Press "Enter" to skip to content

சே குவேராவின் இந்தியப் பயணம்: நேருவிடம் ஒரு புரட்சியாளர் கற்றுக் கொண்டது என்ன?

பட மூலாதாரம், PHOTODIVISION.GOV.IN

லத்தீன் அமெரிக்க புரட்சியாளராக உருவெடுத்த சே குவேரா, ஜூன் 14, 1928 இல்,ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர்.

சே குவேரா தொழில் ரீதியாக மருத்துவராக இருந்தவர். 33 வயதில் கியூபாவின் தொழில்துறை அமைச்சரானார், ஆனால் பின்னர் லத்தீன் அமெரிக்காவில் புரட்சிக் கருத்துக்களைப் பரப்புவதற்காக அப்பதவியைத் துறந்தார்.

ஒரு காலத்தில் அமெரிக்காவின் மிகப்பெரிய எதிரியாக இருந்தவர், இன்று பலரின் பார்வையில் பெரும் புரட்சியாளர். ஐம்பதுகள் மற்றும் அறுபதுகளில் அமெரிக்காவின் வளர்ந்து வரும் ஆதிக்கத்தை எதிர்த்துச் சவால் விடுத்த இந்த இளைஞன் – எர்னஸ்டோ சே குவேரா அர்ஜென்டினாவில் பிறந்தார்.

பதவியை விடுத்துப் போராட்டம்

சே குவேரா & ஃபிடல் காஸ்ட்ரோ

பட மூலாதாரம், AFP/GETTY IMAGES

அர்ஜென்டினாவின் தலைநகரான பியூனஸ் அயர்ஸ் கல்லூரியில் மருத்துவர் பட்டம் பெற்ற அவர், விரும்பியிருந்தால் ஒரு வசதியான வாழ்க்கையை வாழ்ந்திருக்க முடியும். ஆனால் அவரைச் சுற்றியுள்ள வறுமை மற்றும் அடக்குமுறையைப் பார்த்த இளம் சே, மார்க்சியத்தை நோக்கிச் சாய்ந்தார்.

மிக விரைவில் இந்த இளம் சிந்தனைவாதி, தென் அமெரிக்கக் கண்டத்தின் பிரச்சனைகளைத் தீர்க்க ஆயுதப் போராட்டம் மட்டுமே ஒரே வழி என்று நினைத்தார்.

1955 ஆம் ஆண்டில், தனது 27 ஆவது வயதில் சே குவேரா, ஃபிடல் காஸ்ட்ரோவைச் சந்தித்தார். விரைவில், புரட்சியாளர்களிடையே மட்டுமல்ல, மக்களிடையேயும் நன்கு அறியப்பட்டவராக மாறினார்.

ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு நெருக்கமான ஒரு இளம் புரட்சியாளராக கியூபா இவரை இரு கரம் நீட்டி ஏற்றுக்கொண்டது.

புரட்சிப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த பின்னர், தனது 31ஆவது வயதில், கியூபாவின் தேசிய வங்கியின் தலைவராகவும், பின்னர் கியூபாவின் தொழில் துறை அமைச்சராகவும் ஆனார்.

1964 இல், கியூபா சார்பாக ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் பங்கேற்கச் சென்றார் சே குவேரா. பல மூத்த அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இந்த 36 வயதான இளந்தலைவரின் பேச்சைக் கேட்க ஆர்வமாக இருந்தனர்.

பிரபலமான பெயர்

சே குவேரா

பட மூலாதாரம், AFP/GETTY IMAGES

இன்று, கியூபாவின் குழந்தைகள் சே குவேராவை வணங்குகிறார்கள். கியூபா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் நம்பிக்கையை விதைக்கும் ஒரு பெயராக சே குவேரா உருவெடுத்துள்ளது.

உலகின் ஒவ்வொரு மூலையிலும் உள்ளவர்கள் அவருடைய பெயரை அறிந்திருக்கிறார்கள், அவருடைய செயல்களிலிருந்து உத்வேகம் பெறுகிறார்கள்.

சே குவேராவின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஜான் ஆண்டர்சன், “கியூபா மற்றும் லத்தீன் அமெரிக்கா மட்டுமல்ல, உலகின் பல நாடுகளில் உள்ள மக்களுக்கு சே ஒரு உத்வேகம் ஊட்டுபவராக விளங்குகிறார்” என கூறினார்.

“பாகிஸ்தானில் பார வண்டிகளின் பின்புறங்களிலும், ஜப்பானில் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் பனிச்சறுக்கு போர்டுகளிலும் சேவின் படத்தை நான் பார்த்திருக்கிறேன். சே கியூபாவை சோவியத் யூனியனுடன் நெருக்கமாக்கினார். கியூபா பல தசாப்தங்களாக அவர் வகுத்த அந்தப் பாதையில் தொடர்கிறது. வலிமைமிக்க அமெரிக்காவிற்கு எதிராக ஒன்றல்ல இரண்டல்ல, பல வியட்நாம்களை எழுப்பும் ஆற்றால் சேவுக்கு இருந்தது.

அமைப்புக்கு எதிரான இளைஞர்களின் கோபத்தின் அடையாளமாகவும், அதன் கொள்கைகளுக்கான போராட்டத்தின் அடையாளமாகவும் திகழ்கிறார் சே.” என அவர் கூறுகிறார்.

பொலிவியாவில் கொல்லப்பட்ட சே

சே குவேரா

பட மூலாதாரம், AFP/GETTY IMAGES

கியூபாவின் மிக சக்திவாய்ந்த இளைஞரான சே குவேரா தனது 37 ஆவது வயதில் தனது புரட்சிக் கொள்கைகளை ஆப்பிரிக்காவிற்கும் தென் அமெரிக்காவிற்கும் பரப்ப முடிவு செய்தார்.

காங்கோவில், சே குவேரா கிளர்ச்சியாளர்களுக்கு கொரில்லா போர் முறையை கற்பித்தார். பின்னர் பொலிவியாவில் கிளர்ச்சியாளர்களுக்குப் பயிற்சி அளிக்கத் தொடங்கினார்.

அமெரிக்கப் புலனாய்வு முகவர்கள் சே குவேராவைத் தேடி வந்தனர், இறுதியில் சே பொலிவிய இராணுவத்தின் உதவியுடன் சிறைபிடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.

எர்னஸ்டோ சே குவேரா இன்று டெல்லியில் உள்ள பாலிகா பஜாரில் விற்கப்படும் டி-ஷர்ட்களிலும் லண்டனில் நாகரீக ஜீன்ஸ் மீதும் காணப்படுவார்.

ஆனால் கியூபா மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு, சே குவேரா இன்னும் ஒரு கடவுளாகவே இருக்கிறார்.

சே குவேரா இன்று உயிருடன் இருந்திருந்தால், அவருக்கு 89 வயதாகி இருக்கும், ஆனால் 1967 அக்டோபர் 9 ஆம் தேதி சே கொல்லப்பட்டபோது, அவருக்கு வயது 39 தான்.

இந்தியப் பயணம்

சே குவேரா இந்தியப் பயணம்

பட மூலாதாரம், PHOTODIVISION.GOV.IN

கியூபா அரசில் அமைச்சராக இருந்த கால கட்டத்தில் அவர் இந்தியாவுக்கும் வந்திருக்கிறார் என்பது மிகச் சிலருக்கே தெரிந்த விஷயம்.

இந்தியாவுக்கு விஜயம் செய்த பின்னர் சே 1959 இல் இந்தியா குறித்த ஒரு அறிக்கையை ஃபிடல் காஸ்ட்ரோவிடம் சமர்ப்பித்தார்.

அந்த அறிக்கையில், “கெய்ரோவிலிருந்து நாங்கள் இந்தியாவுக்கு ஒரு நேரடி விமானத்தில் வந்தோம். 39 கோடி மக்கள் தொகை மற்றும் 30 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு நிலப்பகுதி கொண்டது இந்தியா. நாங்கள் அனைத்து உயர் இந்திய அரசியல்வாதிகளையும் சந்தித்தோம். நேரு அவர்கள் ஒரு சகோதர உணர்வோடு வரவேற்றது மட்டுமல்லாமல், கியூப மக்களின் அர்ப்பணிப்பு உணர்வு குறித்தும் அவர்களின் போராட்டம் குறித்தும் மிகுந்த ஆர்வம் காட்டினார்” என குறிப்பிட்டிருந்தார்.

மேலும், “நேரு எங்களுக்கு மதிப்புமிக்க ஆலோசனைகளை வழங்கினார். நம் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான தனது நிபந்தனையில்லா அக்கறையை வெளிப்படுத்தினார். இந்தியப் பயணத்திலிருந்து பல பயனுள்ள விஷயங்களை நாங்கள் கற்றுக்கொண்டோம். மிக முக்கியமாக, ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதன் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பொறுத்தது என்பதை நாங்கள் அறிந்தோம். இதற்காக விஞ்ஞான ஆராய்ச்சி நிறுவனங்களை உருவாக்குவது மிகவும் முக்கியமானது – குறிப்பாக மருத்துவம், வேதியியல், இயற்பியல் மற்றும் வேளாண்மை ஆகிய துறைகளில் ஆராய்ச்சி நிறுவனங்கள் அமைக்க வேண்டும்.

விடைபெற்ற நிகழ்வை நினைவு கூர்ந்த சே குவேரா, “நாங்கள் இந்தியாவில் இருந்து திரும்பி வரும்போது, பள்ளிக் குழந்தைகள் விடைபெறும் கோஷம் எங்களை மிகவும் கவர்ந்தது. இந்தியாவும் கியூபாவும் அண்ணன் தம்பிகள் என்று கோஷமிட்டனர். உண்மையிலேயே இந்தியாவும் கியூபாவும் சகோதரர்கள் தான்.” என எழுதி இருந்தார்.

(இந்தக் கட்டுரை முதன்முதலில் 2007 அக்டோபர் 9 அன்று பிபிசி ஹிந்தியில் பிரசுரமானது)

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »