Press "Enter" to skip to content

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் விலகுவதால் இந்தியாவுக்கு என்ன பிரச்னை?

  • அமிர்தா ஷர்மா
  • பிபிசி மானிட்டரிங்

பட மூலாதாரம், ODED BALILTY / AFP VIA GETTY IMAGES

இரண்டு தசாப்த போருக்குப்பின்னர் அமெரிக்க துருப்புக்கள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறத் தயாராகும் நிலையில், இந்தியா முழு விழிப்புடன் இந்த நடவடிக்கையை கண்காணித்து வருகிறது.

கடந்த ஆண்டு அமெரிக்காவுக்கும் தாலிபனுக்கும் இடையில் தோஹாவில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு பின்னர் அமெரிக்க துருப்புக்கள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறும் முடிவு மேற்கொள்ளப்பட்டது.

அதன் அதிகாரபூர்வ அறிவிப்பு இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியானது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செப்டம்பர் 11 ஆம் தேதிக்குள் அமெரிக்க துருப்புக்கள் விலக்கிக்கொள்ளப்படும் என்று கூறினார்.

வரும் செப்டம்பர் 11ஆம் தேதி, அமெரிக்கா மீதான பயங்கரவாத தாக்குதலின் 20ஆவது ஆண்டு நாளாகும். அந்த தாக்குதலுக்குப் பிறகுதான் அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மண்ணில் தாலிபன்களுக்கு எதிரான தாக்குதலைத் தீவிரப்படுத்தியது.

இந்தியாவின் அமைதியின்மை: தாலிபனின் எழுச்சி மற்றும் ஸ்திரமின்மை அச்சுறுத்தல்

மோதி

பட மூலாதாரம், Getty Images

ஆப்கானிஸ்தான் அமைதி நடவடிக்கை குறித்து தான் கண்காணித்து வருவதாக இந்தியா கூறியுள்ளது.

அமெரிக்கா இல்லாத நிலையில் இந்தப் பிராந்தியத்தில் உருவாகவிருக்கும் நிலைமை குறித்தே இந்தியா கவலை கொண்டிருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவின் கவலைகள், ஆப்கானிஸ்தானில் ஸ்திரமின்மை, தாலிபன்களின் எழுச்சி, இவை அனைத்திலும் பாகிஸ்தான் மற்றும் சீனாவின் பங்கு ஆகியவற்றுடன் தொடர்புடையவை என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்தியா எப்போதுமே ஆப்கானிஸ்தானில் ஜனநாயக முறைமைக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது.

இது மட்டுமல்லாமல், தோஹா, ஜெனீவா மற்றும் துஷான்பே ஆகிய இடங்களில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அமைதி நடவடிக்கை தொடர்பான பேச்சுவார்த்தைகளிலும் இந்தியா கலந்துகொண்டுள்ளது.

இப்போது அமெரிக்க வீரர்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் நிலையில், அங்கு ஸ்திரமின்மை ஏற்படக்கூடும் என்று இந்தியா நினைக்கிறது.

காபூலில் பாகிஸ்தானின் தலையீடு அதிகரித்து வருவதால் அங்கு உறுதியற்ற தன்மை அதிகரிக்கும் என்று ஆய்வாளர் அவினாஷ் பலிவால் கருதுகிறார்.

இந்தியாவின் ஒரு முக்கியக் கவலை, தாலிபன்களின் எழுச்சி தொடர்பானது. அத்தகைய சூழ்நிலையில், ஆப்கானிஸ்தான் மீண்டும் தீவிரவாதிகளின் தளமாக மாறக்கூடும்.

அமெரிக்க துருப்புகள்

பட மூலாதாரம், AFP

“ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க துருப்புக்களை விலக்கிக்கொள்வதால், அந்தப் பிரதேசத்தில் உள்ள நாடுகளில் குறிப்பாக இந்தியா, அந்த நாட்டில் தாலிபன்கள் வலுப் பெறுவது குறித்து கவலைகொள்ளும்,” என்று டிரம்ப் நிர்வாகத்தில் தேசிய பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினராக இருந்த லிசா குர்டிஸ் குறிப்பிடுகிறார்.

இந்த கவலைக்கு நியாயமான காரணங்கள் உள்ளன. 1990 களில், இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷே முகமது போன்ற தீவிரவாத அமைப்புகளிலிருந்து ஆட்களை தன்பக்கம் சேர்த்துக் கொண்டது தாலிபன்.

1999இல் ஒரு இந்திய விமானம் கடத்தப்பட்டது மற்றும் 2001 ல் இந்திய நாடாளுமன்றம் மீதான தாக்குதல் ஆகியவை இதில் அடங்கும்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க துருப்புக்கள் விலக்கிக் கொள்ளப்படுவது குறித்து இந்தியாவின் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், இதே போன்ற கவலைகளை அண்மையில் வெளியிட்டார்.

அமெரிக்க துருப்புக்கள் திரும்பப் பெறப்படும் நிலையில், தீவிரவாத அமைப்புகள் அதிக அளவில் ஆப்கானிஸ்தானை நோக்கி வருகின்றன என்று கூறும் உளவுத்துறை தகவல்களாலும் இந்தியாவின் கவலைகள் அதிகரித்துள்ளன.

ஆப்கானிஸ்தானில் வன்முறை அதிகரிக்கும் போது தாலிபன் வலுப்பெறும் என்பதை மறுக்க முடியாது.

ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப் போரின் நிலைமை ஏற்படக்கூடும் என்று ஆய்வாளர் எலிசபெத் ரோச்சே கருதுகிறார்.

2019 ஆம் ஆண்டில், ஜெனரல் பிபின் ராவத் ராணுவத்தின் தலைவராக இருந்தார். அந்த நேரத்தில் அவர், ஆப்கானிஸ்தானில் தாலிபன்களுடன் பேச்சுவார்த்தைக்கு ஆதரவளித்தார். தாலிபன்களுடன் எந்தவிதமான உறவையும் கொண்டிருக்கக்கூடாது என்ற கொள்கையை இந்தியா கடைப்பிடித்து வந்த காலம் அது.

இந்தியா தாலிபனுடனான நேரடி பேச்சுவார்த்தைகளைத் தவிர்த்து வருகிறது, ஆனால் ஆப்கானிஸ்தான் தொடர்பான மக்கள் விரும்பத்தக்கதுகோ அமைதி மாநாட்டிற்கு, இந்தியா ஒரு அதிகாரப்பூர்வமற்ற குழுவை அனுப்பியது.

கடந்த ஆண்டு தோஹாவில் நடைபெற்ற பேச்சுக்களில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.கே. ஜெய்சங்கர் கலந்துகொண்டார். இந்தியா தனது முந்தைய நிலைப்பாட்டை ஓரளவு தளர்த்திக் கொண்டிருப்பதை இது குறிக்கிறது.

பாகிஸ்தான் மற்றும் சீனா பற்றிய கவலை

பாகிஸ்தான் & ஆப்கானிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்காவின் துருப்புக்கள் வெளியேறும் காரணத்தால் ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானின் அரசியல் தலையீடு அதிகரிக்கும் என்பது இந்தியாவின் மிகப்பெரிய கவலைகளில் ஒன்றாகும்.

அமெரிக்காவுக்கும் தாலிபனுக்கும் இடையிலான தோஹா பேச்சுவார்த்தைகளில் பாகிஸ்தான் முக்கிய பங்கு வகித்தது. பாகிஸ்தானுக்கு தாலிபனுடன் உறவு உள்ளது. ஆனாலும் தீவிரவாதிகளுக்கு ஆதரவளிப்பதான குற்றச்சாட்டை அது தொடர்ந்து மறுத்து வருகிறது.

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானின் செல்வாக்கை கண்டுகொள்ளாமல் இருக்கமுடியாது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆப்கானிஸ்தானின் அரசியலில் பாகிஸ்தானுக்கு ஒரு முக்கிய பங்கு இருக்கும். பூகோள ரீதியிலான அருகாமை, மத மற்றும் இன ரீதியான நெருக்கத்தோடு கூடவே இந்த சக்திகளை இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்த முடியும் என்பதும் அவற்றுக்குத் தெரியும் என்கிறார் தேபிதத்தா அரவிந்தோ மஹாபாத்ரா.

பாகிஸ்தானின் பொருளாதாரம் நிலைகுலைந்த நிலையில் உள்ளது. சர்வதேச செலாவணி நிதியமும், நிதி நடவடிக்கை பணிக்குழுவும், பாகிஸ்தான் குறித்து மறுஆய்வுக் கூட்டத்தை ஜூன் மாதம் நடத்தவுள்ளது.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் விஷமத்தனமான செயல்களில் ஈடுபடும் ஆபத்தை அந்த நாடு எதிர்கொள்ளமுடியாது.

“இது போன்ற எந்த ஒரு சூழ்நிலையும் உருவாகாதபடி பாகிஸ்தானின் தலைமை புத்திசாலித்தனமாக செயல்படும் என நாம் நம்புவோம்,” என்று ஆய்வாளர் கே.என்.பண்டிதா குறிப்பிடுகிறார்.

ஆனால் சீனாவின் பங்கையும் இந்தியா புறக்கணிக்க முடியாது. “சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் கனவுத் திட்டமான ‘தி பெல்ட் ஆண்ட் ரோட்’, ஆப்கானிஸ்தான் வரை செல்லக்கூடும்,” என்கிறார் சினேஹேஷ் அலெக்ஸ் ஃபிலிப்.

தங்கள் சொந்த நலனுக்காக ஆப்கானிஸ்தானின் வளங்களைப்பயன்படுத்த விரும்பும் நாடுகளிடமிருந்து , அதற்கு ஆபத்து உள்ளதாக, ஜெனரல் ராவத் முன்பு சுட்டிக்காட்டியிருந்தார். ஏனென்றால் ஆப்கானிஸ்தானில் சுமார் ஒரு டிரில்லியன் டாலர் மதிப்பிலான இயற்கை வளங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பிராந்தியத்தில் சீனா பாகிஸ்தானை ஆதரிக்கக்கூடும் என்பதும் இந்தியாவின் கவலைகளில் ஒன்று.

பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடையிலான பரஸ்பர கூட்டணி காரணமாக இந்தியாவிற்கு நிலைமை பதற்றமாகலாம் என்று ஃபிலிப் கூறுகிறார்.

நடைமுறைக் கொள்கையின் அவசியம்

அமெரிக்கா & ஆப்கானிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

ஆப்கானிஸ்தான், இந்தியாவின் ஒரு வலுவான கூட்டாளியாக உள்ளது. ஆப்கானிஸ்தானில் மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்தை கட்டுவது உள்ளிட்ட பல மேம்பாட்டு திட்டங்களில் இந்தியா இரண்டு பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது.

ஆப்கானிய மக்களிடையே இந்தியாவின் பிம்பமும் சிறப்பாக உள்ளது. ஆப்கானிஸ்தானின் வளர்ச்சிக்கு இந்தியா பங்களிப்பை அளித்துள்ளது என மஹாபாத்ரா கூறுகிறார்.

இத்தகைய சூழ்நிலையில் இந்தியா தனது கேந்திர ரீதியிலான தொலைநோக்கை முன்வைத்து காபூலில் தனது நலன்களை பாதுகாக்க வேண்டும்.

“இதற்காக இந்தியா, தாலிபன் உள்ளிட்ட அனைத்து முக்கிய கூட்டாளிகளுடனான தொடர்பை அதிகரிக்க வேண்டும். நடைமுறைக் கொள்கையை பின்பற்றும்போது இந்தியா , தாலிபன் தலைவர்களுடன் பேச வேண்டியது அவசியம்,” என்று குறிப்பிடுகிறார் மஹாபாத்ரா.

இந்தியா தாலிபனுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் ஆப்கான் தலைமைக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்று ஆப்கானிஸ்தான் அமைதி பேச்சுவார்த்தையாளர் அப்துல்லா, கடந்த ஆண்டு தனது இந்திய பயணத்தின் போது கூறினார்.

“ஆப்கானிஸ்தான் நிலைமையை தனக்கு சாதகமாக்கிக்கொள்ள, தனது வளர்ந்து வரும் பொருளாதார மற்றும் ராணுவ ஆதிக்கத்துடன் கூடவே மென்மையான அணுகுமுறையை இந்தியா கடைப்பிடிக்க வேண்டும். இது புத்திசாலித்தனமான ராஜதந்திரத்தின் மூலம் மட்டுமே சாத்தியமாகும்,” என்று மஹாபாத்ரா சுட்டிக்காட்டுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »