Press "Enter" to skip to content

இரான் அதிபர் தேர்தல் 2021: அரசியல்வாதிகள், இஸ்லாமிய மதகுருக்கள்: இரானில் யாருக்கு அதிகாரம் அதிகம்?

பட மூலாதாரம், ANADOLU AGENCY

ஜனநாயகத்துடன் நவீன காலத்து இஸ்லாமிய கோட்பாடுகளோடு இறைவன் பெயரில் மதகுருமார்கள் ஆட்சி செய்வது என ஒரு சிக்கலான மற்றும் வழக்கமில்லாத அரசியல் அமைப்பைக் கொண்டிருக்கிறது இரான்.

அதோடு மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத அதி உயர் தலைவரால் கட்டுப்படுத்தப்படும் அமைப்புகள், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அதிபர் மற்றும் நாடாளுமன்றத்துடன் இணைந்து செயல்படுகின்றன.

இரானின் அரசியல் அமைப்பு எப்படி செயல்படுகிறது மற்றும் யாரிடம் அதிகாரம் இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

இரானின் அதி உயர் தலைவர்

ஆயத்துலா அலி காமனேயி

பட மூலாதாரம், Reuters

இரானில் அதி உயர் தலைவர் என்பது மிக முக்கியமான மற்றும் சக்திவாய்ந்த பதவி. இதுவரை இருவர் மட்டுமே இந்த பதவியில் இருந்துள்ளனர். இது இரான் அரசியல் அமைப்பின் உச்சபட்ச பதவி எனலாம்.

1979ஆம் ஆண்டு இஸ்லாமிய புரட்சிக்குப் பிறகு ஷா மொஹம்மது ரெசா பலாவி ஆட்சியில் இருந்து தூக்கி எரியப்பட்டார். அதன் பிறகு இரான் குடியரசை நிறுவிய ஆயத்துல்லா ருஹல்லா காமனெயி அதி உயர் தலைவராக பதவியில் இருந்தார். அவரைத் தொடர்ந்து ஆயத்துல்லா அலி காமனெயி அப்பதவியில் இருந்து வருகிறார்.

அதி உயர் தலைவர் இரானின் முப்படைகளின் தளபதியாவார். பாதுகாப்பு படைகள் இவரது கட்டுப்பாட்டில் இருக்கும். தலைமை நீதிபதி, கார்டியன் கவுன்சில் உறுப்பினர்களில் பாதி பேர், வெள்ளிக்கிழமை பிரார்த்தனை தலைவர்கள், அரசுத் தொலைக்காட்சி மற்றும் வானொலியின் தலைவர் போன்ற பதவிகளுக்கான நபர்களை இவர்தான் தேர்வு செய்கிறார்.

பல பில்லியன் டாலர் கொண்ட இரானின் அதி உயர் தலைவரின் நன்கொடை அமைப்புகள், இரான் பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்காற்றுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

1989ஆம் ஆண்டு ஆயத்துல்லா ரொஹல்லா காமனெயி மரணமடைந்த பிறகு ஆயத்துல்லா அலி காமனெயி அப்பதவிக்கு வந்தார். தம் பதவிக்கான அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொண்டார். இரானின் ஆளும் அமைப்புக்கு ஏற்பட்ட சவால்களை அடக்கி ஒடுக்கினார்.

இரான் அதிபர்

ஹசன் ருஹானி

பட மூலாதாரம், EPA

இரானின் அதிபர் பதவிக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது. ஒருவர் இரண்டு முறைக்கு மேல் தொடர்ச்சியாக அதிபர் பதவியை வகிக்க முடியாது.

அதிபர் பதவி இரானின் இரண்டாவது உயர் அதிகாரம் உடையவர் என அவர்களின் அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. அவர் நிர்வாக அதிகாரத்தின் செயல் தலைவராக இருக்கிறார். நாட்டில் அரசியலமைப்புச் சட்டம் அமல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டியது இவர் பொறுப்பு.

உள்நாட்டுக் கொள்கை, வெளிவிவகாரம் போன்ற விஷயங்களை தீர்மானிப்பதில் இரான் அதிபருக்கு கணிசமான செல்வாக்கு இருக்கிறது, இருப்பினும் அதி உயர் தலைவர் தான் இரான் நாடு சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களிலும் இறுதி முடிவை எடுப்பார்.

இந்த மாதம், இரானியர்கள் தங்களின் அதிபர் ஹசன் ருஹானிக்கு பிறகு யார் அதிபர் பதவிக்கு வர வேண்டும் என தீர்மானிக்க இருக்கிறார்கள். ஹசன் ருஹானி ஒரு மிதவாத மதகுரு. இவர் கடந்த இரு தேர்தல்களிலும் முதல் சுற்றிலேயே 50 சதவீதத்துக்கு மேல் அதிக வாக்குகளைப் பெற்று மிகப் பெரிய வெற்றி பெற்றார்.

இரானின் அதிபர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவருமே இஸ்லாமிய இறையியலாளர்கள் மற்றும் சட்ட நிபுணர்கள் அடங்கிய 12 பேர் கொண்ட கார்டியன் கவுன்சிலால் ஒப்புதல் பெற வேண்டும்.

இந்த மாத அதிபர் தேர்தலுக்கு விண்ணப்பித்த 590 பேரில் வெறும் ஏழு பேருக்கு மட்டுமே இச்சபை ஒப்புதல் வழங்கி இருக்கிறது. பெண்கள் அதிபர் பதவிக்கான தேர்தலில் நிற்க அனுமதி இல்லை.

இரானின் நாடாளுமன்றம்

இரான் நாடாளுமன்றம்

பட மூலாதாரம், EPA

இரானின் நாடாளுமன்றத்தில் 290 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்களை மஜ்லிஸ் என்றழைக்கப்படுகிறார்கள். இவர்கள் நான்காண்டுகளுக்கு ஒரு முறை மக்களால் தேர்வு செய்யப்படுவார்கள்.

இரானின் நாடாளுமன்றத்துக்கு புதிய சட்டங்களைக் கொண்டு வரவும், ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நிராகரிக்கவும், அரசு அமைச்சர்கள் மற்றும் அதிபர்கள் தவறு செய்தால் அவர்களை தண்டிக்கவும் அதிகாரம் இருக்கிறது. நாடாளுமன்றம் நிறைவேற்றும் சட்டங்ளுக்கு கார்டியன் கவுன்சில் ஒப்புதல் வழங்க வேண்டும்.

கார்டியன் கவுன்சில் சீர்திருத்தவாதிகள் மற்றும் மிதவாதிகள் என 7,000க்கும் மேற்பட்ட போட்டியாளர்களை தகுதி நீக்கம் செய்ததால் தீவிர கொள்கைவாதிகள் 2020 நாடாளுமன்றத் தேர்தலில் பெரிய அளவில் வெற்றி பெற்று இருக்கின்றனர்.

கார்டியன் கவுன்சில்

ஆயத்துல்லா அஹ்மத் ஜன்னதி

பட மூலாதாரம், AFP

இரானிலேயே மிகவும் சக்தி வாய்ந்த அதிகார அமைப்பு இந்த கார்டியன் கவுன்சில். இவ்வமைப்புக்கு நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட அனைத்து மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிக்க அல்லது அவற்றை திருப்பி அனுப்பும் (வீட்டோ) அதிகாரம் உள்ளது. நாடாளுமன்றம், அதிபர் பதவி மற்றும் நிபுணர்களின் சபைக்கு போட்டியிடுவதிலிருந்து வேட்பாளர்களை இவ்வமைப்பால் தடுக்க முடியும்.

அதி உயர் தலைவரால் இச்சபையில் நியமிக்கப்பட்ட ஆறு இறையியலாளர்களும், நீதித்துறையால் பரிந்துரைக்கப்பட்ட மற்றும் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆறு நீதிபதிகளும் இச்சபையில் உறுப்பினர்களாக உள்ளனர். இச்சபையில் நியமிக்கப்படும் உறுப்பினர்கள் ஆறு ஆண்டு காலத்துக்கு நியமிக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் பாதி உறுப்பினர்கள் மாறுவர்.

இச்சபையில் தீவிர கொள்கைவாதிகள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். அதில் இச்சபையின் தலைவர் ஆயதுல்லா அஹ்மத் ஜன்னதியும் அடக்கம்.

நிபுணர்கள் சபை

இரானின் நிபுணர்கள் சபை

பட மூலாதாரம், ANADOLU AGENCY

88 இஸ்லாமிய பண்டிதர்கள் மற்றும் மதகுருமார்கள் கொண்ட சபை இது. இரானின் அதி உயர் தலைவரை தேர்வு செய்யும், அவரின் செயல்பாட்டை மதிப்பீடு செய்யும் பொறுப்பு இந்த சபையிடம் இருக்கிறது. ஒருவேளை அதி உயர் தலைவர் சரியாக செயல்படவில்லை எனில், அவரை பதவியில் இருந்து நீக்கும் அதிகாரம் இச்சபைக்கு இருக்கிறது.

இத்தனை அதிகாரங்கள் இருந்தும் இச்சபை எப்போதும் அதி உயர் தலைவரின் முடிவுகளை எதிர்த்ததில்லை. தற்போதைய அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனேயியின் உடல் நலக் கோளாறுகளால், இச்சபையின் முக்கியத்துவம் இப்போது கூடி இருக்கிறது.

அதி உயர் தலைவர் காலமானாலோ, செயல்பட முடியவில்லை என்றாலோ இந்த நிபுணர்கள் சபை ஒரு ரகசிய வாக்கெடுப்பை நடத்தும். அதிக வாக்குகள் அடிப்படையில் அடுத்த அதி உயர் தலைவர் தேர்வு செய்யப்படுவார்.

எட்டு ஆண்டு காலத்துக்கு ஒரு முறை நிபுணர்கள் சபைக்கான தேர்தல் நடைபெறும். கடந்த 2016ஆம் ஆண்டு இச்சபைக்கான தேர்தல் நடந்தது. இதில் சீர்திருத்தவாதிகளும், மிதவாதிகளும் 60 சதவீத இடங்களில் வெற்றி பெற்றனர்.

ஆயதுல்லா அஹ்மத் ஜன்னதி என்கிற தீவிர கொள்கைவாதி இச்சபைக்கும் தலைவராக இருக்கிறார். இவர் கார்டியன் கவுன்சிலுக்கும் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எக்ஸ்பீடியன்சி கவுன்சில்

இச்சபை அதி உயர் தலைவருக்கு ஆலோசனைகளை வழங்குகிறது, அதோடு நாடாளுமன்றத்திற்கும் கார்டியன் கவுன்சிலுக்கும் இடையிலான சட்டங்கள் தொடர்பான சர்ச்சைகளில் இறுதி தீர்ப்பளிக்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது.

இச்சபைக்கான 45 உறுப்பினர்களை (முக்கிய மத, சமூக, அரசியல் பிரமுகர்கள்) அதி உயர் தலைவர் நியமிக்கிறார். தலைவர் தற்போது ஆயதுல்லா சாதெக் அமோலி லரிஜானி, தீவிர கொள்கைவாதியான இவர் முன்னாள் நீதித்துறை தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நீதித் துறைத் தலைவர்

இப்ராஹிம் ரைசி

பட மூலாதாரம், EPA

அதி உயர் தலைவரால் நியமிக்கப்பட்டு, அவருக்குக் கீழ் பணிபுரிவார் இரானின் தலைமை நீதிபதி. இவர் நாட்டின் நீதித்துறைக்கு தலைமை தாங்குகிறார். நீதிமன்றங்களும் நீதிபதிகளும் இஸ்லாமிய சட்டங்களை அமல்படுத்துவதை உறுதி செய்வது மற்றும் சட்டக் கொள்கையை வரையறுப்பது இவர் பொறுப்பு.

தலைமை நீதிபதி இப்ராஹிம் ரைசி ஒரு தீவிர கொள்கைவாத மதகுரு. இரானிய தலைமை நீதிபதி கார்டியன் கவுன்சிலின் ஆறு உறுப்பினர்களையும் பரிந்துரைக்கிறார்.

வாக்காளர்கள்

வாக்காளர்கள்

பட மூலாதாரம், AFP

இரானின் 8.3 கோடி மக்கள்தொகையில், சுமார் 5.8 கோடி மக்கள் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், வாக்களிக்க தகுதியுடையவர்கள். இரானின் வாக்காளர்களில் பெரும்பகுதியினர் கிட்டத்தட்ட 30 வயதுக்கு உட்பட்டவர்கள்.

2020ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்களைத் தவிர, 1979ல் இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர் நடந்த எல்லா தேர்தல்களிலும் வாக்களித்தவர்கள் விகிதம் தொடர்ந்து 50 சதவீதத்துக்கு மேலாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மதகுருமார்களின் ஆதிக்கம் மற்றும் பொருளாதாரத்தின் நிலை குறித்து மக்களுக்கு இருந்த அதிருப்தியால் வாக்காளர்கள் 2020ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் விலகி இருந்ததாகக் கூறப்படுகிறது.

ராணுவம் மற்றும் ஆயுதப் படைகள்

இரான் ஆயுதப் படை

பட மூலாதாரம், Anadolu Agency

இஸ்லாமிய புரட்சிகர காவல்படை மற்றும் வழக்கமான ராணுவ பிரிவுகளை உள்ளடக்கியது தான் இரானின் ஆயுதப் படைகள்.

இஸ்லாமிய அமைப்பைப் பாதுகாப்பதற்கும் இராணுவத்திற்கு எதிராக ஒரு வலுவான படை இருக்க வேண்டும் என்பதற்காகவும், இஸ்லாமிய புரட்சிக்குப் பிறகு இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அமைக்கப்பட்டது. பின்னர் அதி உயர் தலைவருடனான நெருக்கத்தினால், அப்படை இரானில் ஒரு பெரிய ஆயுத, அரசியல், பொருளாதார சக்தியாக மாறியுள்ளது.

இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தனியே தரைப்படை, கடற்படை மற்றும் விமானப் படைகளைக் கொண்டுள்ளது. மேலும் இரானின் முக்கிய ஆயுதங்களை மேற்பார்வை செய்கிறது. இப்படி, உள்நாட்டு இராணுவ எதிர்ப்பை அடக்க உதவும் துணை ராணுவப் படையான பஸிஜ் எதிர்ப்பு படையையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.

அனைத்து மூத்த இஸ்லாமிய புரட்சிகர காவல்படை மற்றும் இராணுவத் தளபதிகளும், தங்களின் முப்படைத் தளபதியாக இருக்கும் அதி உயர் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள், அவருக்கு மட்டுமே அத்தளபதிகள் பதிலளிக்கிறார்கள்.

அமைச்சரவை

அமைச்சரவை

பட மூலாதாரம், Anadolu Agency

அமைச்சரவை உறுப்பினர்கள், அல்லது அமைச்சர்கள் சபை, அதிபரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அவர்கள் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும்,

அதிபர் அல்லது அமைச்சரவை விவகாரங்களுக்கு பொறுப்பான முதல் துணைத் தலைவர் அமைச்சரவைக்கு தலைமை தாங்குகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »