Press "Enter" to skip to content

இஸ்ரேல் அரசு – பாலத்தீனத்தின் ஹமாஸ் இடையிலான காசா போர் நிறுத்த உடன்படிக்கையில் உள்ளது என்ன?

  • உண்மை கண்டறியும் குழு
  • பிபிசி நியூஸ்

பட மூலாதாரம், Getty Images

காசா பகுதியில் இஸ்ரேலுக்கும் பாலத்தீன ஆயுதப் போராட்டக் குழுவான ஹமாஸுக்கும் இடையே போர்நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது.

இது 11 நாட்கள் தொடர்ந்த வன்முறை வெறியாட்டங்களை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. இந்தச் சண்டையின்போது ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி 4,000 ராக்கெட்டுகளை ஏவ, பதிலுக்குக் காசாவில் 1,500 இலக்குகளை இஸ்ரேலிய ராணுவம் தாக்கியது.

காசாவில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 243 பேர் கொல்லப்பட்டதாக அதன் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. சண்டையின்போது குறைந்தது 225 தீவிரவாதிகளைக் கொன்றதாக இஸ்ரேல் கூறியுள்ளது.

இஸ்ரேலில், இரண்டு குழந்தைகள் உட்பட 12 பேர் கொல்லப்பட்டதாக அதன் மருத்துவத் துறை தெரிவித்துள்ளது.

போர் நிறுத்த உடன்படிக்கையின் விவரங்கள்

Iron Dome missile intercept

பட மூலாதாரம், AFP

போர் நிறுத்தம் என்பது காலவரையின்றி அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் போரைத் தொடர வேண்டாம் என்று இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டு அறிவிப்பதாகும்.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான கடந்தகால மோதல்கள் பல, இத்தகைய போர்நிறுத்தங்களுடன் முடிவடைந்ததையும் அதன் பிறகு நடந்தவைகளையும் கருத்தில் கொண்டால், போர் மீண்டும் தொடங்க அதிக வாய்ப்புகள் உள்ளன என்றே கூறலாம்.

உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை 02:00 மணிக்கு (வியாழக்கிழமை 23:00 GMT) சண்டையை நிறுத்த இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

இந்த காலக்கெடுவுக்கு முன்னதாக, காசா மீது இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் இஸ்ரேல் மீதான ராக்கெட் தாக்குதல்கள் நடந்ததாகச் செய்திகள் கூறுகின்றன.

போர் நிறுத்த விதிமுறைகள்

போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் திரைக்குப் பின்னால் நடைபெற்று வருவதால், அதிக விவரங்கள் வெளியிடப்படவில்லை.

Israeli rescue team at damaged house

பட மூலாதாரம், Getty Images

எகிப்து, கத்தார் போன்ற பிராந்திய சக்திகளும், அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபையும் இதில் ஈடுபட்டிருந்தன.

இஸ்ரேல் “பரஸ்பர மற்றும் நிபந்தனையற்ற” போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டதாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் ஓர் அறிக்கையை வெளியிட்டது,

ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் (இஸ்லாத்தின் புனிதமான தளங்களில் ஒன்று) மற்றும் அருகிலுள்ள மாவட்டமான ஷேக் ஜாராவில் உள்ள அல்-அக்சா மசூதியை விடுவிப்பதாக இஸ்ரேல் ஒப்புக் கொண்டதாக காசாவில் பிபிசியிடம் ஹமாஸ் இயக்கத்தின் தலைவர் ஒருவர் கூறினார். பாலத்தீன குடும்பங்களை வெளியேற்றி யூதக் குடும்பங்கள் குடியேறிய பகுதி அது. இருப்பினும், இதை இஸ்ரேல் மறுத்தது.

இந்த மாதத் தொடக்கத்தில் இரு தரப்பினருக்கும் இடையிலான மோதலுக்குக் காரணமாயிருந்தவை இந்த இரு விவகாரங்கள்தான்.

காசா மீதான இஸ்ரேலிய வான் தாக்குதல்கள் ஹமாஸ் உடனான சமன்பாட்டையே மாற்றிய ஒரு சிறப்பான வெற்றி என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.

காசா பகுதிக்குள் ஒரு சந்திப்பை மனித நேய உதவிகளுக்காகத் திறந்து விட இஸ்ரேல் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இஸ்ரேல் முழுவதும் நடப்பில் இருக்கும் பெரும்பாலான அவசரகாலக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, சில நாட்களில் வழக்கமான விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கவுள்ளதாகவும் தெரிகிறது.

இந்தப் போர் நிறுத்தம் எவ்வளவு காலம் தொடரும்?

இந்தப் போர் நிறுத்தத்திற்குக் காலவரையறை எதுவும் குறிப்பிடப்படவில்லை. உலகத் தலைவர்கள் காலவரையின்றி இது நீடிக்கும் என்ற தமது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.

Map showing Israel and the Gaza Strip

போர் நிறுத்தத்தைக் கண்காணிக்க, டெல் அவிவுக்கு ஒன்றும் காசாவுக்கு ஒன்றுமாக இரண்டு பிரதிநிதிக் குழுக்களை அனுப்புவதாக எகிப்து தெரிவித்துள்ளது. இதை நிரந்தரமாகப் நீடிக்க வைப்பதற்கான வழிகளை அவை கவனிக்கும் என்று அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்த நடவடிக்கை முன்னேற்றத்திற்கு “உண்மையான வாய்ப்பை” அளித்துள்ளது என்று கூறியுள்ளார்.

எகிப்து, ஐ.நா, அமெரிக்கா மற்றும் இதைச் சாத்தியப்படுத்துவதில் பங்கு வகித்த மற்றவர்களையும் நாங்கள் பாராட்டுகிறோம் என்று ஐரோப்பியன் ஒன்றியத்தின் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

இரு தரப்பும் போர் நிறுத்தத்தை உறுதியுடன் செயல்படுத்தும் என்று தான் நம்புவதாக சீனா தெரிவித்துள்ளது.

பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனும் போர்நிறுத்தத்தை வரவேற்றுள்ளார். ஆனால் இரு தரப்பினரும் இப்போது மோதலுக்கு “நீடித்த தீர்வை” காண வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இந்தப் போர் நிறுத்தம் இஸ்ரேலுக்கும் பாலத்தீனர்களுக்கும் இடையிலான அடிப்படை பிரச்னைகளைப் பற்றிக் குறிப்பிடவில்லை.

Smoke billowing into sky after attack on Gaza City

பட மூலாதாரம், AFP

பல ஆண்டுகளாக இந்த சிக்கல்களைத் தீர்க்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, ஆனால் வெற்றி மட்டும் கிட்டவில்லை.

ஜெருசலேமின் எதிர்கால நிலை, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் யூதக் குடியேற்றங்களின் நிலை, பாலத்தீன அகதிகளின் பிரச்னை மற்றும் ஒரு பாலத்தீன அரசு உருவாக்கப்பட வேண்டுமா இல்லையா ஆகியவை அவற்றில் அடங்கும்.

முந்தைய போர் நிறுத்தங்களின் நிலை என்ன?

2014 மோதலில், இஸ்ரேலியத் தரைப்படைகள் காசாவுக்குள் சென்றபோது, போர் நிறுத்தப்படுவதற்கு முன்னர் போர்நிறுத்தத்தை நடைமுறைப்படுத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

2008ஆம் ஆண்டின் தொடக்கத்தில் எகிப்து பேச்சுவார்த்தை நடத்திய போர்நிறுத்தம் நவம்பர் மாதத்திற்குள் முறிந்தது, அடுத்த மாதம் இஸ்ரேல் காசாவில் ஒரு பெரிய தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது.

இந்த முறை, இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் பென்னி கான்ஸ் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் அடுத்து என்ன நடக்கிறது என்பதை கள நிலவரங்களே தீர்மானிக்கும் என்று எச்சரித்துள்ளார்.

இஸ்ரேலிய குடிமக்களைப் பாதுகாக்க இஸ்ரேலிய ராணுவம் எப்போதும் தயார் நிலையில் இருக்கும் என்று அவர் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »