Press "Enter" to skip to content

இஸ்ரேல்-காசா மோதல்: சண்டை நிறுத்த அழுத்தத்துக்கு மத்தியில் மீண்டும் தாக்குதல்

பட மூலாதாரம், Reuters

இஸ்ரேல்-காசா பகுதியில் தொடரும் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டு வர சண்டை நிறுத்தம் செய்யுமாறு இரு தரப்புக்கும் அமெரிக்கா அழைப்பு விடுத்திருந்த நிலையில், அங்கு மீண்டும் ராக்கெட் தாக்குதல்கள் தீவிரமாகியிருக்கின்றன.

இந்த விவகாரத்தில் இரண்டாவது வாரமாக இஸ்ரேலிய படையினருக்கும் காசா பாலத்தீன போராளிகளுக்கும் இடையே கடுமையாக மோதல் நீடித்து வருகிறது. இந்த நிலையில், இரு தரப்பும் சண்டை நிறுத்தத்தில் ஈடுபடுமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்தார். ஆனாலும், தங்களுடைய மோதல் போக்கை கைவிட தயாராக இல்லாதவர்கள் போல இஸ்ரேலிய படையினரும் பாலத்தீன போராளிகளும் தாக்குதல்களை தொடர்ந்து வருகிறார்கள்.

இதற்கிடையே, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும் உடனடியாக இரு தரப்பும் சண்டை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இரு தரப்பு மோதல்களால் அமைதியாக வாழும் மக்கள்தொகையில் சிறார்கள் உட்பட பலரும் இறப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரு தரப்பிலும் காணப்படும் வன்முறை செயல்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும் என்று கூறிய புதின், ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தின்படி தீர்வு அடிப்படையிலான செயல்பாட்டை முன்னெடுக்க கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.அந்தத் தீர்வு சர்வதேச சமூகம் ஒப்புக் கொண்ட கோட்பாடுகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும் என்றும் புதின் குறிப்பிட்டார்.

புதின்

பட மூலாதாரம், Reuters

இதேவேளை, காசா பகுதியில் இஸ்ரேலிய படையினர் திங்கட்கிழமை இரவில் நடத்திய வான்தாக்குதலில் இதுவரை மனித உயிர்கள் இறந்ததாக தகவல் வரவில்லை என்று காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த மே 10ஆம்தேதிக்குப் பிறகு தீவிரமான மோதலில் இதுவே மிகப்பெரிய அளவிலான உயிர் சேதமில்லாத நாளாக உள்ளது.

கடந்த திங்கட்கிழமை இரவு உள்ளூர் நேரப்படி 10 மணியளவில் காசாவில் இருந்து இஸ்ரேல் நோக்கி ராக்கெட்டுகள் தொடர்ச்சியாக செலுத்தப்பட்டதாக களத்தில் இருக்கும் ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் கூறியுள்ளார். அதைத்தொடர்ந்து உயிரை காத்துக் கொள்ள பலரும் அங்குமிங்குமாக ஓடியதை பார்த்ததாக அந்த நபர் கூறியிருக்கிறார்.

பைடன் அழைப்பு புதிய பகுதியின் தொடக்கமா?

பைடன்

பட மூலாதாரம், Getty Images

இது தொடர்பாக வாஷிங்டனில் உள்ள பிபிசி செய்தியாளர் பார்பரா பிளெட் உஷெர் கூறியது: பாரம்பரியமாகவே இஸ்ரேலுக்கு சாதகமான ஜனநாயகவாதியாக திகழ்ந்தவர் பைடன். அரபுகளுடனான மோதலின்போது தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்ட டொனால்ட் டிரம்புடன் ஒப்பிடும்போது இது மாறுபட்டது. முந்தைய அதிபரின் அத்தகைய நிலைப்பாட்டில் சிலவற்றை பைடன் மாற்றியிருக்கிறார். ஆனால், எல்லாவற்றையும் அவர் மாற்றி விடவில்லை.

பாலத்தீனர்கள் மீதான வான் தாக்குதல் என வந்தபோது, முந்தைய அதிபரின் பாணியை ஜோ பைடன் இன்னும் மாற்றிக் கொள்ளவில்லை. தன்னை நோக்கி வரும் ராக்கெட் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள இஸ்ரேல் மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு ஆதரவாகவே பெரும்பாலான அமெரிக்க அதிகாரிகள் இப்போதும் உள்ளனர்.

காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தும் வான் தாக்குதல்கள் தொடர்பான விமர்சனங்கள் எதையும் அமெரிக்கா காதில் போட்டுக் கொள்ளவில்லை. அது ஐ.நாவின் அழைப்பாக இருந்தாலும் அமெரிக்கா உறுதியாகவே இருந்தது. இதன் மூலம் கிடைத்த நேரத்தில் போராளிகள் குழு தலைவர்களையும் அவர்களின் உள்கட்டமைப்பு வசதிகளையும் அழிக்க இஸ்ரேலுக்கு அமெரிக்கா நேரம் கொடுப்பது போலவே நடக்கும் நிகழ்வு பார்க்கப்படுகிறது.

எனினும் மோதல்கள் நாளுக்கு நாள் தீவிரமாகி உயிர் பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகும்போது, தமது ராணுவ நடவடிக்கையை முடித்துக் கொள்ளும் அழுத்தம் இஸ்ரேலுக்கு பல நிலைகளில் இருந்தும் வருகின்றன.

இதேவேளை, ஹமாஸ் தரப்பில் இருந்து மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள், இம்முறை முன்பை விட தீவிரமாக இருக்கிறது. அவர்களால் இஸ்ரேலின் தாக்குதலை தாக்குப்பிடிக்கவும் முடிகிறது. இத்தகைய சூழலில்தான் சண்டை நிறுத்தம் செய்யுமாறு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹுவை பைடன் கேட்டுக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் இது இஸ்ரேல், காசா விவகாரத்தில் அமெரிக்கா கடைப்பிடிக்கும் புதிய அணுகுமுறையின் தொடக்கமாகவே பார்க்கப்படுகிறது, என்கிறார் பார்பரா பிளெட் உஷெர்.

பூகம்பத்தை போல குலுங்கிய கட்டடங்கள்

இஸ்ரேல் காசா

பட மூலாதாரம், Reuters

இதற்கிடையே, காசாவில் திங்கட்கிழமை நள்ளிரவு களத்தில் இருந்து செய்தி வழங்கிய பிபிசியின் ருஷ்டி அபுலூஃப், இஸ்ரேலும், காசாவும் பரஸ்பரம் தாக்குதல்களை சில மணி நேரம் நிறுத்திக் கொண்டபோதும், நள்ளிரவுக்குப் பிறகு இரு தரப்பிலும் கடுமையாக தாக்குதல் நடத்தப்பட்டது. காசாவை நோக்கி 60 வான் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இஸ்ரேலை நோக்கி 90 ராக்கெட்டுகளை பாலத்தீன போராளிகள் ஏவியிருக்கிறார்கள்.

அந்த நேரத்தில் காசவில் உள்ள கட்டடங்கள் பல தீக்குழம்பு போல எரிந்தன. அருகாமையில் இருந்த கட்டடங்கள் பூகம்பம் ஏற்பட்டது போல குலுங்கின. இந்த தாக்குதல் மூலம் சுரங்கத்தில் உள்ள ஆயுததாரிகளை இலக்கு வைப்பதாக இஸ்ரேல் கூறுகிறது.

இதுவரை நடந்த மோதலில் பாலத்தீனர்கள் 212 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதில் கிட்டத்தட்ட 100 பேர் பெண்கள் மற்றும் சிறார்கள். இதேபோல, 150 போராளிகள்வரை கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறுகிறது.

இந்த தாக்குதலில் சாதாரண மக்களை இலக்கு வைப்பது தங்களுடைய நோக்கம் அல்ல என்று கூறும் இஸ்ரேல், ஹமாஸ் போராளிகள் மட்டுமே தங்களின் இலக்கு என்று உறுதிபட தெரிவித்துள்ளது.

இதேவேளை செவ்வாய்க்கிழமை அதிகாலையில் இஸ்ரேல் தமது எல்லைக்கு அருகே உள்ள ஜோர்டான் கிழக்குப் பகுதியில் இருந்து வந்த ஆளில்லா டிரோனை சுட்டு வீழ்த்தியது. ஜோர்டான் நாடு, வரலாற்றுப்பூர்வமாக பாலத்தீனர்களுடன் நல்லுறவைக் கொண்டிருந்தாலும் 1994ஆம் ஆண்டுக்குப் பிறகு இஸ்ரேலுடனும் ஜோர்டான் இயல்பான உறவைப் பாராட்டத் தொடங்கியது.

இதுவரை நடந்தது என்ன?

இரண்டாவது வாரமாக தொடரும் இஸ்ரேல் – காசா மோதலில் சமீபத்திய முக்கிய நடவடிக்கைகளை பார்ப்போம்.

  • காசாவில் உள்ள கட்டடங்களை நோக்கி இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியதில் ஏராளமான ஹமாஸ் பதுங்குச்சுரங்கங்கள் அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் கூறுகிறது.
  • இஸ்ரேல் பகுதியை நோக்கி பாலத்தீன போராளிகள் ராக்கெட்டுகளை ஏவினார்கள். இதனால், நாட்டின் தென் பகுதியில் உள்ள நகரங்களில் சைரன் ஒலி முழங்கியது. அங்கு வாழ்ந்த மக்கள் பலரும் பதுங்குக்குழிகளுக்குள் அனுப்பப்பட்டார்கள்.
  • இஸ்ரேல் – காசா இடையே சண்டை நிறுத்தத்தை மேற்கொள்ளுமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹுவுடன் அவர் பேசியுள்ளார். சண்டை நிறுத்தம் தொடர்பாக எகிப்து மற்றும் பிற நாடுகளுடன் அமெரிக்கா பேசி வருகிறது.
  • இதுவரை நடந்த தாக்குதல்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 200ஐ கடந்துள்ளது. அதில் காசாவில் இறந்தவர்களில் கிட்டத்தட்ட 100 பேர் பெண்கள் மற்றும் சிறார்கள். இஸ்ரேல் தரப்பில் இரண்டு சிறார்கள் உட்பட 10 பேர் இறந்துள்ளனர்.
  • காசாவில் குறைந்தது 150 போராளிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதுவரை நடந்த தாக்குதலில் தங்கள் தரப்பு உயிரிழப்பு என்ன என்ற விவரத்தை காசா பகுதியை கட்டுப்படுத்தி வரும் பாலத்தீன போராளிகள் வெளியிடாமல் தவிர்த்து வருகிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »