Press "Enter" to skip to content

ஜாம்நகர் விமான தளத்தைப் பயன்படுத்தி பாகிஸ்தானின் அணுசக்தி நிலையத்தை தகர்க்க இஸ்ரேல் உண்மையில் முன்வந்ததா?

  • ஜெய்தீப் வசந்த்
  • பிபிசி குஜராத்திக்காக

பட மூலாதாரம், Getty Images

மத்திய கிழக்கில், இஸ்ரேலுக்கும் பாலத்தீன ஆயுதக்குழு ஹமாசுக்கும் இடையில் சமீபத்தில் மோதல் வெடித்தது. இந்த தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானோர் இறந்துவிட்டனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துவிட்டனர்.

கூடிய விரைவில் சண்டைநிறுத்தத்தை ஏற்க வேண்டியிருக்கும் என்று நினைத்த இஸ்ரேல் ஹமாஸுக்கும் அதன் கட்டமைப்புகளுக்கும் முடிந்தவரை சேதத்தை ஏற்படுத்த விரும்பியது.

இதற்கிடையில், நாட்டில் தீவிரவாதத்திற்கு எதிராக ‘இஸ்ரேல் மற்றும் மொசாட் மாடலை’ இந்தியா பின்பற்ற வேண்டும் என்று ‘கணினிமய நிபுணர்கள்’ தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இஸ்ரேல் உதவியுடன் இந்தியா சரியான நேரத்தில் தைரியமாக செயல்பட்டிருந்தால் பாகிஸ்தான் அணு ஆயுதம் உருவாக்குவதை தடுத்து நிறுத்தியிருக்கலாம் என்ற பேச்சும் உள்ளது.

இஸ்ரேல் அத்தகைய வாய்ப்பை உண்மையில் அளித்ததா? குஜராத்தின் நிலம் அந்த நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட இருந்ததா? கஹூட்டாவில் பாகிஸ்தானின் அணு ஆயுத திட்டத்தை தடுக்கும் வாய்ப்பை இந்தியா,ஒரு முறை அல்ல, பல முறை தவறவிட்டதா?

பாகிஸ்தான் அணு நிலையங்களை அழிப்பதில் இஸ்ரேலுக்கு ஏன் ஆர்வம் இருந்தது?

இது குறித்து மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன, ஆனால் இந்த பிரச்சனை இன்றும் விவாதத்திற்குரிய விஷயமாகவே உள்ளது.

இராக் மீது இஸ்ரேல் படையெடுப்பு

1981 ஜூன் 7 ஆம் தேதி, இஸ்ரேலிய விமானப்படையின் 3 விமானங்கள் எதிரி நாடுகளின் எல்லைகளைக் கடந்து இராக்கில் அழிவை ஏற்படுத்தியது, ஒசிராக்கில் கட்டப்பட்டுவந்த இராக் அணு மின் நிலையத்தை தகர்த்தது.

இஸ்ரேலின் எட்டு எஃப் -16 விமானங்கள், இரண்டு எஃப் -15 போர் விமானங்கள் , எகிப்தின் சினாய் பாலைவனத்தில் உள்ள விமான நிலையத்திலிருந்து புறப்பட்டன. (அது இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் இருந்தது).

இந்த விமானங்கள் செளதி அரேபியா மற்றும் ஜோர்டான் வான்வெளியில் வெறும் 120 மீட்டர் உயரத்தில் பறந்தன.

செளதி அரேபியாவின் பாலைவனப் பகுதியான 600 மைல் (சுமார் 1,000 கிலோமீட்டர்) தூரத்துக்கு விமானம் பறப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட கூடுதல் எரிபொருள் நிரப்பும் திட்டம் கைவிடப்பட்டது.

இராக் வான்வெளியில் நுழைந்த பின்னர் ராடாரில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க இஸ்ரேலிய விமானங்கள் தங்கள் பறக்கும் உயரத்தை 30 மீட்டராகக் குறைத்தன.

மாலை 5.30 மணியளவில் விமானங்கள் 20 கி.மீ தூரத்திலிருந்து வெவ்வேறு திசைகளில் பறந்து 2,130 மீட்டர் உயரத்தை எட்டின.

பின்னர் அவை ஒசிராக் (தமூஸ் -1) மீது மணிக்கு 1,100 கிலோமீட்டர் வேகத்தில் சாய்வாக பறந்தன.

ஒன்றன்பின் ஒன்றாக 16 ‘நேர தாமத’ குண்டுகள் 35 டிகிரி கோணத்தில் வீசப்பட்டன. அவற்றில் இரண்டு வெடிக்கவில்லை. ஆனால் மீதமுள்ள குண்டுகள் தங்கள் வேலையைச் செய்தன.

பிரெஞ்சு வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்ட அணு உலை அழிக்கப்பட்டது. இராக்கின் விமான அழிப்பு பீரங்கிகள் குண்டு மழை பொழிந்தன. ஆனால் இஸ்ரேலிய விமானங்கள் தாயகம் திரும்பும் பொருட்டு 12,000 அடிக்கு மேல் உயரத்தை எட்டின.

ஓர் இராக்கிய விமானம் கூட இஸ்ரேலிய விமானங்களை பின்தொடரவில்லை. இஸ்ரேலிய விமானங்கள் நாடு திரும்பியபோது, அவற்றின் எரிபொருள் தொட்டியில் 450 கிலோ எரிபொருள் மட்டுமே இருந்தது. இதன் மூலம் வெறும் 270 கிலோமீட்டர் தூரத்தை மட்டுமே கடந்திருக்க முடியும்.

இந்த தாக்குதலில் 11 பாதுகாப்புப் படையினரும் ஒரு பிரெஞ்சு பிரஜையும் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இஸ்ரேலின் இந்த நடவடிக்கையை ஐநா பாதுகாப்பு கவுன்சில் கண்டனம் செய்தது. மறுபுறம், இராக் ஒரு அணு மின் நிலையத்தை உருவாக்க உதவிய பிரான்ஸ் மற்றும் இத்தாலியை இஸ்ரேல் விமர்சித்தது. ஆனால் இஸ்ரேலுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

இஸ்ரேலிய விமானப்படையின் சாதனையால் உலகெங்கிலும் உள்ள பாதுகாப்பு வல்லுநர்கள் திகைத்துப் போனார்கள். இந்திய பாதுகாப்பு வல்லுநர்களுக்கும் இதையே பின்பற்றும் யோசனை ஏற்பட்டது.

ஒரு குஜராத்தி பாகிஸ்தான் திட்டத்தை அம்பலப்படுத்தினாரா?

மொரார்ஜி தேசாய்

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் நெருக்கடி நிலை நீக்கப்பட்ட பிறகு 1977 ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் காங்கிரஸ் அல்லாத கட்சி முதல் முறையாக வெற்றி வாகைசூடி மத்தியில் ஆட்சியில் அமர்ந்தது. அந்த அரசு காந்தியவாதியும் குஜராத்தியுமான மொரார்ஜி தேசாயின் தலைமையில் அமைந்தது.

1971ம் ஆண்டு பாகிஸ்தான் போருக்குப் பிறகு, இந்தியாவின் உளவு அமைப்பான, ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு (ரா) , நாட்டின் அரசியல்வாதிகள் மீது ஒரு கண் வைத்திருப்பதாக தேசாய் உணர்ந்தார்.

இந்த நிலையில் ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தபோது, மொரார்ஜி தேசாய் , ராவின் வரவு செலவுத் திட்டத்தை 30 சதவீதம் குறைத்தார்.

அது மட்டுமல்லாமல் பாகிஸ்தான் அணு ஆயுத நாடாக மாறுவதைத் தடுக்க ஒரு ரகசிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

2018ல், பாகிஸ்தான் குரூப் கேப்டன் எஸ்.எம்.ஹாலி ‘பாகிஸ்தான் டிஃபென்ஸ் ஜெனரல்’ என்ற பாதுகாப்பு இதழில் ஒரு கட்டுரை எழுதினார். அந்தக் கட்டுரையில், “1977 ஆம் ஆண்டில், ரா ஒரு ஊழியர் ஒருவர், கஹுட்டா அணுமின் நிலையத்தின் வரைபடத்தை 10,000 டாலருக்கு வாங்கத் தயாராக இருந்தார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“இந்த தகவல் அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய்க்கு கிடைத்தபோது, அவர் உடனடியாக பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் ஜெனரல் ஜியா-உல்-ஹக்கை அழைத்து,’ நீங்கள் கஹுட்டாவில் அணுகுண்டு தயாரிக்கிறீர்கள் என்று எங்களுக்குத் தெரியும்’ என கூறினார்.

“இதன் விளைவாக, ஒரு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ராவின் உளவாளி பிடிபட்டார். இந்தியா ஒருபோதும் அந்த ரகசிய வரைபடத்தைப் பெறவில்லை.”

பாகிஸ்தான் அணு ஆயுதத்தை தயாரிப்பை நோக்கி நகர்கிறது என ரா சந்தேகித்தது. எனவே ரா தனது உளவு அமைப்பை பாகிஸ்தான் முழுவதும் செயல்படுத்தத் தொடங்கியது.

ரகசிய விசாரணையில், இஸ்லாமாபாத்திற்கு அருகிலுள்ள கஹுட்டாவில் அணுசக்தி திட்டம் நடந்து வருவதை ரா கண்டுபிடித்தது.

இந்த விஷயத்தை உறுதிசெய்யவேண்டியது அவசியம். எனவே கஹுட்டா அணுமின் நிலையத்தில் பணிபுரியும் விஞ்ஞானிகள் வந்துபோகும் முடிதிருத்தும் நிலையத்தில் இருந்து தலைமயிர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அவை இந்தியாவுக்கு அனுப்பப்பட்டன.

முடிகளில் கதிரியக்கம் இருப்பதை அறிவியல் சோதனைகள் மெய்ப்பித்தன. அதாவது விஞ்ஞானிகள் பணிபுரியும் இடத்தில் அணுசக்தி தொடர்பான நடவடிக்கைகள் நடைபெறுகின்றன என்பதை இது காட்டியது.

இந்த தகவலைப் பெற்ற பிறகு, கஹுட்டா உலையின் வரைபடத்தைப் பெற ஒரு ரகசிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பின்னர், இந்திரா காந்தி மீண்டும் ஆட்சிக்கு வந்தார். ‘அறுவை சிகிச்சை கஹுட்டா’ வை ரா அமைப்பு தொடங்கியது.

இஸ்ரேல் ஈராக்கிற்குள் அதிரடியாக நுழைந்து அணுசக்தி நிலையத்தை அழித்த அதே வழியில் பாகிஸ்தானின் கஹுட்டா அணு நிலையத்தை தகர்க்க இந்தியா விரும்பியது.

இஸ்ரேல் உண்மையில் முன்வந்ததா?

இந்த நடவடிக்கையை மேற்கொண்ட விமானிகளின் படத்தை 2003 பிப்ரவரியில், இஸ்ரேலிய விமானப்படை வெளியிட்டது.

பட மூலாதாரம், Getty Images

“வளைகுடா நாடுகளிலிருந்து இந்திய வான்வெளியில் நுழையும் விமானங்களுக்கான ‘பிரதான நுழைவாயில்’ குஜராத்தின் ஜாம்நகர் ஆகும். அதனால்தான் வெளிநாட்டிலிருந்து வாங்கப்பட்ட பெரும்பாலான விமானங்கள் இந்த தடத்தில் நாட்டிற்குள் நுழைகின்றன.”என்று ஓய்வுபெற்ற இந்திய விமானப்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

“ரஃபேல் விமானமும் அங்கே தரையிறங்கியிருக்கும். ஆனால் விமானம் மற்றும் விமானிகளின் திறனை உலகிற்கு காட்டும்விதமாக ஜாம்நகருக்கு பதிலாக ஹரியாணாவின் அம்பாலா தளத்தில் அது தரையிறங்கியது. 1984 ஆம் ஆண்டில் அம்பாலாவின் இந்திய ஜாகுவார் படைப்பிரிவு , “மாயமாகி இஸ்ரேலுக்குச் சென்றது” குறித்த வதந்திகளை கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் இஸ்ரேலின் பணிக்காக அந்தப்பிரிவு சென்றது என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியாது” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

புதிதாக வாங்கப்பட்ட ஜகுவார் விமானம் மூலம் பாகிஸ்தானின் கஹுட்டா அணு நிலையம் மீது தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக்கூற்றினை இந்தியா ஆய்வு செய்ததாக, ‘ Deception – Pakistan, United States and the Global Nuclear Conspiracy’ என்ற புத்தகத்தில், பத்திரிகையாளர்கள் அட்ரியன் லெவி மற்றும் கேத்தரின் ஸ்காட்-கிளார்க் , தெரிவித்துள்ளனர்.

1983 பிப்ரவரியில், இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் இஸ்ரேலுக்கு ரகசிய பயணம் மேற்கொண்டனர். பயணத்தின் போது, கஹுட்டா உலையின் பாதுகாப்பு வளையத்தை கடப்பதற்கு உதவக்கூடிய மின்னணு கருவிகள் குறித்து அவர்கள் விசாரித்தனர்.

பாகிஸ்தானின் எஃப் -16 போர் விமானங்கள் குறித்த தொழில்நுட்பத் தகவல்களை, இஸ்ரேல் இந்தியாவுக்கு வழங்கியது. மறுபுறம், மிக் 23 விமானம் குறித்து இந்தியா இஸ்ரேலுக்கு ரகசிய தகவல்களை அளித்தது. இந்த சோவியத் தயாரிப்பு விமானத்தை ஒரு அண்டை அரபு நாடு படையில் ஈடுபடுத்தியிருந்த காரணத்தால், இஸ்ரேலுக்கு இந்தத் தகவல் அதிமுக்கியமாகத் தேவைப்பட்டது.

“இஸ்ரேலின் புகழ்பெற்ற ஓய்வுபெற்ற ராணுவ புலனாய்வுத் தலைவரான ஆரோன் யாரிவ் என்பவரை 1983 இல் பெய்ரூட்டில் நான் சந்தித்தேன். காலை உணவின் போது அவர் இதைப்பற்றி என்னிடம் கூறினார்.”என்று மூத்த பாதுகாப்பு நிபுணர் பரத் கர்னாட் தனது வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

“இந்த திட்டத்தின் படி, ஆறு எஃப் – 16 போர் விமானங்களும், அதே எண்ணிக்கையிலான எஃப் -15 போர் மற்றும் ரோந்து விமானங்களும் இஸ்ரேலின் ஹைஃபாவிலிருந்து புறப்பட்டு, தென் அரேபிய கடல் வழியாக இந்திய வான்வெளியில் நுழைந்து ஜாம்நகரில் தரையிறங்கும். அதன் விமானிகள், பணியாளர்கள் அங்கு ஓய்வெடுத்த பிறகு தேவையான மாற்றங்களைச் செய்வார்கள்.”

பெஞ்சமின் நேதன்யாகு

பட மூலாதாரம், Getty Images

” திட்டத்திற்கு தேவையான வெடிபொருட்கள், கருவிகளுடன் , இஸ்ரேலிய விமானப்படையின் சரக்கு விமானமான சி -17 விமானம், ஜம்மு-காஷ்மீரில் உள்ள உதம்பூர் விமான தளத்திற்கு வந்து சேரும். எஃப் -16 விமானங்கள் ஜாம்நகரில் இருந்து புறப்பட்டு, வானிலேயே எரிபொருளை நிரப்பப்பிக்கொண்டு உதம்பூர் விமான தளத்தை வந்தடையும். “

“அங்கிருந்து விமானங்கள் தேவையான கருவிகளுடன் எல்லையைத் தாண்டி ராடாரைத் தவிர்ப்பதற்காக மலைகள் வழியாக நகரும். விமானங்கள் வெளியே வந்தவுடன், இரண்டு எஃப் -16 விமானங்கள் கஹுட்டா அணு நிலையத்தின் மீது குண்டு வீசும்.”

“இந்த நேரத்தில் எஃப் -15 விமானங்கள் தொடர்ந்து அங்கேயே வட்டமிடும். அங்கு வரக்கூடிய பாகிஸ்தான் விமானப்படை விமானத்தையும் அவை தடுக்கும். தாக்குதலுக்குப் பிறகு, எஃப் -16 விமானங்கள் மேற்கு நோக்கி பின்வாங்கி பாகிஸ்தான் வான்வெளியில் இருந்து வெளியேறும்.”

“மீண்டும் குறைந்த உயரத்தில் பறந்து அவை தெற்கு நோக்கி நகர்ந்து, மலையின் பின்பக்கமாகப் பறந்து தன் தளத்திற்குத் திரும்பும். மலைப்பகுதியில் இஸ்ரேலிய விமானங்களைத் தடுத்து நிறுத்த பாகிஸ்தான் விமானங்கள் துணியாது என இஸ்ரேலியர்கள் நம்பினர்.”

மேஜர் ஜெனரலுடனான தனது உரையாடலை விரிவாகக் கூறும் கர்னாட் இவ்வாறு விவரிக்கிறார். “இந்தத் தாக்குதலில் தனக்கு பங்கில்லை என்று இந்தியா கூறும் என்று இஸ்ரேலியர்கள் உணர்ந்தனர். எனவே, தனது விமானங்கள், தனது சொந்த ராணுவ சின்னத்துடன் பயணிக்கும் என்று இஸ்ரேல் ஒரு நிபந்தனையை விதித்தது. மேலும் இந்த தாக்குதலில் இந்தியா பங்கெடுப்பதையும் ஒப்புக் கொள்ள வேண்டும் என கூறியது இஸ்ரேல்.”

பாகிஸ்தானி விஞ்ஞானி அப்துல் காதிர்கான் லிபியா, வட கொரியா மற்றும் இரானுக்கு அணு ரகசியங்களை விற்றதாக ஒப்புக்கொண்டார். ஆனால் பின்னர் மறுத்தார்.

பட மூலாதாரம், Getty Images

முனைவர் ராஜேஷ் ராஜகோபால் புதுடெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆய்வுகள் பள்ளியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். “குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள விமானத் தளத்தில் இஸ்ரேலிய விமானங்கள் தரையிறங்குவது மற்றும் கஹுட்டா அணு நிலையத்தைத் தாக்குவது குறித்த பேச்சுக்கள் முன்பே எழுந்துள்ளன. பின்னர், அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் இந்தத் திட்டம் குறித்து கவலை கொண்டிருந்தன என்பதை அமெரிக்கா மற்றும் ஹங்கேரியில் பொதுப்பார்வைக்கு கொண்டு வரப்பட்ட ஆவணங்கள் தெரிவிக்கின்றன. ” என பிபிசியிடம் பேசிய அவர் தெரிவித்தார்.

“அவர்களிடம் ஏதேனும் உறுதியான தகவல்கள் இருந்தனவா அல்லது அவை வெறும் ஊகமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. எனவே, இதைப் பற்றி உறுதியக எதுவும் கூற முடியாது,” என்றும் அவர் கூறினார்.

கஹுட்டா அணு நிலையத்தின் மீது கூட்டாக தாக்குதலை நடத்த இந்தியாவை வற்புறுத்துவதற்கு இஸ்ரேலிய ராணுவ அதிகாரிகள் மூன்று முறை முயற்சித்ததாக இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் வெளியான ஜெருசலேம் போஸ்ட் செய்தித்தாள் 1987 பிப்ரவரியில் கூறியது.

இஸ்ரேலியர்கள், இஸ்ரேலில் இருந்து ஜாம்நகருக்கு நீண்ட தூரம் ரகசியமாகக் கடந்து செல்வதும், பின்னர் அவர்களின் இருப்பை ரகசியமாக வைத்திருப்பதும் கடினமாக இருந்திருக்கும் என்று மருத்துவர் ராஜகோபாலன் கூறினார்.

பாகிஸ்தான் அணுகுண்டு தயாரித்தால் அது இராக், லிபியா அல்லது இரானை அடையக்கூடும் என்று இஸ்ரேல் சந்தேகித்தது. பின்னர், பாகிஸ்தான் அணு விஞ்ஞானி அப்துல் காதிர் கான், இரான், லிபியா மற்றும் வட கொரியாவுக்கு யுரேனியம் செறிவூட்டல் தொழில்நுட்பத்தை விற்றதாக குற்றம் சாட்டப்பட்டார்.

கஹுட்டா அணுசக்தி நிலையத்தைத் தாக்கும் இந்தியாவின் திட்டங்கள் குறித்து ஏதேனும் தகவல் கிடைத்தால், அதை நிச்சயமாக பாகிஸ்தானுடன் பகிர்ந்து கொள்வேன் என்று பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதர் அப்போதைய ராணுவ ஆட்சியாளர் ஜெனரல் ஜியாவுக்கு உறுதியளித்ததாக பொதுப்பார்வைக்கு கொண்டு வரப்பட்ட ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பின் (சிஐஏ) துணை இயக்குநர் செப்டம்பர் 22 அன்று, பாகிஸ்தானின் மூத்த அதிகாரிகளிடம், இந்தியா வான்வழித் தாக்குதல்கள் நடத்தும் வலுவான வாய்ப்பு இருப்பதாகக் கூறினார்.

அதே நாளில், தாக்குதல் நடக்கும் வாய்ப்புள்ளது என ஏபிசி தொலைக்காட்சி, சிஐஏவை மேற்கோள் காட்டி, அமெரிக்காவின் செனட் பாதுகாப்பு துணைக்குழுவில் தெரிவித்தது.

இதன் விளைவாக, இந்தியா மீதான மேலை நாடுகளின் நெருக்குதல் அதிகரித்தது. எனவே, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி இந்த திட்டத்தை கைவிட்டார். சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு, 1984 அக்டோபரில், இந்திரா காந்தி தனது மெய்க்காப்பாளர்களால் படுகொலை செய்யப்பட்டார். அவரது மகன் ராஜீவ் காந்தி பிரதமரானார்.

இஸ்ரேல், நட்பு மற்றும் தடைகள்

1948 மே 15 ஆம் தேதி இஸ்ரேல் என்ற யூத நாடு, உலக வரைபடத்தில் தோன்றியது. அந்த வரலாற்று நிகழ்வுக்கு கிட்டத்தட்ட ஒன்பது மாதங்களுக்கு முன்பு இந்தியா சுதந்திரம் பெற்றது.

இஸ்ரேலை அங்கீகரிக்க இந்தியா கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் எடுத்துக்கொண்டது. 1950 செப்டம்பர் 15 அன்று, இந்தியா இஸ்ரேலை அங்கீகரித்தது. 1951 ஆம் ஆண்டில், இஸ்ரேல் இந்தியாவில் பம்பாயில் தனது தூதரகத்தைத் திறந்தது.

இந்தியாவும் 1952 இல் இஸ்ரேலில் ஒரு தூதரகத்தை திறக்க விரும்பியது, ஆனால் பின்னர் அந்த முடிவு ஒத்திவைக்கப்பட்டது. 1956 ஜூலை மாதம், எகிப்து அதிபர் நாசெர், சூயஸ் கால்வாயை தேசியமயமாக்கினார். இது முன்னர் பிரிட்டன் மற்றும் பிரான்சுக்கு சொந்தமாக இருந்தது.

இஸ்ரேல் எகிப்து மீது படையெடுத்தது. பிரிட்டனும் பிரான்சும் பின்னர் போரில் இணைந்தன. அந்தப்போரில் இஸ்ரேலின் பங்கு காரணமாக, இந்தியா இஸ்ரேலில் தனது தூதரகத்தை திறக்கும் யோசனையை கைவிட்டது.

ஆயினும்கூட, இரு நாடுகளுக்கும் இடையிலான ராஜீய உறவுகள் நன்கு பராமரிக்கப்பட்டன. 1968 ஆம் ஆண்டில், புலனாய்வுப் பணியகத்திலிருந்து ஒரு தனி அமைப்பாக ‘ரா’ உருவெடுத்தது, இஸ்ரேலுடனான உளவுத்துறை உறவுகள் வளரத் தொடங்கின.

” 1965 மற்றும் 1971 ஆம் ஆண்டு போர்களில் இஸ்ரேல் இந்தியாவுக்கு ரகசியமாக உதவியது. இந்திய பாதுகாப்பு, உளவுத்துறை அதிகாரிகள், துருக்கி அல்லது சைப்ரஸ் வழியாக இஸ்ரேலை அடைவார்கள்,” என பாதுகாப்பு நிபுணர் ராகுல் பேடி முன்னர் பிபிசியிடம் தெரிவித்திருந்தார்.

“அவர்களின் பாஸ்போர்ட்டுகளில் இஸ்ரேலிய முத்திரைகள் இருக்காது. ஆனால் அவர்களுக்கு ஒரு துண்டு காகிதம் வழங்கப்பட்டது. இது அப்பகுதியில் பயணம் செய்வதற்கான உரிமமாகும்.”

புதுடெல்லியில் உள்ள நேரு நூலகத்தில் உள்ள ஹக்ஸர் பேப்பரை (இந்திரா காந்தியின் அப்போதைய ஆலோசகர் பி.என்.ஹக்ஸர் பெயரிலானது) மேற்கோள் காட்டி,அமெரிக்க பத்திரிகையாளர் கேரி ஜே பாஸ் தனது ‘பிளட் டெலிகிராம்’ புத்தகத்தில் இவ்வாறு எழுதினார்: “இஸ்ரேலிய பிரதமர் கோல்டா மெய்ர், ஆயுத வியாபாரி ஸ்லோமோ ஜேப்லோட்க்விஸ் மூலம் எரிகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களை இந்தியாவுக்கு அனுப்பியுள்ளார்.”

“ஹக்ஸர் மேலும் ஆயுதங்களைக் கேட்டபோது தொடர்ந்து ஆயுதங்களை வழங்குவதாக கோல்டா அவருக்கு உறுதியளித்தார். இந்த உதவிக்கு ஈடாக இந்தியா, தன்னுடன் ராஜீய உறவுகளை ஏற்படுத்த வேண்டும் என்று இஸ்ரேல் மறைமுகமாக வலியுறுத்தியது.”

“இருப்பினும், அவ்வாறு செய்வது சோவியத் யூனியனை புண்படுத்தும் .எனவே,அதற்கு நாங்கள் இப்போது தயாராக இல்லை என்று இந்தியா விவேகத்துடன் கூறியது.”

1992ல் இந்தியா இஸ்ரேலில் தூதரகத்தைத் திறந்தது. 2000 ஆம் ஆண்டில், அப்போதைய இந்திய உள்துறை அமைச்சர் எல்.கே.அத்வானி இஸ்ரேலுக்குச் சென்றார். உயர்மட்ட இந்திய அமைச்சர் ஒருவர் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டது அதுவே முதல்முறை.

2004ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவியேற்றதிலிருந்து வெளியுறவுக் கொள்கையில் இஸ்ரேல் முன்னுரிமையாக இருக்கவில்லை.

2003ல் அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோதி இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டார். பிரதமராவதற்கு முன்பு, அவர் விவசாயம், பால் வளத்துறையில் குஜராத் – இஸ்ரேல் உறவை வலுப்படுத்தியிருந்தார்.

2014-ல் நரேந்திர மோதி இந்தியப் பிரதமராகவும், பெஞ்சமின் நெதன்யாகு , இஸ்ரேலின் பிரதமராகவும் ஆனார்கள். அப்போதிருந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் வலுப்பெற்றன. முன்னர் வைரங்கள், மருத்துவம், விவசாயம், பால்வளம் ஆகியவற்றுடன் மட்டுப்படுத்தப்பட்டிருந்த இருதரப்பு உறவு தற்போது விரிவடைந்துள்ளது.

புதிய தொடக்கம்

இந்திய, பாகிஸ்தானிய அணு நிலையங்கள் மீதான தாக்குதல்கள் குறித்த தகவல்கள் மேற்கத்திய ஊடகங்களில் அடிக்கடி வெளியிடப்படுவதால், ஒருவர் மற்றவரின் அணுநிலையங்கள் மீது தாக்குதல் தொடுக்கவேண்டாம் என முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியிடம் தான் அறிவுறுத்தியதாக, இந்திய அரசின் மூத்த அதிகாரி கே.சுப்ரமணியம் தனது ‘1964-98: A Personal Recollection ‘ என்ற புத்தகத்தில் கூறியுள்ளார்.

இந்தியாவும் பாகிஸ்தானும் 1985 ஆம் ஆண்டில் ஒருவர் மற்றவரின் அணுசக்தி நிலையங்களைத் தாக்குவதில்லை என்று வாய்மொழியாக ஒப்புக்கொண்டன. இந்த விவகாரம் 1988 ஆம் ஆண்டில் முறைப்படி ஒப்புக் கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தம் 1991-ல் கையெழுத்தானது.

1992 முதல் ஒவ்வொரு ஆண்டடின் முதல் நாளில் தங்கள் அணுசக்தி நிலையங்களின் பட்டியலை இந்தியாவும் பாகிஸ்தானும் பரஸ்பரம் பரிமாறிக்கொள்கின்றன.

அதே காலகட்டத்தில், ராஜீவ் காந்தி அப்போதைய இஸ்ரேலின் பிரதமரை சந்தித்தார். இரு நாடுகளுக்கும் இடையே பிரதமர் நிலையிலான முதல் சந்திப்பு இதுவாகும்.

இந்தியாவில் வி.ஐ.பி.க்களை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு காவலர்கள் (என்.எஸ்.ஜி) மற்றும் சிறப்பு பாதுகாப்பு குழு (எஸ்.பி.ஜி) ஆகியவை இஸ்ரேலிய கமாண்டோக்களை போன்ற பயிற்சிகளைப் பெற்றன. அந்த பயிற்சியில் இந்திய பாதுகாப்பு படையினருக்கு இஸ்ரேல் பெருமளவு உதவியது.

1998ல் இந்தியஅணுகுண்டு சோதனையைத் தொடர்ந்து, பாகிஸ்தானும் அணு குண்டு சோதனை நடத்தியது. ஆனால் இரு நாடுகளாலும் சோதனையை ரகசியமாக வைக்க முடியவில்லை. சோதனையின் செயற்கைக்கோள் படங்கள் அம்பலமாயின. சர்வதேச நெருக்குதல் இருந்த போதிலும் பாகிஸ்தான் தனது திட்டத்தை கைவிடவில்லை.

இந்தியாவும் இஸ்ரேலும் கூட்டாக தனது சோதனையைத் தடுக்க முயன்றதாகவும், இஸ்ரேலிய விமானங்கள் இரண்டு முறை பாகிஸ்தான் வான்வெளிக்குள் நுழைந்ததாகவும் பாகிஸ்தான் கூறியது, ஆனால் இஸ்ரேலும் இந்தியாவும் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்தன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »