Press "Enter" to skip to content

ரோனால்டோவால் கோகோ கோலா சந்தை மதிப்பு சரிவு: நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்துமா?

பட மூலாதாரம், Alex Livesey – UEFA/UEFA via Getty Images

செய்தியாளர் சந்திப்பின்போது கோகோ கோலா பாட்டில்களை நகர்த்திவிட்டு, `தண்ணீர் குடியுங்கள்` என கூறிய கால்பந்து வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோவின் காணொளி மிகுதியாக பகிரப்பட்ட ஓரிரு நாளில் மற்றொரு கால்பந்து வீரர் பால் போக்பா, ஹெய்னெகன் பீர் பாட்டிலை நகர்த்தியது சமூக வலைதளங்களில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.

ஃபிரான்ஸை சேர்ந்த 28 வயது பாக்போ இஸ்லாமியர் ஆவார். செய்தியாளர் சந்திப்பில் எதுவும் பேசாமல் ஆல்கஹால் அற்ற அந்த பீர் பாட்டிலை மேசையின் கீழே எடுத்து வைத்தார்.

யூரோ 2020-ல் க்ரூப் எஃப் பிரிவில் ஜெர்மனிக்கு எதிராக ஃபிரான்ஸ் அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஹெய்னகன் `விண்மீன் ஆஃப் த மேட்ச் விருதை பெற்றார் பாக்போ.

கோகோ கோலா மற்றும் ஹெய்னகன் பீர் ஆகிய இரண்டும் தங்களின் முக்கிய ஸ்பான்சர்கள் என்றாலும் ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு வீரர்களின் செயல்களை ஒரு பிரச்னையாக கருதவில்லை.

இருப்பினும் ரோனால்டோவின் செயலால் கோகோ கோலா தனது சந்தை மதிப்பில் 4 பில்லியன் அமெரிக்க டாலர்களை இழந்துள்ளது. கோகோ கோலா நிறுவனத்தின் மொத்த மதிப்பு 240 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

“தாங்கள் என்ன குடிக்க வேண்டும் என்பதை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் ஒவ்வொருவருக்கும் உண்டு” என கோகோ கோலா இதுகுறித்த அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தது.

மேலும் ஓவ்வொரு தனிப்பட்ட நபருக்கும் தனிப்பட்ட “விருப்பமும் தேவைகளும்” இருக்கும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.

`தண்ணீர் குடியுங்கள்`

இரு தினங்களுக்கு முன்பு யூரோ 2020 கால்பந்து போட்டிகளில் ஒரு பகுதியாக ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் போர்ச்சுகல் மற்றும் ஹங்கேரி அணிகள் மோதின. இதில் போர்ச்சுகல் ஹங்கேரி அணிக்கு எதிராக 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதில் ரோனால்டோ இரு கோல்களை அடித்தார்.

போட்டி முடிந்தபின் செய்தியாளர்களை சந்தித்த போர்ச்சுகல் அணியின் கால்பந்து வீரர் ரோனால்டோ தனது மேசையின் மீது இருந்த இரு கோகோ கோலா பாட்டில்களை தள்ளி வைத்துவிட்டு தனக்கு முன்னிருந்த தண்ணீர் பாட்டிலை காட்டி `தண்ணீர் குடியுங்கள்` என்று தெரிவித்தார்.

சாஃப்ட் டிரின்க்ஸ் என்று சொல்லக்கூடிய குளிர்பானங்களை தவிர்த்து தண்ணீர் குடியுங்கள் என்று கூறுவதுபோல இருந்த அவரின் செய்கைக்கு சமூக வலைதளங்களில் பலர் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

இந்நிலையில் ரோனால்டோவின் செய்தியாளர் சந்திப்பு நிகழ்வுக்கு பிறகு கோகோ கோலா நிறுவனத்தின் பங்கு மதிப்பு உடனடியாக 56.10அமெரிக்க டாலர்களிலிருந்து 55.22 அமெரிக்க டாலர்களாக சரிந்தது.

அதாவது கிட்டதட்ட 1.6 சதவீத சரிவு அது. அதன்பொருள் குளிர்பானத்தின் சந்தை மதிப்பு 242 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 238 பில்லியன் அமெரிக்க டாலர்களாக குறைந்தது. அதாவது 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சரிவு.

`இது நீண்டகாலத்துக்கான சரிவல்ல`

கோ கோ கோலா

பட மூலாதாரம், Getty Images

இந்த சரிவுக்கு காரணம் ரோனால்டோவின் செய்தியாளர் சந்திப்பு நிகழ்வுதான் என்று கூறும் நிபுணர்கள் இருப்பினும் இது ஒரு குறைந்த கால தாக்கம்தான் என்று கூறுகின்றனர்.

“தற்போதைய சூழலில் ரோனால்டோ கோகோ கோலா பாட்டிலை தவிர்த்த்து கோகோ கோலாவின் சந்தை மதிப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை நாம் நம்பமுடிகிறது.” என பிபிசி போர்ச்சுகல் சேவையிடம் பேசிய ப்ளூம்பெர் இண்டலிஜென்ஸில் குளிர்பானங்களுக்கான சந்தை நிபுணர் கென்னத் ஷே தெரிவித்தார்.

இருப்பினும் இது நிறுவனத்தின் நீண்டகால மதிப்பை மாற்றாது என அவர் தெரிவிக்கிறார்.

“குறுகிய கால விளம்பரத்துக்கு ஒரு பொருள் பல வாடிக்கையாளர்களிடம் சென்றடைய நட்சத்திரங்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இருப்பினும் கோகோ கோலா போன்ற நிறுவனங்கள் நீண்டகால திட்டத்துடன் வடிவமைக்கப்பட்டவை. அந்த நிறுவனம் பலதரப்பட்ட குளிர்பானங்களை தயாரிக்கிறது. அதில் பாட்டில் குடிநீர் உட்பட சக்கரை மற்றும் கலோரிகள் அற்ற குளிர்பானங்களும் அடக்கம்.” என ஷே மேலும் விவரிக்கிறார்.

ரொனால்டோவின் இந்த நடவடிக்கைக்கு சமூக வலைதளங்களில் பலர் பாராட்டுகளை தெரிவித்து வந்தாலும், ஒருசிலர் 2006ஆம் ஆண்டு ஜப்பானில் அவர் நடித்த கோகோ கோலா விளம்பரம் குறித்தும் பேசி வருகின்றனர்.

இருப்பினும் ரோனால்டோவின் இந்த நடவடிக்கை இன்ஸ்டாகிராமில் அவருக்கு உள்ள 700 மில்லியன் பின் தொடர்வோரை சென்றடைந்துள்ளது.

36 வயது ரோனால்டோ போர்ச்சுகல் அணி 2016ஆம் ஆண்டு UEFA Euro உலகக் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.

கால்பந்து ஆட்டத்தில் பல சாதனைகளை தனதாக்கியுள்ள ரோனால்டோ போர்ச்சுகல் மற்றும் ரியல் மேட்ரிட் அணிகளுக்கு பல சிறப்புகளைப் பெற்று தந்தவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »