Press "Enter" to skip to content

இதய நோய் மரணம், பக்கவாத ஆபத்து நீண்ட நேரம் வேலை செய்தால் வரும் – உலக சுகாதார அமைப்பின் ஆய்வு

பட மூலாதாரம், Getty Images

மிகவும் நீண்ட நேரம் வேலை செய்வதால் ஆண்டுதோறும் லட்சக் கணக்கானவர்கள் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

2016ஆம் ஆண்டு மட்டும் 7,45,000 பேர் பக்கவாதம் மற்றும் இதய நோய் காரணமாக உயிரிழக்க நீண்ட வேலை நேரம் காரணமாக இருந்தது என்று இத்தகைய பாதிப்புகள் குறித்த முதல் சர்வதேச ஆய்வில் தெரியவந்தது.

தென்கிழக்கு ஆசியப் பிராந்தியம் மற்றும் மேற்கு பசிஃபிக் பிராந்தியம் ஆகியவற்றில் நீண்ட வேலை நேரம் காரணமாக நிகழ்ந்த இறப்புகளின் எண்ணிக்கை உலகின் பிற பகுதிகளில் உள்ள எண்ணிக்கையை விடவும் கூடுதலாக உள்ளதும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று காலத்தில் இந்த நிலை மேலும் மோசமடையக் கூடும் என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

ஒரு வாரத்துக்கு 35 முதல் 40 மணிநேரம் வேலை செய்பவர்களை விட, 55 மணி நேரம் அல்லது அதற்கும் அதிகமான நேரம் வேலை செய்பவர்களுக்கு பக்கவாதம் வருவதற்கான ஆபத்து 35 சதவிகிதமும், இதய நோயால் மரணமடைவதற்கான ஆபத்து 17 சதவிகிதமும் கூடுதலாக இருப்பதாக இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச தொழிலாளர் அமைப்புடன் இணைந்து உலக சுகாதார அமைப்பு மேற்கொண்ட இந்த ஆய்வு, இவ்வாறு நீண்ட வேலை நேரம் காரணமாக உயிரிழப்பவர்களின் முக்கால்வாசிப் பேர் நடுத்தர வயது ஆண்கள் அல்லது முதிய ஆண்களாக உள்ளனர் என்கின்றது.

பெரும்பாலான நேரங்களில் நீண்ட வேலை நேரம் காரணமாக நிகழும் உயிரிழப்புகள் மிகவும் காலம் தாழ்த்தியே நிகழ்கின்றன. இத்தகைய மரணங்கள் நிகழ, அதிக நேரம் வேலை செய்த காலத்தில் இருந்து சில தசாப்தங்கள் கூட ஆகிறது.

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பெருந்தொற்றுக் காலத்தை இந்த ஆய்வுக்கு உட்படுத்தவில்லை என்றாலும் இப்போது அதிகரித்துள்ள வீட்டிலிருந்தே வேலை செய்யும் போக்கு, பொருளாதாரச் சரிவு ஆகியவற்றின் காரணமாக நீண்ட வேலை நேரம் காரணமாக உண்டாகும் ஆபத்துகள் அதிகரித்திருக்க கூடும் என்று உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Long working hours killing 745,000 people a year, study finds

பட மூலாதாரம், Getty Images

ஒரு நாட்டில் தேசிய அளவில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் பொழுது வேலை செய்யும் நேரம் 10 சதவிகிதம் அளவுக்கு அதிகரித்து இருப்பதற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளன என்று உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப அலுவலர் ஃப்ராங்க் பேகா தெரிவித்துள்ளார் .

தாங்கள் செய்யும் பணியின் இயல்பு காரணமாக உண்டாகும் நோய்களால் அவதிப்படுபவர்களில், மூன்றில் ஒரு பங்கு பேருக்கு, நீண்ட வேலை நேரமே நோய்க்கான காரணியாக உள்ளது.

பணியின் இயல்பு காரணமாக உண்டாகும் நோய்களின் மிகப்பெரிய காரணியாக நீண்ட வேலை நேரமே உள்ளது என்று இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

தங்களது தொழிலாளர்களுக்கு பணியிடத்தில் உண்டாகும் ஆபத்துகள் குறித்து பணியமர்த்துவோர் மதிப்பிடும் போது, நீண்ட வேலை நேரத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்துகிறது.

ஒருவர் வேலை செய்வதற்கான அதிகபட்ச நேரம் எவ்வளவு என்பதை நிர்ணயித்துக் கொள்வது பணியமர்த்துவோருக்கும் பலனளிக்கும். ஏனென்றால் இதன் காரணமாக பணியாளர்களின் உற்பத்தித்திறன் அதிகரிக்கிறது என்று ஃப்ராங்க் பேகா தெரிவிக்கிறார்.

“பொருளாதார நெருக்கடி உள்ள காலகட்டத்தில் பணியாளர்களின் வேலை நேரத்தை அதிகரிக்காமல் இருப்பது ஓர் அறிவாளித்தனமான முடிவு,” என்று அவர் கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »