Press "Enter" to skip to content

உச்சத்தில் பிட்காயின் விலை: 150 கோடி டாலர் முதலீடு செய்த டெஸ்லா

அமெரிக்காவை சேர்ந்த பிரபல தொழில்நுட்ப தொழில்முனைவோரான ஈலோன் மஸ்க்கிற்கு சொந்தமான தேர் நிறுவனமான டெஸ்லா, 150 கோடி டாலருக்கு மறையீட்டு நாணயமான (கிரிப்டோகரன்சி) பிட்காயினை கடந்த மாதம் வாங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும், வருங்காலத்தில் பிட்காயினை கட்டணம் பெறும் முறையாக ஏற்றுக்கொள்ளும் திட்டத்தையும் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் காரணமாக, ஊசலாடி கொண்டிருந்த பிட்காயினின் விலை 17 சதவீதம் உயர்ந்து, முன்னெப்போதுமில்லாத வகையில் 44,220 டாலர்கள் என்ற உச்சத்தை அடைந்துள்ளது.

நிறுவனத்தின் தினசரி நடவடிக்கையில் பயன்படுத்தப்படாத பணத்தின் மூலம் கிடைக்கும் வருவாயை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பு “#bitcoin” என்ற ஹேஷ்டேகை தனது ட்விட்டர் கணக்கின் முகப்புப்பக்கத்தில் மஸ்க் சேர்த்ததை அடுத்து, பிட்காயின்களின் விலை அதிகரிக்க தொடங்கியிருந்த நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

அடுத்த சில நாட்களிலேயே அந்த ஹேஷ்டேகை மஸ்க் தனது கணக்கிலிருந்து நீக்கிவிட்டாலும், பிட்காயின் மட்டுமின்றி டோஜ்காயின் உள்ளிட்ட மற்ற மறையீட்டு நாணயங்களின் மதிப்பும் தொடர்ந்து அதிவேகமாக உயர்ந்து வருகிறது.

1.5 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்த டெஸ்லா - உச்சத்தில் பிட்காயின் விலை

பங்குச் சந்தை தாக்கல் ஒன்றில், டெஸ்லா ஜனவரி மாதத்தில் “தனது முதலீட்டுக் கொள்கையை புதுப்பித்தது” என்றும் இப்போது மின்னணு நாணயங்கள், தங்கம் அல்லது அதனுடன் தொடர்புடைய முதலீடுகளில் கவனம் செலுத்துவதாக தெரிவித்துள்ளது.

“நாங்கள் ஏற்கனவே 150 கோடி டாலர் மதிப்புள்ள பிட்காயின்களை வாங்கியுள்ளோம். மேலும் வருங்காலத்தில் இன்னமும் மின்னணு பணத்தில் முதலீடு செய்யவும், தக்கவைக்கவும் திட்டமுள்ளது. மேலும், சட்டங்களுக்கு உட்பட்டு, எதிர்காலத்தில் எங்கள் தயாரிப்புகளுக்கான கட்டண வடிவமாக பிட்காயினை ஏற்கத் தொடங்குவோம் என்று எதிர்பார்க்கிறோம்” என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, முதலீட்டாளர்களுக்கு மத்தியில் பெருமளவில் ஏற்றுக்கொள்ளப்படும் நிலைக்கு “விளிம்பில்” பிட்காயின் இருப்பதாக கடந்த வாரம் ட்விட்டர் பதிவு ஒன்றில் மஸ்க் தெரிவித்திருந்தார்.

புதிய திருப்புமுனை?

1.5 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்த டெஸ்லா - உச்சத்தில் பிட்காயின் விலை

மறையீட்டு நாணயத்தின் (Virtual Currencies) வரலாற்றில் டெஸ்லாவின் சமீபத்திய முதலீடு புதிய திருப்புமுனையாக இருக்கக்கூடும் என்று சில ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

“டெஸ்லா முதல் நகர்வை தொடக்கி வைத்துள்ளதை அடுத்து, மற்ற நிறுவனங்களும் பிட்காயினில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டும் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில், பிட்காயினை வாங்கியுள்ளது, உலகின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்று” என்று கிரிப்டோகரன்சி ஆராய்ச்சி நிறுவனமான மெசாரியின் சந்தை நுண்ணறிவுப் பிரிவின் துணைத் தலைவர் எரிக் டர்னர் கூறினார்.

ஆனால், பிட்காயின் ஒரு “மிகவும் ஊசலாட்டம்” கொண்ட மறையீட்டு நாணயம் என்று மார்க்கெட்ஸ்.காமின் தலைமை சந்தை ஆய்வாளர் நீல் வில்சன் எச்சரிக்கிறார்.

“டெஸ்லா இப்போது பெரிய (அந்நிய செலாவணி) அபாயத்தை சந்திக்க தொடங்கியுள்ளது. இது பெரும்பாலான முதலீட்டாளர்களுக்கு பெரிய பிரச்சனையாக இருக்காது என்றாலும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்” என்று அவர் கூறியுள்ளார்.

BBC Indian sports woman of the year

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »