Press "Enter" to skip to content

அமெரிக்க நாடாளுமன்ற தாக்குதல் குறித்த புதிய காணொளி: நிறைவேறுமா டிரம்புக்கு எதிரான கண்டனத் தீர்மானம்?

அமெரிக்க செனட் சபையில், டொனால்ட் டிரம்புக்கு எதிரான கண்டனத் தீர்மானம் தொடர்பான விசாரணையில், டிரம்பின் ஆதரவாளர்கள் அமெரிக்க கேப்பிட்டல் கட்டடத்தில் அத்துமீறி நுழைந்த புதிய காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

கலவரக்காரர்களுடன் காவலர்கள் கைகலப்பு நடத்துவதும், கேப்பிட்டல் கட்டடத்தில் காவலர்கள் உதவி கோரிவதும் அக்காணொளியில் தெரிகிறது.

கலவரக்காரர்கள் சேம்பருக்குள் நுழைய ஒரு சில மீட்டர் தொலைவில் இருக்கும் போது கூட, காவலர்கள், கேப்பிட்டல் கட்டடத்தில் இருந்த அரசியல்வாதிகளை பத்திரப்படுத்தினார்கள்.

100 உறுப்பினர்களைக் கொண்ட செனட் சபையில், இரு கட்சியினருக்கு சம அளவில் பலமிருக்கிறது. டிரம்ப் மீதான கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்ற மூன்றில் இரு பங்கு வாக்குகள் தேவை. ஆனால் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் இதுவரை டிரம்புக்கு விஸ்வாசமாக இருந்து வந்துள்ளார்கள். எனவே டிரம்ப் மீதான இந்த கண்டனத் தீர்மானத்தில் இருந்தும் டிரம்ப் விடுபட வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது.

ஒருவேளை டிரம்ப் தண்டிக்கப்பட்டால், அவர் மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிட தடை விதிக்கப்படும்.

கடந்த நவம்பர் 2020-ல் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், பெரிய அளவில் மோசடி நடந்திருப்பதாக டிரம்ப் கூறிய தவறான செய்தியை ஆதரித்து, ஆயிரக் கணக்கானோர் அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தின் முன் கூடினர். அதன் பிறகு கட்டுக்கடங்காத கூட்டம், நாடாளுமன்றக் கட்டடத்தில் நுழைந்தது. இந்த கலவரத்தில் ஒரு காவலர் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர்.

காணொளியில் என்ன இருந்தது?

கலவரக்காரர்கள் (முழுக்க கவச உடையில் இருந்தவர்கள் உட்பட) எப்படி அமெரிக்க நாடாளுமன்றக் கட்டட பாதுகாப்பை மீறி, முரட்டுத்தனமாக நுழைந்தனர் என்பதை, இதுவரை வெளியாகாத பாதுகாப்பு ஒளிக்கருவி (கேமரா)வின் பதிவுகள் காட்டின.

கலவரக்காரர்கள் எப்படி பேட் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை காவலர்களுக்கு எதிரான ஆயுதங்களாகப் பயன்படுத்துகிறார்கள் என அப்பதிவின் ஒலி அமைவில் (ஒலிநாடா) கூறப்பட்டுள்ளது.

ஒரு காணொளிப் பதிவில், குடியரசுக் கட்சியின் செனட்டர் மற்றும் முன்னாள் அதிபர் வேட்பாளரான மிட் ராம்னியை, கேப்பிட்டல் கட்டடத்தின் பாதுகாப்பு அதிகாரியான யூஜின் குட்மேன் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்வதற்கு முன், கலவரக்காரர்களை நோக்கிச் செல்வது பதிவாகி இருந்தது.

பைடனின் வெற்றியை மறுக்காத அவரை (முன்னாள் அமெரிக்க துணை அதிபர்எந்திர இருசக்கரக்கலன் (பைக்) பென்ஸ்) “தூக்கில் தொங்கவிடுங்கள்” என கலவரக்காரர்களில் யாரோ கூறுவதற்கிடையில், மைக் பென்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டது மற்றொரு காணொளியில் பதிவாகி இருக்கிறது.

தாக்குதல்

மற்றொரு பதிவில், நாடாளுமன்றக் கட்டடத்தில் அத்துமீறி நுழைந்த கலவரக்காரர்கள், அவைத் தலைவர் நான்சி பலோசியின் அலுவலகத்துக்குள் நுழைந்து “எங்கு இருக்கிறீர்கள் நான்சி?” எனக் கேட்டது குறிப்பிடத்தக்கது.

ஜனநாயகக் கட்சியினர் இந்த வழக்கை எப்படிக் கையாண்டார்கள்?

டிரம்புக்கு எதிரான கண்டனத் தீர்மானம் தொடர்பான முதல் நாள் விசாரணை தொடங்கியது. இருதரப்பினருக்கும் தங்கள் தரப்பிலான வாதங்களை முன் வைக்க 16 மணி நேரம் வழங்கப்பட்டது.

இந்த வழக்கின் முக்கிய மேலாளரான ஜேமி ராஸ்கின் “இந்தக் கலவரத்தில் டிரம்ப் ஒன்றும் அறியாத அப்பாவி பார்வையாளர் கிடையாது. அவர் இந்த கலவரத்தை புகழ்ந்தார், ஊக்குவித்தார், பல காலமாக இக்கலவரத்தைப் பண்படுத்தி வந்தார்” என்றார்

கலவரம் குறித்து ஆதாரம் வழங்கிய ஸ்டேசி ப்ளாஸ்கெட் “முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தக் கலவரத்தை வேண்டும் என்றே ஊக்குவித்தார். முக்கிய நபர்களை இலக்கு வைத்தார். அதில் முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸும் ஒருவர்,” எனக் கூறினார்.

தேர்தலில் மோசடி நடந்தது என்கிற “பெரிய பொய்யைப் பரப்ப”, எப்படி வாரக் கணக்கில் செலவழித்தார் என்பதைக் காட்ட, இந்த வழக்கை நடத்தும் மேலாளர்கள், டிரம்பின் சமூக வலைதளப் பதிவுகளைப் பயன்படுத்தினர்.

அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடம் தாக்கப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு டிரம்ப் உரையாற்றிய காணொளியை, ஜனநாயகக் கட்சியினர், தடயவியல் ரீதியாக புட்டு புட்டு வைத்துவிட்டார்கள். அக்காணொளியில், டிரம்ப் தன் ஆதரவாளர்களை “வெறித்தனமாகச் சண்டையிடுங்கள்” எனக் கூறியுள்ளார். இதை வழக்கு நடத்தும் மேலாளர்கள், டிரம்ப் கூட்டத்தை நாடாளுமன்றக் கட்டடத்தை நோக்கிச் செல்லுமாறு கூறுவதற்கு முன், அவர்களை தூண்டிவிட்டதாகச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சட்டமியற்றும் பிரதிநிதிகள், சபை உறுப்பினர்கள் மற்றும் செனட் சபை உறுப்பினர்கள் மீது தாகுதல் நடத்துவது தொடர்பாக, வெளிப்படையாக பேசியதற்கு சாட்சியாக டிரம்புக்கு ஆதரவான வலைதளங்களில் இருந்து ஸ்கிரீன் ஷாட்களைச் சுட்டிக் காட்டியுள்ளனர்.

இப்படியாக டிரம்புக்கு எதிரான கண்டனத் தீர்மான வழக்கை ஜனநாயகக் கட்சியினர் நடத்தி வருகிறார்கள்.

கண்டனத் தீர்மானம் என்றால் என்ன?

தற்போதைய அதிபர் ஒருவர் குற்றம் செய்ததாகக் கூறப்பட்டால் அவர் மீது கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்படும். இங்கு முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தான் கேப்பிட்டல் கட்டட தாக்குதலைத் தூண்டிவிட்டார் எனக் குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறார்.

என்ன நடந்தது?

அமெரிக்க பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள், டிரம்ப் மீது கண்டனத் தீர்மானம் நிறைவேற்ற கடந்த ஜனவரி 13-ம் தேதி வாக்களித்தார்கள். தற்போது அமெரிக்க செனட் சபை, டிரம்பின் மீதான கண்டனத் தீர்மானம் தொடர்பாக விசாரணை நடத்தவிருக்கிறார்கள்.

இதன் பொருள் என்ன?

டிரம்ப் தற்போது அதிபர் அல்ல. ஒருவேளை செனட் சபை கண்டனத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தால், அவர் மீண்டும் எந்த ஒரு பொது அரசுப் பதவியையும் வகிக்க முடியாது.

அடுத்து என்ன நடக்கும்?

ஜனநாயகக் கட்சியினர் டிரம்ப் தான் கலவரத்தைத் தூண்டினார் என்றும், குடியரசுக் கட்சியினர் டிரம்ப் கலவரத்தைத் தூண்டவில்லை எனவும் வாதாடி வருகிறார்கள். அதோடு இக்கண்டனத் தீர்மானம் அரசியல் உள்நோக்கம் கொண்டது எனவும் குடியரசுக் கட்சியினர் வாதாடி வருகிறார்கள்.

இந்த வாரக்கடைசி வரை, இந்த கண்டனத் தீர்மானம் தொடர்பான விவாதங்கள் தொடரும் என எதிர்பார்க்கலாம். அதற்குப் பிறகும் கண்டனத் தீர்மான மேலாளர்கள் சாட்சிகளை விசாரிக்க கோரிக்கை வைக்கலாமா இல்லையா என எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. ஏற்கனவே டிரம்ப் தானாக முன் வந்து சாட்சியமளிக்க மறுத்துவிட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அடுத்த வார தொடக்கத்துக்குள், டிரம்பை கண்டனத் தீர்மானம் மூலம் தண்டிப்பது அல்லது விடுவிப்பது தொடர்பாக விரைவான விசாரணை தேவை என அமெரிக்க பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் மற்றும் செனட் சபை உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.

இந்த வார தொடக்கத்தில், ஆறு குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் மட்டுமே இந்த விசாரணை அரசியலமைப்பின்படி சரி என வாக்களித்துள்ளனர். டிரம்பை தண்டிக்க, ஜனநாயகக் கட்சியின் 50 வாக்குகளோடு, குடியரசுக் கட்சியினர்களிடம் இருந்து மொத்தம் 17 வாக்குகள் வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

BBC Indian sports woman of the year

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »