Press "Enter" to skip to content

இன்ட்ரோவர்ட் Vs எக்ஸ்ட்ரோவர்ட்: `அதிகம் பேசாதவர்களே சிறந்த தலைவர்கள்` – ஏன் தெரியுமா?

உங்கள் மேலதிகாரி எப்படி இருப்பார்? நம்பிக்கைமிக்கவராக, முடிவு எடுக்கக் கூடியவராக இருப்பாரா? எல்லா கேள்விகளுக்கும் அவரிடம் விடை இருக்குமா?

ஒரு நல்ல தலைவனுக்கான குணாதிசயங்களைக் குறிப்பிடுமாறு கூறினால் மேலே குறிப்பிட்டவைகளைத் தான் பெரும்பாலானவர்கள் நினைப்பார்கள்.

அதை நாம் மறு பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என்கிறார் முனைவர் ஜாக்கலின் பாக்ஸ்டர்.

“நம்மைச் சுற்றியுள்ள தலைவர்களைப் பாருங்கள்” என வலியுறுத்துகிறார் தொலைதூர பல்கலைக்கழகத்தின் பொது மக்கள் கொள்கை மற்றும் நிர்வாகத் துறையின் இணைப் பேராசிரியர் ஜாக்கலின் பாக்ஸ்டர்.

“அமைதியாக, மற்றவர்கள் பேசுவதைக் கேட்டு, முடிவு எடுப்பவர்களைப் பார்க்கிறீர்களா? அல்லது மிகவும் வேறுபட்ட ஒன்றைப் பார்க்கிறீர்களா?”

பேராசிரியர் ஜாக்கலின் பாக்ஸ்டரின் வாதம் எளிமையானது; இத்தனை நாள் நாம் நினைத்துக் கொண்டிருந்ததைப் போல உரக்கப் பேசுபவர்கள், தன்னம்பிக்கை மிகுதியாகக் கொண்டவர்கள், எதற்கும் உடனடி தீர்வு வழங்குபவர்கள், அதீத அறிவுத் திறன் கொண்டவர்கள் எப்போதுமே ஒரு நல்ல முன் மாதிரித் தலைவர்களாக முடியாது என்கிறார் அவர்.

வரைப்படம்

மேலே குறிப்பிட்ட குணநலன்களைக் கொண்டவர்களை ஆங்கிலத்தில் Extrovert என்போம். இந்த ரக ஆட்கள் தலைமைப் பொறுப்புகளில் அதிகமாக இருக்கிறார்கள். அவர்களுக்குக் கீழ் வேலை பார்ப்பவர்கள் தங்கள் மேலதிகாரியை நினைத்து அதிகம் மகிழ்வதில்லை.

“இப்போது இருக்கும் நெருக்கடியான சூழலில் எல்லோரின் கருத்தையும் ஆலோசித்து முடிவு செய்யும், அமைதியான தலைவர்கள் தான் தேவை என நான் வாதிடுவேன்,” என்கிறார் பேராசிரியர் பாக்ஸ்டர்.

“எக்ஸ்ட்ரோவெர்ட்கள் ஏற்கனவே உயர் அதிகாரிகளில் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள். உயர் அதிகாரிகளுக்கு மத்தியில் நடத்தப்பட்ட எக்ஸ்ட்ரோவர்ட் அளவீட்டு மேலாய்வுயில், 98 சதவீத உயர் அதிகாரிகள் மிக அதிக அல்லது சராசரியை விட அதிகமான மதிப்பெண்களையே பெற்று இருக்கிறார்கள். ஆனால் மக்கள் ஒட்டுமொத்தமாக தங்கள் மேலதிகாரிகளைக் குறித்து திருப்தியாக இல்லை,” என்கிறார் அவர்.

வரைப்படம்

2017-ம் ஆண்டு கல்லப் நிறுவனம் நடத்திய அமெரிக்காவில் பணிபுரியும் இடத்தில் இருக்கும் சூழல் குறித்த மேலாய்வு பேராசிரியர் பாக்ஸ்டரின் வாதத்தை ஆதரிப்பதாக இருக்கிறது. அதில் 13 சதவீத ஊழியர்கள் மட்டுமே, தங்கள் நிறுவனத்தின் தலைமை அதிகாரிகள், தங்களோடு சரியாக தகவல் தொடர்பில் இருக்கிறார்கள் எனக் கூறியுள்ளனர்.

தங்கள் எதிர்காலம் குறித்து உற்சாகமாக இருப்பவர்கள் 15 சதவீதம் பேர் மட்டுமே. 25 சதவீத ஊழியர்கள் மட்டுமே தங்கள் நிர்வாகத்தில் இருக்கும் தலைவர்களுக்கு எதிர்காலப் பாதை குறித்து தெளிவான திட்டம் இருக்கிறது எனக் கூறியுள்ளார்கள்.

ஆக இந்த இரண்டுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா?

வரைப்படம்

தலைமைப் பண்பு தொடர்பான பயிற்சிகள் பெரும்பாலும் தங்கள் திட்டங்களைத் தெளிவாக விளக்கி வழங்குதல் போன்ற எக்ஸ்ட்ரோவெர்ட் நடவடிக்கைகளில் தான் கவனம் செலுத்துகின்றன.

இது ஒரு தற்செயலான விஷயம் அல்ல என்கிறார் முனைவர் பாக்ஸ்டர்.

“நம் சமூகம் ஒரு திறன் மிக்க தலைமைப் பண்பைப் பார்க்கும் விதத்தை நாம் மறு பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என நினைக்கிறேன்,” என்கிறார்.

பெரும்பாலான தலைமைப் பண்பு தொடர்பான பாடங்கள் மற்றும் பயிற்சிப் பட்டறைகளில் எக்ஸ்ட்ரோவெர்ட் குழு செயல்பாடுகளில் தான் அதிகம் கவனம் செலுத்துகிறார்கள் என தன் அனுபவத்தில் இருந்து கூறுகிறார்.

“அமைதியாக இருப்பவர்கள், ஒரு நல்ல தலைவருக்கான குணநலன்களோடு இல்லாதவர்கள் என்கிற தவறான நம்பிக்கையை ஏற்படுத்துகிறது,” என்கிறார் பாக்ஸ்டர்.

அமைதியான தலைவர்களால் என்ன நன்மை?

வரைப்படம்

அமெரிக்க சிவில் உரிமை ஆர்வலர் ரோசா பார்க்ஸ், மகாத்மா காந்தி, பில் கேட்ஸ் ஆகியோர் அமைதியான தலைவர்களுக்கான நல்ல உதாரணம்.

அமைதியான குணநலன்களைக் கொண்ட, அதிகம் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாத குணநலன்களைக் கொண்டவர்களை ஆங்கிலத்தில் Introvert என்கிறோம்.

இந்த இன்ட்ரோவெர்ட்கள் பல நல்ல விஷயங்களைக் கொண்டு வருகிறார்கள். “அவர்கள் அதிகம் கேட்கக் கூடியவர்களாகவும், அவர்கள் அணியின் யோசனைகளை தனக்குள் ஜீரணித்துக் கொள்பவர்களாகவும், மற்றவர்களின் யோசனைகளை செயல்படுத்துவதற்கு முன் அதைக் குறித்து தீவிரமாக ஆலோசிப்பவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் சிந்தனை மிக்கவர்களாகவும், தங்கள் அணியில் இருப்பவர்களின் யோசனைகளையும் செயல்பாடுகளையும் பாராட்டக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள்” என்கிறார் பேராசிரியர்.

“தலைமைப் பண்பு என்பது சிக்கலானது. அதிக கூச்சல், அதீத அதிகாரத்தை காட்டுதல், வென்றால் முழு வெற்றி இல்லையெனில் எதுவுமே வேண்டாம் என இருக்கும் இந்த உலகத்தில், பின்னால் நின்று கொண்டு அமைதியாக கவனிப்பது தலைவர்களையும் அவர்களைப் பின் தொடர்பவர்களையும் வலுபெறச் செய்வதாக இருக்கும்” என்றார் பேராசிரியர் ஜாக்கலின் பாக்ஸ்டர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »