Press "Enter" to skip to content

பழங்கால ரோமாபுரி வரலாறு: ரோம் நகரம் எரியும் போது உண்மையிலேயே நீரோ ஃபிடில் வாசித்தாரா?

பட மூலாதாரம், BETTMANN

(இந்தக் கதை, ‘இன் அவர் டைம்’ என்ற பிபிசி வானொலி ஃபோரில் ஒலிபரப்பான நீரோ குறித்த 50 நிமிட நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டது.)

“ரோம் நகரம் எரியும் போது, நீரோ மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் புல்லாங்குழல் வாசித்துக்கொண்டிருந்தார்.”இந்தச் சொல்லாடல், ரோமானிய பேரரசர் நீரோவைப் பற்றிய பிரபலமான ஒன்று. நீரோ ரோமுக்கு தீ வைத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது, அவர் வேண்டுமென்றே அவ்வாறு செய்தார் என்று கூறப்படுகிறது.வரலாற்றின் பக்கங்களில் நீரோ ஒரு கொடூரமான ஆட்சியாளராக அறியப்படுகிறார், அவர் தனது சிற்றன்னை, அவரது மக்கள் மற்றும் மனைவிகள் அனைவரையும் கொன்று, தனது நீதிமன்றத்தில் இருந்த திருநங்கைகளை மணந்ததாகவும் கூறப்படுகிறது. கி.பி 54இல், தனது பதினாறு வயதில், நீரோ தனது தாயின் முயற்சியால் ஒரு பேரரசின் சக்ரவர்த்தியானார். அந்தப் பேரரசு, ஸ்பெயினிலிருந்து வடக்கே பிரிட்டன் மற்றும் கிழக்கில் சிரியா வரை பரவியிருந்தது. அரசாட்சி மீது மோகம் கொண்ட நீரோவின் தாயார் அக்ரிபீனா, சதித்திட்டங்கள் மற்றும் கலகங்கள் மூலமாக, நீரோவுக்கு அதிகாரத்தைப் பெற்றுத் தந்தார். அக்ரிபீனா தனது ‘மாமா’, பேரரசர் கிளாடியஸை மணந்தார், பின்னர் நீரோவை பேரரசரின் மகளுக்கு மணமுடித்தார். இதன் மூலம் நீரோ, அரச குடும்பத்தில் உறுப்பினராகவும், ராஜாவின் வாரிசாகவும் ஆனார், அதே நேரத்தில் ராஜாவுக்கும் ஒரு மகன் இருந்தான்.அக்ரிபீனா பேரரசர் கிளாடியஸை விஷம் கலந்த உணவைக் கொடுத்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது, ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று உறுதிப்படுத்த முடியவில்லை.

தாயைக் கொன்ற நீரோ

நீரோ ஆட்சியைப் பிடித்தபோது, அவரது தாயார் அக்ரிபீனா அவரது நெருங்கிய ஆலோசகராக இருந்தார். ரோமானிய நாணயங்களில் கூட நீரோவின் படங்கள் அச்சிடப்பட்டன. ஆனால் ஆட்சிக்கு வந்து சுமார் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, அதிக அதிகாரம் மற்றும் சுதந்திரம் வேண்டி, நீரோ தனது தாயையே கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. நீரோ தனது தாயைக் கொல்லச் செய்த முதல் முயற்சி தோல்வியடைந்தது. நீரோ தனது தாயைக் கடற்கரையில் நடந்த ஒரு விழாவிற்கு அழைத்தார். ஒரு கப்பலில் அவரைத் திருப்பி அனுப்புவதாகவும் அந்தக் கப்பலை வழியில் நீரில் மூழ்கடித்துத் தாயைக் கொல்வதாகவும் திட்டம். ஆனால் இந்த முயற்சியில் அவர் தப்பிவிட்டார். இதற்குப் பிறகு நீரோ தனது தாயைக் கிளர்ச்சி செய்ததாகக் குற்றம் சாட்டி, அவரைக் கொல்லச் சிலரை அனுப்பினார்.

நீரோ தன் தாயைக் கொன்றது ஏன்?

ரோம் மக்களைக் கவர, கிரேக்க வழக்கப்படி, நீரோ மிகப் பெரிய அளவில் விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்தார்.

பிபிசி வானொலி நிகழ்ச்சியில் பேசிய பண்டைய ரோமாபுரி குறித்த நிபுணர் பேராசிரியர் மரியா வாயெக், “நீரோவின் தாய் மிகவும் தந்திரம் நிறைந்தவராகவும் பேராசை கொண்டவராகவும் இருந்தார். அவர் தனது மகனைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கச் செய்யும் முயற்சியின் ஒரு பகுதியாகத் தன் மகனுடனே கூட உடலுறவு கொள்ளவும் துணிந்தார் என்று சில ஆவணங்கள் கூறுகின்றன.

FOTOTECA STORICA NAZIONALE

பட மூலாதாரம், FOTOTECA STORICA NAZIONALE

ஆனால், இதற்கு எந்த வரலாற்று ஆதாரமும் இல்லை என்று அவர் கூறுகிறார். ஆனால், தன்னைக் கொல்ல அனுப்பப்பட்ட ஆளிடம் அவர் தாயார், தனது வயிற்றைக் காட்டி, நீரோவின் பாவம் வளரும் இந்த வயிற்றில் கத்தியால் குத்துமாறு கூறியதாக மரியா கூறுகிறார். தனது குழந்தைப் பருவத்தில் இருந்தே அதிகாரப் போராட்டத்தின் சூழலிலேயே வளர்ந்ததால், அது அவரது ஆளுமை மற்றும் சிந்தனையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது மரியாவின் கருத்து.

ஆட்சிக்காகச் செய்யப்பட்ட திருமணங்களும் கொலைகளும்

நீரோவின் காலம் முதல் நூற்றாண்டு என்று கூறும் மரியா, “அப்போது, ரோமானியப் பேரரசு ஐரோப்பாவில் பிரிட்டனில் இருந்து ஆசியாவில் சிரியா வரை பரந்து விரிந்திருந்தது. ஆனால் இந்த பரந்த சாம்ராஜ்யம் நிலையற்றதாக இருந்தது. ஒரு சுதந்திரத் தலைவர், செனட்டின் உதவியுடன் ஆட்சி செய்து வந்தார். ரோமானியப் பேரரசின் முதல் பேரரசரான அகஸ்டஸ், அதிகாரத்தில் இருப்பவர்களிடையே சமத்துவம் குறித்த ஒரு யோசனையை அறிமுகப்படுத்தினார்.ரோமின் முதல் பேரரசர் அகஸ்டஸ் சீசரால் தொடங்கப்பட்ட அமைப்பில், ஜூலியஸ் கிளாடியஸ் சீசர் குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக அதிகாரத்தை வைத்திருக்க விரும்பினர். இதன் விளைவாக அதிகாரத்தைப் பெற குடும்பத்திற்குள் ஒரு போராட்டம் ஏற்பட்டது.

அதிகாரத்தைப் பெறுவதற்காக, குடும்பத்தில் திருமணங்கள், குழந்தைகளைத் தத்தெடுப்பது, விவாகரத்து செய்தல், நாடுகடத்தப்படுதல், நாட்டுக்கு வெளியேயிருந்து ஆட்சி செய்வது என்று தம் போட்டியாளரை அகற்ற எல்லா விதமான, தந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன.ரோமானியப் பேரரசின் இரண்டாவது பேரரசரான திபெரியஸின் ஆட்சியின் போது நீரோவின் பாட்டி சிறையில் அடைக்கப்பட்டார். நீரோவின் தாய் மூன்றாவது மன்னனின் ஆட்சியில் நாடுகடத்தப்பட்டார். கிளாடியஸின் ஆட்சியின் போது, நீரோவின் தாயார் நாடு திரும்பினார். மேலும் அவர் தனது மாமாவான பேரரசரை மணந்து அரச குடும்பத்தில் தனது இடத்தைப் பிடித்தார்.

நீரோவின் ஆளுமை மற்றும் தன்மை குறித்த பிபிசி வானொலி நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரிட்டன் செளத் ஹாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சுஷ்மா மாலிக் கூறுகையில், ரோமானிய பேரரசின் நான்காவது பேரரசரான கிளாடியஸ் கி.பி 41 முதல் 54 வரை ஆட்சி செய்தார். அவரது ஆட்சியின் கடைசி நாட்களில், கிளாடியஸ் நீரோவின் தாயார் அக்ரிபீனா உட்பட தனது மனைவிகளையே பெரிதும் சார்ந்து வாழ வேண்டியிருந்தது என்று தெரிவிக்கிறார்.”இந்த மனைவிகளில், ‘மிகவும் அவப்பெயர் கொண்டவர்,’ முசலினா என்று வரலாற்றுப் புத்தகங்களில் எழுதப்பட்டிருக்கிறது. அவர் கிளாடியஸைச் சுற்றி ஒரு வலையை விரித்திருந்தார். அவர் செனட்டர்களுடன் உடல் உறவு கொள்ளும் அளவுக்குக் கூடச் சென்றார், தனது இச்சைக்காகத் தன் நிலையைக் கூட அவர் மறந்தார். கிளாடியஸ் அவளால் பெரிதும் ஈர்க்கப்பட்டார் என்றும் வரலாறு கூறுகிறது.” என்று சுஷ்மா மாலிக் கூறுகிறார்.நீரோ மற்றும் கிளாடியஸின் காலங்களை ஒப்பிடும் சுஷ்மா மாலிக், “நீரோவின் ஆரம்ப நாட்களில் அவரைச் சுற்றிச் சில நல்ல மனிதர்கள் இருந்தார்கள், இதில் செனெகா மற்றும் அஃப்ரெக்ஸ் புரூஸ் என்ற தலைவர்களும் இருந்தனர். செனெகா நீரோவின் உரைகளின் எழுத்தாளரும் ஒரு தத்துவஞானியும் ஆவார்.

ரோமாபுரி மன்னன்

பட மூலாதாரம், BETTMANN

கர்ப்பிணி மனைவியைக் கொன்ற நீரோ

நீரோ தனது முதல் மனைவி ஆக்டேவியாவால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர் அவளை நாடு கடத்திக் கொலை செய்ய உத்தரவிட்டார். அதன் பிறகு நீரோ போபியாவை காதலித்து அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். போபியா கர்ப்பமாக இருந்தபோது, நீரோ ஒரு நாள் கோபமடைந்து அவளையும் கொன்றான்.

நீரோவின் ஆட்சியின் முதல் ஐந்து ஆண்டுகள் ரோமானியர்களுக்குப் பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. பண்டைய ரோமில், செனட் அமைப்பு தான் நிர்வாகம் மற்றும் ஆலோசனை குழுவாக இருந்தது. நீரோ ரோமன், செனட்டுக்கு அதிகாரம் அளித்தது, ரோமானிய ராணுவத்தைத் திருப்திகரமாக வைத்திருந்தது, விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்தது போன்றவற்றால், பொது மக்களிடையே புகழ் பெற்றது. ஆனால் இந்த ஆரம்பகால வெற்றிகள் நீரோவின் எஞ்சிய காலத்தில் நடந்த கொடூரமான வன்முறை மற்றும் காட்டுமிராண்டித்தனத்தால் மறைக்கப்பட்டன.

தனது செயல்களால், நீரோ வரலாற்றின் பக்கங்களில் தீமை மற்றும் துன்மார்க்கத்தின் அடையாளமாக மாறினார்.

கிளாடியஸின் காலத்தில் செனட் புறக்கணிக்கப்பட்டது போல, தனது ஆட்சியில் நடக்காது என்றும் ராஜீய விவகாரங்களில் இந்த அமைப்பின் முக்கியத்துவம் மீட்டெடுக்கப்படும் என்றும் நீரோ செனட்டிற்கு உறுதியளித்தார் என்று பேராசிரியர் சுஷ்மா மாலிக் கூறுகிறார்.

ரோமானிய ராணுவமான பிரிட்டோரியன் காவல்படையினருக்கான ஊதியம் சரியான நேரத்தில் வழங்கப்படும் என்றும் நீரோ உறுதியளித்தார். அந்த ஆரம்ப நாட்களில், நீரோ ரோம் விவகாரங்களில் பெரும்பாலானவற்றை செனட்டின் பொறுப்பில் விட்டுவிட்டார்.

செனட்டின் கிளர்ச்சி எழக்கூடாது என்றும் அவர் முயற்சி செய்தார். அப்படி எழும் கிளர்ச்சியால் ஒருவருக்கெதிராக ஒருவர் சதியில் ஈடுபட்டனர். தனது ஆட்சியின் ஆரம்ப நாட்களில், நீரோ செனட்டின் நம்பிக்கையை மீட்டெடுக்க முயன்றார், மேலும் அவர்களுக்கும் ரோமுக்கும் ஒரு சிறந்த ஆட்சியாளராகத் தாம் இருக்க முடியும் என்ற நம்பிக்கையையும் அளிக்க முயன்றார்.

ரோமானியர்களைக் கவர, நீரோ கி.பி 54 இல் கிரீஸ்-ல் நடப்பது போன்ற பெரிய அளவிலான விளையாட்டுகளை ஏற்பாடு செய்தார். மக்களின் பொழுதுபோக்குக்காக சர்க்கஸ் போன்ற பல விஷயங்களும் இந்த விளையாட்டுகளில் சேர்க்கப்பட்டன.

நீரோவின் ஆரம்ப நாட்கள் ரோமின் பொற்காலம் என்று பிரிட்டனில் உள்ள செயின்ட் ஜான்ஸ் கல்லூரி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மத்தேயு நிக்கோல்ஸ் வரலாற்றுக் குறிப்புகளுடன் உறுதிப்படுத்துகிறார்.

நவீன காலங்களில் கூட, ஆட்சியாளர்கள் தங்கள் ஆரம்ப நாட்களில் இதுபோன்ற பல முடிவுகளை எடுப்பது, மக்களிடையே அவர்களின் புகழை அதிகரிக்கிறது, ஆனால் படிப்படியாக அவர்களின் புகழ் அவர்கள் ஆட்சி செய்யும் முறையாலேயே முடிவடைகிறது என்று அவர் கூறினார்.

நீரோவின் புகழ் பெரும்பாலும் அவரது கடைசி நாட்கள் வரை நீடித்திருந்தது என்று மேத்யூ கூறுகிறார். நீரோ தனது ஆட்சிக் காலத்தில் எதிர்கொண்ட பிரச்னைகள் குறித்துப் பேசிய மேத்யூ, ஜூலியஸ் கிளாடியஸ் இந்த அரச வம்சத்தின் ஐந்தாவது மற்றும் கடைசி மன்னர் என்று கூறுகிறார்.

ALBERTO PIZZOLI

பட மூலாதாரம், ALBERTO PIZZOLI

நீரோ ஆட்சிக்கு வந்தபோது, அவர் பல சிக்கல்களை எதிர்கொண்டார். அவர் பொறுப்பேற்றபோது, நிர்வாகம் சீராக இயங்கிக் கொண்டிருந்தது. ஆனால் அதிகாரத்தைப் பெற குடும்பத்திற்குள் ஒரு கடுமையான போராட்டம் நடந்து கொண்டிருந்தது, தவிர, சதித்திட்டங்கள் உச்சத்தில் இருந்தன. கூடுதலாக, செனட்டின் உயரடுக்குப் பிரபுக்களைத் திருப்திப்படுத்துவது அவசியமாக இருந்தது. மாகாண ஆளுநர்கள் இருந்தனர், அவர்களின் கட்டுப்பாட்டில் ராணுவம் இருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, ரோம் மக்கள் விளையாட்டு மற்றும் கண்காட்சிகளில் ஆர்வம் காட்டினர்.

நீரோ இவர்கள் அனைவரின் நலன்களையும் சமநிலைப்படுத்தி அவர்களை திருப்திப்படுத்த வேண்டியிருந்தது என்று மேத்யூ கூறுகிறார்.

நீரோ ஆட்சியைக் கைப்பற்றிய போது இருந்த ராஜ்ஜியத்திற்கும் அவர் விட்டுச் சென்ற போது இருந்த ராஜ்ஜியத்திற்கும் இடையே அதிக வித்தியாசம் இருந்ததா என்ற கேள்விக்கு மேத்யூ, இந்தப் பேரரசு, தொடர்ந்து எல்லைகளின் விரிவாக்கத்தின் அடிப்படையில் அமைந்தது என்று ஒப்புக்கொள்கிறார். நீரோவின் காலத்தில் ராஜ்ஜியம் விரிவாக்கப்படவில்லை. ஆனால் அதில் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்துவது மிகப்பெரிய சவாலாக இருந்தது என்கிறார் அவர்.

ராஜ்ஜியங்களை வெற்றி பெறுவதன் மூலம் கிடைக்கக்கூடிய பொருட்கள் வரத்து இல்லாததால், ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்துவது இன்னும் கடினமானது.

ரோம் எரியும் போது நீரோ குழல் வாசித்ததாகக் கூறப்படுவது உண்மையா?

கி.பி 64 இல் ரோமாபுரி எரிந்து சாம்பலானது. நீரோ சக்கரவர்த்தியால்தான் தீ வைக்கப்பட்டதாக வதந்தி பரவியதுடன் ரோம் எரியும் போது நீரோ ஃபிடில் வாசித்ததாகவும் கூறப்பட்டது.தீ விபத்து குறித்து, வரலாற்றாசிரியர் சுஷ்மா மாலிக் கூறுகையில், இரண்டாம் மற்றும் மூன்றாம் நூற்றாண்டுகளில், குறைந்தது இரண்டு வரலாற்றாசிரியர்களாவது நீரோ தானே ரோமில் தீயை வைத்தார் என்பதை உறுதிப்படுத்துகிறார்கள். மீண்டும் ஒரு நகரைக் கட்டியெழுப்பி, அதில் தான் விரும்பிய புகழ்பெற்ற கோல்டன் ஹவுஸை உருவாக்க நீரோ விரும்பினார் என்று தெரிவிக்கிறார்.ஆனால் சில வரலாற்றாசிரியர்கள் நீரோவுக்கு ஆதரவாக வாதிடுகின்றனர், அவர் இந்த நெருப்பை வைக்கவில்லை, ஏனென்றால் அவருடைய அரண்மனையே கூட இந்த நெருப்புக்கு இரையானது என்று அவர்கள் கூறுகிறார்கள். அதே காலகட்டத்தின் மற்றொரு வரலாற்றாசிரியரான டெசிட்டஸ், நீரோ தான் தீ வைத்தார் என்பது ஒரு வதந்தி என்று கூறுகிறார். “நீரோ இதைச் செய்திருப்பார் என்பது நகைப்புக்குரியதாகத் தெரிகிறது. நீரோ பின்னர் நகரத்தை மிகச் சிறந்த முறையில் மீண்டும் கட்டியெழுப்பினார். தீ விபத்து ஏற்பட்டால், மீண்டும் விரைவாகப் பரவக்கூடாது என்பதற்காக அகலமான சாலைகள் கட்டப்பட்டன, மேலும் சிறந்த கட்டுமானப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டன என்று சுஷ்மா மாலிக் கூறுகிறார். இரண்டு வரலாற்று ஆதாரங்கள் நீரோ தானே நகரத்திற்கு தீ வைத்ததாகக் கூறுகின்றன என்கிறார் மேத்யூ. தீ எரிந்து கொண்டிருந்த போது அலங்கார ஆடையுடன் பாட்டுப் பாடத் தொடங்கினார் நீரோ என்பது அவர்களின் வாதம்.

ஏழாம் நூற்றாண்டில் புல்லாங்குழல் கண்டுபிடிக்கப்பட்டது என்றும் நீரோவின் காலத்தில் ஃபிடில் இசைக்கருவியே இல்லை என்றும் மேத்யூ கூறுகிறார். நீரோ லைர் என்ற இசைக்கருவியை வாசித்ததாகவும் கூறப்படுகிறது.

தீ வைத்ததாகக் கிறிஸ்துவர்கள் மீது குற்றச்சாட்டு

நீரோ சிறுபான்மை கிறிஸ்தவ சமூகத்தினர் தான் தீ வைத்ததாகக் குற்றம்சாட்டினார்.அந்த நேரத்தில் ரோமில் கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவும், பொது மக்கள் கிறிஸ்துவர்களின் மத நம்பிக்கைகளைப் பற்றி மிகக் குறைவாகவே அறிந்திருந்ததாகவும், அவர்களைப் பற்றி வெறுப்பு உணர்வைக் கொண்டிருந்ததாகவும் டெசிட்டஸ் எழுதுகிறார் என்று சுஷ்மா மாலிக் கூறுகிறார்.எனவே பொது மக்களால் எளிதில் நம்பப்படுமாதலால் கிறிஸ்தவர்களைக் குற்றம்சாட்டுவது மிகவும் எளிதானது. நீரோ பின்னர் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தும் நோக்கில், தீ வைத்ததற்குத் தண்டனையாகப் பொது வெளியில் அவர்களை துக்கிலிடச் செய்தார், காட்டு ஓநாய்களின் முன் அவர்கள் வீசப்பட்டனர், இரவில் உயிருடன் எரிக்கப்பட்டனர், பொதுமக்கள் அந்தக் காட்சியைக் காண கூட்டப்பட்டனர்.

முடிக்கப்படாத நீரோவின் அரண்மனை

இந்த தீ விபத்துக்குப் பிறகு, நீரோ ஒரு பெரிய அரண்மனையைக் கட்டினார். இதில் ஆடம்பரமான தளபாடங்கள் மற்றும் அறைக்கு வாசனை சேர்க்க சுவர்களுக்குள் வாசனை திரவிய குழாய்கள் பொருத்தப்பட்டிருக்கும் “கோல்டன் ரூம்” இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த அரண்மனையை நிர்மாணிப்பதற்காக ஒரு பெரிய அளவிலான பொருட் செலவிடப்பட்டது. ஆனால் அது கட்டி முடிக்கப்படாமலே இருக்கிறது.

சாம்பல் குவியலிலிருந்து மீண்டு, பழைய வாழ்க்கையை எட்ட முயன்று கொண்டிருந்த அந்த நகர மக்கள், இந்த அரண்மனையை நிர்மாணிப்பதில் மகிழ்ச்சியடையவில்லை. இது விளையாட்டு மற்றும் கொண்டாட்டங்களுக்காக, பொதுமக்களுக்காகத் திறக்கப்படும் என்று கூறப்பட்ட போதும் அவர்கள் இதை விரும்பவில்லை.

நீரோ இசைக்கருவியான லைர் வாசிப்பதிலும் பாடல் பாடுவதிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். மேடையில் நடிப்பதையும் அவர் விரும்பினார். ஆனால் ரோமப் பேரரசரின் தகுதிக்கு இவை பொருத்தமில்லாதவை என்று செனட்டினர் கருதினர். ஆனால் நீரோ அதைப் பொருட்படுத்தவில்லை, கிரேக்கத்திற்குச் செல்ல ஒரு வருடம் விடுமுறை எடுத்தார், அங்கு அவர் நாடகப் போட்டிகளில் பங்கேற்றார்.மேடையில் ஒரு சோகமான கதையில் கதாநாயகியாக நடித்தபோதெல்லாம் நீரோ அவர் தனது இரண்டாவது மனைவி போபியாவின் முகமூடியை அணிந்திருந்தார் என்று கூறப்படுகிறது. அவரது கொலை காரணமாக அவர் துக்கத்திலும் குற்ற உணர்ச்சியிலும் சிக்கித் தவித்தார் என்பதற்கு இது ஒரு அடையாளம்.

மக்கள் விரோதியின் நாடகத்துவமான மரணம்

அவர் 30 வயதை எட்டிய நேரத்தில், நீரோவின் எதிர்ப்பும் கெட்ட பெயரும் பெரிதும் அதிகரித்தன. இராணுவத்தின் ஆதரவுடன், செனட் நீரோவை “மக்களின் எதிரி” என்று அறிவித்தது, இது ஒரு வகையில் அவரது மரணத்தை அறிவித்தது, அதாவது நீரோ கண்ட இடத்தில் கொல்லப்படலாம் என்று பொருள். பாதுகாப்பு அதிகாரிகள் பின் தொடர்ந்துவர, நீரோ இரவின் இருளில் தப்பி ஓடி, நகரின் புறநகரில் உள்ள தனது அரண்மனைகளில் ஒன்றில் மறைந்து தற்கொலை செய்து கொண்டார்.நீரோ தனது உயிரை மாய்த்துக் கொண்டபோது, அவரது கடைசி வார்த்தைகள் ‘குவாலிஸ் ஆர்டிஃபெக்ஸ் பேரியோ’ என்று கூறப்படுகிறது. நீரோவின் கடைசி தருணங்களில் பேசப்பட்ட இந்த வார்த்தைகளின் சரியான பொருளைக் குறிப்பிடுவது கடினம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள், ஆனால் அவை பல அர்த்தங்களைக் கொண்டிருக்கலாம்:

“என் மரணத்தில் கூட நான் ஒரு கலைஞன்””என்னுடன் இறப்பவர் எப்பேர்ப்பட்ட கலைஞர் !””நான் ஒரு வர்த்தகனைப் போல இறக்கிறேன்”நீரோவின் இந்த வார்த்தைகளின் பொருள் என்னவாக இருந்தாலும், அவரது கடைசி வார்த்தைகள் அவரைப் போலவே நாடக பாணியில் இருந்தன என்று கூறினால் அது மிகையாகாது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »