Press "Enter" to skip to content

தீவு வாழ்க்கை: நீங்கள் பல் துலக்குவதைக்கூட வேடிக்கை பார்க்கும் கழுகுகள்

  • டெபி ஜாக்சன்
  • பிபிசி ஸ்காட்லாந்து

பட மூலாதாரம், HOUSE BY THE STREAM

அலெக்ஸ் மம்ஃபோர்ட் பல் துலக்க வெளியே நடந்து செல்கிறார். அவர் ஒரு அழகான ஸ்காட்டிஷ் தீவில் வசிக்கிறார்.

தலைக்கு மேலே இரண்டு கடல் கழுகுகள் வானம் நோக்கிப்பறந்து சர்ரென்று கீழே வந்து ஒலிஎழுப்பி தங்கள் இருப்பைத் தெரியப்படுத்துகின்றன.

இது அலெக்ஸ் மற்றும் அவரது பார்ட்னர் பஃபி கிராக்னெல் விரும்பி தேர்வுசெய்துள்ள தீவு வாழ்க்கை.

ஆறு மாதங்களுக்கு முன்பு இந்த பிரிஸ்டல் ஜோடி, ஸ்காட்டிஷ் நிலப்பரப்பில் இருந்து 30 மைல் தொலைவில் உள்ள ஐல் ஆஃப் ரம்மில் தங்களுக்கென ஒரு சிறந்த வாழ்க்கையை உருவாக்கிக்கொள்ளும் முயற்சியில் மற்ற அனைத்தையும் கைவிட்டு இங்கு குடியேறியுள்ளனர்.

தீவின் சமூக அறக்கட்டளை, புதிய குடியிருப்பாளர்களுக்காக விடுத்த அழைப்புக்கு அவர்கள் பதிலளித்தனர். சுற்றுச்சூழலுக்கு ஏற்புடைய வீடுகளைக்கொண்ட ஒரு சிறிய கிராமத்தில் வாழ்வதற்கும், சமூகத்திற்கு மிகமுக்கியமான ஒன்றை திரும்ப அளிக்கும்பொருட்டும், 440 விண்ணப்பங்களில் இருந்து நான்கு குடும்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

கோவிட் நிலைமை காரணமாக தாங்கள் சென்று பார்க்கமுடியாத அந்தத்தீவில் அலெக்ஸும், பஃபியும் டிசம்பர் மாதம் குடியேறினார்கள்.

ஆறு மாதங்கள் கழித்து இந்த ஜோடியின் வாழ்க்கை எப்படி உள்ளது?

‘நாங்கள் இப்போது ஏதோ ஒன்றை திருப்பித் தரமுடியும் என்று நினைக்கிறோம்’

அலெக்ஸும், பஃபியும் இப்போது அங்கு நன்றாகவே ஒன்றிவிட்டார்கள். உள்ளூர் வாழ்க்கையின் நடைமுறைகள், தீவில் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்பதைப் புரிந்துகொள்ள அவர்களுக்கு சில மாதங்கள் பிடித்தன.

“நாங்கள் இருவரும் இப்போது தீவில் வேலை செய்கிறோம். ஏதோ ஒரு வழியில் எங்களால் சமூகத்திற்கு நன்மை செய்யமுடியும் என்று நினைக்கிறோம்” என்று அலெக்ஸ் கூறினார்.

“ரம் போன்ற தொலைதூர இடத்திற்கு செல்ல இது ஒரு உந்து சக்தியாக இருந்தது.”

இந்த ஜோடி முன்பைவிட பரபரப்பாக தற்போது பணியாற்றுகிறது.. ஸ்காட்லாந்தின் இயற்கை நிறுவனமான நேச்சர் ஸ்காட் உடன் தன்னார்வத் தொண்டும் செய்து வருகிறது.

“நாங்கள் சமீபத்தில் பறவைகள் கூட்டத்தை கண்டுரசிக்க படகு மூலமாக தீவை சுற்றிவந்தோம். படகுக்கு மேலே கடல் கழுகுகள் உயரப்பறப்பதை கண்டு ரசித்தோம். பல்வேறு விதமான கடல் பறவைகள், டால்பின்கள் மற்றும் மின்கெ திமிங்கலம் போன்றவற்றை பார்த்து மகிழ்ந்தோம்,” என்று அலெக்ஸ் கூறினார்.

தீவு

பட மூலாதாரம், NSTAGRAM / HOUSE BY THE STREAM

” பிரிஸ்டல் வாழ்க்கையை இந்த வாழ்க்கையுடன் ஒப்பிடவே முடியாது.”

இன்னர் ஹெப்ரிட்ஸில் உள்ள சிறிய தீவுகளில் ஒன்றான ரம்,”மனதிற்கு அமைதி தரக்கூடிய இனிமையான இடம்” என்று இந்த ஜோடி வர்ணிக்கிறது. ஆனால் ஒரு தீவில் வாழ்வதில் போக்குவரத்து சவால்கள் உள்ளன என்று அவர்கள் கூறுகிறார்கள்.

படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டால் பலநாட்கள் பின்னடைவு ஏற்படக்கூடும். , இந்த ஆண்டின் தொடக்கத்தில் இதே போன்ற ஒரு சூழ்நிலையில் அவர்கள் மல்லாய்கில் சிக்கித் தவித்தனர். ஒரு உள்ளூர் படகு பயண நிறுவனத்தின் படகு மூலமாக அவர்கள் வீடு திரும்ப வேண்டியிருந்தது.

ஒரு தொலைதூர தீவு கூட கோவிட் பாதுகாப்பு நடவடிக்கைகளில் இருந்து தப்பவில்லை. எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இன்றி முழு தீவு வாழ்க்கையை அவர்கள் இன்னமும் அனுபவிக்கவில்லை. எதிர்காலத்தில் வரம்பற்ற பார்வையாளர்களை வரவேற்பதை அவர்கள் எதிர்நோக்குகிறார்கள்.

தீவின் வாழ்க்கை பழகுவதற்கு சிறிதுகாலம் பிடித்தது. ஆனால் அலெக்ஸ் மற்றும் பஃபி இப்போது முழுமையாக அதில் மூழ்கிவிட்டனர்.

அவர்கள் ஒரு தீவின் வலைப்பதிவில் தங்கள் அனுபவத்தைப் பதிவுசெய்து, சாகசங்களின் அழகான புகைப்படங்களை தங்கள் ‘ஹவுஸ் பை தி ஸ்ட்ரீம்’ பக்கத்தில் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள்.

ரம் தீவில் சூரியன் உதிக்கும் படம்

பட மூலாதாரம், INSTAGRAM / HOUSE BY THE STREAM

“பஃபி, ஐல் ஆஃப் ரம் சமூக அறக்கட்டளையுடன் பணிபுரிகிறார். நான் தீவின் சுற்றுலாத் துறையில் வேலை செய்கிறேன்,”என்று அலெக்ஸ் தெரிவித்தார்.

“நாங்கள் வேலை செய்யாத நேரத்தில் தீவை சுற்றிப்பார்க்கிறோம் அல்லது நண்பர்களுடன் வெளியில் நேரத்தை செலவிடுகிறோம். உங்கள் சூழல் மற்றும் நண்பர்கள் வட்டத்துடன் நீங்கள் திருப்தி அடைந்தால், வாழ்க்கையில் ‘செய்ய வேண்டியவை’ என்பது நிறைந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை நாங்கள் கற்றுக் கொண்டிருக்கிறோம், எனவே சில நாட்கள் மிகவும் மெதுவாக நகரும். அந்த நாட்கள் எங்களுக்கு மிகவும் பிடிக்கும். , படகில் வரும் செய்தித்தாள்களை பெற்றுக்கொள்ளச்செல்வோம்,” என்று அலெக்ஸ் விளக்குகிறார்.

“‘மேங்க்ஸ் ஷியர்வாட்டர் மேலாய்வு’ மற்றும்’நேச்சர் ஸ்காட் ஆடு எண்ணிக்கை’ஆகியவற்றின்போது பஃபி இங்கேயுள்ள மிக உயரமான மலைச்சிகரங்கள் சிலவற்றில் ஏறியுள்ளார். இது மனிதர்கள் செல்ல சிரமப்படும் நிலப்பரப்புகளில் நீண்ட நாட்கள் மலையேற்றத்தை உள்ளடக்கியது,”என்று அலெக்ஸ் மேலும் கூறினார்.

“நான் இரண்டு முறை கடற்பறவைகளை காணச்சென்றுள்ளேன். இது தீவில் கிடைக்கக்கூடிய ஒரு சலுகை. ஏனென்றால் நிலப்பரப்பில் இந்த வகையான காரியங்களைச் செய்வதற்கான வாய்ப்பு எங்கள் இருவருக்கும் கிடைப்பதை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. கடலில் உயரமான அலைகளுக்கு இடையில் நீந்துகிறேன். அவ்வளவு வேகமாக கண்களுக்குத்தென்படாத கடல் பாலூட்டிகளைத் தேடி நான் பலமுறை கட்டுமரத்தில் கடலுக்குள் சென்றிருக்கிறேன்,” என்கிறார் அவர்.

தீவு

பட மூலாதாரம், INSTAGRAM / HOUSE BY THE STREAM

‘நீங்கள் ஏறக்குறைய அனைவருடனும் வாழ்கிறீர்கள்’

அலெக்ஸ் மற்றும் பஃபி ஸ்காட்லாந்திற்குச் செல்வதற்கு முன்பு, புதிய வீட்டில் அவர்கள் மற்ற குடும்பங்களுடன் நெருக்கமாக இருப்பதை எதிர்பார்க்கலாம் என்று அவர்களிடம் கூறப்பட்டது. ஆனால் அது தாங்கள் முன்பு அனுபவிக்காத ஒன்று என்று அவர்கள் சொன்னார்கள்.

ரம் தீவு முழுவதிலும் உள்ள மக்களை விட அதிகமானவர்களுடன் அவர்கள் பிரிஸ்டலில் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் வாழ்ந்தார்கள். இருப்பினும் அவர்களைப்பற்றி எதுவுமே இந்த ஜோடிக்குத்தெரியாது. ஆனால் இந்தத்தீவில் நட்பும் உரையாடலும் “எளிதில் வருகின்றன”.

“நாங்கள் அனைவரும் பல விஷயங்களில் ஒரே போல இருக்கிறோம். புதிய குடும்பங்கள் எல்லாமே ஒன்றுக்கொன்று ஏதோ ஒரு வகையில் அல்லது வடிவத்தில் உதவியுள்ளன” என்று பஃபி கூறினார்.

“நீங்கள் விரும்பினால் இங்கே ஒரு தனிமையான வாழ்க்கையை வாழலாம் அல்லது ஒரு சமூக வாழ்க்கையின் சலசலப்புடன் வாழ முடியும். இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட வாழக்கையை நாங்கள் விரும்புகிறோம்,” என்கிறார் அவர்.

ரம்மின் இயற்கை அழகு அவர்களின் எதிர்பார்ப்புகளை விட அதிகமாக உள்ளது.

“கடந்த வாரம் ஒரு இரவு நான் வெளியே சென்று பல் துலக்கினேன். இரண்டு கடல் கழுகுகள் ஒலி எழுப்பியவாறே மேலிருந்து கீழே என் தலைக்கு மேலே பறந்துவந்து எங்கள் பின்னால் உள்ள மலைகளின் பக்கமாக மேல்நோக்கிப்பறந்துசென்றன. அந்தக்காட்சியை என்னால் நம்பவே முடியவில்லை,” என்று அலெக்ஸ் கூறினார்.

“இந்த தீவுவாழ்க்கை எங்களை எந்தவிதத்திலும் ஏமாற்றவில்லை.ஆனால் வேகமாக எதையாவது செய்து முடிப்பது ஒரு சவாலான விஷயம். ஏனென்றால் ‘ரம் டைம்’ மிகவும் மெதுவாகவே நகர்கிறது.,” என்று அலெக்ஸ் குறிப்பிடுகிறார்.

தீவு

பட மூலாதாரம், INSTAGRAM / HOUSE BY THE STREAM

தீவின் வடக்குப் பகுதி கரீபியனில் இருப்பதுபோன்ற கற்கரைகளைக் கொண்டுள்ளது. இந்த ஜோடி தங்கள் தோட்டத்தில் இருந்தபடி பல்வேறு பருவகாலங்களில் வனவிலங்குகளின் நடமாட்டத்தை பார்த்து மகிழ்கின்றனர். ‘நீர்நாய்கள்’ விளையாடுவதை பார்ப்பதும், ‘டால்பின்கள் ‘ படகுக்கு அருகில் நீந்துவதை பார்ப்பதும், இப்போதுகூட அவர்களுக்கு சிலிர்ப்பைத் தருகிறது.

அலெக்ஸ் தீவுக்கு வருபவர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கும், ஆராயப்படாத நிலப்பரப்பைக் காண்பிப்பதற்கும் ஆவலுடன் இருக்கிறார்.

முதல் ஆறு மாதங்கள் அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. கோவிட் பயணத் தடை அவர்கள் தங்கள் குடும்பத்தினரை சந்திப்பதை முடக்கிவிட்டது. ஆனால் கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்படும் போது தங்கள் குடும்பத்தை சந்திக்கவும், மேலும் பல பயணங்களையும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்,

ஆனால், “இதுபோன்ற ஒரு அழகான வாழ்க்கையை வாழ, நீண்டதூர கார்பயணமும், படகு பயணமும் நாங்கள் எதிர்கொள்ளும் சிறிய சிரமங்கள்,” என்று அவர்கள் சொன்னார்கள்.

தீவு வாழ்க்கை

பட மூலாதாரம், INSTAGRAM / HOUSE BY THE STREAM

‘நாங்கள் இப்போது தீவுவாசிகளைப் போல உணர்கிறோம்’

வாழ்க்கையில் என்ன வருகிறதோ அதை எதிர்கொள்ள இந்த ஜோடி கற்றுக்கொண்டுள்ளது.

“நாங்கள் ஜெர்ரி கேனில் யார் மூலமாவது கல்லெண்ணெய் வாங்கிக்கொள்ளமுடியும். உணவு வாங்குதல்களில் எப்போதுமே சரியான பொருட்கள் கிடைக்கும் என்று சொல்லமுடியாது. ஆனால் அதிர்ஷ்டவசமாக எங்கள் தீவில் ஒரு அருமையான கடை உள்ளது. பொருட்களின் பெரும்பகுதியை நேரடியாக அது வாங்குதல் செய்கிறது. “என்று கூறுகிறார் அலெக்ஸ்.

” ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யும் போக்கு உள்ளது. ஆனால் நாங்கள் சிறப்பாகச் செய்யமுடிவதில் கவனம் செலுத்தக் கற்றுக் கொண்டோம். மேலும் சமூகத்துடன் நாங்கள் கலந்துவிட்டோம். இப்போது எங்கள் திறன்களை பயன்படுத்தி உள்ளூர் மக்களுக்கும், பார்வையாளர்களுக்கும் பயனளிக்கும்விதமான வேலைகளை எங்களால் செய்யமுடியும் என்று நம்புகிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

தீவு வாழ்க்கை

பட மூலாதாரம், INSTAGRAM / HOUSE BY THE STREAM

இப்போது ஆறு மாதங்கள் கழித்து, அலெக்ஸ் மற்றும் பஃபி , தீவுவாசிகளைப் போல உணர்கிறார்கள், குறிப்பாக அவர்கள் நிலப்பகுதிக்குச் செல்லும்போது.

நாங்கள் எப்போதும் விஷயங்களை ஒப்பிட்டு, லண்டன் அல்லது பிரிஸ்டலில் எப்படி வாழ்ந்தோம் என யோசிக்கிறோம் என்று அலெக்ஸ் கூறுகிறார்.

“நாங்கள் இந்த நடவடிக்கையை எடுக்க முடிவு செய்தபோது ‘வித்தியாசமானவர்களாக’ பார்க்கப்பட்டோம். ஆனால் நகர வாழ்க்கையின் மூச்சுத்திணறலை ஒப்பிடும்போது ​​இது மிகவும் எளிதான தேர்வு,” என்று சொல்கிறார் அவர்.

“நீங்கள் நீங்களாகவே இருப்பதற்கு இங்கு அதிக சுதந்திரம் உள்ளது … மேலும் நீங்கள் வெளியே சென்று கழுகுகளுக்கு மத்தியில் பல்துலக்கலாம்.”

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »