அதிபர் பதவிக்கு வந்த டொனால்ட் டிரம்பால் பின்வாங்கப்பட்டு, கிடப்பில் போடப்பட்டது.

இந்த நிலையில், அமெரிக்க அதிபராக சமீபத்தில் பதவியேற்றுள்ள ஜோ பைடன், அமெரிக்கா மற்றும் கியூபாவுக்கு இடையிலான உறவை மேம்படுத்த விரும்புவதை சில சமிக்ஞைகள் வழியாக வெளிக்காட்டியுள்ளார். ஆனால் அதற்கு பைடன் எவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »