Press "Enter" to skip to content

இரான் அதிபர் தேர்தல் 2021: உலகம் உற்றுநோக்கும் தேர்தலின் நான்கு முக்கிய அம்சங்கள்

  • பூரியா மஹ்ரூயன்
  • பிபிசி பெர்ஷிய மொழி சேவை

பட மூலாதாரம், Reuters

உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் முக்கியத்துவம் வாய்ந்த நேரத்தில், இரானியர்கள் தங்களது அடுத்த அதிபரை இன்னும் சில நாட்களில் தேர்ந்தெடுக்க உள்ளனர். 2017ஆம் ஆண்டு நடந்த தேர்தலுக்கு பிறகு, கடந்த நான்காண்டுகளில் எண்ணற்ற விடயங்கள் மாறிவிட்டன.

இந்த நிலையில், எதிர்வரும் இரானிய அதிபர் தேர்தல் குறித்து உற்றுநோக்கப்படும் நான்கு முக்கிய அம்சங்களை தற்போது விரிவாகப் பார்க்கலாம்.

தொடரும் அதிருப்தி

கடந்த அதிபர் தேர்தல் நடந்த 2017ஆம் ஆண்டுகளுக்கு பிறகு சில தொடர் நிகழ்வுகள் இரானின் அரசியல் களத்தில் எண்ணற்ற மாற்றங்களை ஏற்படுத்தி விட்டன. உதாரணமாக, அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மீதான கடும் ஒடுக்குமுறைகள், அரசியல் மற்றும் சமூக ஆர்வலர்கள் மீதான கைது நடவடிக்கைகள், அரசியல் கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம், இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (ஐ.ஆர்.ஜி.சி) உக்ரேனிய விமானத்தை சுட்டு வீழ்த்தியது, அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகளின் காரணமான அடிமட்டத்துக்கு சென்ற நாட்டின் பொருளாதாரம் உள்ளிட்டவை அந்த நாடு சந்தித்துள்ள சவால்களில் அடக்கம்.

இதுபோன்ற விரும்பத்தகாத தொடர் நிகழ்வுகள் மக்களின் மனதில் ஏற்படுத்திய நீண்டகால தாக்கத்தின் விளைவுகள் இந்த தேர்தலில் எதிரொலிக்கும் என்று கருதப்படுகிறது. ஆட்சியாளர்கள் மீதான அதிருப்தியின் காரணமாக, எதிர்வரும் தேர்தலில் மிகவும் குறைவான இரானியர்களே வாக்கப்பளிப்பார்கள் என்றும் அது ஆட்சியாளர்களுக்கு பெருத்த அடியாக இருக்குமென்றும் கருதப்படுகிறது.

இரானிய தேர்தல்கள் எந்த வகையிலும் சுதந்திரமானவை மற்றும் நியாயமானவை அல்ல என்று பரவலாக நம்பப்படும் நிலையில், (முக்கியமாக `கார்டியன் கவுன்சில்’ என்று அழைக்கப்படும் ஒரு குறிப்பிட்ட கொள்கை கொண்டவர்கள் அங்கம் வகிக்கும் அமைப்பால் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படுவதால்), தங்களது நாட்டின் அரசியல் அமைப்பு முறையின் சட்ட அந்தஸ்தை நிரூபிக்க ஆட்சியாளர்களுக்கு மேலதிக வாக்குப்பதிவு அவசியம். ஆனால், கடந்த நான்கு ஆண்டு நிகழ்வுகளால் அந்த சட்ட அந்தஸ்து கடுமையான சவாலை சந்தித்து வருகிறது.

எனினும், அரசாங்கத்துடன் இணக்கமான உறவை கடைப்பிடிக்கும் மாணவ அமைப்பான ஐஎஸ்பிஏ நடத்திய கருத்துக்கணிப்பில், எதிர்வரும் தேர்தலில் நாட்டின் மொத்த வாக்காளர்களில் 36% பேர் மட்டுமே வாக்களிப்பார்கள் என்று தெரியவந்துள்ளது. இது கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில், சுமார் 7% குறைவு. மேலும், கடந்த மே 25ஆம் தேதி அதிபர் தேர்தல் வேட்பாளர்களின் பெயர் பட்டியல் வெளியானது முதல், “No Way I Vote” என்ற வலையொட்டு (ஹேஷ்டேக்) பெர்சிய ஊடகங்களில் போக்காகி வருகிறது.

இதற்கு முந்தைய தேர்தல்களில், குறைந்த அளவு வாக்குப்பதிவு என்பது கடும்போக்காளர்களுக்கும், பழமைவாதிகளுக்கும் சாதகமாகவே அமைந்துள்ளது என்பது வரலாறு.

மத கடும்போக்காளர்கள் மீது குவியும் பார்வை

இரான்

பட மூலாதாரம், Reuters

1997ஆம் ஆண்டு முதலான அதிபர் தேர்தல்கள் அனைத்துமே மத கடும்போக்காளர்கள் மற்றும் சீர்திருத்த அல்லது மையவாத கொள்கை கொண்ட வேட்பாளர்களுக்கிடையேயான போட்டியாக மாறுபாடைந்துள்ளன.

ஆனால், இரானிய தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை உறுதிசெய்யும் கார்டியன் கவுன்சில், தனது சமீபத்திய நடவடிக்கையின் மூலம், பெரும்பாலான சீர்திருத்தஅல்லது மையவாத வேட்பாளர்கள் இந்த ஆண்டு தேர்தலில் போட்டியிடுவதை தடுத்துள்ளது.

அதாவது, எதிர்வரும் தேர்தலில் போட்யிடுவதற்கு பத்துக்கும் மேற்பட்ட பிரபல அரசியல் தலைவர்கள் பதிவு செய்திருந்தபோதிலும், அவர்களில் ஏழு பேருக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிடுவதற்கு கார்டியன் கவுன்சில் அனுமதி கொடுத்துள்ளது. அந்த ஏழு பேரிலும், வெறும் இரண்டு பேர் மட்டுமே சீர்திருத்த அல்லது மையவாத கொள்கை கொண்ட வேட்பாளர்கள். ஆனால், அவர்கள் இருவருமே பெரிதும் அறியப்படாத முகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் இரண்டாமிடம் பிடித்த அந்த நாட்டின் நீதித்துறை தலைவரான இப்ராஹிம் ரைசி, எதிர்வரும் தேர்தலில் நன்கு அறியப்பட்ட போட்டியாளராக மட்டுமின்றி, மத கடும்போக்காளர்களின் விருப்பத்திற்குரிய வேட்பாளராகவும் விளங்குகிறார்.

நெருக்கடியில் நாட்டின் பொருளாதாரம்

இரான்

பட மூலாதாரம், Reuters

இரானிய தேர்தல் வரலாற்றில் எப்போதும் பொருளாதாரத்திற்கு முக்கிய இடம் இருந்து வருகிறது. இதுவே ஒவ்வொரு வேட்பாளரின் செயல்திட்டத்திலும் முன்னிலை பெறுகிறது. மோசமான பொருளாதார நிலைமையின் காரணமாக, 1979ஆம் ஆண்டு வெடித்த புரட்சிக்குப் பின்னர் தற்போது இரான் அதன் மிக முக்கியமான கட்டங்களில் ஒன்றை எதிர்கொண்டு வருகிறது.

உலக நாடுகள் விதித்த பொருளாதாரத் தடைகளின் தாக்கமானது, கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பெருந்தொற்றின் காரணமாக மென்மேலும் மோசமடைந்ததுடன் அது அந்த நாட்டின் வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடிகளில் ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இரானின் பணவீக்க விகிதம் சமீப காலங்களில் இல்லாத அளவாக 50 சதவீதத்தை எட்டியுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பரில் அரசாங்கம் தன்னிச்சையாக கல்லெண்ணெய் விலையை அதிகரித்தபோது, இரானின் 100க்கும் மேற்பட்ட நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கினர்.

இரான்

பட மூலாதாரம், Getty Images

போராட்டம் தொடங்கிய ஒரு சில நாட்களிலேயே 300க்கும் மேற்பட்ட ஆயுதமற்ற போராட்டக்காரர்கள் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டதாக அம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் அறிக்கை ஒன்று கூறுகிறது. இரானின் ஆளும் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் மற்றும் அரசாங்கம் பதவி விலக வேண்டும் என அப்போது போராட்டக்காரர்கள் கோரினர். இதேபோன்ற போராட்டங்கள் மீண்டும் வெடிக்கக்கூடும்.

இரானில் அதிரடி மாற்றங்கள் தேவைப்படுவதாகவும் அது போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் வாயிலாக மட்டுமே சாத்தியம் என்றும் சிலர் நம்பும் நிலையில், தேர்தல்களில் வாக்களிப்பதன் வாயிலாக மேற்கொள்ளப்படும் படிப்படியான மாற்றமே அமைதியானது மற்றும் சாத்தியமானது என்று நம்புவோரும் இருக்கின்றனர்.

நிலையற்ற அரசியல் களத்தை கொண்ட இரானில், தேர்தல் நாள் வரை என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

அமெரிக்கா உடனான உறவு

இரான்

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் ஆட்சிக்காலத்தின்போது இரானுடனான உறவில் பதற்றமான நிலை நீடித்தது. இந்த நிலையில், கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்ற பிறகு இரானுடனான ராஜீய உறவில் முன்னேற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை துளிர்விட்டது.

எனினும், இரான் அரசியலில் அதிகாரம் செலுத்தி வரும் மத கடும்போக்காளர்களோ அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்படும் எந்தவித பேச்சுவார்த்தையும் அர்த்தமற்றது என்று கருதுகின்றனர். ஆனால், சீர்திருத்த மற்றும் மையவாத கொள்கை கொண்ட அரசியல்வாதிகள் இதற்கு நேரெதிரான கண்ணோட்டத்தை கொண்டுள்ளனர்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியின்மையை குறைத்து, அடிமட்டத்தில் உள்ள இரானின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு உதவும் நடவடிக்கைகளுக்கும் சீர்திருத்த மற்றும் மையவாத கொள்கை கொண்ட அரசியல்வாதிகள் ஆதரவு தெரிவிக்கின்றனர்.

சர்வதேச பண மோசடி தடுப்பு அமைப்புகளான நிதி நடவடிக்கை பணிக்குழு (FATF) உள்ளிட்டவற்றில் இணைவது, பிராந்திய போட்டியாளரான சௌதி அரேபியாவுடன் நல்லிணக்கத்தை பேணுவது, இரானின் பரம எதிரியான இஸ்ரேல் உடனான பதற்றத்தை தணிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் இவற்றில் அடக்கம்.

இரானின் வெளியுறவுக் கொள்கை உட்பட அதன் ஒட்டுமொத்த கொள்கைகளும் அந்த நாட்டின் அதிஉயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமனெயியால் தீர்மானிக்கப்படுகிறது. எனவே, இந்த தேர்தலில் யார் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தாலும், அவர் அதிஉயர் தலைவரின் ஒப்புதல் இல்லாமல் எதை செய்வதற்கும் வாய்ப்பு குறைவாக உள்ளதாகவே இந்த தேர்தலை புறக்கணிக்க விரும்புவோர் கருதுகின்றனர்.

இப்படிப்பட்ட நிலையில், அமெரிக்காவுடனான உறவை இயல்பாக்குவது அல்லது இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரிப்பது என்பது தற்போது சிந்திக்க முடியாததாக உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »