Press "Enter" to skip to content

கருப்பின இளைஞர் சுட்டுக்கொலை – அமெரிக்க நகரில் தொடரும் போராட்டதை தடுக்க ஊரடங்கு உத்தரவு

பட மூலாதாரம், Getty Images

லிஸ் நகருக்கு வடக்கே உள்ள புரூக்ளின் சென்டர் பகுதியில் கருப்பின இளைஞர் ஒருவரை அங்குள்ள காவல்துறையினர் சுட்டுக் கொன்ற சம்பவத்தை கண்டித்து பரவலாக போராட்டங்கள் வெடித்துள்ளன. இதனால், தீவிரமாகும் பதற்றத்தை தடுக்க நகர் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சுட்டுக் கொல்லப்பட்ட நபர் 20 வயதாகும் டான்டே ரைட் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

அங்கு நிலவும் அமைதியற்ற நிலை குறித்து உன்னிப்பாக கவனித்து வருவதாக மின்னிசோட்டா மாகாண ஆளுநர் டிம் வால்ஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்க உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கட்கிழமை காலை 6 மணிவரை ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக திங்கட்கிழமை காலையில் உள்ளூர் நீதிமன்றத்திலும் வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.

ஏற்கெனவே அமெரிக்காவில் கடந்த ஆண்டு மே மாதம் கருப்பின இளைஞர் ஜார்ஜ் ஃபிளாய்டை அங்குள்ள காவல்துறையினர் கடுமையான முறையில் தாக்கி கொலை செய்த சம்பவம் பரவலான கண்டனக்குரல்களை எழுப்பியது. அங்குள்ள மின்னியாபோலிஸ் நகரில்தான் அந்த கொலை சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

இப்போது என்ன நிலைமை?

தாக்குதலில் உயிரிழந்த இளைஞர் பற்றிய தகவல் கிடைத்ததும் நூற்றுக்கணக்கானோர் வீதிகளில் திரண்டி போராட்டத்தில் குதித்தனர். புரூக்ளின் சென்டர் காவல் தலைமையகத்துக்கு வெளியே திரண்ட பொது மக்கள், டான்டே ரைட்டின் பெயர் அடங்கிய பதாகைகளுடன் தலைமையகத்தை முற்றுகையிட்டு குரல் கொடுத்தனர்.

போராட்டக்காரர்களை கலைக்க காவல்துறையினர் முதலில் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். அப்போது ஒரு குழுவினர் அங்கிருந்த காவல் வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்கினர். சிலர் அந்த வளாகத்துக்குள் நுழைய முற்பட்டனர். இதையடுத்து காவல்துறையினர் அவர்களை நோக்கி கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தைக் கலைக்க முற்பட்டனர்.

REUTERS

பட மூலாதாரம், Reuters

முன்னதாக, கூட்டமாக வந்த போராட்டக்காரர்கள் நடைபாதைகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு மெழுகுவர்த்தி ஏந்தி டான்டே ரைட் மறைவுக்கு நீதி கேட்டு குரல் கொடுத்தனர். ஆனால், அவர்களின் பாோராட்டத்துக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர்.

ஏற்கெனவே ஜார்ஜ் ஃபுளாய்ட் மரணம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வருவதையொட்டி, அங்கு மின்னிசோட்டை தேசிய படையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கையாக பள்ளிகளை திறக்கவும், நிகழ்ச்சிளை நடத்த வேண்டாம் என மாகாண நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

டான்டே ரைட்டுக்கு என்ன நடந்தது?

காவல் துறை

பட மூலாதாரம், Getty Images

மின்னிசோட்டா மாகாணத்தில் உள்ள மின்னியாபோலிஸ் நகருக்கு அருகே உள்ள புரூக்ளின் சென்டர் நகரில் சாலை போக்குவரத்து விதிகளை மீறியதாகக் கூறப்படும் டான்டே ரைட்டுக்கு எதிரான கைது வாரண்ட் உள்ளதாகக்கூறி காவல்துறையினர் அவரை தடுத்துள்ளனர். ஆனால், அதை உதாசீனப்படுத்தியவாறு டான்டே தனது வாகனத்துக்குள் செல்ல முற்பட்டபோது அவரை கைது செய்ய காவல்துறையினர் முற்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது தனது காரில் தப்பிச் சென்ற டான்டே முயன்றபோது ஒரு சில அடி தூரம் சென்றபோது அவரை நோக்கி ஒரு காவலர் சுட்டதாகவும் அப்போது அந்த தேர் வேறொரு தேர் மீது மோதி நின்றதாகவும் கூறப்படுகிறது. பின்னர் அதே இடத்தில் அந்த தேரை ஓட்டிச் சென்ற நபர் உயிர் இழந்ததாக புரூக்ளின் சென்டர் நகர காவல்துறை தெரிவித்துள்ளது. அந்த தேருக்குள் இருந்த மற்றொரு பெண்மணி உயிருக்கு ஆபத்தின்றி தப்பினார்.

சம்பவம் நடந்தபோது டான்டேவை சுற்றியிருந்த காவலர்கள் உடலில் பாடிகேம் பொருத்தப்பட்டிருந்ததாகவும், அதில் அனைத்து மோதல் காட்சிகளும் பதிவாகியிருப்பதாக தெரிய வந்துள்ளது.

இதேவேளை, போக்குவரத்து காவலர்கள் டான்டேவிடம் மோதலில் ஈடுபட்டபோது, அவர் தன்னிடம் பேசியதாகவும் அப்போது தனது காரில் வாசனை தரும் பாக்கெட்டுகளின் வெளிப்புற கவர்கள் கீழே விழுந்தது தொடர்பாக காவலர்கள் தன்னிடம் பிரச்னை செய்வதாக கூறினார் என்று அவரது தாயார் கேட்டி தெரிவித்தார்.

சில நிமிடங்களுக்குப் பிறகு எனது மகனுடன் அதே காரில் பயணம் செய்த அவனது தோழியின் செல்பேசியில் அழைத்தபோது, அவர் எனது மகன் உயிரற்று சாலையில் கிடப்பதாக தெரிவித்தார் என்று கேட்டி கூறினார்.

நடந்த சம்பவம் குறித்து நகர மேயர் எலியாட் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “சட்ட அமலாக்கத்துறையினரால் மற்றுமொரு கருப்பின மனிதர் உயிரிழந்திருப்பதற்கு அரசு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறது,” என கூறியுள்ளார்.

கருப்பின இளைஞர்

மின்னியாபோலிஸில் ஏன் பதற்றம்?

கடந்த ஆண்டு மே மாதம் மின்னியாபோலிஸில் ஜார்ஜ் ஃபிளாய்ட் உயிரிழந்த சம்பவத்தில் அவரது கழுத்துப் பகுதியில் தனது முழங்காலை பல நிமிடங்கள் அழுத்திப் பிடித்திருந்த காவலர் டெரெக் சாவ்வின் மீதான வழக்கு விசாரணை கடந்த இரண்டு வாரங்களாக நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

ஜார்ஜ் ஃபிளாய்ட் கழுத்துப் பகுதியில் அந்த காவலர் 9 நிமிடங்களுக்கும் மேலாக காலை அழுத்தி வைத்திருந்தார். அந்த காட்சிகள் சமூக ஊடகங்களிலும் தொலைக்காட்சிகளிலும் பரவியதை அடுத்து அந்த விவகாரம் உலக அளவில் கண்டனக் குரல்களை பலரும் எழுப்புவதற்குத் தூண்டின.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »