Press "Enter" to skip to content

பைடன் அரசில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் நீரா டாண்டன் மற்றும் விவேக் மூர்த்தியின் நியமனத்தில் சிக்கல் – காரணம் என்ன?

  • வினீத் கரே
  • பிபிசி செய்தியாளர், வாஷிங்டன்

பைடன் நிர்வாகத்தில் இணைய இருக்கும் நீரா டாண்டன் மற்றும் மருத்துவர் விவேக் மூர்த்தி ஆகிய இரு இந்திய அமெரிக்கர்களின் நியமனங்கள் தற்போது சிக்கலில் உள்ளன.

பைடன் நிர்வாகத்தில் முக்கியமான பதவிகளை வகிக்க இவர்கள் இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால் அமெரிக்க செனட் அவர்களின் பெயர்களை அங்கீகரிக்க மறுக்கக்கூடும்.

அதிபர் மாளிகையின் மேலாண்மை மற்றும் வரவு செலவுத் திட்டம் அலுவலக பொறுப்பை ஏற்க நீரா டாண்டன் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். மத்திய வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பதில் இந்த அலுவலகம் அதிபருக்கு உதவுகிறது. அதே நேரத்தில் மத்திய அமைப்புகளின் நிர்வாக மேற்பார்வையிலும் இது கைகொடுக்கிறது.

கொரோனா நோய்த்தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவிற்கு இந்த நேரத்தில் இந்த அலுவலகத்தின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

இந்த அலுவலகத்தின் தலைவராக நீரா டாண்டனின் நியமனத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால், தலைமை பொறுப்பை வகிக்கும் முதலாவது வெள்ளை இனத்தவர் அல்லாத பெண்மணியாக இவர் இருப்பார்.

விவேக் மூர்த்தி

மருத்துவர் விவேக் மூர்த்தி விரைவில் அமெரிக்காவின் சர்ஜன் ஜெனரல் ஆக இருக்கிறார். அவர் இதற்கு முன்பும் இந்த பதவியை வகித்துள்ளார்.

ஜோ பைடன் நிர்வாகம் முக்கியமான பதவிகளுக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 20 அமெரிக்கர்களை பரிந்துரைத்துள்ளது. இந்த பெயர்களை அங்கீகரிக்க 100 உறுப்பினர்களைக் கொண்ட செனட்டில் எளிய பெரும்பான்மை தேவைப்படும். ஆனால் பிரச்னை என்னவென்றால், குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகிய இரு கட்சிக்குமே சமமான அளவில் அதாவது 50-50 உறுப்பினர்கள் உள்ளனர். எனவே ஒரு ஓட்டுகூட இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் செல்வது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஜோ பைடன் ஜனநாயகக் கட்சி அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.

செனட் ஒப்புதலுக்காக வியாழக்கிழமை நடைபெறவிருக்கும் விசாரணை சந்திப்பில் மூர்த்தி ஆஜராவார்.

நீரா டாண்டன் ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக முன்பு தெரிவித்த கருத்துக்கள் , அவருக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். அதே நேரத்தில், மருத்துவர் மூர்த்தி கொரோனா தொற்று தொடர்பான ஆலோசனை மற்றும் உரைகள் மூலம் இரண்டு மில்லியன் டாலர்களை சம்பாதித்துள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த குற்றச்சாட்டுகள் மூர்த்தியின் நியமனத்திற்கு தடையாக இருக்கக்கூடும்.

டாண்டன் மீதும் பேரிடி விழக்கூடும் என்று ஆதாரங்களை மேற்கோள்காட்டி ஒரு செய்தி தெரிவிக்கிறது. அவருக்கு பதிலாக வேறொருவரை நியமிப்பது குறித்தும் பைடன் நிர்வாகத்தில் பேச்சு அடிபடுகிறது.

பைடன்

நீரா டாண்டனின் சிரமங்கள்

நீரா டாண்டனின் நியமனத்திற்கு எதிராக பிரசாரம் செய்பவர்களில் ஜனநாயகக் கட்சி செனட்டர் ஜோ மன்சின்னும் ஒருவர்.

“குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சித் தலைவர்களுக்கு எதிராக நீரா டாண்டன் கூறிய கருத்துக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் முக்கியமான பணி உறவுகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று மன்சின் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இப்போது குடியரசுக் கட்சி எம்.பி.களும் நீரா டாண்டனின் முந்தைய கருத்துக்களை அனைவருக்கும் நினைவுபடுத்துகிறார்கள்.

நீரா டாண்டன்

ஒரு செனட் கேட்டறிதல் விசாரணையின் போது, குடியரசுக் கட்சியின் செனட்டர் லிண்ட்சே கிரஹாம், நீரா டாண்டனிடம், “நீங்கள் மிகவும் பாகுபாட்டுடன் இருந்தீர்கள்” என்று கூறினார்.

நீரா டாண்டனின் முந்தைய கருத்தை நினைவுபடுத்திய அவர், “ஒரு அரசியல் விவாதத்தின் போது நீங்கள் நிறைய வலிமையைக் காட்டுகிறீர்கள், அது நல்லது. ஆனால் மிட்ச் மெக்கானெலை ‘மாஸ்கோ மிட்ச்’ என்று அழைப்பது சரியானது அல்ல. அவர் ரஷ்யாவின் பாக்கெட்டில் உள்ளார் என்று சொல்வதுபோல இது உள்ளது,”என்று குறிப்பிட்டார்.

மிட்ச் மெக்கானெல் செனட்டின் உயர் குடியரசுக் கட்சி தலைவராவார்.

தாராளவாத சிந்தனைக் குழுவான, செண்டர் ஃபார் அமெரிக்கன் ப்ரோக்ரெஸ் மையத்தின் தலைவராக நீரா டாண்டன் இருந்தார். அந்த நேரத்தில் இந்த மையம் பற்றிய ஆய்வில் தெரிவிக்கப்பட்ட ஒரு எதிர்மறையான கருத்தை செனட்டர் கிரஹாம் குறிப்பிட்டார். “ஐந்து நட்சத்திரங்களில் ஒன்று மட்டுமே …. மிகவும் மோசமானது … முற்றிலும் பயனற்றது.” என்று அந்த ஆய்வு தெரிவித்தது.

ஜனநாயகக் கட்சியின் உயர்மட்ட தலைவர்களில் ஒருவரான செனட்டர் பெர்னி சாண்டர்ஸுக்கு எதிரான நீராவின் கருத்துக்களையும் கிரஹாம் நினைவு கூர்ந்தார். “நீராவின் வெறுப்புமிக்க கருத்துக்கள் குடியரசுக் கட்சித் தலைவர்களை பற்றி மட்டுமே இருக்கவில்லை,” என்றார் அவர்.

குடியரசுக் கட்சியின் செனட்டர் ராப் போர்ட்மேன், செனட் விசாரணையின் போது நீரா டாண்டனிடம், “சூசன் காலின்ஸ் பயனற்றவர், டாம் காட்டன் ஒரு மோசடி நபர், காட்டேரிகளின் இதயம் டெட் க்ரூஸின் இதயத்தைவிட பெரியதாக இருக்கும் என்று நீங்கள் எழுதியுள்ளீர்கள். நீங்கள் செனட் தலைவர் மெக்கானெலை,’மாஸ்கோ மிட்ச்’ என்று அழைத்தீர்கள், வோல்ட்மார்ட்க்கு எதிராகவும் பேசினீர்கள், நீங்கள் இவர்கள் அனைவருக்கும் எதிராக பேசியுள்ளீர்கள்,” என்று குறிப்பிட்டார்.

சூசன் காலின்ஸ், டெட் க்ரூஸ் மற்றும் டாம் காட்டன் ஆகியோர் குடியரசுக் கட்சி செனட்டர்கள்.

செனட்டர் காலின்ஸ் ஒரு அறிக்கையில், “நீரா டாண்டன் தனது நியமனத்திற்கு முன்னர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ட்வீட்களை நீக்கிவிட்டார். இந்தப் பதவிக்குத்தேவையான வெளிப்படைத்தன்மை மீதான அவரது அர்ப்பணிப்பு பற்றி இந்த செயல் கடுமையான கேள்விகளை எழுப்புகிறது.” என்று கூறியுள்ளார். டாண்டனின் நியமனத்தை சூசன் எதிர்த்து வருகிறார்.

நீரா டாண்டன் தனது ட்வீட் ஃபீட் மற்றும் கடுமையான ட்வீட்களையும் நீக்கியுள்ளார் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஒரு செனட் விசாரணையின் போது, குடியரசுக் கட்சியின் செனட்டர் ஜான் கென்னடி நீரா டாண்டனிடம், நீங்கள் ட்வீட் செய்தபோது, இதனால் ஏற்படக்கூடிய விளைவுகளைப் பற்றி யோசித்திருக்கிறீர்களா என்று தொடர்ச்சியாக ஒன்பது முறை கேட்டார்.

நீரா நீண்ட நேரம் இந்தக்கேள்விக்கு பதிலளிக்கவில்லை. பின்னர் “ஆம், இதனால் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியும், ஆனால் இப்போது நான் மிகவும் வருந்துகிறேன்” என்று கூறினார்.

நீரா டாண்டன்

நீரா செனட்டர் போர்ட்மேனிடம், “ஆம், நான் மிகவும் வருந்துகிறேன். நான் பயன்படுத்திய மொழிக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்,” என்று தெரிவித்தார்.

கடந்த சில ஆண்டுகளாக அரசியல் விவாதங்கள் ஒருமுனைப்படுத்தப்பட்டதால், தனது மொழி இப்படி மாறியது என்று நீரா கூறினார்.

இருப்பினும், பல குடியரசுக் கட்சித் தலைவர்கள் நீராவுக்கு எதிராக வாக்களிக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.

“குடியரசுக் கட்சியினர் இப்போது தாக்கிப்பேசுகிறார்கள். ஆனால் டிரம்பின் பேச்சுகளுக்கு இவர்கள் ஏன் அமைதியாக இருந்தார்கள்?” என்று மறுபுறம் நீராவின் ஆதரவாளர்கள் கேட்கிறார்கள்,

டாண்டனின் நியமனத்திற்கு ஒப்புதல் கிடைக்க குறைந்தபட்சம் ஒரு வாக்காவது அவருக்கு கூடுதலாக வேண்டும். அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் சமமான வாக்குகள் இருந்தால், துணை அதிபர் கமலா ஹாரிஸ் தனது வாக்கை அளித்து அவரை வெற்றி பெறச்செய்ய வேண்டியிருக்கும்.

அதிபர் மாளிகையின் நடப்பு செய்தித் தொடர்பாளர், நீரா டாண்டனை பகிரங்கமாக ஆதரித்துள்ளார். அதிபர் பைடனும், நீரா மிகவும் கெட்டிக்காரர் என்று அறிவித்துள்ளார்.

யார் இந்த நீரா டாண்டன்?

இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்தவரின் மகள் நீரா. அவரது தாய் மாயா அவரை தனியாளாக வளர்த்து ஆளாக்கினார். அவர் மாசசூசெட்ஸின் பெட்ஃபோர்டில் வளர்ந்தார்.

முன்பு நீராவின் குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்தது. இந்தக்குடும்பம், உணவு ஸ்டாம்புகள் மற்றும் பொது வீட்டுவசதிகளை நம்பியிருந்தது. பின்னர் படிப்படியாக குடும்பத்தின் நிலை மேம்பட்டது. அது வறுமையிலிருந்து வெளியே வந்தது.

அதிபர் பில் கிளிண்டனின் பதவிக் காலத்தில் டாண்டன் செனட்டில் உறுப்பினராக இருந்தார். அதிபர் பராக் ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். அவர் ஹில்லரி கிளிண்டனின் உதவியாளராகவும் இருந்துள்ளார். நீரா யு.சி.எல்.ஏ மற்றும் யேல் சட்டப் பள்ளியில் பட்டம் பெற்றவர்.

“நீரா, ஹில்லரி கிளிண்டனின் உதவியாளராக பணியாற்றியுள்ளார். 2016 ஆம் ஆண்டில், அதிபர் பதவிக்கான முதல்கட்ட தேர்தல் நடைபெற்றபோது அவர் பெர்னி சாண்டர்ஸை கடுமையாக விமர்சித்தார். அப்போது முதல் அவர் சமூக ஜனநாயக (Social Democratic) தலைவர் சாண்டர்ஸின் ஆதரவாளர்களுடன் இணையதளத்தில் மோதி வருகிறார்,” என்று வணிகம் இன்சைடரின் ஒரு அறிக்கை தெரிவிக்கிறது.

“சாண்டர்ஸின் முற்போக்கான கூட்டாளிகள், பல ஆண்டுகளாக டாண்டனின் மையவாத அரசியலை விமர்சித்து வருகின்றனர். நீரா டாண்டன், ‘சிங்கிள் பேயர் (Single Payer) உடல்நலத்திட்டத்தை’ எதிர்க்கிறார். சமூக பாதுகாப்பு திட்டங்களை குறைக்கவும் அவர் வாதிடுகிறார். கூடவே அவர் இஸ்ரேலின் பழமைவாத தலைமையுடன் நட்பு ஏற்படுத்திக்கொள்வதையும் ஆதரிக்கிறார். ஆனால் சாண்டர்ஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள், டாண்டனின் இந்தக்கொள்கைகளை எதிர்க்கின்றனர்,” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“செண்டர் ஃபார் அமெரிக்கன் ப்ரோக்ரெஸ் மையத்தின் தலைவராக டாண்டன் இருந்தபோது, இஸ்ரேலை விமர்சித்த தனது சொந்த கூட்டாளிகளை தடுக்க முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர் மீது விசாரணையும் நடைபெற்றது. டாண்டன் தலைவராக இருந்த காலத்தில் இந்த அமைப்பு, ஜனநாயக கட்சிக்கும் இஸ்ரேலின் வலதுசாரி அரசுக்கும் இடையே ஒரு வலுவான உறவை உருவாக்க முயற்சித்தது.”

அதிபர் வேட்பாளருக்கான பெர்னி சாண்டர்ஸின் பிரசாரத்தின் பத்திரிகை செயலாளர் பிரெய்னா ஜாய் கிரே ஒரு ட்வீட்டில், “கார்ப்பரேட் ஜனநாயகக் கட்சியில் எது மோசமாக இருந்தாலும், அவை எல்லாவற்றையும் நீரா டாண்டனிடம் நீங்கள் காண்பீர்கள்” என்று கூறினார். அவர் ட்விட்டரில் #RejectTandon என்ற வலையொட்டை (வலையொட்டு (ஹேஷ்டேக்)) உருவாக்கினார்.

விவேக் மூர்த்தி நியமனம் குறித்து என்ன நெருக்கடி?

விவேக் மூர்த்தி

இந்திய அமெரிக்கரான மூர்த்தி புலம்பெயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். ஜோ பைடன் அவரை அமெரிக்காவின் சர்ஜன் ஜெனரல் என்று பெயரிட்டுள்ளார். மூர்த்தி இதற்கு முன்பும் இந்த பதவியை வகித்துள்ளார்.

மூர்த்தி , கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று குறித்த தனது உரைகள் மற்றும் ஆலோசனைகள் மூலம் 20 லட்சம் டாலர்கள் சம்பாதித்துள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக சுகாதார ஊழியர்கள் மற்றும் கண்காணிப்பு அமைப்புகள் அவரை குறிவைக்கக்கூடும்.

இந்த அறிக்கைகளுக்கு மூர்த்தி இன்னும் பதிலளிக்கவில்லை.

ஆனால் துப்பாக்கி வன்முறை குறித்த அவரது முந்தைய கருத்துக்களில் ஒன்று அவருக்கு பிரச்னையை ஏற்படுத்தக்கூடும். செனட்டில் ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சியின் சமமான உறுப்பினர்கள் எண்ணிக்கை இருக்கும்நிலையில் இந்த விவகாரம் அவருக்கு சிக்கலை ஏற்படுத்தக்கூடும்.

2012 ல் ஒரு ட்வீட்டில், அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறையை ஒரு சுகாதார பிரச்னை என்று மூர்த்தி விவரித்தார். அரசியல் தலைவர்கள் என்.ஆர். ஏ வைப் பார்த்து பயப்படுகிறார்கள் என்று அவர் கூறினார்.

என்.ஆர்.ஏ என்பது நேஷனல் ரைஃபிள் அசோசியேஷன் என்பதன் சுருக்கமாகும். அமெரிக்காவில் இது ஒரு வலுவான அமைப்பாக கருதப்படுகிறது.

ஊடக அறிக்கையின்படி, 2014 ஆம் ஆண்டில், மூர்த்தி சர்ஜன் ஜெனரல் பதவியை ஏற்க இருந்த நிலையில் என்.ஆர்.ஏ ஆதரவாளர்கள் அவரது நியமனத்தை நிறுத்த முயன்றனர்.

பின்னர், மூர்த்தி தனது அறிக்கை குறித்த விளக்கத்தை அளிக்க வேண்டியிருந்தது. “எனது சர்ஜன் ஜெனரல் பதவியை, துப்பாக்கி கட்டுப்பாட்டு ஆதரவுக்காக பயன்படுத்த நான் விரும்பவில்லை” என்று அவர் செனட் விசாரணையின் போது கூறியிருந்தார்.

BBC Indian Sports Woman of the Year

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »