Press "Enter" to skip to content

இஸ்ரேல் காசா மோதல்: சமதானம் பேச வந்திருக்கும் அமெரிக்க தூதர்

பட மூலாதாரம், Reuters

இஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்துக்கு இடையிலான மோதலின் தீவிரத்தைக் குறைத்து ஒரு முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க தரப்பிலிருந்து ராஜ ரீக ரீதியில் பேச்சு வார்த்தை நடத்த தூதர் ஒருவர் டெல் அவிவ் நகரத்துக்குச் சென்றிருக்கிறார்.

ஹாதி அமிர், இஸ்ரேல, பாலத்தீனம் மற்றும் ஐநா அதிகாரிகளுக்கு இடையிலான போர் நிறுத்த ஒப்பந்த அமைதிப் பேச்சு வார்த்தையில் பங்குபெறுவார்.

சனிக்கிழமை காசா மீது இஸ்ரேல் வான் வழித் தாக்குதலை நடத்தியது. பாலத்தீன போராளிகள் இஸ்ரேல் மீது ராக்கெட் ஏவுகனைகளை ஏவினார்கள்.

கடந்த ஐந்து நாட்களாக நடந்து வரும் இந்த தாக்குதல், கடந்த பல ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான வன்முறை என குறிப்பிடப்படுகிறது.

கடந்த திங்கட்கிழமை தொடங்கிய இந்த தாக்குதல், கிழக்கு ஜெருசலேம் நகரத்தில் இஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்துக்கு இடையில் ஏற்பட்ட பிரச்னையால் அதிகரித்தது.

இஸ்லாமியர்கள் மற்றும் யூதர்கள் என இருதரப்பினருமே புனித தளமாகக் கருதும் இடத்தில், இரு தரப்பினருக்கும் இடையில் நடந்த மோதலால், பகைமை அதிகரித்தது.

அந்த இடத்திலிருந்து பின் வாங்குமாறு இஸ்ரேலை எச்சரித்த பிறகு, ஆயுதமேந்திய இஸ்லாமிய போராளிகள் குழுவான ஹமாஸ், இஸ்ரேல் மீது ராக்கெட் ஏவுகனைகளை ஏவியது. பதிலுக்கு இஸ்ரேலும் பாலத்தீனத்தின் மீது தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் 133 பேர் காசாவிலும், எட்டு பேர் இஸ்ரேலிலும் உயிரிழந்து இருக்கிறார்கள். சனிக்கிழமை நடந்த ஒரு விமானப் படை தாக்குதலில், மேற்கு காசா நகரத்தின் அகதிகள் முகாமில் தங்கி இருந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்ததாக பாலத்தீன மருத்துவ அமைப்பு கூறுகிறது. அதில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடக்கம்.

காசாவிலிருக்கும் போராளிகள் இஸ்ரேலின் பீர்ஷிபா நகரத்தைக் குறி வைத்து தாக்கினார்கள்.

இஸ்ரேல் காசா மோதல்

பட மூலாதாரம், Getty Images

வெள்ளிக்கிழமை, இந்த மோதல் மேற்கு கரைக்கு பரவியது. அதில் குறைந்தபட்சமாக 10 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டார்கள், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்து இருக்கிறார்கள். இஸ்ரேல் படையினர் கண்ணீர் புகை குண்டுகள், ரப்பர் குண்டுகள், உண்மையான துப்பாக்கி குண்டுகள் போன்றவைகளைப் பயன்படுத்தினர். பாலத்தீனர்கள் கல்லெண்ணெய் குண்டுகளை வீசினர்.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் சபை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கிறது. அதற்கு முன்பே ஹாதி அமிர் இஸ்ரேல் வந்தடைந்து இருக்கிறார். ஒரு நீண்ட கால அமைதியை உறுதி செய்வது தான் அவரது வருகையின் நோக்கம் என இஸ்ரேலில் இருக்கும் அமெரிக்க தூதரகம் கூறியுள்ளது.

இதுவரை இஸ்ரேல் மற்றும் பாலத்தீன தலைவர்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை உருவாக்கவில்லை என்பது தெரிகிறது.

காசாவில் இருக்கும் ஹமாஸ் போராளிகள் மீதான இஸ்ரேலிய விமான படைத் தாக்குதல், அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிரல் அமைப்பில் மத்தியக் கிழக்கு விவகாரங்களை இணைத்திருக்கிறது. அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம், போதுமான ஆட்களின்றி அதிவேகமாக ராஜ ரீக ரீதியில் செயல்பட வேண்டும். இதுவரை இஸ்ரேல் நாட்டுக்கான அமெரிக்க தூதர் பரிந்துரைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஹாதி அமிர் ஒரு இடைநிலை பதவியில் இருக்கும் ராஜரீக அதிகாரி. இதற்கு முன்பு அமெரிக்க நிர்வாகத்தில் இருந்த சிறப்பு தூதுர்களுக்கு வழங்கப்பட்ட பதவி அமிருக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது என்கிறார் பிபிசியின் பார்பரா ப்லெட் உஷர்.

கடந்த வியாழக்கிழமை, இஸ்ரேல் ராணுவம் இருப்பில் வைக்கப்பட்டிருந்த 7,000 ராணுவ துருப்புகளுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது. அதோடு தன் துருப்புகளையும், ராணுவ டாங்கிகளையும் காசா எல்லையில் நிறுத்தி இருக்கிறது இஸ்ரேல்.

காசாவை நில வழியாக தாக்கும் யோசனை பரிசீலிப்பதாகவும், இதுவரை எதுவும் முடிவு செய்யப்படவில்லை எனவும் இஸ்ரேலிய ராணுவம் கூறியுள்ளது.

கடந்த திங்கட்கிழமையில் இருந்து சுமார் 10,000 பாலத்தீனர்கள், காசாவில் இருக்கும் தங்கள் வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் மதிப்பீடு கூறுகிறது.

இஸ்ரேல் பாலத்தீன மோதலுக்கான காரணம் என்ன?

இஸ்ரேல் காசா மோதல்

கிழக்கு ஜெருசலேம் நகரத்தில் ஹில்டாப் வளாகத்தில், இஸ்ரேல் காவலர்கள் மற்றும் பாலத்தீனியர்களுக்கு இடையிலான சிறு சிறு மோதல்கள் தான், தற்போது இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தாக்குதலுக்கு அடிப்படை காரணமாக அமைந்தது.

கிழக்கு ஜெருசலேம் நகரத்தை இஸ்லாமியர்கள் புனித கருவறையாகக் கருதுகிறார்கள். யூதர்கள் அதை கோயில் மலை எனக் கருதுகிறார்கள். ஆக அவ்விடம் இரு தரப்பினருக்குமே புனிதத் தளம்.

இஸ்ரேல் அவ்விடத்திலிருந்து தங்கள் காவலர்களை அகற்ற வேண்டும், ஷேக் ஜாரா போன்ற அரேபியர்கள் அதிகம் வாழும் பகுதிகளிலிருந்தும் அவர்கள் வெளியேற வேண்டும் எனக் கூறியது ஹமாஸ் அமைப்பு. ஷேக் ஜாரா போன்ற மாவட்டங்களில் யூதர்கள் குடியேறுவதால், அங்கிருந்து பாலஸ்தீனர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்கள்.

ஹமாஸ் கூறியதற்கு இஸ்ரேல் செவி சாய்க்கவில்லை என்பதால், இஸ்ரேல் மீது ஹமாஸ் ராக்கெட் ஏவுகனைகளை ஏவத் தொடங்கியது.

ஏப்ரல் மாத்தியிலிருந்து, (ரமலான் தொடக்கத்தில் இருந்து) கிழக்கு ஜெருசலேம் நகரத்தில் இஸ்ரேலிய காவலர்களுடனான கைகலப்பினால் கோபத்தில் இருந்தார்கள் பாலஸ்தீனர்கள்.

அதோடு, 1967ஆம் ஆண்டு, மத்திய கிழக்குப் போரில் கிழக்கு ஜெருசலேம் நகரத்தை இஸ்ரேல் கைப்பற்றியதைக் கொண்டாடும் விதத்தில் ஜெருசலேம் நாளை கொண்டாடியது இஸ்ரேல். இது பாலத்தீனர்களை மேலும் கோபப்படுத்தியது.

கிழக்கு ஜெருசலேம் நகரத்தை கடந்த 1980ஆம் ஆண்டு தங்கள் நாட்டோடு இணைத்துக் கொண்டது. அந்நகரம் முழுவதும் தங்கள் தலைநகரம் எனக் கருதுகிறது இஸ்ரேல். ஆனால் இதை பெரும்பாலான நாடுகள் அங்கீகரிக்கவில்லை.

பாலத்தீனமோ, தங்களுக்கென உருவாகும் என நம்பிக் கொண்டிருக்கும், சொந்த நாட்டின் தலைநகரம் தான் கிழக்கு ஜெருசலேம் என உரிமை கோரி வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »