Press "Enter" to skip to content

இந்தியா – சீனா எல்லை மோதல்: ஓராண்டுக்குப் பிறகு நிலைமை எப்படி இருக்கிறது?

  • எத்திராஜன் அன்பரசன்
  • பிபிசி செய்திகள்

பட மூலாதாரம், ANBARASAN/BBC

இந்தியா – சீனா மோதலுக்குக் காரணமான லடாக் எல்லைப் பகுதியில் உள்ள பிளாக் முதன்மையான மலையில் நவங் டோர்ஜய் பல மாதங்கள் கழித்தார், இந்திய இராணுவத்திற்குத் தேவையான பொருட்களின் போக்குவரத்துக்கு இவர் உதவி செய்துகொண்டிருந்தார்.

62 வயதான இந்த முதியவர், மெராக் என்கிற கிராமத்தில் ஒரு சிறிய பலசரக்குக் கடையை நடத்தி வருகிறார், அவர் மலை முகடு வழியாக, வெடிமருந்துகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச் சென்றபோது தனது உயிருக்கு ஆபத்து நேருமோ என அச்சமடைந்தார். கடந்த ஆண்டு இரு படைகளுக்கு மத்தியில் பதற்றம் அதிகரித்த போது, அதிக அளவில் அருகிலுள்ள கிராமங்களிலிருந்து பணியமர்த்தப்பட்ட நூற்றுக்கணக்கானவர்களில் டோர்ஜயும் ஒருவர்.

“நாங்கள் சீனர்களுக்கு மிக நெருக்கமாகச் சென்று வந்தோம். அவர்கள் எங்களைத் தாக்குவார்கள் என அஞ்சினோம்,” என்று அவர் கூறினார்.

ஓராண்டுக்கு முன்பு, இந்தியாவும் சீனாவும் லடாக் எல்லையில் ஊடுருவியதாக ஒன்றின் மீது மற்றொன்று குற்றம் சாட்டிக் கொண்டன. 1962ஆம் ஆண்டு நடந்த போருக்குப் பின்னர், சுமார் 3,440 கி.மீ நீளமுள்ள எல்லை வரையறுக்கப்படாமலே இருக்கிறது. இரு நாடுகளும் தங்கள் எல்லைகள் விவகாரத்தில் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருக்கின்றன.

இந்தியா தன் எல்லைகளாகக் கருதும் இடத்தைத் தாண்டி சீனப் படைகள் கூடாரங்களை அமைத்தது, பதுங்கு குழிகளைத் தோண்டியது, கனரக ஆயுதங்களைப் பல கிலோமீட்டர் தூரத்திற்கு உள்ளே கொண்டு வந்தது. இதையடுத்து இந்த மோதல் தொடங்கியதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

இந்திய சீன துருப்புகள்

பட மூலாதாரம், ANBARASAN/BBC

திடீரென சீனாவின் இந்த நடவடிக்கையால் அதிர்ச்சியடைந்த இந்திய இராணுவம், பல்லாயிரக்கணக்கான துருப்புக்களையும் கூடுதல் ஆயுதங்களையும் லடாக்கிற்கு அனுப்பியது. ஜூன் மாதத்தில், கல்வான் பள்ளத்தாக்கில் கைகலப்பு ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் மரணமடைந்தனர். நான்கு வீரர்கள் உயிரிழந்ததாக சீனத் தரப்பு கூறியது.

அதன் பிறகு இந்த ஏரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. ஜனவரி மாதத்திலிருந்து தான் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும் சுமார் 350 பேர் மட்டுமே வசிக்கும் மெராக் போன்ற கிராமங்களுக்குச் சென்ற ஒரு சில ஊடகங்களில் பிபிசியும் ஒன்று.

இங்கு வசிக்கும் பலர் நாடோடிகளாகத் தான் வாழ்கிறார்கள். இருப்பினும், இங்குள்ளவர்களின் வாழ்க்கை எந்த மாறுதலுமின்றி முன்பு போலவே இருக்கிறது. பெண்கள் தங்கள் பாரம்பரிய உடையில் காட்டெருமைகளையும் பஷ்மினா ஆடுகளையும் பராமரித்து வருகிறார்கள். மேலும் இந்தக் கிராமம் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றுநோயால் தீண்டப்படாதது போலத் தெரிகிறது.

பாங்காங் சோ ஏரி, லடாக் வரைபடம்

இங்குள்ள இயற்கை எழிலைத் தாண்டி, அபாயத்தை நினைவுபடுத்தும் வகையில், இராணுவ வாகனங்கள் பொருட்களை எடுத்துச் செல்வதும், வீரர்கள் புதிதாக அமைக்கப்பட்ட ஒற்றை வழிப்பாதை சாலையை பலப்படுத்தப்பட்ட முன் களம் நோக்கி அணிவகுப்பதும் அடிக்கடி காணப்படும் காட்சிகளாக உள்ளன. பல தசாப்தங்களாக, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் புகைந்து கொண்டிருக்கும் இந்தப் பதற்றம், இந்தப் பிராந்தியத்தின் இயற்கை எழிலை மறக்கடித்துள்ளது.

“குளிர்காலத்தில், எங்கள் மக்களும் அருகிலுள்ள சுஷுல் பகுதியினரும் எருதுகளையும் ஆடுகளையும் அந்தப் பக்கமுள்ள மலைகளில் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வது வழக்கம்.” என்கிறார் டோர்ஜய். “ஆனால் பல ஆண்டுகளாகச் சீனர்கள் படிப்படியாக இந்திய நிலப்பரப்பைக் கைப்பற்றியுள்ளனர், மேய்ச்சல் பகுதிகள் குறைந்துவிட்டன.”

கடந்த ஆண்டு இப்பகுதியில் ஏற்பட்ட எல்லைக் குழப்பங்களின் விளைவுகள் இந்தப் பகுதியிலிருந்து நீண்ட தூரம் வரை உணரப்படுகின்றன.

“கடந்த ஆண்டில் நடந்த எல்லை மோதல் இந்தியா – சீனா இருதரப்பு உறவுகளில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.” என இந்திய ராணுவ நிபுணரும், இந்திய ராணுவத்தில் கர்னலாக பணியாற்றியவருமான அஜய் சுக்லா கூறுகிறார். “சீனர்கள் 1959 ஆம் ஆண்டில் முன்வைத்த முந்தைய உரிமை கோரலை இப்போது கையில் எடுத்துள்ளனர். இந்தியா அதை ஏற்கும்பட்சத்தில், குறிப்பிடத்தக்க நிலப்பகுதியை இழக்க வேண்டியிருக்கும்” என அவர் கூறினார்.

கிழக்கு லடாக்கிற்குள் சீனா முன்னேறி இருக்கிறது என்பது, தனக்குச் சொந்தமான நிலப்பகுதி என்று இந்தியா கூறி வந்த நூற்றுக்கணக்கான சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை, சீனா கைப்பற்றியதாக பொருள் தருகிறது என சுக்லா உள்ளிட்ட வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

கல்வான் ஆற்றில் கட்டுமானம்

பல சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, பிப்ரவரியில் இரு நாட்டு ராணுவங்களும் பாங்காங் சோ ஏரியைச் சுற்றியுள்ள மலைகளிலிருந்து படைகளை விலக்கிக்கொள்ள ஒப்புக்கொண்டன. ஆனால் புதிதாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மற்ற பகுதிகளான ஹாட் ஸ்பிரிங்ஸ், கோக்ரா போஸ்ட் மற்றும் லடாக்கில் உள்ள டெப்சாங் சமவெளிகளிலிருந்து பின்வாங்க சீனா மறுக்கிறது.

லடாக்கிற்கு கிழக்கே அக்‌சாய் சின் பீடபூமியை சீனா ஏற்கனவே தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. இந்தியாவால் உரிமை கோரப்பட்ட இந்தப் பகுதி சீனாவின் ஷின்ஜியாங் மாகாணத்தை மேற்கு திபெத்துடன் இணைக்கும் என்பதால் இது சீனாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. லடாக் விவகாரத்தில் இந்தியாவின் நடவடிக்கைகள் தான் தற்போதைய நிலைப்பாட்டிற்கு வழிவகுத்தன என்று பெய்ஜிங் தொடர்ந்து கூறிவருகிறது.

“சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்கள் சாலைகள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளை உருவாக்கி வருகின்றனர் என்பது சீனாவின் பார்வை” என சீன இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற மூத்த கர்னல் ஷௌ போ பிபிசியிடம் தெரிவித்தார்.

“சீனத் தரப்பில் இருந்து சீன – இந்திய எல்லையாக பாரம்பரியமான எல்லைக் கோட்டை நாங்கள் வலியுறுத்துகிறோம். ஆனால், இந்தியாவோ, 1962 போருக்கு முன்னர் இருந்த நடைமுறை கட்டுப்பாட்டுக் கோட்டை வலியுறுத்துகிறது,” என்று கூறும் அவர், நடைமுறை கட்டுப்பாட்டுக் கோடு குறித்து இரு தரப்புப் பார்வைக்கும் அடிப்படை வேறுபாடு உள்ளது என்கிறார்.

மலைப் பகுதிகளில் தொடர்ந்து நிலவும் பதற்றமான சூழலால் பாங்காங் சோ ஏரி பகுதியில் உள்ள கிராம மக்களுக்குப் பிரச்சனைகளை ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, இந்தியா, தனது துருப்புக்களை சில பகுதிகளிலிருந்து திரும்பப் பெற ஒப்புக்கொண்ட பின்னர் இது அதிகரித்துள்ளது.

மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள்

பட மூலாதாரம், ANBARASAN/BBC

“இங்குள்ள நாடோடிகளை தங்கள் கால்நடைகளை மலைகளில் உள்ள பாரம்பரிய குளிர்கால மேய்ச்சல் நிலத்திற்கு கொண்டு செல்ல இந்திய இராணுவம் அனுமதிப்பதில்லை” என எல்லை கிராமமான சுஷுலின் சுயேச்சை கவுன்சிலர் கொன்சோக் ஸ்டான்சின் கூறினார்.

பிளாக் முதன்மையான மலை மற்றும் குருங் மலையைச் சுற்றி கால்நடைகள், விலங்குகள் குளிர்கால மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லப்பட வேண்டும் என்கிறார் ஸ்டான்சின்

“நாடோடிகள் சென்று மலைகளில் கால்நடைகளுக்கு கூடாரங்களையும் கூண்டுகளையும் அமைத்தால், அது ஒரு அடையாளத்தை உருவாக்கும். எல்லைப் பேச்சுவார்த்தைகளின் போது இந்த அடையாளங்கள் முக்கியம். நாடோடிகள் தங்கள் பாரம்பரிய மேய்ச்சல் நிலத்துக்கு செல்வதை நிறுத்தினால், அது இந்தியாவுக்கே நீண்ட கால அடிப்படையில் தீமையாக அமைய வாய்ப்புள்ளது,” என அவர் கூறினார்.

கொன்சோக் ஸ்டான்சின்

பட மூலாதாரம், ANBARASAN/BBC

ஸ்டான்சினுக்கு ஏப்ரல் மாதத்தில் பதிலளித்த இந்திய இராணுவம், நடைமுறை கட்டுப்பாட்டுக் கோடு வரையறுக்கப்படாத காரணத்தால், பொதுமக்கள் அதை தவறாகப் புரிந்துகொள்ள வழி ஏற்படுகிறது” என கூறியது.

“கிழக்கு லடாக்கில் தற்போது பதற்றமான சூழல் நீடிப்பதால், தங்களது கால்நடைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துமாறு மேய்ப்பவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

கொரோனா இரண்டாவது அலையை எதிர்த்து இந்தியா போராடி வரும் நிலையில், எல்லைப் பிரச்சனை ஊடகங்களில் இருந்து மறைந்துவிட்டது. இருப்பினும் இந்த விவகாரம் இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு இன்னொரு சவாலாக உருவெடுக்கலாம் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் பிரதமர் மோதி எந்த ஊடுருவலும் இல்லை என கூறியது – இந்திய பாதுகாப்பு வல்லுநர்களிடையே திகைப்பை ஏற்படுத்தியது. அதன் பின்னர் இவ்விவகாரம் தொடர்பாக அதிக முன்னேற்றமில்லை என சுக்லா கூறினார்.

“இந்தியாவின் அரசியல் தலைமை எந்த நிலப்பரப்பையும் சீனர்களிடம் இழக்கவில்லை என பாசாங்கு செய்கிறது,” என அவர் கூறினார்.

இந்திய ராணுவ வாகனங்கள்

பட மூலாதாரம், ANBARASAN/BBC

“அரசாங்கம் அதன் தோல்விகளை மறைக்க விரும்புகிறது, ஆனால் எந்தவொரு பகுதியையும் இழக்கவில்லை என்று பாசாங்கு செய்தால், அதை எவ்வாறு திரும்பக் கோரப் போகிறோம்?” என்ற கேள்வியை அவர் எழுப்புகிறார்.

சீனா ஒரு சிறந்த இராணுவ சக்தி என்றும் தன் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளிகளில் ஒன்று என்பதையும் இந்தியா உணர்ந்துள்ளது. சீன இறக்குமதிகள் மற்றும் முதலீடுகள் இல்லாமல், பல இந்திய வணிக நிறுவனங்கள் இயல்பாக நடக்க திணறக்கூடும்.

தொற்றுநோயின் பிடியில் நாடு தத்தளிக்கும்போது, இந்தியா இப்போது சீன தொழில்முனைவோரிடமிருந்து உயிர் காக்கும் மருத்துவக் கருவிகள் மற்றும் மருத்துவ ஆக்சிஜன் கருவிகளை அதிக அளவில் இறக்குமதி செய்து வருகிறது.

அதனால்தான் இரு நாடுகளையும் தற்போதைய நிலைப்பாட்டிலிருந்து முன்னேறி, எல்லையில் அமைதியை பேணுமாறு பலர் வலியுறுத்துகின்றனர்.

“இது எங்கள் இருதரப்பு உறவில் ஒரு இறுதிக் கட்டம் அல்ல என்று நான் நம்புகிறேன். ஆனால் நம்பிக்கையை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளை நாம் எவ்வாறு மேம்படுத்த முடியும் என்பதைச் சிந்திக்க இது ஒரு திருப்புமுனை வாய்ப்பாக இருக்க வேண்டும்” என ஷௌ கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »