Press "Enter" to skip to content

அமேசான் காடுகள்: எப்படி வனங்களை அழித்து நிலத்தை அபகரிக்கிறார்கள்? நேரடி அறிக்கை

  • ஜொவா ஃபெல்லெட் & சார்லட்டி பம்மென்ட்
  • பிபிசி பிரேஸில்

அமேசான் மழைக் காடுகளின் நிலப் பகுதிகளை சட்டத்துக்கு புறம்பாக விற்க ஃபேஸ்புக் பயன்படுத்தப்படுவதை பிபிசி கண்டுபிடித்திருக்கிறது.

இதில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளான தேசிய வனப் பகுதி மற்றும் பூர்வகுடி மக்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் நிலப் பகுதிகளும் அடக்கம்.

ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டிருக்கும் நில விற்பனை விளம்பரங்களில், சில நிலங்களின் அளவு 1,000 கால்பந்தாட்ட மைதானத்தை விடப் பெரியதாக இருக்கின்றன.

உள்ளூர் அதிகாரிகளோடு இது தொடர்பாக இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கிறோம் என ஃபேஸ்புக் கூறியுள்ளது. ஆனால் நில விற்பனையைத் தடுக்க, தாங்களே முன் வந்து தனியாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது எனவும் கூறியுள்ளது.

“ஒரு பொருளை வாங்குபவர் மற்றும் விற்பவர் சட்ட திட்டங்களுக்கு உட்பட வேண்டும் என எங்கள் வணிக கொள்கைகள் கூறுகின்றன” என்கிறது கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ஃபேஸ்புக்.

சட்டத்துக்குப் புறம்பான நில விற்பனையால் பாதிக்கப்பட்ட பூர்வகுடி சமூகத்தின் தலைவர் ஒருவர், ஃபேஸ்புக் இந்த நில விற்பனை தொடர்பாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறார்.

பிரேஸில் அரசோ, இந்த நில விற்பனையை தடுக்க விருப்பமில்லாமல் இருக்கிறது என சுற்றுச்சூழல் பிரசாரகர்கள் கூறுகிறார்கள்.

“நிலத்தை அபகரிப்பவர்கள், சட்டத்துக்குப் புறம்பான நில விற்பனை ஒப்பந்தங்களை ஃபேஸ்புக்கில் மேற்கொள்வதை ஒரு வெட்கக் கேடான செயலாகக் கருதவில்லை” என கூறுகிறார் “கனிண்டே” என்ற அரசு சாரா சுற்றுச்சூழல் அமைப்பை நடத்தும் இவனிடே பண்டேரியா.

சான்றிதழ்கள் இல்லை

‘காடுகள்’ ‘பூர்விகக் காடுகள்’ போன்ற சொற்களை ஃபேஸ்புக் மார்கெட் பிளேஸில் ஒரு அமேசான் காடுகள் இருக்கும் மாகாணத்தை தேர்வு செய்து தேடினால், சட்டத்துக்குப் புறம்பாக அபகரிக்கப்பட்ட நிலங்களைக் காணலாம்.

அப்படி வரும் விளம்பரங்களில் சிலவற்றில், செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட படங்கள் மற்றும் ஜிபிஎஸ் நிலக் குறியீடுகள் இருக்கின்றன.

கால்நடைகள்

பிரேஸில் நாட்டில் சட்டப்படி ஒரு நிலத்தின் சொந்தக்காரர் என்றால் அவரிடம் Land title என்றழைக்கப்படும் பத்திரம் இருக்க வேண்டும். ஆனால் இப்படி காடுகளை அபகரித்து விற்கும் பலரிடமும் அப்பத்திரம் இல்லை என்பதை வெளிப்படையாகவே ஒப்புக் கொள்கிறார்கள்.

பிரேஸிலில் இருக்கும் கால்நடை பண்ணைத் துறையால் இந்த சட்ட விரோத நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன.

10 ஆண்டுகளில் உச்சத்தில்

பிரேஸிலில் இருக்கும் அமேசான் காடுகளை அழிப்பது கடந்த 10 ஆண்டுகளில் உச்சத்தில் இருக்கிறது. ஃபேஸ்புக்கின் மார்கெட் பிளேஸ், ஃபேப்ரிசியோ குய்மரெஸ் போன்றவர்கள் அமேசான் நிலங்களை விற்பதற்கான நல்ல தளமாக இருக்கிறது. அவர் ஒரு ரகசிய ஒளிக்கருவி (கேமரா) மூலம் படம் பிடிக்கப்பட்டார்.

“அரசு அதிகாரிகள் இந்த இடத்தை சோதனை செய்வார்கள் என்கிற பயமே இல்லை” எனக் கூறிக் கொண்டே, முழுமையாக எரித்து சாம்பலாக்கப்பட்ட ஓரிடத்தைக் காட்டினார் குய்மரெஸ்.

ஃபேப்ரிசியோ

சட்ட விரோதமாக அழித்துச் சுத்தமாக்கப்பட்ட, விவசாயத்துக்கு தயாராக இருக்கும் அந்த இடத்துக்கு 35,000 அமெரிக்க டாலர் என விலை கூறினார்.

இத்தனைக்கும் குய்மரெஸ் ஒரு விவசாயி அல்ல. அவருக்கு நகரத்தில் நிலையாக வருமானம் கிடைக்கும் விதத்தில் ஒரு வேலை இருக்கிறது. அமேசான் மழைக் காடுகளை ஒரு நல்ல வருமானம் கொடுக்கும் முதலீட்டு வாய்ப்பாகக் காண்கிறார்.

இப்படி முறையற்ற ரீதியில் அமேசான் வனப் பகுதிகள் அழிக்கப்படுவது குறித்து விசாரிக்க குய்மரெஸ்ஸை அழைத்த போது பேச மறுத்துவிட்டார்.

ரகசிய ஏற்பாடு

பிரேஸிலில் இருக்கும் ரோண்டோனியா மாகாணத்தில் இருந்து தான் அமேசான் வனப் பகுதி நிலங்கள், அதிக அளவில் ஃபேஸ்புக் மார்கெட் ப்ளேஸில் விற்பனைக்கு வந்திருக்கின்றன. இந்த மாகாணத்தில் தான் அதிக அளவில் வனப் பகுதிகள் அழிக்கப்பட்டு இருக்கின்றன.

ரோண்டோனியாவில் சட்டத்துக்கு புறம்பாக நிலங்களை விற்கும் நான்கு விற்பனையாளர்களோடு, ஒரு பணக்கார முதலீட்டாளர் சார்பாக வழக்குரைஞர் (ரகசிய செய்தியாளர்) ஒருவர் சந்திக்க ஏற்பாடு செய்யபட்டது.

அல்விம் சோசா அல்வெஸ் என்பவர் ‘உரு இயூ வா வா’ என்கிற பூர்வகுடி மக்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலத்தை 16,400 பவுண்ட் ஸ்டெர்லிங்க்கு விற்க முயற்சித்தார்.

அது 200-க்கும் மேற்பட்ட உரு இயூ வா வா இன மக்களின் வாழ்விடம். அவர்களோடு குறைந்தபட்சம் ஐந்து இனக் குழுக்கள் வெளி உலகத்தோடு எந்த வித தொடர்புமின்றி அவ்விடத்தில் வாழ்ந்து வருகிறார்கள் என பிரேசில் அரசு கூறுகிறது.

ஆனால் “அப்பகுதியில் இந்தியர்கள் இல்லை. என் நிலம் இருக்கும் இடத்தில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறார்கள்” என்றார் அல்வெஸ்.

“உரு இயூ வா வா” இன மக்களின் தலைவரான பிடெடி உரு இயூ வா வாவிடம் ஃபேஸ்புக்கில் அமேசான் நில விற்பனை விளம்பரங்களைக் காட்டியது பிபிசி.

தங்கள் நிலத்தை காக்கும் மக்கள்

எங்கள் நிலப் பகுதியில் பெரும்பாலான பகுதியை வேட்டையாடவும், மீன் பிடிக்கவும், பழங்களைச் சேகரிக்கவும் பயன்படுத்துகிறோம் எனக் கூறினார்.

“இது மரியாதையற்ற செயல்” எனக் கூறினார்.

“எனக்கு இவர்களைத் தெரியாது. பூர்வகுடி மக்களின் வனப்பகுதிகளை அழிப்பது தான் அவர்களின் நோக்கம் எனக் கருதுகிறேன். காடழிப்பு என்பது எங்கள் வாழ்கையை அழிப்பது எனக் கூறலாம்” என்கிறார் பிடெடி உரு இயூ வா வா.

இந்த விவகாரத்தில் அதிகாரிகள் தலையிட வேண்டும், அதே நேரத்தில் ஃபேஸ்புக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறார் பிடெடி.

நிலத்தின் நிலைமாற்றம்

அமேசான் காடுகளின் நிலங்கள் சட்ட விரோதமாக விற்கும் சந்தை அதிகரித்து வருவதற்கு, அந்நிலப் பரப்புகளின் நிலையை மாற்றுவதற்கான எதிர்பார்ப்பும் முக்கியக் காரணம்.

திருடிய நிலங்களை தங்களுக்கு சொந்தமாக்கிக் கொள்ள, தான் பலரோடு சேர்ந்து தங்களுக்குச் சாதகமாக அரசியல்வாதிகள் செயல்பட வேலை பார்த்து வருவதாகக் கூறினார் அல்வெஸ்.

“நான் உங்களிடம் ஒரு உண்மையைக் கூறுகிறேன், இந்த பிரச்சனை அதிபர் சேயீர் போல்சனாரோ உடன் தீர்க்கப்படவில்லை எனில், அது எப்போதுமே தீர்க்க முடியாது” என தற்போது ஆளும் பிரேசில் அரசைக் குறித்துக் கூறினார்.

ஆல்விம்

முதலில் காடுகளை அழிப்பது, பின் அப்பகுதிகளை பாதுகாக்கப்பட்ட பகுதியில் இருந்து நீக்கக் கூறி அரசியல்வாதிகளிடம் முறையிடுவது, காரணம் கேட்டால் அந்நிலப் பகுதிகள் பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருப்பதற்கான தகுதியை அல்லது தன்மையை இழந்துவிட்டது எனக் கூறுவது தான் பொதுவாக இந்த நில மோசடி கும்பல் கடைபிடிக்கும் வழிமுறை.

அப்படி அந்நிலத்தின் நிலை மாற்றப்பட்ட பின், அதை நில அபகரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அரசிடமிருந்து வாங்கிவிடுவார்கள்.

அல்வெஸ் பிபிசியின் ரகசிய செய்தியாளரை குருபிரா சங்கத்தின் தலைவரை சந்திக்க அழைத்துச் சென்றார். பூர்வகுடி மக்கள் வாழும் நிலப் பகுதியில் சட்டத்துக்கு முரணாக நிலங்களை அபகரிக்கும் கும்பல் இது என பிரேசில் மத்திய காவல் துறை இந்த குருபிரா சங்கம் குறித்துக் கூறுகிறது.

பிரேஸிலின் பல பெரிய அரசியல்வாதிகள், தலைநகர் பிரேசிலியாவில் இருக்கும் அரசு முகமைகளோடு சந்திக்க தங்களுக்கு உதவுவதாக, பிபிசி செய்தியாளரிடம் இரண்டு பேர் கூறினர். சமூக விடுதலைக் கட்சியைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர் கர்னல் க்றிசோஸ்டொமோ தங்களின் முக்கியக் கூட்டாளி என அவர்கள் தெரிவித்தனர்.

பிரேசில் அதிபர் சயீர் போல்சனாரோ கூட 2019-ல் தனிக் கட்சி ஆரம்பிப்பவதற்கு முன்பு வரை இதே கட்சியில் தான் உறுப்பினராக இருந்தார்.

காங்கிரஸ் உறுப்பினர் க்றிசோஸ்டொமோவை பிபிசி தொடர்பு கொண்ட போது, அக்குழுவினர் அரசு முகமைகளோடு சந்திக்க ஏற்பாடு செய்ததை ஒப்புக் கொண்டார். ஆனால் அவர்கள் நில அபகரிப்பில் ஈடுபடுபவர்கள் என்கிற விஷயம் தெரியாது எனக் கூறினார்.

“அவர்கள் என்னிடம் கூறவில்லை. ஒருவேளை அவர்கள் நில அபகரிப்பில் ஈடுபடுகிறார்கள் என்றால் இனி அவர்களுக்கு என் ஆதரவு கிடைக்காது” என்றார்.

அமேசான்

அரசு முகமைகளோடு சந்திப்புகளை ஏற்பாடு செய்து கொடுத்ததற்கு உங்களுக்கு ஏதாவது வருத்தமிருக்கிறதா எனக் கேட்டதற்கு இல்லை என்றார் அந்த காங்கிரஸ் உறுப்பினர்.

நில அபகரிப்பு குறித்து அல்வெஸை பிபிசி அழைத்த போது பேச மறுத்துவிட்டார்.

பிரேசிலின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ரிகார்டோ சல்லேஸிடம் இது குறித்து பிபிசி பேசியது.

“அதிபர் சயீர் போல்சனாரோவின் அரசு எந்த ஒரு குற்றத்தையும் பொறுத்துக் கொள்ளாது என்பதை மிகத் தெளிவாகக் கூறியுள்ளது. இதில் சுற்றுச்சூழல் தொடர்பான குற்றங்களும் அடக்கம்” என்றார் ரிகார்டோ.

காடழிப்பை கண்காணிக்கும் இல்பாமா என்கிற அமைப்புக்கான வரவு செலவுத் திட்டத்தை 40% குறைத்திருக்கிறது பிரேசில் அரசு.

கொரோனா பெருந்தொற்றால் அமேசானில் சட்ட ஒழுங்கை நிலைநாட்டுவதில் தடை ஏற்பட்டுவிட்டது. அதோடு காடழிப்புக்கு மாகாண அரசுகளும் பொறுப்பாவார்கள் எனக் கூறினார் ரிகார்டோ.

“இந்த ஆண்டு வெர்டே பிரேசில் 2 என்கிற ஒரு ஆபரேஷனை அரசு தொடங்கி இருக்கிறது. இது சட்ட விரோத காடழிப்பைக் கட்டுப்படுத்துவதற்காகவும், சட்ட விரோத காட்டுத் தீ போன்றவைகளைக் கட்டுப்படுத்தவும், மத்திய மற்றும் மாகாண அரசுகளின் முயற்சிகளோடு இணைவதும் தான் இதன் நோக்கம்” எனக் கூறினார்.

தற்போதைய பிரேசில் அரசின் கீழ் நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது என ரோண்டோனியாவில் இருக்கும் வழக்குரைஞர் ரஃபேல் பெவிலகுயா கூறினார்.

“இங்கு சூழலில் மிகவும் மோசமாக இருக்கிறது. அதிகாரங்கள் எங்களுக்கு எதிராகத் திரும்புகிறது. இது எங்களை பாதிக்கிறது” எனக் கூறினார்.

எந்த நில விற்பனை சட்டத்துக்கு முரணானது என தானே கண்டுபிடிப்பது மிகவும் சிரமமான வேலை என்பதால், அப்பணியை உள்ளூர் அதிகாரிகள் மற்றும் நீதித் துறையிடம் விட்டுவிட வேண்டும் என ஃபேஸ்புக் தன் தரப்பில் இருந்து கூறியுள்ளது. அதோடு ஃபேஸ்புக் மார்கெட் பிளேஸில் நடக்கும் அமேசான் நிலம் சார்ந்த வியாபாரங்கள் அனைத்தையும் தடுத்து நிறுத்தும் அளவுக்கு இந்தப் பிரச்சனை அத்தனை தீவிரமானதாகத் தெரியவில்லை எனவும் கூறியுள்ளது.

ரோண்டோனியாவில் கடந்த 30 ஆண்டுகளாக காடழிப்புக்கு எதிராகப் போராடி வரும் இவனிடே பண்டேரியா, தான் நம்பிக்கை இழந்து வருவதாகக் கூறுகிறார்.

“இது மிகவும் கடினமான போர் என்று நினைக்கிறேன். காடுகள் அழிக்கப்பட்டு வருவதைப் பார்க்கும் போதும், நாளுக்கு நாள் காடுகளின் பரப்பு சுருங்கிக் கொண்டு வருவதைப் பார்க்கும் போதும் வேதனையாக இருக்கிறது. கடந்த காலங்களில், இப்போது போல காடுகளைப் பாதுகாப்பது இத்தனை கடினமாக இருந்ததில்லை” என்கிறார் இவனிடே பண்டேரியா.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »