Press "Enter" to skip to content

“இஸ்ரேல்-பாலத்தீன மோதலைத் தீர்க்க இந்தியா மத்தியஸ்தம் செய்ய வேண்டும்”

  • ஜுபைர் அகமது
  • பிபிசி செய்தியாளர்

பட மூலாதாரம், Getty Images

இஸ்ரேலுக்கும் பாலத்தீனர்களுக்கும் இடையிலான அமைதி நடவடிக்கைகளை தொடங்குவதில் இந்தியா முன்வந்து, முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்று இந்தியாவில் உள்ள பாலத்தீன அதிகார அமைப்பின் தூதர் அத்னான் எம். அபு. அல் ஹைசா தெரிவித்துள்ளார்.

அமைதி நடவடிக்கைகளில் இந்தியாவின் ஈடுபடுவது, பாலத்தீனர்களுக்கு மட்டுமல்லாமல் அது இந்தியாவிற்கும் நன்மை தரும் என்று பிபிசியுடனான ஒரு சிறப்பு உரையாடலில் அவர் தெரிவித்துள்ளார். “மேற்காசியாவில் இந்தியா அதிக கவனம் செலுத்துகிறது எனவே இந்த பிராந்தியத்தில் அமைதி நிலவினால் அது இந்தியாவிற்கும் நன்மை பயக்கும்,” என்று அவர் கூறினார்.

சில நாட்களுக்கு முன்பு ஹமாஸ் ஆயுதக் குழுவிற்கும் இஸ்ரேலிய அரசுக்கும் இடையில் சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பிறகு, பிபிசியிடம் பேசிய பாலத்தீன தூதர் மேற்காசியாவில் விரைவில் நீடித்த அமைதியை ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்று தெரிவித்தார்.

எகிப்தை ஒட்டியுள்ள காசா பகுதியை ஹமாஸ் ஆயுதக் குழு நிர்வாகம் செய்கிறது. அங்கிருந்து ஹமாஸ் குழுவினர் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் தொடுத்தனர். அதே நேரத்தில் ஜோர்டான் எல்லையை ஒட்டியுள்ள மேற்குக் கரை, பாலத்தீன அதிகார அமைப்பால் (பிஏ) ஆளப்படுகிறது. இந்த இரண்டு பாலத்தீன பிரதேசங்களுக்கு இடையில் இஸ்ரேல் உள்ளது.

பாலத்தீன அதிகார அமைப்பு மற்றும் இஸ்ரேலிய அரசுடன் இந்தியா நல்ல உறவைக் கொண்டுள்ளது. பாலத்தீனம் மற்றும் இஸ்ரேலிய மக்களிடையே இந்தியா ஒரு பிரபலமான நாடாக உள்ளது. இந்த வழியில், இரு பிரிவுகளுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்யக்கூடிய ஒரு சில நாடுகளில் இந்தியாவும் உள்ளது.

இந்தியா அவ்வாறு செய்ய ஆர்வமாக உள்ளது என்பதைக் குறிக்கும் விதமாக புதுடெல்லி இதுவரை எதையும் சொல்லவில்லை. இதுவரையில் வெளியான இந்தியாவின் அறிக்கைகள் அனைத்துமே கட்டுப்பாட்டையும், நடுநிலமையையும் கடைப்பிடிக்கின்றன.

“இந்தியா தயாரா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நான் அவர்களை தயாராகுமாறு கேட்டுக் கொண்டேன்” என்று அத்னான் எம். அபு அல் ஹைசா கூறுகிறார்.

இந்தியா மற்ற நாடுகளுடன் இணைந்து முயற்சிக்க வேண்டும் என்கிறார் அவர். “சில பெரிய நாடுகளுடன் இணைந்து இந்தியா ஒரு சர்வதேச அமைதி மாநாட்டிற்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், இந்த பிரச்னை விரைவில் முடிக்கப்பட வேண்டும் .இல்லையென்றால் எதிர்காலத்தில் மற்றொரு மோதலை சந்திக்க நேரிடும்,” என்று அவர் கூறுகிறார்.

வெள்ளிக்கிழமை முடிவுக்கு வந்த மோதல்களில், 12 இஸ்ரேலியர்கள் மற்றும் 250 க்கும் மேற்பட்ட பாலத்தீனர்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் குழந்தைகளும் பெண்களும் அடங்குவர். 2014 க்குப்பிறகு இரு தரப்பினருக்கும் இடையிலான மிகப்பெரிய மோதலாக இது இருந்தது.

இந்த இரு தரப்பிற்கும் இடையில் அமெரிக்கா பல தசாப்தங்களாக மத்தியஸ்தம் செய்து வருகிறது. ஆனால் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆட்சியின் கீழ் அமெரிக்கா, இஸ்ரேலுக்கான ஆதரவை பகிரங்கமாக வெளிப்படுத்தியது. கிழக்கு ஜெருசலேமை அதன் தலைநகராக ஆக்குவதற்கு அமெரிக்கா அளித்த ஆதரவு பாலத்தீனர்களை கடுமையாக கோபப்படுத்தியது.

மத்தியஸ்தம் செய்வதற்கான தார்மீக உரிமையை அமெரிக்கா இழந்துவிட்டது என்று பாலத்தீன அதிகார அமைப்பின் தலைவர் மஹ்மூத் அப்பாஸ் கூறினார். சில அரபு நாடுகளுடன் இஸ்ரேல் ராஜீய உறவுகளை உருவாக்கிக்கொள்ள அதிபர் டிரம்ப் உதவியதால் அப்பாஸ் கோபமடைந்தார்.

ஹைய்சா

அமெரிக்காவிற்கு பதிலாக இந்தியா அல்லது வேறு எந்த நாட்டின் மத்தியஸ்தத்தையாவது இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளுமா என்று பிபிசி, பாலஸ்தீன தூதர் அத்னான் எம். அபு அல் ஹைசாவிடம், கேட்டபோது, “ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகியவற்றுடன் இணைந்து இந்தியா உதவ முடியும்.”என்று கூறினார்.

ஆனால் பாலத்தீனர்கள் அமெரிக்கா மீது முற்றிலுமாக அதிருப்தி அடைந்துள்ளனர் என்று சொல்லமுடியாது. அதிபர் ஜோ பைடன் ஆட்சிக்கு வந்த பிறகு, இருவருக்கும் இடையே ஒரு உடன்பாடு எட்டப்படும் என்று பாலத்தீனர்கள் நம்புகின்றனர்.

இருதரப்பிடமும் இந்தியாவின் நெருக்கம்

இஸ்ரேலுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான முழு ராஜரீக உறவுகள் 1992 இல் தொடங்கியது, அதன் பின்னர் இஸ்ரேல் டெல்லியில் தனது தூதரகத்தை நிறுவியது. அப்போதிலிருந்து இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான நெருக்கம் கணிசமாக அதிகரித்துள்ளது.

இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோதிக்கும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கும் இடையில் உருவான ஆழமான நட்பு, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தியுள்ளது.

இரு தலைவர்களும் பரஸ்பரம் அதிகாரபூர்வ பயணங்களை மேற்கொண்டுள்ளனர். ராணுவ மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பில் இஸ்ரேல் இந்தியாவின் முக்கிய கூட்டாளி நாடு.

தாக்குதல்

பட மூலாதாரம், Getty Images

மறுபுறம், இந்தியாவுக்கும் பாலத்தீனர்களுக்கும் இடையிலான உறவு வரலாற்று ரீதியானது. மேற்குக்கரை பகுதிக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோதி, பாலத்தீன அதிகார அமைப்பின் தலைவர் மஹ்மூத் அப்பாஸையும் சந்தித்தார். பாலத்தீன பிரதேசத்திற்கும் இஸ்ரேலுக்கும் பயணம் மேற்கொண்ட இந்தியாவின் முதல் பிரதமர் இவர்.

பல துறைகளில் பாலத்தீனர்களுக்கு இந்தியா உதவி வருகிறது. “இரண்டு மருத்துவமனைகளை உருவாக்க இந்தியா எங்களுக்கு உதவுகிறது. எங்கள் வெளியுறவு அமைச்சகத்திற்கு தூதாண்மை கழகத்தை கட்டவும் இந்தியா உதவியுள்ளது. பெண்கள் அதிகாரமளிப்பு மையம், பல பள்ளிகள், ஒரு பல்கலைக்கழகம் மற்றும் ஒரு தொழில்நுட்ப பூங்கா ஆகியவற்றை உருவாக்குவதிலும் இந்தியா எங்களுக்கு உதவியது. “என்று பாலத்தீன தூதர் குறிப்பிட்டார்.

இந்த திட்டங்களின் மொத்தச்செலவு சுமார் 60 மில்லியன் டாலர்கள்.

“இந்தியா முன் வந்து எப்போதுமே எங்களுக்கு உதவியுள்ளது. அவர்களிடமிருந்து நாங்கள் எதுவும் கேட்கவில்லை. இப்போது நாங்கள் இந்தியாவிடம் அரசியல் உதவி கேட்கிறோம்.” என்கிறார் அவர்.

இருநாடுகளின் தீர்வு

சமீபத்திய ஆண்டுகளில் இந்தியா இரு தரப்பினருக்கும் இடையே பெரும்பாலும் நடுநிலையான பாதையில் செல்கிறது. ‘இரு நாடுகளின் தீர்வு’ என்ற கொள்கையின் மூலம் இந்த பழைய பிரச்னையை தீர்க்க இந்தியா விரும்புகிறது.

இரு நாடுகள் தீர்வில், இஸ்ரேலுடன் கூடவே ஒரு சுதந்திர பாலத்தீன அரசை உருவாக்குவதும் அடங்கும். இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை தொடர்பான சர்ச்சை இன்னும் தீர்க்கப்படவில்லை. பாலத்தீன மற்றும் அரபு தலைமை “1967 எல்லைகளை” வலியுறுத்தியுள்ள நிலையில், அதை இஸ்ரேல் ஏற்கவில்லை.

நேதன்யாகு

பட மூலாதாரம், Reuters

இரு தரப்பினருக்கும் இடையிலான 11 நாள் மோதலின்போது ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் முதல் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் டி.எஸ்.திருமூர்த்தி, பாலத்தீனர்களுக்கு இந்தியா அளித்த வலுவான ஆதரவையும், ‘இரு நாடுகளின் தீர்வுக்கான’ இந்தியாவின் அர்ப்பணிப்பையும் மீண்டும் வலியுறுத்தினார்.

அதே நேரத்தில், ‘கட்டுப்பாட்டை’ கடைப்பிடிக்குமாறு இரு தரப்பினரையும் அவர் வலியுறுத்தினார். மேலும் ” பதற்றம் உடனடியாக குறைக்கப்படவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

அபு அல் ஹைசா 2014 முதல் இந்தியாவில் பாலத்தீன தூதராக இருந்து வருகிறார். மேலும் இந்தியாவில் பல மாநிலங்களுக்கு சென்றுள்ளார். மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியா மீது அதிக நம்பிக்கை வைத்திருப்பதாக அவர் கூறுகிறார்.

ஹமாஸ் ‘பயங்கரவாத அமைப்பு’

பாலத்தீன அதிகார அமைப்பின் ஆட்சி மேற்குக் கரையில் மட்டுமே உள்ளது. 2007 ல் காசா பகுதியில் நடந்த தேர்தலில் ஹமாஸ் வெற்றி பெற்றது. இதுவரை அதிகாரம் ஹமாஸின் அரசியல் பிரிவின் கைகளில் உள்ளது.

அதன் ராணுவப்பிரிவை, இஸ்ரேல் பயங்கரவாதி என்று அழைக்கிறது. இவர்கள்தான் இஸ்ரேலுக்குள் ஏவுகணைகளை ஏவுகிறார்கள் என்று இஸ்ரேல் கூறுகிறது. காசாவிலிருந்து வரும் ஏவுகணைகளுக்கு பதிலளிக்கும் விதமாக காசா மீது வான்வழித் தாக்குதலை தான் நடத்துவதாக இஸ்ரேல் அரசு கூறுகிறது.

பாலத்தீன நிர்வாகம் ஏன் ஹமாஸின் ஏவுகணை தாக்குதலை நிறுத்த முடியாது? இது குறித்து, ஹைசா தான் எப்போதும் ஹமாஸுடன் பேசுவதாகக் கூறுகிறார். ஆனால் இந்த முறை இஸ்ரேலிய தாக்குதல் ஒரு பதிலடி நடவடிக்கை என்று கூறுவது சரியல்ல. “ஹமாஸின் ஏவுகணை தாக்குதல், இஸ்ரேலிய வன்முறைக்கு எதிரான தாக்குதல்தான்” என்று அவர் கூறுகிறார்.

ஹமாஸ் தரப்பை சமாதானப்படுத்த அவர் முயற்சிக்கிறார். “மஸ்ஜித் அல்-அக்ஸாவில் தொழுகை நடத்துபவர்கள் மீது வன்முறை தாக்குதல் நடத்த வேண்டாம் என்று ஹமாஸ் இஸ்ரேல் அரசிடம் பலமுறை வேண்டுகோள் விடுத்துள்ளது. ஆனால் இஸ்ரேலிய பாதுகாப்புப் பணியாளர்கள், முஸ்லிம்களின் மூன்றாவது மிகப்புனித இடமான இந்த மசூதிக்குள் நுழைந்து, அதை அவமரியாதை செய்து அதன் புனிதத்தன்மையை இழக்கச்செய்துவிட்டனர்,” என்று அவர் குறிப்பிடுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »