Press "Enter" to skip to content

மியான்மரில் தொடரும் பதற்றநிலை: இந்தியாவுக்கு தப்பித்து சென்ற காவலர்கள் – திருப்பி அனுப்ப கோரும் மியான்மர்

மியான்மர் நாட்டைச் சேர்ந்த காவல்துறையினர் சிலர், ஆட்சியாளர்கள் கொடுக்கும் உத்தரவுகளை பின்பற்றுவதற்கு விருப்பமில்லாததால், தங்கள் நாட்டின் எல்லையைக் கடந்து, இந்தியாவுக்கு அடைக்கலம் தேடி தப்பிச் சென்றுள்ளனர். இந்த நிலையில், அவர்களை தங்களிடம் திருப்பி அனுப்புமாறு மியான்மர் கோரிக்கை விடுத்துள்ளது.

சமீபத்தில் மியான்மரைச் சேர்ந்த காவல் துறை அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சிலர் எல்லையைக் கடந்திருப்பதாக இந்திய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தங்கள் இரு நாடுகளுக்கு இடையில் நட்பு ரீதியிலான உறவுமுறை தொடர, அவர்களை திருப்பி அனுப்புமாறு கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளது மியான்மர்.

கடந்த மாதம் மியான்மரில் ஆட்சிக்கவிழ்ப்பு நடந்தது. அதனைத் தொடர்ந்து அந்நாட்டில் பெரிய அளவிலான போராட்டங்கள் மற்றும் வேலை நிறுத்தங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தனர். எனவே இதுவரை சுமார் 55 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்று (மார்ச் 06, சனிக்கிழமை) கூட, நாடு முழுவதும் போராட்டக்காரர்கள் தொடர்ந்து ராணுவத்தின் உத்தரவை மீறி கூட்டமாகக் கூடி, ஆங் சான் சூச்சிக்கு ஆதரவாகவும், ஜனநாயகத்துக்கு ஆதரவாகவும் போராடினார்கள்.

மியான்மரில் நடைபெற்று வரும் போராட்டங்களில் அங்கு பல தலைமுறைகளாக வாழும் தமிழர்களும் பெருந்திரளான அளவில் பங்கேற்று வருகின்றனர்.

மியான்மரின் பெரிய நகரமான யங்கூனில் மக்கள் கூட்டத்தைக் கலைக்க, காவல் துறையினர் கண்ணீர் புகை குண்டுகள், ரப்பர் தோட்டாக்கள், ஸ்டன் க்ரானைட் என்றழைக்கப்படும் ஒரு வகையான கையெறி குண்டு போன்றவைகளைப் பயன்படுத்தியதாகச் செய்திகள் கூறுகின்றன. ஆனால் புதிதாக உயிரிழப்புகள் ஏற்பட்டதாகச் செய்திகள் வெளியாகவில்லை.

மியான்மர் நாட்டின் ஃபலம் மாவட்டத்தைச் சேர்ந்த அதிகாரியிடமிருந்து, அந்நாட்டின் காவல் துறை அதிகாரிகளை திருப்பி அனுப்புவது தொடர்பாக தனக்கு கடிதம் வந்திருப்பதாக மிசோரம் மாநிலத்தின் சம்பாய் மாவட்டத்தில் துணை ஆணையராக இருக்கும் மரியா சி டி சுவலி, ராய்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தார்.

“இருநாடுகளுக்கு இடையிலான நட்பைத் தொடர, எட்டு மியான்மர் காவல் துறை அதிகாரிகளைக் கைது செய்து, மியான்மரிடம் ஒப்படைக்குமாறு உங்களிடம் வேண்டிக் கேட்கிறோம்” என அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து உத்தரவுகள் வருவதற்காகக் காத்திருப்பதாக மரியா கூறியுள்ளார்.

சமீபத்தில் மியான்மரின் காவல்துறை அதிகாரிகள் மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட கிட்டத்தட்ட 30 பேர் எல்லையைத் தாண்டி அடைக்கலம் கேட்டு இந்தியாவுக்கு வந்திருப்பதாக ராய்டர்ஸ் செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

மியான்மரில் பலரும் ராணுவ ஆட்சியில் இருந்து தப்பிக்க எல்லையில் காத்திருக்கிறார்கள் என ஏ.எஃப்.பி செய்தி முகமை நேற்று (பிப்ரவரி 07, சனிக்கிழமை) குறிப்பிட்டுள்ளது.

எப்படித் தொடங்கியது இந்த அமைதியின்மை?

இந்தியாவுக்கு தப்பித்து சென்ற காவலர்கள் - திருப்பி அனுப்ப கோரும் மியான்மர்

கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூச்சி மற்றும் மியான்மரின் அதிபர் வின் மின்ட் ஆகியோர் ராணுவத்தினரால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, ராணுவ ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி இருக்கிறது.

அடுத்த ஓராண்டுக்கு ராணுவம் அவசர நிலையை அறிவித்திருக்கிறது. 2020ஆம் ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலில் மோசடி நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டி, தன் ராணுவ ஆட்சிக்கவிழ்ப்பை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறது மியான்மர் ராணுவம்.

மக்கள் ஆங் சான் சூச்சிக்கு ஆதரவாக சாலைகளில் இறங்கி பல்லாயிரக்கணக்கான மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். பலரும் வேலைக்குச் செல்ல மறுத்துக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் கூட்டத்தைக் கலைக்க, மியான்மர் ராணுவம் துப்பாக்கியால் சுட்டு பலரைக் கொன்றுள்ளதாக பல்வேறு தரப்பினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

ஐ.நா-வின் மனித உரிமைகள் சபையின் ஆணையர் மிஷெல் பசெலெட்டின் கணக்குப் படி, 1,700-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இதில் மியான்மர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 29 பத்திரிகையாளர்களும் அடக்கம்.

மியான்மர் – சில குறிப்புகள்

மியான்மர், பர்மா என்று அறியப்படுகிறது. 1948-ம் ஆண்டு இந்த நாடு பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்றது. நவீன வரலாற்றில் பெரும்பாலான காலம் இந்த நாடு ராணுவ ஆட்சியில்தான் இருந்தது.

2010-ம் ஆண்டு வாக்கில் இந்தப் பிடி தளரத் தொடங்கியது. இதையடுத்து 2015-ம் ஆண்டு சுதந்திரமான தேர்தல்கள் நடத்தப்பட்டு, ஆங் சான் சூச்சி தலைமையில் அரசு அமைக்கப்பட்டது.

2017-ம் ஆண்டு காவலர்கள் மீது ரோஹிஞ்சாக்கள் நடத்தியதாக கூறப்படும் தாக்குதலுக்கு மிகக் கடுமையாக ராணுவம் எதிர்வினையாற்றியதால், சுமார் 5 லட்சம் ரோஹிஞ்சா முஸ்லிம்களை நாட்டை விட்டு அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »