Press "Enter" to skip to content

இந்திய வகை கொரோனாவால் அண்டை நாடுகளில் தொற்று அதிகரிக்கிறதா? #REALITYCHECK

  • உண்மை தகவல் சரிபார்க்கும் குழு
  • பிபிசி

பட மூலாதாரம், Reuters

கொரோனாவின் இரண்டாம் அலையால் இந்தியா தடுமாறிக் கொண்டிருக்கும் நிலையில், அதன் அண்டை நாடுகளிலும் தொற்று அதிகரித்திருப்பது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

நேபாளம்

இந்தியாவில் மார்ச் மாதம் தொடங்கி எண்ணிக்கை மற்றும் கொரோனா உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது.

இந்தியாவின் அண்டை நாடுகளிலும் தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக நேபாளத்தில், அங்கு ஏப்ரல் மாதம் தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்தது. அங்கு பரிசோதனை செய்பவர்களில் 40 சதவீதம் பேருக்குத் தொற்று உறுதியாகிறது எனச் செஞ்சிலுவை சங்கம், அரசு தரவுகளைச் சுட்டிக்காட்டித் தெரிவிக்கிறது.

நேபாளம் இந்தியாவுடன் 1880 கிமீட்டர் நிலப்பரப்பை எல்லையாக கொண்டு உள்ளது. இந்த எல்லையை பலரும் வர்த்தகம், சுற்றுலா மற்றும் குடும்ப காரணங்களுக்கு தினமும் கடக்கின்றனர்.

இந்தியாவுக்கு பயணம் செய்த பிறகு நாட்டின் மன்னரான ஞானேந்திராவிற்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவருக்கு எங்கிருந்து தொற்று ஏற்பட்டது என்பது உறுதியாக தெரியவில்லை.

மார்ச் மாதம் எல்லைகளில் கூடுதல் சுகாதார பரிசோதனை மையங்களை நிறுவினர் நேபாள அதிகாரிகள்.

ஏப்ரல் 29ஆம் தேதியன்று காத்மாண்டு பகுதியில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

வங்க தேசம்

மார்ச் மாதம் தொடங்கி வங்கதேசத்திலும் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே அங்கு ஏப்ரல் 5ஆம் தேதி தேசிய பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. அது தற்போது மே 16ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 26ஆம் தேதியிலிருந்து இந்தியாவுடனான எல்லை மூடப்பட்டுள்ளது. இருப்பினும் சிலருக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

அப்போதிலிருந்து வங்கதேசத்தின் தினசரி தொற்று எண்ணிக்கை குறைய தொடங்கியுள்ளது.

பாகிஸ்தான்

பாகிஸ்தான்

பட மூலாதாரம், AFP

பாகிஸ்தானிலும் தொற்று எண்ணிக்கையும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இது அந்நாட்டின் சுகாதார சேவைகள் மீது அழுத்தத்தை ஏற்படுத்தும் என அச்சம் ஏற்பட்டுள்ளது.

அங்கு தற்சமயம் தேசிய பொதுமுடக்கம் இல்லை என்றாலும், சில உள்ளூர் அதிகாரிகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். மேலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் ராணுவத்தினர் உதவி வருகின்றனர். ஆப்கானிஸ்தான், இந்தியா மற்றும் இரானிலிருந்து வரும் பயணிகளுக்கு எல்லைகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இலங்கை

ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரத்திலிருந்து இலங்கையிலும் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. எனவே பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மத கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொற்று எண்ணிக்கை ஏன் அதிகரிக்கிறது?

இந்தியாவின் அண்டை நாடுகளில் தொற்றுகள் அதிகரிப்பதற்கு ஒரு வகையில் இந்திய வகை கொரோனா திரிபு காரணமாக இருக்கலாம் என்ற அச்சமும் நிலவுகிறது.

இந்த வகையின் ஒரு பிரிவு அதிக பரவல் சக்தி கொண்டுள்ளதா என சுகாதார நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

இருப்பினும் இந்த புதிய தொற்றுகள் பிரிட்டன் வகையுடன் தொடர்பு கொண்டதாகவும் இருக்கலாம்

மேலும் பொதுவாக உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைப்பதை காட்டிலும் பரிசோதனைகள் குறைவாக உள்ளன.

கொரோனா பரிசோதனை

பட மூலாதாரம், Getty Images

குறைந்த அளவிலான பரிசோதனை மற்றும் அதிக எண்ணிக்கை என்றால் தொற்றின் உண்மையான தீவிரம் பதியப்படவில்லை என்று அர்த்தம்.

அரசியல் தலைவர்களிடமிருந்து பல்வேறு விதமான செய்திகள் வந்து கொண்டிருந்த நிலையில் காலப்போக்கில் மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றுவதை தவற விட்டு விட்டனர் என மருத்துவர்கள், சுகாதார நிபுணர்கள் மற்றும் களப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பாகிஸ்தானில் மக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதற்கும், பிற கட்டுப்பாடுகளை பின்பற்றுவதற்கும் ராணுவத்தை பயன்படுத்துவது ஓரளவு தங்களுக்கு உதவியாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அங்கு தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மருத்துவ வசதிகள் குறைவாக இருக்கின்றன.

தடுப்பூசி இயக்கம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது?

தடுப்பூசிகள் வேகமாக செலுத்தப்படுவதில்லை என்பதே கவலை தரும் விஷயமாக உள்ளது.

தடுப்பூசி

பட மூலாதாரம், Getty Images

இந்த பகுதியில் உள்ள நாடுகள் தடுப்பூசி இயக்கத்தை ஜனவரி மாதம் தொடங்கினாலும் அது போதிய வேகத்தில் நடைபெறவில்லை.

நேபாளத்தில் 100 பேருக்கு 7.2 டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. வங்கதேசத்தில் அது 5.4ஆக உள்ளது. இலங்கையில் அது 4.8ஆக உள்ளது. பாகிஸ்தானில் அது வெறும் ஒரு டோஸாக உள்ளது. ஆப்கானிஸ்தானில் 0.6ஆக உள்ளது. என சமீபத்திய தரவுகள் கூறுகின்றன.

இதுவே பிரிட்டனில் 100பேருக்கு 76 டோஸ்களாக உள்ளன. அமெரிக்காவில் 75ஆக உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் 37ஆக உள்ளது. சீனாவில் 20க்கும் மேல் உள்ளது.

பாரத் பயோடெக் மற்றும் சீரம் இன்ஸ்ட்டியூட் தயாரித்த தடுப்பு மருந்துகளை தனது அண்டை நாடுகளுக்கும் வழங்கியுள்ளது இந்தியா. ஆனால் தற்போது தொற்று அதிகரித்து வரும் நிலையில், உள்நாட்டு தேவை அதிகரித்து வரும் நிலையில் ஏற்றுமதிகளை நிறுத்தியுள்ளது.

மேலும் சர்வதேச அளவில் நடைபெறும் கோவாக்ஸ் திட்டத்தில் போக்குவரத்து காரணமாக சுணக்கம் கண்டுள்ளது.

ஒரு கட்டத்தில் நேபாளம் மற்றும் இலங்கை தனது தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை நிறுத்த வேண்டிய கட்டாயம் வந்துள்ளது. சீனாவின் சினோஃபார்ம் தடுப்பு மருந்துக்காக அந்நாடுகள் காத்திருக்கின்றன.

பாகிஸ்தானும் தனது தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை வேகப்படுத்த சீன மற்றும் ரஷ்ய தடுப்பூசிகளை நம்பியுள்ளது.

காத்மாண்டுவிலிருந்து கிருஷ்ணா ஆச்சார்யா மற்றும் தாக்காவிலிருந்து வல்லியூர் ரஹ்மான் மிராஜ் வழங்கிய கூடுதல் தகவல்களுடன்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »