Press "Enter" to skip to content

மாலி பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்: அதிசயமா, ஆபத்தா?

பட மூலாதாரம், EPA

ஆப்ரிக்க நாடான மாலியில் 25 வயதுப் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் 5 பெண், 4 ஆண் குழந்தைகள். மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்தபோது தெரிந்த எண்ணிக்கையை விட இரண்டு அதிகம்.

ஹலிமா சிஸிக்கு குழந்தைகள் பிறந்தது மொரோக்கா நாட்டில். தகவல் அறிந்த மாலி நாட்டு அரசு அங்கு அதிகாரிகளை அனுப்பி தேவையான உதவிகளைச் செய்து வருகிறது.

“மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்று அவரது கணவர் பிபிசியிடம் தெரிவித்தார். “எனது மனைவியும் குழந்தைகளும் நலமாக இருக்கிறார்கள்”

அமெரிக்காவில் கடந்த 2009-ஆம் ஆண்டு ஒரு பெண் 8 குழந்தைகளை உயிருடன் பெற்றெடுத்ததுதான் இதுவரை கின்னஸ் உலக சாதனை.

இதற்கு முன்னர் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள் பிறந்த நிகழ்வுகள் இருமுறை நடந்திருக்கின்றன. ஆஸ்திரேலியாவில் 1971-ஆம் ஆண்டிலும் மலேசியாவில் 1999-ஆம் ஆண்டிலும் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள் பிறந்திருக்கின்றன. ஆனால் அவற்றில் ஒரு குழந்தை கூட சில நாள்களுக்குக்கூட உயிருடன் இல்லை.

nonuplets

பட மூலாதாரம், EPA

தற்போதைய உலக சாதனையை வைத்திருக்கும் நாடியா சுலேமானின் எட்டுக் குழந்தைகளும் வளர்ந்து 12 வயதை அடைந்துவிட்டார்கள். செயற்கைக் கருத்தரிப்பு முறையில் அவர் கருவுற்றிருந்தார்.

மகிழ்ச்சியான பிரசவத்துக்காக மாலி மற்றும் மொரோக்கோ நாடுகளைச் சேர்ந்த மருத்துவக் குழுக்களுக்கு மாலி சுகாதார அமைச்சர் ஃபேன்டா சிபி பாராட்டுத் தெரிவித்திருக்கிறார்.

“இது மிக மிக அரிது, விதிவிலக்கான நிகழ்வு” என 9 குழந்தைகள் பிறந்த மொரோக்கா நாட்டின் கஸபிளாங்கா நகரின் அய்ன் போர்ஜா மருத்துவமனையின் இயக்குநர் யூசுப் அலாயி ஏஎஃப்பி நிறுவனத்திடம் தெரிவித்திருக்கிறார். 10 மருத்துவர்கள் மற்றும் 25 மருத்துவப் பணியாளர்கள் கொண்ட குழு பிரசவத்துக்கு உதவியதாகவும் அவர் கூறியுள்ளார்.

பிறந்த குழந்தை ஒவ்வொன்றும் 500 கிராம் முதல் ஒரு கிலோ வரை எடை கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை இங்குபேட்டர் சாதனத்தில் வைத்திருக்க வேண்டும் என்றும் யூசுப் கூறியுள்ளார்.

மாலி நாடெங்கும் சிஸியின் குழந்தைகளைப் பற்றித்தான் இப்போது பேச்சு. அவர் கருவுற்றிருந்தபோதுகூட 7 குழந்தைகள்தான் பிறக்கப் போகின்றன என அனைவரும் நினைத்திருந்தார்கள் எனக் கூறுகிறது ராய்ட்டர்ஸ் நிறுவனம்.

Mali

பட மூலாதாரம், MALI’S HEALTH MINISTRY

சிஸி மற்றும் அவரது 9 குழந்தைகளின் நலன் பற்றிக் கவலை ஏற்பட்டதால் மாலி நாட்டு அரசே நேரில் தலையிட்டு உதவிகளைச் செய்து வருகிறது.

மாலி தலைநகர் பமோகாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் இரண்டு வாரங்கள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மார்ச் 30-ஆம் தேதி அவரை மொரோக்கோ நாட்டுக்கு கொண்டு செல்ல முடிவெடுக்கப்பட்டது.

5 வாரங்கள் மொரோக்கோ மருத்துவமனையில் தங்கியிருந்த பிறகு அவருக்கு சிசேரியன் முறையில் குழந்தைகள் பிறந்தன என்று அமைச்சர் சிபி தெரிவித்தார்.

சிஸே மொரோக்கோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது 25 வார கருவுற்றிருந்ததாகவும் தங்களால் 30 வாரம் வரை சமாளிக்க முடிந்ததாகவும் மருத்துவமனை இயக்குநர் அலோயி கூறுகிறார்.

சிஸியின் கணவர் அட்ஜுடன்ட் காதர் அர்பியும் மூத்த மகளும் இப்போது மாலியில்தான் இருக்கிறார்கள். எனினும் எப்போதும் தொடர்பில் இருப்பதாகவும், குடும்பத்தின் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படவில்லை என்றும் அர்பி தெரிவித்தார்.

“கடவுள் எங்களுக்கு இந்தக் குழந்தைகளை அளித்துள்ளார்கள். அவர்களுக்கு என்ன நடக்க வேண்டும் என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும். நான் அதுகுறித்து கவலைப்படவில்லை. கடவுள் ஏதாவது செய்தால், அது ஏன் என்பது அவருக்குத் தெரியும்” என பிபிசியிடம் தெரிவித்தார் அர்பி.

குழந்தைகள் பிறந்ததைக் கேள்விப்பட்டு தங்களது குடும்பத்துக்கு ஏராளமான உதவிகள் குவிந்திருப்பதாகவும் அவர் கூறினார்.

“எல்லோரும் தொலைபேசியில் அழைத்தனர். மாலி அரசு அதிகாரிகள் அழைத்து தங்களது மகிழ்ச்சியைக் கூறினார்கள். நான் அவர்களுக்கு நன்றி சொன்னேன். அதிபரேகூட என்னை அழைத்துப் பேசினார்”

காரணம் என்ன? – பிபிசி மருத்துவச் செய்தியாளர் ரோடாஓடியம்போ

இயற்கையாக ஒரே பிரசவத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் பிறப்பது வழக்கத்துக்கு மாறானது. பெரும்பாலும் செயற்கைக் கருத்தரித்தல் முறையில் இது நடக்கிறது. ஆயினும் சிஸிக்கு என்ன நடந்தது என்பது நமக்குத் தெரியாது.

ஆயினும் கருத்தரிப்புச் சிகிச்சை மூலமே இப்படி நடக்க வாய்ப்புண்டு என்கிறார் கென்யாவின் கென்யாட்டா தேசிய மருத்துவமனையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் பில் காலுமி.

ஆப்ரிக்காவின் பெண்களுக்கு ஹார்மோன் பிரச்னையால் கருவுறுவதில் சிக்கல் ஏற்படும்போது கருமுட்டையை உருவாக்குவதற்காக மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

இதனால் மருந்துகளை உட்கொள்ளும் பெண்களுக்கு பல கருமுட்டைகள் உற்பத்தியாகின்றன.

ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றெடுப்பது குழந்தைகளுக்கு தாய்க்கும் ஆபத்தானது. நான்குக்கும் மேற்பட்ட குழந்தைகளைச் சுமந்து கொண்டிருக்கும் தாய்மார்களுக்கு, கருவின் எண்ணிக்கையைக் குறைக்கும்படி பல நாடுகளில் அறிவுரை வழங்கப்படுகிறது.

அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளைப் பெற்றெடுக்கும்போது சிஸியைப் போல பெரும்பாலும் குறைப்பிரசவமே நடக்கிறது.

37 வாரங்களுக்கு முன்னதாக பிறக்கும் குழந்தைகளுக்கு நுரையீரல் சரியாக வளர்ச்சியடைந்திருக்காது. நோய் எதிர்ப்பு ஆற்றல் பலவீனமாக இருக்கும். நோய்த் தொற்றுக்கு ஆளாகும் வாய்ப்பு அதிகம்.

நாளடைவில் அவர்களுக்கு இயக்கத்தை முடக்கும் பெருமூளை வாத நோய் ஏற்படுவதற்கும் அதிக வாய்ப்புள்ளது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »