Press "Enter" to skip to content

தாகா மஸ்லின்: 200 ஆண்டுகளாக கண்களை ஈர்த்த துணி வகைக்கு நேர்ந்த சோகம் – என்ன ஆனது?

  • ஜரியா கோர்வெட்
  • பிபிசி ஃப்யூச்சர்

பட மூலாதாரம், DRIK/ BENGAL MUSLIN

தாகாவின் மஸ்லின் 200 ஆண்டுகளாக உலகின் விலையுயர்ந்த துணிவகையாக இருந்து, இப்போது முற்றிலும் வழக்கொழிந்து விட்டது. இது எப்படி நடந்தது?

தாகாவில் மஸ்லின் ரக துணிகள் நீண்ட காலமாக புழக்கத்தில் இருந்து வந்தது. ஒரு காலத்தில் இது உலகின் மிகச் சிறந்த துணியாகவும், மிகவும் மதிப்புமிக்கதாகவும் கருதப்பட்டது. ஆனால் காலப்போக்கில் அது மதிப்பிழந்து போனது. இப்போது மீண்டும் அதன் பண்டைய மாண்பை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.

தாகாவின் மஸ்லின் பதினாறு படிகளைத் தாண்டி தான் அதன் வடிவத்தைப் பெறுகிறது. இது வங்கதேசத்தின் மேக்னா ஆற்றின் கரையில் (முந்தைய இந்திய வங்காளம்) வளர்க்கப்பட்ட அரிதான பருத்தியிலிருந்து தயாரிக்கப்பட்டது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தத் துணி உலகம் முழுவதும் விரும்பப்பட்டு வந்தது. பண்டைய கிரேக்கத்தில், தெய்வங்களின் சிலைகளுக்கு மஸ்லின் ஆடைகள் அணிவிக்கப்பட்டன. பல நாடுகளின் பேரரசிகள் மஸ்லின் ஆடைகளை அணிவதையே பெருமையாகக் கருதினர்.

முகலாயப் பேரரசர்கள் மற்றும் இந்தியத் துணைக் கண்டத்தில் ஆட்சி செய்த அமீர் – உம்ராவ் ஆகியோரின் ஆடைகளும் மஸ்லினால் தான் தயாரிக்கப்பட்டன.

மஸ்லினுக்கு அடிமையாயிருந்த உலகம்

மஸ்லின் மெல்லிய ஆடை

பட மூலாதாரம், Alamy

இந்த மஸ்லின் துணியில் பல வகைகள் இருந்தன. இதன் தன்மையாலும் மென்மையாலும் ஈர்க்கப்பட்ட அரசவைக் கவிஞர்கள், இதனை நெய்யப்பட்ட காற்று என வர்ணித்தார்கள்.

300 அடி நீளமுள்ள ஒரு துணியை ஒரு மோதிரத்தின் உள்ளே நுழைத்து வெளியே எடுத்துவிடக்கூடிய அளவுக்கு மெல்லிய துணி இது. 60 அடி நீளத் துணியை மடித்து ஒரு சிறிய மூக்குப் பொடி டப்பாவிற்குள் அடைத்துவிடலாம் என ஒரு பயணி எழுதியுள்ளார்.

அந்த நாட்களில் மஸ்லின் பொதுவாக புடவைகள் அல்லது ஜமா (குர்தா) தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டது, ஆனால் பிரிட்டனில் சமூகத்தில் பொருளாதார ரீதியாக அதிகாரரீதியாகவும் செல்வாக்குள்ள மேலடுக்கு மக்களின் ஆடைகளாக மாறியது. சில நேரங்களில் அதை அணிந்தவர் கேலிக்குரியவராக ஆகும் அளவுக்கு மெலிதாக இருந்தது.

இருப்பினும், தாகாவின் மஸ்லின் மீதான காதல் சற்றும் குறையவில்லை. அதை வாங்கும் திறன் கொண்டவர்கள், அதை பயன்படுத்தினர். அது அந்தக் கால கட்டத்தின் மிகவும் விலையுயர்ந்த துணி. 1851 ஆம் ஆண்டில், ஒரு கஜம் மஸ்லின் விலை 50 முதல் 400 பவுண்டுகள் வரை இருந்தது.

இன்றைய மதிப்பின் படி, அது 7,000 முதல் 56,000 பவுண்டுகள். அரச குடும்பங்களின் பாராட்டுகளுக்கும் பஞ்சமில்லை. ஃப்ரான்சின் ராணி மேரி அன்டோனெட் முதல் பேரரசி போனபார்டே மற்றும் ஜேன் ஆஸ்டின் வரை அனைவரும் மஸ்லினின் ரசிகர்களாக இருந்தனர். ஆனால் ஐரோப்பாவை எட்டும் முன் இதன் புகழ் மங்கத்தொடங்கியது.

16 நிலைகள் அடங்கிய தயாரிப்பு முறை

ஜோசஃபைன் போனபார்ட்க்கு மஸ்லின் மிகவும் பிடிக்கும்

பட மூலாதாரம், Alamy

20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், தாகாவின் மஸ்லின் உலகின் அனைத்து மூலைகளிலிருந்தும் மறைந்துவிட்டது. கொஞ்சம் நஞ்சம் மிஞ்சிய துணிகள், தனியாரிடமும் அருங்காட்சியகங்களிலும் மட்டுமே காணப்பட்டன.

அதன் சிறந்த வடிவமைப்பும் தயாரிப்பு முறையும் மறக்கப்பட்டு விட்டது. மேலும் கோசிபியம் ஆர்பிரியம் (தாவரவியல் பெயர்) அல்லது ‘ஃபுட்டி கர்பாஸ்’ என்ற உள்ளூர்ப் பெயரால் அழைக்கப்பட்ட பருத்தி வகையும் திடீரென அருகிவிட்டது. இந்த வகைப் பருத்தியால் மட்டுமே மஸ்லின் துணி தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இது எப்படி நடந்தது?

இந்த வகைப் பருத்தியை இப்போது மீண்டும் பயிரிட முடியுமா? தாகாவின் மஸ்லினுக்குப் பயன்படுத்தப்படும் பருத்திச் செடிகள் மேக்னா நதியில் (வங்கதேசம்) பயிரிடப்பட்டன. வளர்ந்த செடிகள், ஆண்டுக்கு இருமுறை, டஃபோடில் போன்ற மஞ்சள் பூக்களைத் தரும்.

இதிலிருந்து முற்றிலும் வெண்மையான லேசான பருத்தி வெளியே வந்தது. இது சாதாரண நூல் அல்ல.

தென் அமெரிக்காவில், இதனையொத்த வகைப் பருத்தி, கோசிபியம் ஹிர்ஸட்டம் (இதிலிருந்து தான் இன்று உலகின் 90 சதவிகிதப் பருத்தித் துணி தயாரிக்கப்படுகிறது.) இதன் நீண்ட இழைகளுடன் ஒப்பிடும்போது, ​​ஃபுட்டி கபாஸிலிருந்து தயாரிக்கப்பட்ட நூல் சற்று முடிச்சுகளுடனும் பலவீனமாகவும் இருந்தது.

மஸ்லின்

பட மூலாதாரம், DRIK/ BENGAL MUSLIN

இது இந்த நூலின் குறைபாடு போல் தோன்றலாம், ஆனால் இதிலிருந்து என்ன தயாரிக்கப் போகிறோம் என்பது தான் கேள்வி.

இந்த குறுகிய நூல் தொழில்துறை இயந்திரங்களால் தயாரிக்கப்பட்ட மலிவான துணிக்கு பொருந்தாது. இந்த நூல்கள் இயந்திரத்தின் பயன்பாட்டால் அறுபடுகின்றன.

உண்மையில், உள்ளூர் மக்கள் இந்த சிக்கலான நூலை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பயன்படுத்திய எளிய நுட்பங்கள் மூலம் சமாளித்தனர். தாகாவின் மஸ்லின் 16 நிலைகளைக் கடந்து அதன் இறுதி வடிவத்தை எட்டியது. இந்தச் செயல்முறை மிகவும் சிறப்பு வாய்ந்தது, ஒவ்வொரு நிலையையும் தாகாவைச் சுற்றியுள்ள ஒவ்வொரு கிராமமும் ஈடுபட்டு நிறைவு செய்தது.

இது இளைஞர்கள், முதியவர்கள், பெண்கள் மற்றும் ஆண்கள் என ஒரு சமூகமே ஈடுபட்டுச் செய்யும் ஒரு பணியாக இருந்தது. சம்பந்தப்பட்ட சமூகப் பணியாகும். முதலில், சிறிய பருத்திப் பந்துகள் போவால் மீனின் பற்களால் செய்யப்பட்ட சீப்புகளால் சுத்தம் செய்யப்பட்டு, பிறகு, நூல் நூற்க்கப்பட்டது.

நூலை உருவாக்க, அதிக ஈரப்பதம் தேவைப்பட்டது. அதனால்தான் படகுகளில் இந்த வேலை செய்யப்பட்டது. அதிகபட்ச ஈரப்பதம் இருக்கும் போது, ​​அதிகாலை அல்லது பிற்பகலில் இந்த வேலை செய்யப்பட்டது. முதியவர்கள், கண் பார்வைக் குறைபாடு காரணமாக நூல் நூற்கும் பணியில் ஈடுபடவில்லை.

2012ஆம் ஆண்டில், மஸ்லின் பற்றி ஒரு புத்தகத்தை எழுதிய எழுத்தாளரும் வடிவமைப்பு வரலாற்றாசிரியருமான சோனியா ஆஷ்மோர், பருத்தி நூல் நடுவில் சிறு முடிச்சுகளைக் கொண்டிருந்ததால், இது நூல் முழுவதையும் ஒன்றாகப் பிணைத்து வைத்திருந்தது. இது நூலின் மேற்பரப்பில் ஒரு கடினத்தன்மையை ஏற்படுத்தியது, இது மிகவும் அருமையான உணர்வைத் தருகிறது.

ஆசியாவின் அற்புதம் இந்த மஸ்லின்

மஸ்லின்

பட மூலாதாரம், DRIK/ BENGAL MUSLIN

தாகாவின் மஸ்லின் மிகவும் அற்புதமானது, இந்தப் பகுதிக்கு வருகை தரும் மக்கள் இது மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்று நம்புவதே கடினமாக இருந்தது. இது தேவதைகளால் உருவாக்கப்படுவதாகவே பலர் நம்பினர்.

மஸ்லின் மிகவும் இலகுவாகவும் மென்மையாகவும் இருப்பதால் இதற்கு ஒப்பு கூறும் வகையில் வேறொரு துணி இல்லை என வங்கதேசத்தின் தேசியக் கைவினைக் கூட்டமைப்பின் தலைவர் ரூபி கஸ்னவி கூறுகிறார். இன்று இந்த துணி எங்கும் காண முடிவதில்லை.

2013 ஆம் ஆண்டில், யுனெஸ்கோ ஜாம்தானி நெசவு முறையை ஒரு கலாச்சாரப் பாரம்பரியமாக அறிவித்தது.

ஒரு புகைப்பட நிறுவனத்தை நடத்தி வரும் ‘ரீசரெக்ட் த ஃபேப்ரிக்’ திட்டத்தின் தலைவரான சைஃபுல் இஸ்லாம், “இப்போது வரும் மஸ்லினில் நூல் எண்ணிக்கை 40 முதல் 80 வரை இருக்கின்றன. தாகாவின் மஸ்லினின் நூல் எண்ணிக்கை 800 முதல் 1200 வரை இருக்கும். இதிலிருந்தே அதன் தரத்தைப் புரிந்து கொள்ளலாம்.”

இந்த தனித்துவமான மஸ்லின் ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே மறைந்துவிட்டது.

மஸ்லின் தொழில் நலிவு ஏன்?

மஸ்லின்

பட மூலாதாரம், DRIK/ BENGAL MUSLIN

முகலாயர் காலத்தில் தான் மஸ்லின் துணி மிகவும் பிரபலமாக இருந்தது என ஆஷ்மோர் கூறுகிறார். முகலாயப் பேரரசர்களும் அவர்களது ராணிகளும் மஸ்லினுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து அத்தொழில் வளரச் செய்தனர். அந்நாட்களில் மஸ்லினை பெர்சியா (இப்போது ஈரான்), ஈராக், துருக்கி, மத்திய கிழக்கு நாடுகளுக்கு வர்த்தகம் செய்யப்பட்டது.

தாகாவின் மஸ்லின் பல மடிப்புகளைத் தாண்டியும் உடலின் பாகங்களை வெளிப்படுத்தும் அளவுக்கு மிகவும் மெல்லியதாக இருந்தது. ஒருமுறை அவுரங்கசீப் தனது மகளை மஸ்லின் அணிந்து அரசவைக்கு வந்ததற்காகக் கடிந்து கொண்டார் என்று கூறப்படுகிறது. அவர் ஏழு அடுக்குகள் கொண்ட மஸ்லின் ஆடையை அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

லண்டன் மக்கள் மஸ்லின் ஆடைகளை அணிவதில் பெருமிதம் கொண்டிருந்த அதே சமயத்தில் தான், அதன் கைவினைஞர்கள் கடனில் மூழ்கி நிதி ரீதியாக அழிந்து கொண்டிருந்தனர்.

‘குட்ஸ் ஃப்ரம் த ஈஸ்ட் 1600 – 1800’ என்ற புத்தகத்தில், கிழக்கிந்திய நிறுவனம் 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மஸ்லினை உருவாக்கும் நுட்பமான செயல்முறையைக் கையாளத் தொடங்கியது.

முதலாவதாக, மஸ்லின் வாங்கும் உள்ளூர்வாசிகளை அகற்றிவிட்டு, தானே நேரடியாக மஸ்லினை வாங்க நிறுவனம் முன்வந்தது. அதன் உற்பத்தியைக் கட்டுக்குள் கொண்டு வந்து, பின்னர் முழுவதுமாக இத்தொழிலைக் கையகப்படுத்தினர் என ஆஷ்மோர் கூறுகிறார். அதற்குப் பிறகு அவர்கள் குறைந்த செலவில் அதிக துணியை உற்பத்தி செய்யுமாறு நெசவாளர்களைக் கேட்கத் தொடங்கினர்.

மஸ்லின்

பட மூலாதாரம், DRIK/ BENGAL MUSLIN

“ஆனால் அது கடினமாக இருந்தது, ஏனெனில் ஃபுட்டி கர்பாஸிலிருந்து துணி தயாரிப்பதற்கு ஒரு குறிப்பிட்ட திறமை தேவைப்பட்டது. இது மிகவும் உழைப்பு மிகுந்த மற்றும் விலையுயர்ந்த செயல்முறையாகும், சில நேரங்களில் ஒரு நாள் முழுவதும் உழைத்தும், வெறும் எட்டு கிராம் துணி மட்டுமே தயாரிக்கப்பட்டிருக்கும்.” என இஸ்லாம் கூறுகிறார்.

“ஒரு குறிப்பிட்ட தரத்தில் துணியை நெசவு செய்வதற்குக் கைவினைஞர்களுக்கு முன்கூட்டியே பணம் வழங்கப்பட்டது, ஆனால் துணி அந்த நிர்ணயிக்கப்பட்ட தரத்தைப் பூர்த்தி செய்யாவிட்டால் பணத்தைத் திருப்பித் தர வேண்டியிருந்தது. அந்தத் தரத்தில் வேண்டுமானால், அவசர வேலை செய்ய முடியாது. அவசரமாகச் செய்தாக வேண்டிய கட்டாயமும் இருந்தது. இந்த அளவு துணி நெய்யப்பட வேண்டும் என்ற இலக்கும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.”

பின்னர் பிரிட்டிஷ் வணிகர்கள் அதிகபட்ச லாபத்தை ஈட்டுவதற்காக இயந்திரங்களின் உதவியுடன் பெரிய அளவில் தயாரிக்க முடிவு செய்தனர். ஆனால் சாதாரண பருத்தியிலிருந்து தயாரிக்கப்படும் மஸ்லின், கையால் நெய்யப்பட்ட தாகா மஸ்லினுடன் போட்டியிட முடியவில்லை.

இதனால், தாகாவின் மஸ்லின் தொழில் பல தசாப்தங்களாக நொடித்துப் போனது. மேலும் இறக்குமதி செய்யப்பட்ட துணிகளுக்கான தேவை குறைந்ததால் தாகாவின் மஸ்லின் தொழில் அழிந்தேபோனது. பின்னர், இப்பகுதியில் போர், வறுமை மற்றும் பூகம்பங்கள் காரணமாக, எஞ்சியிருந்த நெசவாளர்களும் குறைந்த தரம் வாய்ந்த துணியைத் தயாரிக்கத் தொடங்கினர், சிலர் விவசாயத்தை மேற்கொண்டனர். இறுதியில் மஸ்லின் தொழில் முற்றிலும் அழிந்தது.

தாகா மஸ்லினை மீட்டெடுக்க முயற்சி

தாகா மஸ்லினுக்கான பருத்தி

பட மூலாதாரம், DRIK/ BENGAL MUSLIN

வங்கதேசத்தில் பிறந்த இஸ்லாம் 20 ஆண்டுகளுக்கு முன்பு லண்டனுக்குக் குடிபெயர்ந்தார். 2013ஆம் ஆண்டில், தாகாவின் மஸ்லின் பற்றி அவர் அறிந்தார். ஆனால் மஸ்லினுக்குப் புத்துயிர் அளிக்கும் தாகாவின் முயற்சிக்கு முதல் முட்டுக்கட்டை, அழிந்து விட்ட ஃபுட்டி கர்பாஸ் வகை பருத்திச் செடிகள் தான்.

கீவ் நகரில் உள்ள ராயல் பொட்டானிக்கல் கார்டனில் இஸ்லாம் ஒரு கையேட்டைக் கண்டுபிடித்தார். அதில் உலர்ந்த கார்பாஸ் இலைகள் வைக்கப்பட்டிருந்தன. இதிலிருந்து அவர் அதன் டி.என்.ஏ வரிசைமுறை செய்தார். இஸ்லாம் வங்கதேசத்துக்குத் திரும்பி மேக்னா நதியின் பழைய வரைபடங்களை ஆய்வு செய்தார்.

கடந்த இருநூறு ஆண்டுகளில் அதன் நீரோட்டம் எவ்வாறு மாறியுள்ளது என்பதைக் கண்டறிந்தார். பின்னர் ஒரு படகில் சென்று ஆற்றின் குறைந்தது பன்னிரண்டு கிலோமீட்டர் அகலத்தில் உள்ள அனைத்துக் காட்டு தாவரங்களையும் தேடினார். குறிப்பாக கையேட்டில் உள்ள படத்தை ஒத்த தாவரங்களைத் தேடினார்.

இறுதியில், அவர் ஃபுட்டி கார்பாஸோடு 70 சதவீதம் ஒத்திருந்த மரக்கன்றுகளைக் கண்டறிந்தார். அது ஃபுட்டி கர்பாஸின் மூதாதையராக இருந்திருக்கலாம். இஸ்லாமும் அவரது குழுவும் ஃபுட்டி கர்பாஸ் வளர்ப்பதற்கு முயற்சித்தார்கள். ஆனால் அதில் வெற்றி பெறவில்லை.

இறுதியில் அவர் சாதாரண பருத்தி மற்றும் ஃபுட்டி கர்பாஸ் இரண்டையும் இந்திய நெசவாளர்களுடன் கலந்து ஒரு கலப்பின நூலை உருவாக்குவதில் வெற்றி கிட்டியது. இதுவரை, அவரது குழு இந்தக் கலப்பின மஸ்லினால் பல சேலைகளை உருவாக்கியுள்ளது.

இந்தச் சேலைகள், உலகம் முழுவதும் காட்சிப் படுத்தப்பட்டன. அவற்றில் சில, ஆயிரக்கணக்கான பவுண்டுகளுக்கு விற்பனையும் செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய மஸ்லினுக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பைப் பார்த்த இஸ்லாமுக்கு இந்த மஸ்லினுக்கு சிறந்த எதிர்காலம் கண்ணுக்குத் தெரிவதாகக் கூறுகிறார்.

விரைவில் ஒரு புதிய தலைமுறை இந்த துணியைத் தயாரிப்பதில் ஆர்வம் கொண்டு, மதிப்பிழந்து நிற்கும் இந்த அரிய வகைத் துணியின் மாண்பை மீட்டெடுக்கலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »