Press "Enter" to skip to content

ஜமால் கஷோக்ஜி கொலை குறித்த அறிக்கை: அமெரிக்க – செளதி அரேபியா உறவில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

  • ஃபிராங்க் கார்டனர்
  • பிபிசியின் பாதுகாப்புப் பிரிவு செய்தியாளர்

பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலை தொடர்பாக வெளியான அமெரிக்க புலனாய் அறிக்கை ஒன்று, மத்திய கிழக்கில் மிக சக்திவாய்ந்த மனிதராக கருதப்படும் செளதியின் முடிக்குரிய இளவரசர் முகமது பின் சல்மானின் பெயர், அதிகாரம், புகழ் ஆகியவற்றுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.

இதனால் அடுத்து வரும் பல ஆண்டுகளுக்கு செளதியுடனான மேற்கத்திய நாடுகளின் உறவுகளில் பெரும் தாக்கம் ஏற்படும். 2018ஆம் ஆண்டு கஷோக்ஜி கொடூரமாக கொல்லப்பட்டதில் முடிக்குரிய இளவரசர் சல்மான் ஈடுபட்டுள்ளார் என்று கூறும் அந்த அறிக்கைக்கு பிறகு அவருடன், மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் வெளிப்படையாக தொடர்பு வைத்துக் கொள்வது முன்னெப்போதும் இல்லாத அளவு கடினமானது.

நீண்டகாலமாக செளதி அரியணையை ஏற்கக்கூடிய அதிகாரம் பெற்ற இளவரசராக இருக்கும் சல்மானுக்கு வயது 35. இவர் செளதி அரேபியாவின் இளம் தலைமுறையினர் மத்தியில் நன்கு அறியப்படுகிறார்.

அவரின் தேசப் பற்றுக்காகவும், குடிமக்கள் உரிமைகள் மீதான கடுமையான நடவடிக்கைகளாகவும் அறியப்படுகிறார் இவர். இளவரசர் மீது பொதுப்படையாக விமர்சனங்களை வைத்தவர்கள் மிக குறைவு.

அமெரிக்க அதிபர் பைடன் செளதி அரசர் சல்மானுடன்தான் உரையாட வேண்டும் என்றும், இளவரசருடன் இல்லை என்றும், சமிக்ஞைகளை ஏற்கனவே வழங்கியிருந்தார். ஆனால் அரசர் சல்மானும், இளவரசர் முகமது பின் சல்மானும் நெருக்கமாக பணியாற்றி வருவதால் அவ்வாறு கோருவது நடைமுறையில் அர்த்தமற்றதுதான்.

அரசர் சல்மானுக்கு 85 வயது. உடல் நலம் குன்றிய காரணத்தால் பெரும்பாலான அதிகாரங்களை இளவரசர் முகமது பின் சல்மானிடம் ஒப்படைத்துவிட்டார் அவர்.

கஷோக்ஜி தொடர்பான டேப்

ஜமால்

கஷோக்ஜி கொலையில் செளதி இளவரசருக்கு தொடர்பு இருப்பது பெரும்பாலான மேற்கத்திய புலானாய்வு முகமைகளுக்கு ஏற்கனவே தெரிந்த ஒன்றுதான். ஆனால் எந்த முகமையும் வெளிப்படையாக அதை கூறவில்லை.

2018ஆம் ஆண்டிலிருந்து இந்த ஆண்டுவரை அமெரிக்க புலனாய்வு அமைப்பான சிஐஏ-வின் தலைவராக இருந்த ஜினா ஹாஸ்பெல், துருக்கி தலைநகர் அங்காராவிற்கு சென்றார். அங்கு அவருக்கு துருக்கிய புலனாய்வு முகமை செளதி தூதரகத்தில் கஷோக்ஜி செளதியால் அனுப்பப்பட்ட முகவர்களால் கொல்லப்பட்ட அந்த கடைசி நிமிடங்கள் பதிவு செய்யப்பட்ட ஒலிநாடா டேப் ஒன்றை காட்டினர்.

துருக்கியில் செளதி தூதரகத்திற்குள் ரகசியமாக ஒலிநாடா பதிவு செய்ததே ஒரு வகையில் குற்றம்தான். ஆனால் கஷோக்ஜி கொலைக்கு மத்தியில் அது கவனிக்கப்படவில்லை. மேலும் அந்த ஒலிநாடா டேப் மேற்கத்திய உளவு முகமைகளுக்கு வழங்கப்பட்டது.

கஷோக்ஜி கொலையில் முகமது பின் சல்மான் ஈடுபட்டார் என `நடுத்தர மற்றும் அதிக அளவு உறுதியாக` சிஐஏ தெரிவித்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால் டிரம்பின் நிர்வாகத்தில் அந்த புலானாய்வு அறிக்கை வெளியில் வரவில்லை. தனது கூட்டாளியான செளதியை டிரம்ப் சங்கடப்படுத்த விரும்பவில்லை.

அமெரிக்காவின் விருப்பம் வேறு

செளதியின் இளவரசர் முகமது பின் சல்மான் அடுத்த அரசராக பொறுப்பேற்பதில் அமெரிக்காவிற்கு பெரிதாக விருப்பமில்லை. செளதி அரசணைக்கான முறையில் இருந்த இளவரசர் முகமது பின் நாயேஃப்தான் அமெரிக்காவுக்கு விருப்பமாக இருந்தார். ஆனால் அவரை 2017ஆம் ஆண்டு சல்மான் நீக்கினார்.

தற்போது நாயேஃப் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது ஊழல் குற்றச்சாட்டும், முடியரசருக்கு எதிராக சதி தீட்டயதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அவரின் குடும்பம் இந்த குற்றச்சாட்டை மறுக்கிறது.

செளதி அரச குடும்பத்தில் நாயேஃப் அமெரிக்காவின் முக்கிய கூட்டாளியாக இருந்தார். மேலும் உள்துறை அமைச்சராக அல் கய்தாவின் வன்முறையை வென்றார். தனது உளவுப் பிரிவு தலைவர் சாத் அல் ஜாப்ரி மூலமாக சிஐஏவுடன் நெருக்கமாக இருந்தார். அல் ஜப்ரி தற்போது கனடாவில் வாழ்ந்து வருகிறார் மேலும், முகமது பின் சல்மான் தன்னை கொல்ல ஆட்களை அனுப்பியதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

தற்போதைய இளவரசர் குறித்து சிஐஏவிடம் வரலாறு உண்டு. அதேபோல ஐ.எஸ், அல் கய்தா போன்ற அமைப்புகளால் உருவான பயங்கரவாதம் ஆகியவற்றால் சிஐஏ, செளதி அரச நீதிமன்றத்துடன் இணைந்து செயல்படவே விரும்புகிறது. இருப்பினும் சிஐஏ முகமது பின் நாயேஃப் போன்றோருடனே பணிபுரிய விரும்பும். தன்போக்கில் செயல்படும் முகமது பின் சல்மானுடன் அல்ல.

டிரம்ப் மற்றும் சல்மான்

இரானுக்கு ஒரு பரிசு

அமெரிக்க – செளதி உறவு வலுவிழந்தால் அது செளதி அரேபியாவின் பிராந்திய எதிரியான இரானுக்கு ஒரு பரிசாகதான் அமையும்.

பல வருட தடைகளுக்கு பிறகும், மத்திய கிழக்கில் இரானின் கை ஓங்கியுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏமனில் செளதி தலைமையிலான போருக்கு ஆயுதங்கள் விற்பனை செய்வதை அமெரிக்கா இடைக்காலத்திற்கு நிறுத்தி வைத்திருக்கும் சூழலை இரானின் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள் பயன்படுத்தி கொண்டனர். தனது எதிரிக்கு தடங்கல் ஏற்பட்ட வாய்ப்பை பயன்படுத்தி அவர்கள் பல இடங்களில் முன்னேறி வருகின்றனர்.

நீண்டகாலத்திற்கு யோசித்தால், தனது பாதுகாப்பு குறித்த வழக்கங்களை செளதி தலைமை சற்று பல்வகைப்படுத்தலாம்.

ரஷ்யா மற்றும் சீனாவுக்கு வாய்ப்புகளை வழங்கலாம். இஸ்ரேலுடன் நெருக்கமாகலாம். இருநாடுகளுமே இரான் ஆதிக்கம் செலுத்துவதை அச்சுறுத்தலாக பார்க்கும் நாடுகளாகும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »