Press "Enter" to skip to content

ஜி7 நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை – ‘சில நாடுகள் உலகின் விதியை நிர்ணயிக்கும் காலம் முடிந்துவிட்டது’

பட மூலாதாரம், Reuters

“சில நாடுகள் மட்டுமே உள்ள சிறு குழுக்கள் உலகின் விதியை நிர்ணயிக்கும் காலம் எப்போதோ முடிந்துவிட்டது,” என சீனா, ஜி7 நாடுகளிடம் தெரிவித்துள்ளது.

சீனாவை விஞ்சும் நிலையை தாங்கள் ஒன்றிணைந்து எட்ட வேண்டும் என இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் ஜி7 உச்சி மாநாட்டில் அந்த நாடுகளின் தலைவர்கள் எடுத்துள்ள முடிவுக்கு, லண்டனில் உள்ள சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் இவ்வாறு எதிர்வினையாற்றியுள்ளார்.

குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளின் கட்டமைப்பை மேம்படுத்தவும், பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவவும் சீனாவின் திட்டத்தை போன்று ஒரு திட்டத்தை உருவாக்க ஜி7 நாட்டுத் தலைவர்கள் முடிவெடுத்துள்ளனர்.

ஜி7 மாநாடு ஞாயிறன்று நிறைவுறும்போது இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதே போன்ற ஒரு திட்டத்தை சீனா ஏற்கனவே செயல்படுத்தி வருகிறது. அதற்கு போட்டியாகவே ஜி7 அமைப்பின் இத்திட்டம் கொண்டுவரப்படுகிறது.

எழுச்சி பெற்று வரும் சீனாவை எதிர்கொள்ளும் வகையில் மேற்குலக நாடுகள் செயல்பட வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதி கொண்டுள்ளதாக வல்லுநர்கள் கருதுகிறார்கள்.

ஜி7 என்றால் என்ன? இதில் சீனா ஏன் இல்லை?

ஜி7 vs சீனா

பட மூலாதாரம், AFP

பொருளாதார ரீதியில் வேகமாக வளர்ந்து வரும் இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகள், ஜி20 அமைப்பில் இடம் பெற்றிருந்தாலும் ஜி7 அமைப்பின் உறுப்பினர்களாக இல்லை.

முன்னேறிய நாடுகள் என்று கருதப்படும், வளர்ந்த பொருளாதாரங்களைக் கொண்ட ஏழு நாடுகள் இருக்கும் அமைப்பே ஜி7. அதாவது Group of Seven.

இதில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இடம் பெற்றிருக்கின்றன.

சுதந்திரம், மனித உரிமை, ஜனநாயகம், சட்டம் ஒழுங்கு, செழிப்பு மற்றும் நிலையான வளர்ச்சி போன்ற முக்கிய கொள்கைகளோடு, தங்கள் சமூகம் இருப்பதாக இந்த நாடுகள் தங்களை கருதிக் கொள்கின்றன. இதனால் இந்தப் பண்புகள் இல்லாத நாடுகள் என்று தாங்கள் கருதும் நாடுகளை இவர்கள் ஜி7 அமைப்பில் சேர்த்துக்கொள்வதில்லை.

முதன்முதலில் 1975ல், உலக பொருளாதார நெருக்கடிக்கான தீர்வுகளை தேடும் முயற்சியில் தங்களின் யோசனைகளை பரிமாற்றிக் கொள்வதற்காக ஆறு நாடுகள் கூடி சந்தித்தன.

அதற்கு அடுத்த ஆண்டு கனடா இந்த அமைப்பில் உறுப்பினரானது. 1998இல் உறுப்பினரான ரஷ்யா உக்ரைனின் அங்கமாக இருந்த கிரிமியாவை தன்னுடன் 2014இல் இணைத்துக் கொண்டதால் நீக்கப்பட்டது. அதன்பின் ஜி8 மீண்டும் ஜி7 ஆனது.

ஆண்டு முழுவதும் அவ்வப்போது, ஜி7 உறுப்பு நாடுகளின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், சில முக்கிய விஷயங்களை விவாதிக்கக் கூடுவார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »