Press "Enter" to skip to content

அடோல்ஃப் ஐஹ்மென்: ’60 லட்சம் யூதர்களைக் கொன்ற’ ஹிட்லரின் விஸ்வாசியை இஸ்ரேல் உளவுத்துறை சிறைபிடித்த கதை

  • ரெஹான் பைசல்
  • பிபிசி செய்தியாளர்

பட மூலாதாரம், Getty Images

ஐரோப்பாவின் யூதர்களைக் கொல்ல, ‘நாஜி’ படைகளில் இருந்த லெப்டினன்ட் கர்னல் அடோல்ஃப் ஐஹ்மென்னுக்கு இருந்த வெறி, நாஜிக்களின் தலைவர் அடோல்ஃப் ஹிட்லர் தவிர வேறு யாருக்குமே இருந்ததில்லை என்று சொல்லலாம்.

இரண்டாம் உலகப் போர் முடிவடைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு அர்ஜென்டீனாவில் ஒளிந்திருந்த ​​ஐஹ்மென் ஒரு டச்சு குடிமகனான வில்லெம் சேசேனுக்கு அளித்த பேட்டியில், “உங்களிடம் ஓர் உண்மையைச் சொல்லட்டுமா… ஐரோப்பாவில் வாழும் 1 கோடியே 30 லட்சம் யூதர்களையும் நாங்கள் கொன்றிருந்தால், என் வேலை முழுமையடைந்திருக்கும்,” என்று குறிப்பிட்டார்.

“இது நடக்காததால், எங்கள் வருங்கால தலைமுறையினரின் கஷ்டங்களுக்கு நான் பொறுப்பேற்கிறேன். நாங்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்ததால் இந்த வேலையை எங்களால் செய்ய முடியவில்லை. ஆனால் எங்களால் முடிந்தவரை நாங்கள் அதைச்செய்தோம்,” என்று கூறினார் அவர்.

இரண்டாம் உலகப் போருக்கு பின் ஐஹ்மென் அர்ஜென்டினாவுக்கு தப்பிச்செல்வதில் வெற்றியடைந்தார்.

பல ஆண்டுகளாக ஐஹ்மென் தனதுபெயரை மாற்றிக்கொண்டு அர்ஜென்டீனாவில் வசிப்பதாக 1957ஆம் ஆண்டு தனது ஜெர்மன் தொடர்புகள் மூலமாக இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டுக்கு தெரியவந்தது.

எல்லா ஆதாரங்களையும் உறுதிப்படுத்திய பின்னர், மொசாட் இயக்குனர் இசெர் ஹைரெல், பிரதமர் டேவிட் பென் குரியோனின் இல்லத்திற்குச் சென்று, அர்ஜென்டீனாவில் ஐஹ்மென் இருப்பதை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம் என்று கூறினார்.

” ஐஹ்மென் உயிருடனோ அல்லது பிணமாகவோ வேண்டும்,”என்று குரியோன் பதிலளித்தார். பின்னர் ஒரு கணம் யோசித்தபின், “நீங்கள் அவரை உயிருடன் பிடித்தால் நல்லது. இது நமது இளைஞர்களுக்கு மிகவும் முக்கியமானது,” என்றார்.

இந்தப் பணியின் கமாண்டராக ரஃபி எதான் நியமிக்கப்பட்டார்.

மொசாட்டின் இயக்குநர் இசெர் ஹைரெல்

பட மூலாதாரம், Getty Images

அர்ஜென்டினாவை அடைந்த மொசாட்டின் ஒற்றர்கள் குழு

1960 ஏப்ரல் மாத இறுதிக்குள், மொசாட் துப்பறியும் உயர் குழுவின் நான்கு பேர், வெவ்வேறு திசைகளிலிருந்து அர்ஜென்டினாவிற்குள் நுழைந்தனர்.

அவர்கள் ‘காசில்’ (castle)என்ற குறியீட்டு பெயரில் ப்யூனஸ் அய்ர்ஸில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தனர். இதற்கிடையில், அர்ஜென்டினா தன் சுதந்திரத்தின் 150வது ஆண்டு விழாவை மே 20ஆம் தேதி கொண்டாடப்போகிறது என்பதை இசெர் அறிந்து கொண்டார்.

கல்வி அமைச்சர் அப்பா இபான் தலைமையில் இஸ்ரேலும் அர்ஜென்டீனாவுக்கு ஒரு குழுவை அனுப்பும் என்று முடிவு செய்யப்பட்டது. இந்தக்குழுவை அழைத்துச்செல்ல இஸ்ரேலிய ஏர்லைன்ஸ் எலாய், ‘விஸ்பரிங் ஜெயண்ட்’என்ற ஒரு சிறப்பு விமானத்தை வழங்கியது.

இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் அறுவை சிகிச்சை ஐஹ்மென் என்று இபானுக்கு தெரியாது. மே 11ஆம் தேதி, எலாயின் விமான எண் 601, அர்ஜென்டீனாவுக்கு பறக்கும் என்று முடிவு செய்யப்பட்டது.

விமானத்தின் பணியாளர்கள் குழு மிகவும் கவனமாக தேர்வு செய்யப்பட்டது. அர்ஜென்டீனா நிலக் குழுவினரின் உதவியின்றி திடீரென பறக்க நேர்ந்தால் எந்த சிரமத்தையும் சந்திக்கக்கூடாது என்பதற்காக விமானி ஸ்வி தோஹார் , தன்னுடன் ஒரு மெக்கானிக்கை அழைத்துச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார்.

அடோல்ஃப் ஐக்மென் தனது இளமைப்பருவத்தில்.

பட மூலாதாரம், Getty Images

ஐஹ்மென்னை சுற்றிவளைத்துப்பிடிக்கும் பணியை ஒரு நாள் முன்னதாக மேற்கொள்ள முடிவுசெய்யப்பட்டது

மே 10 ஆம் தேதி, ஐஹ்மென்னை அவரது வீட்டின் அருகிலிருந்து கடத்துவது என்று திட்டமிடப்பட்டது.

மே 11 அன்று, இஸ்ரேலிய விமானம் அங்கு வந்து மே 12 அன்று அவர்கள் இஸ்ரேலுக்கு திரும்புவார்கள் என்றும் திட்டமிடப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் இந்தத் திட்டம் சீர்குலைந்தது.

அர்ஜென்டினாவின் சுதந்திர தின கொண்டாட்டங்களில் விருந்தினர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சகத்தின் நெறிமுறைத் துறை, இஸ்ரேலிய தூதுக்குழு மே 19 வரை தனது வருகையை ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.

மைக்கேல் பார் ஃசோஹர் மற்றும் நிசிம் மிஷால் எழுதிய புத்தகம் 'தி க்ரேட்டஸ்ட் மிஷன்ஸ் ஆஃப் தி இஸ்ரேலி சீக்ரெட் சர்வீஸ் - மொசாட்'

பட மூலாதாரம், MICHAEL BAR-ZOHAR AND NISSIM MISHAL

மொசாட்டின் சாகசங்கள் குறித்த ‘தி க்ரேட்டஸ்ட் மிஷன்ஸ் ஆஃப் தி இஸ்ரேலி சீக்ரெட் சர்வீஸ் – மொசாட்’ என்ற புத்தகத்தில், மைக்கேல் பார் ஃசோஹர் மற்றும் நிசிம் மிஷால் இவ்வாறு எழுதுகிறார்கள், ” இசெர் ஹைரெலின் முன்னே இப்போது இரண்டு வழிகளே இருந்தன. அதாவது ஐஹ்மென்னின் கடத்தல் மே 19 வரை ஒத்திவைக்கப்பட வேண்டும், இல்லையெனில் ஏற்கனவே திட்டமிடப்பட்டபடி , மே 10 அன்று இந்தப்பணி முடிக்கப்படவேண்டும். அதன்பிறகு அவரை ஒன்பது அல்லது பத்து நாட்களுக்கு எங்காவது மறைத்து வைக்க வேண்டும். “

“இது ஒரு பெரிய ஆபத்து மற்றும் ஐஹ்மென்னின் குடும்பத்தினரின் கோரிக்கையின் பேரில் நிர்வாகம் அவரைத் தேடத் தொடங்கக்கூடும் என்ற அச்சம் இருந்தது. ஆனால் இவ்வாறு இருந்தபோதிலும், ஏற்கனவே திட்டமிடப்பட்டபடி பணியை செய்துமுடிக்க இசெர் முடிவு செய்தார். திட்டம் ஒரே ஒருநாள் ஒத்திவைக்கப்பட்டது. மே 11 அன்று இரவு 7.40 மணிக்கு ஐஹ்மென்னை அவரது வீட்டிற்கு அருகிலிருந்து கடத்த அவர் தீர்மானித்தார்.

படம்

பட மூலாதாரம், Getty Images

பஸ் எண் 203 லிருந்து ஐஹ்மென் இறங்கவில்லை

ஐஹ்மென் தினமும் மாலை 7.40 மணிக்கு பஸ் எண் 203-இலிருந்து இறங்கி சிறிது தூரம் நடந்து தனது வீட்டை அடைவார். இந்த நடவடிக்கையில் இரண்டு கார்கள் பங்கேற்க திட்டமிடப்பட்டது. ஒரு காரில் ஐஹ்மென்னை மடக்கிப்பிடிக்க இஸ்ரேலிய உளவுத் துறையினர் இருப்பார்கள்.

இரண்டாவது தேர் அவர்களின் பாதுகாப்புக்காக இருக்கும். மே 11 மாலை, இரவு 7.35 மணியளவில், இரண்டு கார்கள் பேருந்து நிறுத்தம் அருகே நிறுத்தப்பட்டன. முதல் தேர் கருப்பு நிற ஃஷெவ்ரோலெ.. இரண்டு உளவுத் துறையினர் தங்கள் தேர் பழுதடைந்துள்ளது என்பதை காட்டும் வகையில் வெளியே நின்றுகொண்டிருந்தனர்.

ஸ்வி அஹரோனி எனும் உளவுத்துறை ஊழியர் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்தார். நான்காவது ஊழியர் தேருக்குள் ஒளிந்திருந்து, ஐஹ்மென் நடந்து வரவிருந்த இடத்தின் மீது ஒரு கண் வைத்திருந்தார். மற்றொரு கருப்பு நிற ப்யூக் தேர் சிறிது தூரத்தில் சாலையின் மறுமுனையில் நிறுத்தப்பட்டது.

வீடு

பட மூலாதாரம், Getty Images

இரண்டு உளவுத்துறை ஊழியர்கள் காருக்கு வெளியே நின்று கொண்டிருந்தனர். மூன்றாவது நபர் டிரைவர் இருக்கையில் இருந்தார். அவரது வேலை என்னவென்றால், ஐஹ்மென் வந்தவுடன் காரின் ஹெட்லைட்டை எரித்து அவர் கண்களை கூசச்செய்யவேண்டும்.

மைக்கேல் பார் ஃசோஹர் மற்றும் நிசிம் மிஷால் எழுதுகிறார்கள், “பஸ் எண் 203, மாலை 7.40 மணிக்கு வந்து நின்றது. ஆயினும் ஐஹ்மென் அதிலிருந்து வெளியே வரவில்லை. மாலை 7.50 மணிக்குள் மேலும் இரண்டு பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்தன, ஆனால் ஐஹ்மென் எங்கும் காணப்படவில்லை.”

“குழப்பம் அதிகரித்துக்கொண்டே இருந்தது. ஐஹ்மென் திடீரென்று தனது பழக்கத்தை மாற்றிக்கொண்டாரா? அல்லது இந்த திட்டம் பற்றிய தகவல் அவருக்கு கிடைத்துவிட்டதா? ஐஹ்மென் 8 மணியளவில்கூட வரவில்லையென்றால் திட்டத்தை கைவிட்டு அவர்கள் திரும்பிவிட வேண்டும் என்று இசெர் குழுவினருக்கு முன்பே விளக்கியிருந்தார். ஆனால் எட்டரை மணி வரை காத்திருக்க , ரஃபி எதான் முடிவு செய்தார். “

படம்

பட மூலாதாரம், Getty Images

காரில் பலவந்தமாக அமரவைக்கப்பட்ட ஐஹ்மென்

எட்டு மணி ஐந்து நிமிடத்திற்கு மற்றொரு பஸ் வந்து நின்றது. முதலில் பேருந்திலிருந்து யாரும் இறங்குவதை அவர்கள் காணவில்லை. ஆனால் மற்றொரு காரில் இருந்த அவ்ரூம் ஷாலோம், நிழல் போல ஓர் உருவம் வருவதைக்கண்டார்.

அவர் உடனடியாக தனது காரின் ஹெட்லைட்டை ஒளிரச் செய்து அந்த நபரை ஏறக்குறைய பார்க்கமுடியாதபடி செய்தார். செவ்ரோலெ காரில் சவாரி செய்த ஒரு ஏஜெண்டான ஸ்வி மால்கின் கூச்சலிட்டு ஸ்பானிஷ் மொழியில் ‘மொமென்திதோ சென்யோர்’ (ஒரு நிமிடம் ஐயா) என்று கூறினார். ஐஹ்மென் தனது சட்டைப் பையில் கையைவிட்டு ஃப்ளாஷ் லைட்டை தேட முயன்றார்.

மொசாட் பற்றிய புத்தகமான ‘ரைஸ் அண்ட் கில் முதல்’ இன் ஆசிரியர் ரோனன் பெர்க்மேன் எழுதுகிறார், “ஐஹ்மென் தனது கைத்துப்பாக்கியை வெளியே எடுக்கமுயல்கிறார் என்று ஸ்வி மால்கின் நினைத்தார். எனவே அவரை பின்னால் இருந்து பிடித்து காரில் ஏறுவதற்கு பதிலாக மால்கின், அவரை ஒரு குழியில் தள்ளிவிட்டு அவர் மீது ஏறி அமர்ந்துவிட்டார். ஐஹ்மென் கூச்சலிட்டார், ஆனால் அவரது குரலைக் கேட்க அங்கு யாரும் இருக்கவில்லை.”

ரோனன் பெர்க்மேனின் 'ரைஸ் அண்ட் கில் முதல்' புத்தகம்.

பட மூலாதாரம், RONEN BERGMAN

ஸ்வி அஹரோனி ஜெர்மன் மொழியில் ஐஹ்மென்னிடம், “நீங்கள் கூச்சலிட முயற்சித்தால்கூட சுடப்படுவீர்கள்” என்று கூறினார்.

அவர்கள் ஐஹ்மென்னை காரின் பின் இருக்கையின் தரையில் படுக்க வைத்தார்கள். தேர் முன்னோக்கி நகர்ந்தது. மற்ற காரும் அதன் பின்னால் செல்லத் தொடங்கியது.

நகரும் காரிலேயே உளவாளிகள் ஐஹ்மென்னின் கை கால்களைக் கட்டி, அவரது வாயில் துணியை அடைத்தனர்.

அப்பெண்டிக்ஸ் அறுவைசிகிச்சையின் தழும்பு மூலம் ஐஹ்மெனின் அடையாளம் உறுதிசெய்யப்பட்டது.

“இதற்கிடையில், தாங்கள் பிடித்துள்ள நபர் ஐஹ்மென்தானே என்று உறுதிசெய்யும்பொருட்டு எதான் அவருடைய அடையாளத்தை தேட ஆரம்பித்தார். அவர் கைக்கு கீழே ‘எஸ்.எஸ்’ பச்சை குத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது,” என்று ரோனென் பெர்க்மேன் எழுதுகிறார்,

“எஸ்.எஸ். (Schutzstaffel படை) கோப்புகளில் விவரிக்கப்பட்டுள்ள அவரது வயிற்றில் இருக்கும் அப்பெண்டிக்ஸ் அறுவைசிகிச்சையின் தழும்புகளை கண்டுபிடிப்பதில் இப்போது சிக்கல் ஏற்பட்டது. இதைப் பார்க்க, எதான் ஐஹ்மென்னின் பெல்ட்டை அவிழ்த்து தனது கையை அவரது பேண்ட்டில் நுழைத்தார்.”

“அந்த அடையாளத்தைக் கண்டவுடன் அவர் எபிரேய (Hebrew)மொழியில் ‘ஜெ ஹு ஜெ ஹு’ என்று கத்தினார். இதன் பொருள்- இவர்தான்..இவர்தான்…”

ஐக்மென்

பட மூலாதாரம், Getty Images

உண்மையான பெயரை ஒப்புக்கொண்ட ஐஹ்மென்

இரவு 8.55 மணியளவில், மொசாட்டின் உளவாளிகளின் மறைவிடத்தை இரண்டு கார்களும் அடைந்தன. ஐஹ்மென் வீட்டிற்குள் கொண்டு செல்லப்பட்டார். உளவாளிகள் அவரது ஆடைகளை கழற்றத் தொடங்கியபோது அவர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதன் பிறகு வாயைத்திறக்கும்படி அவர்கள் ஐஹ்மென்னிடம் ஜெர்மன் மொழியில் சொன்னார்கள்.

ஐஹ்மென் அவ்வாறே செய்தார். ஐஹ்மென் விஷ காப்ஸ்யூல் எதையாவது தனது வாயில் மறைத்து வைத்திருக்கிறாரா என்று அவர்கள் பார்க்க விரும்பினர். பின்னர் ஜெர்மன் மொழியில் அவரிடம் கேட்கப்பட்டது, “உங்கள் காலணிகள் மற்றும் தொப்பியின் அளவு என்ன? பிறந்த தேதி? தந்தையின் பெயர், தாயின் பெயர்?”

அனைத்து கேள்விகளுக்கும் ஐஹ்மென், ரோபோ போல பதிலளித்தார். உங்கள் நாஜி கட்சி உறுப்பினர் அட்டையின் எண் என்ன என்று கேட்டார்கள். மேலும் எஸ்.எஸ் எண்ணையும் சொல்லுங்கள் என்று கூறப்பட்டது. ஐஹ்மென் 45326 மற்றும் 63752 என்று பதிலளித்தார். அவர்களுடைய கடைசி கேள்வி உங்கள் பெயர் என்ன?

ஐஹ்மென் அதற்கு ‘ரிக்கார்டோ கிளெமென்ட்’ என்று பதிலளித்தார். மொசாட்டின் உளவுத்துறை ஊழியர் மீண்டும் உங்கள் பெயர் என்ன என்று கேட்டார். ஐஹ்மென் நடுங்கியவாறு, ‘ஓட்டோ ஹென்னிங்கர்’ என்று சொன்னார். உளவுத்துறை ஊழியர் மூன்றாவது முறையாக உங்கள் பெயரை சொல்லுங்கள் என்றார். இந்த முறை அவர் அளித்த பதில் ‘அடோல்ஃப் ஐஹ்மென்’.

ப்யூனஸ் அய்ர்ஸை அடைந்த இஸ்ரேலிய விமானம்

ஐஹ்மென்னிடம் ரேஸரை கொடுக்கமுடியாது என்பதால் இஸ்ரேலியர்களே அவருக்கு முக சவரம் செய்தனர். அவரை ஒரு நொடி கூட தனியாக இருக்க அனுமதிக்கவில்லை. அவர் கழிவறைக்குச் செல்லும்போதுகூட,​​மொசாட்டின் ஓர் ஊழியர் அவருடன் போவார்.

அணியின் உறுப்பினரான யேஹுதித் நிசியாஹு, ஐஹ்மென்னுக்கு உணவு சமைத்தார். ஆனால் அவரது எச்சில் பாத்திரங்களை கழுவ மறுத்துவிட்டார். அடுத்த பத்து நாட்கள் இஸ்ரேலிய உளவாளிகளின் வாழ்க்கையின் மிக நீண்ட பத்து நாட்கள். தாங்கள் சிறைபிடித்த கைதியுடன் ஒருவெளிநாட்டில் மறைந்திருந்தார்கள்.

Photo- அடோல்ஃப் ஐக்மென்னை பிடித்த மொசாட் ஏஜெண்ட் ஸ்வி மால்கின்.

பட மூலாதாரம், Getty Images

அவர்களின் ஒரு தவறு காவல்துறையின் சோதனைக்கு வழிவகுத்திருக்கலாம் மற்றும் ஒரு பெரிய சர்வதேச நெருக்கடியை உருவாக்கியிருக்கலாம். 1960 மே 18ஆம் தேதி. டெல் அவிவில் உள்ள லோட் சர்வதேச விமான நிலையத்திலிருந்து காலை 11 மணிக்கு இஸ்ரேலிய விமானம் புறப்பட்டது.

அடுத்த நாள் அதாவது மே 19 அன்று விமானம் ப்யூனஸ்அய்ர்ஸ் விமான நிலையத்தில் தரையிறங்கியது. இரண்டு மணி நேரம் கழித்து, விமானி ஸ்வி தோஹாருடன் பேசிய இசெர், மே 20ஆம் தேதி நள்ளிரவில் விமானத்தை எடுக்க முடிவு செய்தார்.

ஊசி போடப்பட்டு விமானத்தில் ஏற்றப்பட்ட ஐஹ்மென்

மே 20 அன்று இரவு 9 மணிக்கு, ஐஹ்மென் குளிக்கவைக்கப்பட்டு அவருக்கு இஸ்ரேலிய ஏர்லைன்ஸ் எலாயின் சீருடை அணிவிக்கப்பட்டது. அவரது சட்டைப் பையில் ஜீவ் ஜிக்ரோனி பெயரில் ஒரு போலி அடையாள அட்டை வைக்கப்பட்டது.

“மருத்துவர் ஐஹ்மென்னுக்கு ஒரு தூக்க ஊசியை போட்டார். அது அவருக்கு தூக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் மங்கலாகத் தோன்றத்தொடங்கியது. அவர் கேட்கவும், பார்க்கவும், நடக்கவும் முடிந்தது, ஆனால் பேச முடியவில்லை.” என்று மைக்கேல் பார் ஃசோஹர் மற்றும் நிசிம் மிஷால் எழுதியுள்ளனர்.

“ஐஹ்மென் காரின் பின் இருக்கையில் அமர்த்தப்பட்டார். அதே நேரத்தில் இஸ்ரேலிய ஏர்லைன்ஸின் உண்மையான விமானப்பணியாளர்கள் அமர்ந்திருந்த இரண்டுகார்கள், ப்யூனஸ் அயர்ஸின் ஒரு பிரபலமான ஹோட்டலில் இருந்து புறப்பட்டன. 11 மணிக்கு எல்லா கார்களும் ஒன்றாக விமான நிலையத்திற்குள் நுழைந்தன. “

“கார் ஒரு தடுப்பை அடைந்தவுடன், விமானத்தின் உறுப்பினர் ஒருவர் கூச்சலிட்டு,” ஹாய் ஏலாய்” “என்றார். காவலர்கள் அவரை அடையாளம் கண்டுகொண்டனர். அவர்கள் தேருக்குள் பார்த்தனர். தேருக்குள் அனைவரும் இஸ்ரேலிய ஏர்லைன்ஸின் சீருடை அணிந்திருந்தனர்.

“எல்லாம் இயல்பாக உள்ளது என்பதைக் காட்ட, சில விமான பணியாளர்கள் பாடிக்கொண்டிருந்தார்கள், சிலர் சிரித்தார்கள் சிலர் சத்தமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். காவலர்கள் தடுப்பை தூக்கியதும் மூன்று கார்களும் இஸ்ரேலிய விமானத்தின் அருகே சென்று நின்றன.”

ஐஹ்மென், பல விமான பணியாளர்களால் சூழப்பட்டார். இரண்டு பேர் அவரது கைகளை தங்கள் தோள்களில் தாங்கியபடி விமானத்தில் ஏற்றினர். முதல் வகுப்பு ஜன்னல் இருக்கையில் ஐஹ்மென் அமர வைக்கப்பட்டார். 11:15 மணிக்கு, இஸ்ரேலிய விமானம் டெல் அவிவிற்கு புறப்பட்டது.

Photo- ஐக்மென்னை இஸ்ரேலுக்கு உயிருடன் அழைத்துவரும் திட்டத்திற்கு டேவிட் பென் குரியோன் ஒப்புதல் அளித்தார்.

பட மூலாதாரம், Getty Images

இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் டேவிட் பென் குரியோனின் அறிவிப்பு

1960 மே 22 காலை, விமானம் டெல் அவிவில் உள்ள லோட் விமான நிலையத்தில் தரையிறங்கியது. 9.50 நிமிடத்திற்கு மொசாட்டின் இயக்குநர் இசெர் ஹைரெல் ஜெருசலேமில் பிரதமர் டேவிட் பென் குரியோனின் அலுவலகத்தை அடைந்தார். பிரதமரின் செயலர் இட்ஸாக் நிவோன் அவரை நேரடியாக பிரதமர் அறைக்கு அழைத்துச் சென்றார்.

ஆச்சரியத்துடன் பென் குரியோன் அவரிடம் ‘நீங்கள் எப்போது வந்தீர்கள்?’ என்று கேட்டார். அதற்கு இசெர், ‘2 மணி நேரத்திற்கு முன்பு,’ என்று பதில் சொன்னார். கூடவே ‘ ஐஹ்மென் எங்கள் காவலில் உள்ளார்,’ என்றும் குறிப்பிட்டார். அவர் எங்கே என்று குரியோன் கேட்டார். “இங்கே இஸ்ரேலில் தான் இருக்கிறார். நீங்கள் அனுமதித்தால், அவரை உடனடியாக போலீசாரிடம் ஒப்படைக்கிறோம்,”என்றார் இசெர்.

மாலை நான்கு மணிக்கு இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் பென் குரியோன், ஒரு சுருக்கமான அறிக்கையை வெளியிட்டார்.

“அறுபது லட்சம் ஐரோப்பிய யூதர்களின் மரணத்திற்கு காரணமான, மிகக்கொடிய நாஜி குற்றவாளிகளில் ஒருவரான அடோல்ஃப் ஐஹ்மென்னை, இஸ்ரேலின் பாதுகாப்புப் படைகள் சிறை பிடித்துள்ளன என்பதை தெரிவிக்க விரும்புகிறேன். அவர் தற்போது இஸ்ரேலில் ஒரு சிறையில் உள்ளார். விரைவில் இஸ்ரேலிய சட்டத்தின்படி அவர் மீது வழக்குத் தொடரப்படும்,” என்று அவர் அறிவித்தார்.

ஐக்மென்

பட மூலாதாரம், Getty Images

டேவிட் பென் குரியோன் இந்த வார்த்தைகளைச்சொன்னவுடன் கைத்தட்டல் ஒலியால் இஸ்ரேலிய நாடாளுமன்றம் அதிர்ந்தது. 1961 டிசம்பர் 15ஆம் தேதி ஐஹ்மென்னுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, 1962 மே 31 ஆம் தேதி அவர் தூக்கிலிடப்பட்டார்.

“நாம் மீண்டும் சந்திப்போம். நான் கடவுளை நம்புபவனாகவே வாழ்ந்தேன். நான் போர் விதிகளைப் பின்பற்றினேன். எப்போதும் என் நாட்டிற்கு விசுவாசமாக இருந்தேன்.” இவைதான் ஐஹ்மென்னின் கடைசி வார்த்தைகள்.

இஸ்ரேலின் வரலாற்றில் இது முதலாவது மற்றும் கடைசி தூக்கு தண்டனை என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »