Press "Enter" to skip to content

இளவரசர் ஃபிலிப்பும் அரசி இரண்டாம் எலிசபெத்தும்: நீடித்த அரச குடும்ப காதல் கதை இது

  • சாரா கேம்பெல்
  • அரசக் குடும்ப செய்தியாளர்

பட மூலாதாரம், CANTRAL PRESS / GETTY IMAGES

ஏழு தசாப்தங்களுக்கும் மேல் நிலைத்த ஒரு திருமண பந்தத்தில், பொதுவெளியில் நடைபெற்ற பல முக்கிய நிகழ்ச்சிகளில் இளவரசர் ஃபிலிப் அரசி இரண்டாம் எலிசபெத்துக்கு துணையாகவே இருந்தார். தனிப்பட்ட முறையில் அரசி நன்கு அறிந்தவர் இளவரசர் ஃபிலிப்.

“இந்த உலகத்தில் இளவரசர் ஃபிலிப் மட்டுமே அரசியை சக மனிதராக நடத்தக்கூடிய ஒரே மனிதர். அவரால் மட்டுமே அது முடியும்,” என தனிச் செயலர் ஒருவர் முன்பு தெரிவித்திருந்தார். இவர்களின் திருமணம் அன்பால் ஆனது. அவர்கள் ஒருவரை ஒருவர் தேர்வு செய்தனர்.

அதற்கு முன்பு அவர்கள் பார்த்துக் கொள்ளும் நிகழ்வு நடந்திருந்தாலும், 1939ஆம் ஆண்டு டார்ட்மெளத் கடற்படை பயிற்சிக் கல்லூரியில், அவர்களின் வாழ்க்கை தொடங்கிய தருணம் புகைப்படம் ஒன்றில் பதிவானதை நாம் காணலாம்.

1939ஆம் ஆண்டு, ராயல் கடற்படை கல்லூரி டார்ட்மெளத்தில் எடுத்தப்படம். இடமிருந்து மூன்றாவதாக ராணி இரண்டாம் எலிசபெத் அவரின் பெற்றொருடன், வலமிருந்து இரண்டாவது இளவரசர் ஃபிலிப்

பட மூலாதாரம், Getty Images

வசீகரமிக்க 18 வயது படைப்பயிற்சி பெறுபவராக இளவரசர் ஃபிலிப், 13 வயதான இளவசரி எலிசபெத்தின் கண்களில் தென்பட்டார்.

பதின்ம வயதில் தோன்றும் ஒரு விருப்பம், வருடங்கள் செல்லச் செல்ல கடிதங்களை பரிமாறிக் கொள்ளும் நட்பாக மாறியது. போர் சமயங்களில் இருவரும் சந்தித்துக் கொண்டனர். அவர் பிரிட்டிஷ் கடற்படை சேவையில் இருந்தபோது அரசி தனது அறையில் அவரின் புகைப்படம் ஒன்றை வைத்திருந்தார்.

அவரின் குழந்தைப்பருவம் ஒரு நாடோடியைப் போல இருந்தது. கிரீஸ் இளவரசராகப் பிறந்து அங்கு நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டு, ஐரோப்பாவில் சுற்றித்திரிந்தார். நிலையான வீடும் இல்லை.

இளவரசர் ஃபிலிப்புக்கு அளவுக்கு மீறிய சுதந்திரமாக இருக்க வேண்டிய சூழல். ஆனால், மனதளவில் வலுவாக இருக்க வேண்டும். அரசியோ அரண்மனையில் வாழ்ந்தவர். அதிகம் பேசக்கூடியவர் அல்ல. எதையும் ஆழ்ந்து யோசிக்கக் கூடியவர். இருவரும் ஒருவரை ஒருவர் முழுமைப்படுத்தினர்.

ஒருமுறை இந்த தம்பதியின் பேரன் இளவரசர் வில்லியம், “அவரால் அரசியைச் சிரிக்க வைக்க முடியும். அவர் பேசும் சில விஷயங்களும், அவர் வாழ்வை நோக்கும் விதமும் அரசியை காட்டிலும் வித்தியாசமானதாக இருக்கும். எனவே அவர்கள் ஒரு சிறந்த தம்பதியாக இருந்தனர்,” என்றார்.

`காதலில் விழுதல்`

ஒரு வருடத்திற்கு முன்னதாக இளவரசர் ஃபிலிப் தனது விருப்பத்தை தெரியப்படுத்தினாலும், எலிசபெத்தின் 21ஆவது பிறந்தநாள் அதாவது 1947பிறகுதான் அவர்களின் நிச்சயதார்த்தம் குறித்த அறிவிப்பு பொதுவெளியில் வெளியானது.

கீரிஸ் இளவரசர் அலைஸின் கிரீடத்திலிருந்த கற்களை கொண்டு பிளாட்டினம் மற்றும் வைரத்தால் ஆன நிச்சாயதார்த்த மோதிரம் ஒன்றை உருவாக்க இளவரசர் ஃபிலிப் உதவினார்.

அதேபோல திருமணத்திற்கு முன் இரண்டாம் எலிசபெத்தின் தாய்க்கு இளவரசர் ஃபிலிப் கடிதம் ஒன்றை எழுதினார். அதில் “தான் காதலில் எந்த தடையுமின்றி முழுவதுமாக விழுந்துவிட்டேன்” என தெரிவித்தார்.

இளவரசர் ஃபிலிப் மற்றும் ராணி இரண்டாம் எலிசபெத்

பட மூலாதாரம், PA

வெஸ்ட்மின்ஸ்டர் அப்பேயில் 2,000 விருந்தினர்கள் முன்னிலையில் இந்த தம்பதி திருமணம் செய்து கொண்டனர். இரண்டாம் உலகப் போர் முடிந்து இரண்டே வருடங்கள்தான் ஆனது. நாடு அப்போது போரின் தாக்கத்திலிருந்து மீண்டு வந்த தருணம் அது. எனவே இந்த திருமணம் ஒரு அரிதான கொண்டாட்டமாக நிகழ்ந்தது. “நமது கடினமான பாதையில் வண்ணங்களின் சாரல் இந்த திருமணம்” என சர்ச்சில் தெரிவித்திருந்தார்.

திருமணம் முடிந்து அடுத்த வருடம் அவர்களின் மூத்த மகன் சார்ல்ஸ் பிறந்தார். அதன்பிறகு மகள் ஏன் (Anne) பிறந்தார். மறுபுறம் இளவரசர் ஃபிலிப் கடற்படை அதிகாரியாக உயர் பதவிகளை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தார். எனவே இந்த இளம் குடும்பம் மால்டாவில் வாழ்ந்து கொண்டிருந்தது. அது ஒரு சாதாரண வாழ்க்கை போலதான் இருந்தது. அந்த சமயத்தில் எடுக்கப்பட்ட காணொளிகள் மூலம், அந்த இளம் ஜோடி, ஒருவரின் துணையில் மற்றொருவர் எந்த கவலையுமின்றி, ஒரு மிதமான வானிலையை ரசித்து கொண்டு அரண்மனை கடமைகளிலிருந்து தள்ளி இருப்பதை காண முடியும்.

ஆனால் இது எல்லாம் 1952ஆம் ஆண்டு பிப்ரவரி 6 அரசர் ஆறாம் ஜார்ஜ் இறக்கும் வரைதான் நீடித்தது. அப்போது எலிசபெத்திற்கு வெறும் 25 வயதுதான். இளவரசர் ஃபிலிப்பிற்கு 30 வயது. ஃபிலிப்புக்கு இளவரசி எப்போது வேண்டுமானாலும் அரசி ஆவார் என்று தெரியும் ஆனால் அத்தனை சீக்கிரம் அது நடக்கும் என இந்த ஜோடி எதிர்பார்க்கவில்லை.

அதிபர் ஜான் எஃப் கென்னடி மற்றும் அவரின் மனைவியுடன் பக்கிங்காம் அரண்மனை

பட மூலாதாரம், PA

இளவரசரை பொருத்தவரை அவர் அரசி ஆக பதவியேற்றால், கடற்படை குறித்து தான் கொண்டிருந்த லட்சியம் அத்தனையும் கைவிட வேண்டும். கடற்படையில் அதிகாரியாக இருந்த ஒருவர் சட்டென ஒரு துணை பாத்திரத்தை கையில் எடுப்பது அவ்வளவு எளிதானது அல்ல.

இது அத்தனையும் 1950களில் நடைபெற்றது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அப்போது கணவரை காட்டிலும் மனைவி ஒரு உயர்ந்த பதவியில் இருப்பது மிக அரிதான ஒன்று. அரசியைப் பொருத்தவரை ஒரு இளம் தாயாக இருந்தாலும், அவர் நிறைவேற்ற வேண்டிய பொறுப்புதான் அவருக்கு முதலில் தோன்றியது.

மகிழ்ச்சியான திருமணத்தின் ரகசியம்

அவர்களின் பொறுப்புகள் மாறியதால் அவர்களின் உறவில் பிரச்னை வந்திருந்தாலும் அது கதவுகளுக்கு பின்னேதான்.

தனது மனைவிக்கு துணையாக இருக்கும் தனது பொறுப்பை கிரகித்து கொள்ள இளவரசர் ஃபிலிப்பிற்கு சிறிது காலம் தேவைப்பட்டது.

1956ஆம் ஆண்டில் தொலைதூர காமன்வெல்த் நாடுகளுக்கு இளவரசர் ஃபிலிப் பயணம் மேற்கொண்டார். இது அவர் தனது மனைவிக்கு துணையாக இருக்கும் கடமை குறித்த கேள்விகளை எழுப்பியது. இருப்பினும் இந்த தம்பதி தங்களின் பொறுப்புகளுக்கேற்ப, ஒரு முறையை வகுத்துக் கொண்டு அதை அடுத்த பல தசாப்தங்களுக்குத் தொடர்ந்து கடைப்பிடித்தனர்.

அரசின் தலைவராக அரசி தனது கடமையை ஆற்ற, குடும்பத் தலைவராக இளவரசர் ஃபிலிப் தனது கடமையை ஆற்றினார். வெளி உலகத்திற்கு அரசிதான் முதன்மையானவர். ஆனால் தனிப்பட்ட முறையில் இளவரசர்தான் முதன்மையானவர். 1960களின் அரச குடும்பம் குறித்த ஆவணப்படத்தில் இளவரசர் ஃபிலிப் விருந்தின் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருப்பார். ராணி சுத்தம் செய்வதற்கான பொறுப்புகளை ஏற்றுக் கொண்டிருப்பார்.

பெரிய தேசிய நிகழ்வுகள், வெளிநாட்டு பயணங்கள், நாடாளுமன்ற தொடங்கங்கள், ஆண்டுவிழா, நன்றி உரை நிகழ்ச்சிகள் ஆகியவற்றிற்கு ராணியுடன் செல்வார் இளவரசர் ஃபிலிப். இது குறித்த காணொளிக்களை நீங்கள் பார்த்தால், இருவரும் சிறிய தருணத்தில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதை காணலாம். ஒரு சின்ன சிரிப்பை பகிர்ந்து கொள்வார்கள். ஒரு பொதுவெளி நிகழ்ச்சியில் தனிப்பட்ட ஒரு நிகழ்வாக அது இருக்கும்.

பெரும்பாலும் இளவரசர் ஃபிலிப் கூட்டத்தினரிடையே அல்லது விருந்தினர்களிடையே உற்சாகமாக பேசி அரசியின் வருகைக்கு வழி செய்வார்.

இந்த தம்பதிக்கு வெவ்வேறு துறையில் ஆர்வங்கள் இருந்தன. ஒருமுறை இளவரசர், “மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையின் ரகசியம் இருவருக்கும் வெவ்வேறு விஷயங்களில் ஆர்வங்கள் இருப்பது” என தெரிவித்திருந்தார்.

அரசிக்கு நாய்கள் மற்றும் குதிரைகள் என்றால் விருப்பம் அதிகம். எனவே அது தொடர்பான விஷயங்களில் தனது ஓய்வு நேரத்தை செலவழிப்பார். இளவரசர் ஃபிலிப் வாழ்நாள் முழுவதும் விளையாட்டுக்களில் ஆர்வமுடையவராக காணப்பட்டார். பின்நாட்களில் அவர் சாரட் பூட்டிய குதிரைகளை ஓட்டும் விளையாட்டில் ஈடுபட்டதை நாம் காணலாம்.

இளவரசர் ஃபிலிப் மற்றும் ராணி இரண்டாம் எலிசபெத்

பட மூலாதாரம், PA

“நதியில் நீந்தும் மீனை போன்று எனது தாத்தா அவர் விரும்பியதை செய்து கொண்டிருந்தாலும், அவர் இல்லாமல் அரசியால் ஒன்றும் செய்ய இயலாது” என 2012ஆம் ஆண்டு இளவரசர் ஹாரி தெரிவித்திருந்தார்.

இறுதியாக “தன்னால் இயன்றதை செய்த பிறகு” 2017ஆம் ஆண்டு தனது சேவையிலிருந்து ஓய்வுப் பெற்றார் இளவரசர் ஃபிலிப். இதன் பொருள் அரசி தனது அதிகாரபூர்வ கடமைகளை செய்யும்போது அவரை தனியாகவோ அல்லது குடும்ப உறுப்பினர்களில் வேறு யாருடனோ காணலாம் என்பதுதான். 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நார்ஃபோக்கில் உள்ள சண்ட்ரிங்க்ஹாம் எஸ்டேட்டில் இந்த தம்பதியை அதிகமாக பார்த்திருக்கலாம்.

ஹெச்எம்எஸ் பபள்

இளவரசர் ஃபிலிப் பொதுவாக ஆர்ப்பாட்டமில்லாதவர். பல வருடங்களாக முறையான உடையணிந்து, கைக்குலுக்கி, சிறிய பேச்சுக்கள் என கழிந்த அவரின் காலம், படித்தல், எழுதுதல் மற்றும் ஓவியம் வரைதல் என கழிந்தது என்பதில் சந்தேகமில்லை. ராணி தனது கடமைகளின் காரணமாக லண்டன் மற்றும் வின்சரில் தங்கினார். அவர்கள் தொடர்பில் இருந்திருப்பர் என்பதில் சந்தேகமில்லை ஆனால் வெவ்வேறு இடங்களில் இருந்தனர்.

இருப்பினும் கோவிட் தொற்று காலத்தில், வின்சர் கோட்டையில் சிறிய பணியாளர்கள் குழுவுடன் அவர்களை பாதுகாப்பாக தங்க வைக்க முடிவு செய்யப்பட்டது. அதை ஹெச்எம்எஸ் பபள் என்று அழைத்தனர்.

பெருந்தொற்று காலத்தில் இருவரும் ஒன்றாக அதிக நேரத்தை செலவிட்டனர். கோட்டைச்சுவர்களுக்குள் அவர்கள் தங்களது வாழ்க்கை பயணத்தில் பார்த்த, அனுபவித்த அசாதாரண விஷயங்களை மீண்டும் கண்முன் கொண்டு வந்திருக்கலாம்.

இளவரசர் ஃபிலிப் மற்றும் ராணி இரண்டாம் எலிசபெத்

பட மூலாதாரம், PA Media

70 வருடங்களுக்கு மேல், ஒருவருக்கு ஒருவர் துணையாக இருந்தனர். எனவே அரசிக்கு, இளவரசர் ஃபிலிப்பின் இழப்பு ஆழமான ஒன்றாகவே இருக்கும்.

இந்த தம்பதி தங்களது காதலை பெரிதும் வெளியில் வெளிப்படையாக காட்டிக் கொள்ளவில்லை என்றாலும், அவர்கள் காதல் கதை என்றும் நினைவில் வைத்துக் கொள்ளக்கூடிய நீடித்த ஒரு அரச குடும்ப காதல் கதை என்றால் மிகையில்லை.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »