Press "Enter" to skip to content

மூக்கை உரசிய புல்லட்: முசோலினியை கொல்ல முயன்ற ஐரிஷ் பெண்ணின் கதை

ஏப்ரல் 7 1926ஆம் ஆண்டு. இருபதாம் நூற்றாண்டில் மிகவும் மோசமான அவப்பெயரை சந்தித்திருந்த சர்வாதிகாரிகளில் ஒருவரான முசோலினியை ரோம் நகரத்தில் இருந்த கூட்டம் ஒன்றுக்குள் இருந்து வந்த ஐரிஷ் பெண்மணி (அயர்லாந்தை பூர்வீகமாக கொண்டவர்) ஒருவர் சுட்டார்.

அவற்றில் ஒரு தோட்டா (புல்லட்) பெனிட்டோ முசோலினியின் மூக்கை உரசிக் கொண்டு சென்றது. ஆனால் அந்த இத்தாலிய சர்வாதிகாரி அந்த கொலை முயற்சியிலிருந்து தப்பினார்.

இருபதாம் நூற்றாண்டில் பாசிசத்திற்கு எதிராக ஐரோப்பாவில் பல தனிமனிதர்கள் வீரதீர செயல்களை செய்துள்ளனர். அவற்றில் வயலட் கிப்சன் செய்த இந்தச் செயல் வரலாற்று பக்கங்களுக்குள் புதைந்து போனது.

பெனிட்டோ முசோலினி கொலைசெய்ய நால்வர் முயற்சி செய்துள்ளனர். அந்த நான்கு முயற்சிகளில் மிகவும் நெருக்கமாக இருந்தது வயலட்டின் முயற்சிதான்.

தற்போது இந்த சம்பவம் நடந்து ஒரு நூற்றாண்டு காலம் ஆகப்போகிறது. முசோலினி ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆன பின்பு அவரைக் கொலை செய்வதற்கு வயலட் கிப்சன் இந்த முயற்சியை மேற்கொண்டார்.

இதன்போது பெனிட்டோ முசோலினி கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தார்.

வயலட் கிப்சன் மொத்தம் மூன்று முறை சுட்டார் அதன் பின்பு அவரது துப்பாக்கி சரியாக இயங்கவில்லை. அங்கிருந்த முசோலினியின் ஆதரவாளர்கள் அவரைத் தாக்கத் தொடங்கினார்கள். உடனே அங்கிருந்த காவல்துறையினர் குறுக்கிட்டு அவனை கைது செய்தனர்.

இத்தாலியில் சில காலம் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் அவர் இங்கிலாந்துக்கு நாடு கடத்தப்பட்டார்.

இத்தாலியில் பொது விசாரணை நடத்தப்பட வேண்டிய சங்கடமான சூழலை தவிர்ப்பதற்காகவே வயலட் கிப்சன் நாடுகடத்தப்பட்டார் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

வயலட் கிப்சன்

1956ஆம் ஆண்டு அவர் மரணமடையும் வரை நார்த்தாம்ப்டனில் உள்ள செயின்ட் ஆண்ட்ரூஸ் மருத்துவமனையில் அவர் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். அது மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மையம்.

வயலட் கிப்சன் பெனிட்டோ முசோலினி மீது கொலைமுயற்சி நடத்திய பிறகு அயர்லாந்து ப்ரீ ஸ்டேட்-இன் நிர்வாகக் குழுவின் தலைவர் டபிள்யூ.டி.காஸ்கிரெவ் முசோலினி உயிர்தப்பியதற்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் ஒன்றை எழுதினார்.

ஆளும் வர்க்க குடும்ப பின்னணி

வயலட்டின் பிறப்பே அவரது வாழ்க்கை கதையை வழக்கத்துக்கு மாறான தாக்கியது.

அயர்லாந்தின் லார்டு சான்சலர் பதவி அப்போது அந்த நாட்டிலேயே மிகவும் உச்சபட்சமான சட்டத்துறை பதவியாக இருந்தது. அந்த பொறுப்பில் இருந்த லார்டு பேரன் ஆஷ்பர்ன் மகள் வயலட். விக்டோரியோ அரசியின் வட்டாரத்தில் இவர் அந்த காலகட்டத்தில் புதிதாக நுழைந்தவராக இருந்தார்.

அயர்லாந்தின் டப்ளின் நகர சபை தற்போது அவருக்கு ஒரு நினைவு பட்டயம் அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.

அந்த தீர்மானத்தில் அயர்லாந்து பெண்கள் வரலாற்றிலும், அயர்லாந்து நாடு மற்றும் அதன் வரலாற்றிலும் வயலட்டுக்கு உரிய முறையான இடம் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் செய்த பாசிசத்துக்கு எதிரான நடவடிக்கை பொது மக்களுக்குத் தெரியும் வகையில் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவரது நடவடிக்கை பிரிட்டிஷ் அதிகாரிகளும் அவரது குடும்பத்தினரும் அரசியல் நடவடிக்கையாக பார்க்காமல், மூர்க்கமான நடவடிக்கையாக பார்ப்பதற்கு வழிவகுத்தது என்றும் அந்த தீர்மானம் கூறுகிறது

“ஏதோ சில காரணங்களுக்காக அயர்லாந்து ஆட்சி நிர்வாகமும் பிரிட்டிஷ் ஆட்சி நிர்வாகமும் இவரை முழுமையாக புறக்கணித்து விட்டன,” என்று கூறுகிறார் இந்த தீர்மானத்தை முன்மொழிந்த டப்ளின் நகர சபையின் சுயேச்சை உறுப்பினர் மேனிக்ஸ் ஃப்லின்.

அசாதாரண செயல்களைச் செய்தவர்கள், குறிப்பாக பெண்கள், வரலாறு போலவே இவரது வரலாறும் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது என்று பிபிசி நியூசிடம் அவர் கூறினார்.

“முதலாம் உலகப் போர் மற்றும் இரண்டாம் உலகப் போரை பார்த்தீர்களானால் ஆண்கள் அளவுக்கு பெண்களும் பங்காற்றியுள்ளனர் என்பது தெரியும். ஆனால் அறிய முடியாத சில காரணங்களுக்காக வயலட் கிப்சன் ஒரு அவமானமாக பார்க்கப்பட்டார். அவர் புறக்கணிக்கப்பட்டார். அந்த அவமானத்தை மறைப்பதற்காக அவருக்கு மனநிலை சரியில்லை என்று கூறினார்கள்,” என்று கூறுகிறார் ஃப்லின்.

அவருக்கு வரலாற்றுச் சிறப்பு செய்யும் வகையில் நினைவு பட்டயம் அமைப்பதற்கு வயலட் கிப்சனின் குடும்பமும் ஒத்துழைப்பு தந்துள்ளது. இன்னும் எந்த இடத்தில் இந்த நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று முடிவு செய்யப்படவில்லை என்றாலும் வயலுக்குச் சென்று தமது இளம் வயதை கழித்த மேரியான் ஸ்கொயர் பகுதியில் உள்ள வீட்டில் இது அமைக்கப்பட வாய்ப்புள்ளது.

2014ஆம் ஆண்டு ஆர்டிஈ எனும் ஊடகம் ஒளிபரப்பிய கிப்சன் குறித்த ஷியோபான் லைனாம் எனும் பெண் உருவாக்கிய ஆவணப்படம் மற்றும் பிரான்சிஸ் ஸ்டோனர் – சாண்டர்ஸ் என்பவரின் ‘The Woman Who Shot Mussolini’ எனும் புத்தகத்தில் இருந்த ஓவியம் ஆகியவற்றின் மூலம் வயலட் கிப்சனின் வாழ்க்கை பரவலான மக்களுக்கு தெரியவந்தது.

முசோலினி

இந்த ஆவணப்படம் பலர் ‘Violet Gibson, The Irish Woman Who Shot Mussolini’ எனும் திரைப்படம் உருவாக அடிப்படையாக அமைந்தது. ஷியோபான் லைனாமின் கணவர் பேரி டவுடால் இயக்கிய இந்த படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டு வருகிறது.

“முசோலினியை கொல்வதற்கு அந்த காலத்தில் மக்கள் புனிதப்பயணம் போல செல்வார்கள். ஐம்பது வயது ஆகியிருந்த பெண்ணான கிப்சன் முசோலினியை மிகவும் நெருக்கமான தொலைவிலிருந்து சுட்டார் என்கிறார் ஷியோபான் லைனாம்.

சென்று சேராத கடிதங்கள்

இளவரசியாக இருந்த எலிசபெத், வின்ஸ்டன் சர்ச்சில் உள்ளிட்டவர்களுக்கு மருத்துவமனையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த காலத்தில் தன்னை விடுதலை செய்யவேண்டும் என்று வயலட் கடிதம் எழுதினார் என்கிறார் பேரி.

சர்ச்சில் தமது இளம் வயதில் அயர்லாந்தில் இருந்தபொழுது வயலட் அவருடன் நேரத்தை கழித்து இருக்க வாய்ப்பு இருந்திருக்கலாம் என்று அவர் கூறுகிறார்.

ஆனால் நார்த்தாம்ப்டனில் தற்போது வைக்கப்பட்டுள்ள இந்த கடிதங்கள் எவையுமே வயலட் யாருக்காக எழுதினாரோ அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. இவர் தனது வாழ்நாள்

முழுவதும் அடைத்து வைக்கப்பட்டு இருப்பார் என்ற கட்டுப்பாட்டுடன் தான் இத்தாலியிலிருந்து பிரிட்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டார் என்று கூறுகிறார் அவர்.

முசோலினி மீதான கொலை முயற்சி தொடர்பாக இத்தாலியில் ஆவணப்படுத்தி வைக்கப்பட்டுள்ள ஆவணங்களை இந்த கணவன் மனைவி இணையர் தங்கள் ஆய்வின் ஒரு பகுதியாக பார்த்துள்ளனர்.

முசோலினி மீது கொலை முயற்சி செய்து செய்ய செய்தவர்களில் அதிகமான தகவல்கள் கிப்சன் குறித்து தான் அங்கு வைக்கப்பட்டுள்ளது என்று அவர்கள் கூறுகிறார்கள்.

இந்த கொலை முயற்சி ஓர் ஆணால் செய்யப்பட்டிருந்தால் அவருக்காக இந்நேரம் சிலை நிறுவப்பட்டிருக்கும். இவர் ஒரு பெண் என்பதால் இவர் அடைத்து வைக்கப்பட்டு இருக்கிறார் இப்பொழுது அவருடைய கதையை வெளியே கொண்டு வருவது எங்களுக்கு மகிழ்ச்சி தருகிறது என்று கூறுகிறார் பேரி.

யார் இந்த முசோலினி?

முதலாம் உலகப்போருக்கு பின்பு முசோலினியின் தேசிய பாசிஸ்ட் கட்சி இத்தாலியில் ஆட்சிக்கு வந்தது. ‘ப்லேக் ஷர்ட்ஸ்’ (கருப்புச் சட்டைகள்) என்று கூறப்பட்ட ஆயுதக்குழுக்கள் இவரது ஆட்சிக்கு ஆதரவாக இருந்தன. ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் அனைவரும் இந்த குழுவினரால் அச்சுறுத்தப்பட்டனர்.

1920களின் தொடக்கத்திலேயே இத்தாலியில் பாசிஸ்டுகள் ஆட்சியை கைப்பற்றினர். அப்போது ஜனநாயக அமைப்புகள் அனைத்தும் கலைக்கப்பட்டன. 1925ஆம் ஆண்டு முசோலினி இத்தாலியின் சர்வாதிகாரி ஆனார்.

ஸ்பெயினின் உள்நாட்டுப் போரின்போது ஜெனரல் பிரான்சிஸ்கோ பிரான்கோவை இவர் ஆதரித்தார்.

அதுமட்டுமல்லாமல் இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியின் சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லரை இவர் ஆதரித்தார்.

ஹிட்லரின் பல சட்டங்களை முசோலினி தமது ஆட்சியிலும் அமல்படுத்தினார். இவற்றில் முக்கியமானது 1938இல் அமல்படுத்தப்பட்ட யூதர்களுக்கு எதிரான சட்டங்கள்.

இத்தாலியில் இருந்த யூதர்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் குடியுரிமை இந்த சட்டங்களின் மூலம் பறிக்கப்பட்டன.

யூத இன அழிப்பின் போது 7500க்கும் மேற்பட்ட இத்தாலிய யூதர்கள் கொல்லப்பட்டனர்.

1945ஆம் ஆண்டு கூட்டு படைகளிடம் இருந்து தப்ப முயன்ற முசோலினி பிடிக்கப்பட்டு அவரது ஆட்சிக்கு எதிரான அரசியல் செயல்பாட்டாளர்கள் தூக்கிலிடப்பட்டார்.

BBC Indian Sports Woman of the Year

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »