Press "Enter" to skip to content

ஏமன் போரில் சௌதிக்கு அளித்த ஓத்துழைப்பை நிறுத்திய அமெரிக்கா – சௌதியின் நிலை என்ன?

  • ஃப்ராங்க் கார்ட்ணர்
  • பிபிசி பாதுகாப்பு செய்தியாளர்

ஏமன் போரில் சௌதி அரேபியாவுக்கான ஆதரவைத் திரும்பப் பெறுவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

ஆறு ஆண்டுகளாக நடந்து வரும் இந்தக் கொடும் போரில் இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த போர் பல்லாயிரக்கணக்கான மக்களைப் பட்டினிச் சாவிற்கு இட்டுச் சென்றுள்ளது.

நாட்டின் வெளியுறவுக் கொள்கை தொடர்பான தனது முதல் முக்கியமான உரையில் அதிபர் பைடன், “ஏமனில் போர் முடிவுக்கு வர வேண்டும்” என்றார்.

2014ஆம் ஆண்டில், பலவீனமான ஏமன் அரசாங்கத்திற்கும் ஹூத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே ஒரு மோதல் தொடங்கியது. ஒரு வருடம் கழித்து, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகியவற்றின் ஆதரவுடன் சௌதி அரேபியா மற்றும் மேலும் எட்டு அரபு நாடுகள் இங்குள்ள ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் மீது வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியபோது மோதல் தீவிரமான கட்டத்தை அடைந்தது.

இதுவரை, இங்குள்ள சௌதி தலைமையிலான கூட்டணி ஹூத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகத் தாக்குதல்களை நடத்தி வந்தது.

பைடன், ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. முந்தைய ஆட்சியாளர்களின் சில முடிவுகள் தலைகீழாக மாற்றப்பட்டும் உள்ளன.

அமெரிக்காவிற்கு வரும் தஞ்சம் கோரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்துள்ள அவர், அமெரிக்கத் துருப்புக்களை ஜெர்மனியில் இருந்து வெளியேற்றும் முடிவைத் திரும்பப் பெற்றுள்ளார். இந்த வீரர்கள் இரண்டாம் உலகப் போர் முடிவுற்ற காலத்திலிருந்து ஜெர்மனியில் உள்ளனர்.

இது மட்டுமல்லாமல், பைடன் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் முன்னாள் அதிபர் டிரம்பின் ஆட்சிக் காலத்தில் அரபு நாடுகளுடன் செய்யப்பட்ட பில்லியன் கணக்கான டாலர் மதிப்புள்ள ராணுவ ஒப்பந்தங்களையும் மறு ஆய்வு செய்து வருகிறது.

சௌதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கான ஆயுத விற்பனை ஒப்பந்தங்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் அமெரிக்கா முடிவு செய்துள்ளது. எஃப் -35 போர் விமான ஒப்பந்தத்தையும் இது பாதிக்கும்.

சௌதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்ட ஏவுகணைகளின் விற்பனையையும் அமெரிக்கா நிறுத்துகிறது. இது ஏமனில் நடந்து வரும் போரை பாதிக்கும். ஆனால் அரேபிய தீபகற்பத்தில் அல்-கய்தாவுக்கு எதிரான போராட்டத்தைப் பாதிக்காது.

சௌதி அரேபியாவின் இராணுவ நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா அளித்து வந்த ஆதரவு திரும்பப்பெறப்படும் என்று அறிவித்த பிறகு, ஏமனில் ஒரு ‘அரசியல் தீர்வு’ காணவே தான் உறுதி பூண்டுள்ளதாக சவுதி அரேபியா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சௌதி அரேபிய அரசு ஊடகங்கள், ஏமன் நெருக்கடிக்கு ஒரு விரிவான அரசியல் தீர்வை ஆதரிப்பதாகவும், அமெரிக்கா, ஏமன் நெருக்கடியைத் தீர்ப்பதற்கான ராஜதந்திர முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதை வரவேற்பதாகவும் சௌதி அரேபியா கூறுகிறது என்று குறிப்பிடுகின்றன.

ஏமன் போரில் சௌதிக்கு அளித்த ஓத்துழைப்பை நிறுத்திய அமெரிக்கா - சௌதியின் நிலை என்ன?

சௌதி அரேபியாவின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கும் அதற்கு எதிரான அச்சுறுத்தல்களைக் கையாள்வதில் ஒத்துழைப்பதற்குமான பைடனின் உறுதிப்பாட்டை சௌதி அரேபியா வரவேற்றுள்ளது.

சௌதி அரேபியாவின் பாதுகாப்புத் துறை துணை அமைச்சர், பிரிஸ் காலித் பின் சல்மான், “நெருக்கடிக்குத் தீர்வு காண நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளுடன் இணைந்து பணியாற்றுவதற்கும், இரான் மற்றும் அதன் போலி நட்பு நாடுகளின் தாக்குதல்களைக் கையாள்வதற்கும் அதிபர் பைடனின் உறுதிப்பாட்டை நாங்கள் வரவேற்கிறோம். கடந்த ஏழு தசாப்தங்களாக இருப்பதைப் போலவே, அனைத்துப் பிரச்சனைகளிலும் அமெரிக்கா என்ற நட்பு நாட்டுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் எதிர்நோக்குகிறோம். ” என்று ட்வீட் செய்துள்ளார்.

தனது அறிக்கையில், இளவரசர் காலித் பின் சல்மான், “ஏமன் நெருக்கடிக்கு தீர்வு காணவும், அங்குள்ள மக்களின் நிலையை மேம்படுத்தவும் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் ஆர்வமாக உள்ளோம்” என்று கூறியுள்ளார்.

சௌதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகத்துக்கு விடுக்கப்பட்டுள்ள செய்தி

ஏமன் போரில் சௌதிக்கு அளித்த ஓத்துழைப்பை நிறுத்திய அமெரிக்கா - சௌதியின் நிலை என்ன?

அதிபர் பைடன் மூத்த ராஜதந்திரி டிமோத்தி லேண்டர்கிங்கை ஏமனுக்கான அமெரிக்காவின் சிறப்புத் தூதராக நியமித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையுடன் நெருக்கமாகப் பணியாற்றி ஏமன் நெருக்கடிக்குத் தீர்வு காணும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் தலைநகர் சனா உட்பட ஏமனின் பெரும்பாலான பகுதிகளைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். கிளர்ச்சியாளர்களுக்கும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான பொறுப்பு டிமோத்திக்கு வழங்கப்பட்டுள்ளது.

பிபிசி நிருபர் லீஸ் டூசெட், அதிபர் பைடனின் அறிவிப்பு ஏமன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அவரது உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாகக் குறிப்பிடுகிறார்.

ஏமன் போரில் சௌதி அரேபியா தலைமையிலான கூட்டணிக்கான அமெரிக்க ஆதரவைத் திரும்பப் பெறுவதன் மூலம் இந்தக் கொடூரமான அத்தியாயத்திற்கு முடிவுரை எழுதப்பட்டதாகவும் கருத இயலாது. ஆனால் இது சௌதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத் தலைவர்களுக்கு அமெரிக்க அதிபர் விடுக்கும் ஒரு வலுவான சமிக்ஞையாகும்.

சௌதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகமும் கூட, ஏமன் போரை முடிவுக்குக் கொண்டு வரும் வழிகளையே ஆய்ந்து வருகின்றன.

இருப்பினும், ஏமனில் அமைதியை ஏற்படுத்துவது அதிபர் பைடனுக்கு ஒரு பெரிய சவாலாக இருக்கும்.

இந்தப் பிரச்சனையில் பல ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் டிமோத்தி லேண்டர்கிங்கிற்கு பைடன் இந்தப் பணியை வழங்கியுள்ளார். இவர், இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைவரையும் நன்கறிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்புடன் சௌதி அரேபியா பலமான உறவைக் கொண்டிருந்தது. ஏமன் போரில் சௌதி அரேபியாவுக்கான ஆதரவைத் தொடர்ந்தது மட்டுமல்லாமல், சௌதி அரேபியாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தங்கள் அமெரிக்க பாதுகாப்புத் துறைக்கு முக்கியமானவை என்றும் குறிப்பிட்டு வந்தார்.

அதிபர் டிரம்ப் ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர், சௌதி அரேபியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகளில் மாற்றங்கள் தோன்றத் தொடங்கியுள்ளன. பைடனின் சமீபத்திய அறிவிப்புக்குப் பிறகு, அமெரிக்காவிற்கும் சௌதி அரேபியாவிற்கும் இடையிலான உறவு இப்போது புது விளக்கம் பெறும் என்றே தெரிகிறது.

பைடன் அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு, சௌதி அரேபியா தொடர்பான அமெரிக்க கொள்கையில் மாற்றம் இருக்கும், ஆனால் அது சவுதி மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்தாது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

“ஏமன் குறித்த பைடன் நிர்வாகத்தின் கொள்கை சௌதி அரேபியாவை இந்தப் போரிலிருந்து விடுபட வழிவகுக்கும்” என்று ஜே.என்.யூ-வில், மத்திய கிழக்கு விவகாரங்களின் பேராசிரியர் பி.ஆர்.குமாரசாமி கூறுகிறார்.

இன்னொரு புறம், அங்காராவில் உள்ள இல்ட்ரிம் பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியரும் சர்வதேச விவகார நிபுணருமான ஒமர் அனஸ் கூறுகையில், “அமெரிக்காவிற்கும் சௌதி அரேபியாவிற்கும் இடையிலான உறவு எப்போதும் வலுவாகவே உள்ளது. இருவருமே எரிசக்தி மற்றும் பாதுகாப்புத் துறையில் நெருக்கமான உறவுகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். அமெரிக்கா சௌதி அரேபியாவுடன் நட்பு பாராட்டவில்லையெனில், பாரசீக வளைகுடாவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும். இதுபோன்ற சூழ்நிலையில், பைடனின் வருகை சௌதி அரேபியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவை பாதிக்காது. ” என்று கருத்து தெரிவிக்கிறார்.

ஏமன் குறித்த பைடனின் நிலைப்பாடு ஏற்கனவே தெளிவாக இருந்தது. இது குறித்து, “ஏமன் குறித்து நிச்சயமாக சௌதி அரேபியா மீது அழுத்தம் இருக்கும். ஐக்கிய அரபு அமீரகம் இந்தப் போரிலிருந்து தன்னை விலக்கிக்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளது. அவ்வாறு நிகழ்ந்தால், பேச்சுவார்த்தை மூலம் ஏமன் பிரச்சனை முடிவுக்கு வர ஒரு வாய்ப்பு ஏற்படும்.” என்று ஓமர் கூறுகிறார்.

காஷோக்ஜியின் மரணம் ஒரு சிக்கலா?

காஷோஜ்ஜியின் மரணம் சவுதிக்கு ஒரு சிக்கலா?

பைடன் நிர்வாகத்தில் பத்திரிகையாளர் ஜமால் காஷோக்ஜி மரண வழக்கு சௌதி அரேபியாவை சிக்கலுக்குள்ளாக்கக்கூடும். சௌதி ஆட்சியை விமர்சித்த காஷோஜ்ஜி துருக்கியில் உள்ள சௌதி அரேபியாவின் துணைத் தூதரகத்தில் படுகொலை செய்யப்பட்டார்.

காஷோக்ஜியின் மரணம் குறித்த பிரச்சனை பைடன் நிர்வாகத்தில் மீண்டும் எழக்கூடும் என்று ஓமர் அனஸ் கூறுகிறார்.

“ஜமால் காஷோக்ஜியின் படுகொலை விவகாரத்தில் பைடன் நிர்வாகம் நிச்சயமாக சௌதி அரேபியாவைச் சிக்கலில் மாட்டிவிடும். பல சட்ட நடைமுறைகள் அமெரிக்காவில் தொடங்கி மகுட இளவரசரின் பெயரும் கூட இந்த வழக்கில் சேர்க்கப்படலாம். மகுட இளவரசரின் பெயர் இருந்தால், அது சௌதி அரேபியாவுக்கு மிகப் பெரிய சிக்கலாக உருவாகலாம். இந்தச் சட்ட சிக்கலிலிருந்து விடுபடுவது என்பது சௌதி அரேபியாவுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கலாம்.” என்று ஓமர் கூறுகிறார்.

காஷோக்ஜியின் மரணத்துடன் இளவரசருக்குத் தொடர்பில்லை என்று சௌதி கூறிவருகிறது. சௌதி அரேபியா எழுத்தாளரும் ஆய்வாளருமான அலி ஷிஹாபி கூறுகையில், “உறுதியான ஆதாரங்கள் இல்லாததால் அமெரிக்கா, இளவரசருக்கு சந்தேகத்தின் பலனை வழங்க வேண்டி இருக்கலாம்.” என்று கணிக்கிறார்.

உளவுத்துறை ஆதாரங்களை மேற்கோள் காட்டி ஊடக அறிக்கைகள், இளவரசர் முகமது பின் சல்மான் தான் காஷோக்ஜியைக் கொல்ல உத்தரவிட்டிருக்கலாம் என்று சி.ஐ.ஏ நம்புவதாகக் கூறுகின்றன.

” சிஐஏ ஆகட்டும், உள்துறை ஆகட்டும் அல்லது பென்டகன் ஆகட்டும், மத்திய கிழக்கில் எந்த நடவடிக்கையை எடுப்பதாக இருந்தாலும், அமெரிக்காவுக்கு சௌதி அரேபியாவின் ஆதரவு மிகவும் முக்கியம்.” என்று அலி ஷிஹாபி கூறுகிறார்.

ஓமர் அனஸ், “பாரசீக வளைகுடாவின் பாதுகாப்பு முக்கியமானது, சீனா அல்லது ரஷ்யாவின் செல்வாக்கு இங்கு இருப்பதை பைடன் நிர்வாகம் விரும்பாது. ரஷ்யாவின் செல்வாக்கு எங்கிருந்தாலும் அமெரிக்கா அங்கு தன் ஆதிக்கத்தை அதிகரிக்கும் என்று பைடன் ஏற்கனவே கூறியுள்ளார்” என்று நினைவு கூர்கிறார். “

இரான் சமரசம்

இரானின் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக சௌதி அரேபியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே வேறுபாடுகள் இருக்கலாம். ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில், சௌதி அரேபியா வேண்டா வெறுப்பாக இரான் ஒப்பந்தத்தை ஆதரித்தது.

இரானுடனான 2015 அணுசக்தி ஒப்பந்தத்தை மீண்டும் செயல்படுத்தப் போவதாக பைடன் கூறியுள்ளார். இருப்பினும், அமெரிக்கா நிச்சயமாக இரான் மீது சில புதிய அழுத்தங்களை உருவாக்க முயற்சிக்கும். இந்த விஷயத்தில் தனது சில கருத்துகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று சௌதி விரும்புகிறது. இருப்பினும், டிரம்ப் ரத்து செய்த ஒப்பந்தம் மீண்டும் அதே வடிவத்தில் செயல்படுத்தப்படும் என்று இரான் கூறியுள்ளது.

பைடன்

“வெளியுறவுக் கொள்கை, அணுசக்தி கலாசாரம் மற்றும் வருவாய்த் துறைப் பதவிகள் ஆகியவற்றிற்கான பைடன் நிர்வாகத்தின் நியமனங்களைப் பார்த்தால், அணுசக்தி பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒப்பந்தங்களைச் செயல்படுத்தும் நோக்கம் தெளிவாகத் தெரிகிறது.” என்று ஐரோப்பிய கவுன்சிலின் மத்திய கிழக்கு மற்றும் வெளிநாட்டு விவகாரங்களுக்கான வட ஆப்பிரிக்கா திட்டத்தின் துணை இயக்குனர் எலி ஜெரான்மாயே கூறுகிறார்.

“இரான் ஒப்பந்தத்தில் அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையிலான செயல்பாடுகள், சௌதி அரேபியாவிற்கும் மிகவும் முக்கியமானதாக இருக்கும். தனது அண்டையில் ஒரு ஷியா நாடு வலிமை பெறுவதை சவுதி விரும்பாது.” என்று ஓமர் அனஸ் கூறுகிறார்.

சௌதி அரேபியா மத்திய கிழக்கில், பாதுகாப்பு ரீதியாக, அமெரிக்காவின் ஒரு முக்கியமான நட்பு நாடு மற்றும் பிராந்தியத்தில் ஷியா கிளர்ச்சிக் குழுக்களைத் தடுப்பதில் அது முக்கிய பங்கு வகிக்கிறது.

பேராசிரியர் குமாரசாமி, “இரான் தொடர்பான அதிபர் ஒபாமாவின் கொள்கையை பைடன் ஏற்க வாய்ப்பில்லை. சௌதி அரேபியாவை அவரால் புறக்கணிக்க முடியாது. இதன் பொருள் என்னவாக இருக்கும் என்றால், பைடனின் இரான் கொள்கையில் சௌதி அரேபியாவுக்கும் பங்கிருக்கும் என்பதே.” என்று தெரிவிக்கிறார்.

அமெரிக்காவின் புதிய நிர்வாகத்துடன் உறவுகளைப் பலப்படுத்துவது ஒரு சவால்

டிரம்ப் நிர்வாகம் சௌதி அரேபியாவிற்கு அளவுக்கு அதிகமான சலுகைகளை வழங்கியதாக அதிபர் பைடன் தனது தேர்தல் பரப்புரையின் போதே குற்றம் சாட்டினார். சௌதி அரேபியாவில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் குறித்து டிரம்ப் கண்மூடித்தனமாகச் செயல்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

வெள்ளை மாளிகையின் புதிய நிர்வாகக் குழு சௌதி அரேபியாவுடனான உறவுகள் மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் மனித உரிமைகள் அதன் மையமாக இருக்கும் என்றும் கூறியுள்ளது. இளவரசர் முகமது பின் சல்மான் 2017 இல் தனது ஆதிக்கத்தைப் பலப்படுத்தியதிலிருந்து, அவர் சௌதி அரேபியாவில் பல சமூக மாற்றங்களைச் செய்துள்ளார். ஆனால் கருத்துச் சுதந்திரம் இன்னும் தீவிரமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

பேராசிரியர் பி.ஆர்.குமாரசாமி, “டிரம்ப் அளவுக்கு நட்புறவு இருக்காது என்பது உண்மை தான் என்றாலும், கடந்த நான்கு ஆண்டுகளில் சௌதி அரேபியாவில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சௌதி அரேபியா இப்போது இஸ்ரேலுடன் நெருக்கமாக உள்ளது.” என்று கூறுகிறார்.

“அமெரிக்காவில் புதிய அரசாங்கத்தின் காரணமாக எழுந்துள்ள புதிய சூழ்நிலைகள் சௌதிக்கு ஒரு சவாலாகவும் இருக்கும் புதிய வாய்ப்புகளை வழங்குவதாகவும் இருக்கும். இவற்றை சௌதி அரேபியா எவ்வாறு கையாள்கிறது என்பதைப் பொறுட்திருந்து தான் பார்க்க வேண்டும்.” என்றும் அவர் கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »