Press "Enter" to skip to content

அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்தி கொண்ட மக்களுக்கு முகக்கவசம் தேவையில்லை – அதிபர் பைடன் மகிழ்ச்சி

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்தி கொண்ட மக்கள் பெரும்பாலான உள் மற்றும் வெளி இடங்களுக்கு முகக்கவசம் இல்லாமல் செல்லலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே `இது அமெரிக்காவுக்கு சிறப்பான ஒரு தினம்` என அந்நாட்டின் அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இந்த கட்டுப்பாடு தளர்வுகள் அறிவிக்கப்பட்டப்பின் அதிபர் ஜோ பைடன் தனது அலவலுகத்தில் முகக்கவசத்தை அகற்றினார்.

இருப்பினும் கூட்டமாக இருக்கும் பேருந்துகள், விமானங்கள் மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

முழுவதுமாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட மக்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்ற அழுத்தங்கள் பைடன் நிர்வாகத்துக்கு எழுந்திருந்தது.

கொரோனா தொற்றுக்கு முந்தைய கால வாழ்க்கைக்கு திரும்பும் ஒரு பகுதியாக அமெரிக்காவின் ஆசிரியர்கள் கூட்டமைப்பின் தலைவர் செப்டம்பர் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என கோரியுள்ளார்.

பைசர் தடுப்பு மருந்தை 12-15 வயதிலான குழந்தைகளுக்கு செலுத்தலாம் என்ற ஒப்புதலுக்கு பிறகு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதத்திலிருந்து அமெரிக்காவில் புதிய தொற்று எண்ணிக்கைகளும் இறப்புகளும் குறைய தொடங்கியது.

நியூஜெர்சியில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் இந்த புதிய அறிவிப்புபடி இரண்டு டோஸ்களையும் செலுத்தி கொண்ட மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க தேவையில்லை.

இந்த புதிய தளர்வுகள் குறித்து மகிழ்ச்சி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு சென்ற அதிபர் பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் பிற ஊழியர்கள் முகக்கவசம் இல்லாமல் சென்றனர்.

“நாங்கள் வெளியே சென்று யாரையும் கைது செய்யப்போவதில்லை” என்று தெரிவித்த பைடன் தடுப்பூசி செலுத்தி கொள்ளாத மக்களை முகக்கவசம் அணிய வலியுறுத்தினார்.

பைடன் தனது ட்விட்டர் பக்கத்தில்,”விதிகள் மிக எளிமையானது. தடுப்பூசி செலுத்தி கொள்ளுங்கள் அல்லது தடுப்பூசி செலுத்தும் வரை முகக்கவசம் அணிந்து கொள்ளுங்கள்,” என்று தெரிவித்தார்.

அமெரிக்காவின் அதிபருக்கு மக்களை தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கோ அல்லது முகக்கவசம் அணிய வேண்டும் என்று ஆணையிடுவதற்கோ அதிகாரம் இல்லை.

அமெரிக்காவின் 35 சதவீத மக்கள் இரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் இந்த புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் இயக்குநர் வாலென்ஸ்கி, “நீங்கள் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தி கொண்டுவிட்டால், பெருந்தொற்றால் நீங்கள் நிறுத்தி வைத்திருந்த வேலைகளை மீண்டு செய்யலாம். நாம் எப்போது பழைய நிலைக்கு செல்வோம் என அனைவரும் ஏங்கி கொண்டிருந்த நிலையில், ஏதோ ஒரு வகையில் நாம் பெருந்தொற்றுக்கு முந்தைய நிலைக்கு செல்வதாக உணரலாம்,” என்றார்.

“நீங்கள் முழுவதுமாக தடுப்பூசி செலுத்தி கொண்டுவிட்டால் முகக்கவசம் அணிய தேவையில்லை. நாம் இத்தனை தூரம் வந்துவிட்டோம். நீங்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வது அல்லது முகக்கவசம் அணிவது இரண்டில் எதை தேர்ந்தெடுத்தாலும், நாம் முழுவதுமாக இதிலிருந்து வெளியே வரும் வரை உங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்” என நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய கட்டுப்பாடுகள் மருத்துவமனைகள் மற்றும் சிறைகளுக்கு பொருந்தாது. அதேபோன்று நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் மக்கள் தொடர்ந்து முகக்கவசம் அணிந்து கொள்ளலாம் என வாலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜூலை 4ஆம் தேதிக்குள் 70 சதவீத அமெரிக்க மக்களுக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்ற இலக்கு வைத்துள்ளார்.

இதுவரை 250மில்லியன் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதாக சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றனர்.

உலகளவில் கொரோனா தொற்றால் அதிகம் பேர் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு கொரோனா தொற்றால் ஐந்து லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »