Press "Enter" to skip to content

Pornhub மீது பெண்கள் வழக்கு: அனுமதியின்றி காணொளிகளை வெளியிட்டதாக புகார்

பட மூலாதாரம், Getty Images

தங்கள் அந்தரங்க காணொளிகளை, தங்களின் அனுமதியின்றி ’பார்ன்ஹப் காணொளிஸ்’ பயன்படுத்தியதாக, அந்நிறுவனத்தின் மீது 30-க்கும் மேற்பட்ட பெண்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

தங்களது அனுமதியை முறையாகப் பெறாமல் பார்ன்ஹப் வலைதளத்தில் தங்கள் காணொளிகளை பதிவேற்றியது தொடர்பாக, கலிஃபோர்னிய நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார்கள் அப்பெண்கள்.

பார்ன்ஹப் நிறுவனத்தின் தாய் நிறுவனம் தான் மைண்ட்கீக். அந்நிறுவனம் ஒரு குற்றவியல் நிறுவனத்தை நடத்துவதாக கலிஃபோர்னியாவில் தொடுக்கப்பட்டிருக்கும் வழக்கில் குற்றம்சாட்டி இருக்கிறார்கள்.

பார்ன்ஹப் நிறுவனமோ இந்த குற்றச்சாட்டு முற்றிலும் அபத்தமானது, பொறுப்பற்றது, பகுதியளவில் தவறானது என தன் செய்தியறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறது.

பொதுவாக பார்ன்ஹப் வலைதளத்தை இலவசமாகவே பயன்படுத்தலாம், ஆனால் பயனர்கள் தரமான காணொளிக்காகவும், கூடுதல் காணொளிக்காகவும் மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

இந்த தளத்தில் பதிவேற்றப்படும் காணொளிகள் பெரும்பாலும் சில சமூகங்களால் பதிவேற்றப்பட்டு பொதுவெளியில் பலராலும் பார்க்கப்படுகிறது. இருப்பினும் பதிவேற்றப்படும் காணொளிகளை மனிதர்களே மதிப்பீடு செய்வதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

அந்தரங்கம்

பட மூலாதாரம், Getty Images

“சட்ட விரோதமான காணொளிகள் விவகாரத்தில் பார்ன்ஹப் நிறுவனம் சிறிய விஷயத்தை கூட பொருத்துக் கொள்ளாது. எங்கள் தளத்தில் வெளியான காணொளி தொடர்பாக வரும் புகார்களை அல்லது குற்றச்சாட்டுகளை நிறுவனம் விசாரிக்கும்” என பிபிசியிடம் கூறியது பார்ன்ஹப்.

“UGC என்றழைக்கப்படும் பயனர்களே தளத்தில் இருக்கும் உள்ளடக்கங்களைத் தயாரிக்கும் வலைதளங்கள் வரலாற்றிலேயே மிகவும் பரந்துபட்ட முழுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கொண்டிருக்கிறது பார்ன்ஹப். இதில், சரிபார்க்கப்படாத பயனர்களிடமிருந்து காணொளிகள் பதிவேற்றப்படுவதற்கு தடை செய்யப்படுவதும் அடக்கம்” என்கிறது பார்ன்ஹப் நிறுவனம்.

பார்ன்ஹப் நிறுவனத்தின் வலைதளத்தில் பதிவேற்றப்படும் காணொளிகளில் இருப்பவர்களின் வயதோ, அவர்களின் அடையாளங்களோ கட்டாயமாக சரிபார்க்கப்படுவதில்லை. அதே போல காணொளி பதிவேற்றப்படும் முன் காணொளி இருப்பவர்களிடமிருந்து அனுமதி பெறப்படுவதில்லை என பிபிசியின் அமெரிக்க பாட்னர்ஷிப் ஊடகம் சிபிஎஸ் கூறுகிறது.

2000ஆம் ஆண்டின் கடத்தல் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இந்த வழக்கு தொடுக்கப்பட்டு இருக்கிறது என வழக்கு தொடுத்திருக்கும் பெண்கள் தரப்பில் வாதாடும் ப்ரவுன் ருட்னிக் எல்எல்பி என்கிற நிறுவனம் கூறுகிறது.

நீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images

தன் ஆண் நண்பர் தன்னை கட்டாயப்படுத்தி நிர்வாண காணொளியை எடுத்த போது தனக்கு 17 வயது தான் எனவும், பிறகு தன் அனுமதி இல்லாமலேயே அக்காணொளி பார்ன்ஹப் வலைதளத்தில் பதிவேற்றப்பட்டதாகவும், இப்படி ஆபாச வலைதளத்தில் பதிவேற்றப்பட்ட செய்தி தன் நண்பர் ஒருவர் மூலம் தனக்கு தெரிய வந்ததாகவும் சிபிஎஸ் நிறுவனத்திடம் கூறுகிறார் இசபெல்லா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

“தங்களின் வலைதளத்தை தவறாக பயன்படுத்தியதாக கூறப்படும் எல்லா புகார்களையும் பார்ன்ஹப் தீவிரமாக எடுத்துக் கொள்கிறது. இப்போது வழக்கு தொடுத்திருப்பவர்களின் புகார்களையும் பார்ன்ஹப் தீவிரமாக எடுத்துக் கொள்கிறது” என பார்ன்ஹப் நிறுவனம் கூறியுள்ளது.

“இணையத்தில் வேறு எந்த முக்கிய தளத்தை விடவும் கூடுதலான பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளை பார்ன் ஹப் நடப்பில் வைத்திருப்பதை திசை திருப்பும் வகையில், இவ்வழக்கில் கூறப்பட்டிருக்கும் மிகைப்படுத்தப்பட்ட மொழியை அனுமதிக்க விரும்பவில்லை” என கூறியுள்ளது பார்ன்ஹப்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில், நியூயார்க் டைம்ஸ் விசாரணையில், பார்ன்ஹப் வலைதளம் சிறுவர்களை துன்புறுத்துவது மற்றும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான காணொளிகளால் “நிறைந்துள்ளது” குற்றம் சாட்டியது. அதை பார்ன்ஹப் மறுத்தது.

கடந்த 2019-ம் ஆண்டில் மொத்தம் 4,200 கோடி முறை பார்ன்ஹப் வலைதளத்துக்கு அதன் பயனர்கள் வந்திருக்கிறார்கள். 6.83 மில்லியன் காணொளி பதிவுகள் பதிவேற்றப்பட்டன. 169 ஆண்டுக்கு நிகரான நேரத்துக்கு காணொளிகளைப் பார்த்து இருக்கிறார்கள் என பார்ன்ஹப் கூறியது. ஆனால் காணொளிகளை பார்த்து மதிப்பீடு செய்ய எத்தனை பேரை வேலைக்கு வைத்திருக்கிறது என கூறவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »