Press "Enter" to skip to content

Great Barrier Reef-க்கு ஆபத்தா? யுனெஸ்கோ – ஆஸ்திரேலியா மோதலுக்கு என்ன காரணம்?

பட மூலாதாரம், Getty Images

கிரேட் பேரியர் ரீஃப் என்கிற உலகின் மிக முக்கியமான பவளப் பாறை தொகுப்பை பருவநிலை மாற்றத்திலிருந்து பாதுகாக்க போதுமான நடவடிக்கைகளை ஆஸ்திரேலிய அரசு மேற்கொள்ளவில்லை என ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை கூறியதை அடுத்து ஆஸ்திரேலிய அரசாங்கம், ஐ.நா சபையை கடுமையாக சாடியுள்ளது.

கிரேட் பேரியர் ரீஃப் எனப்படும் கடலடி பெரும் பவளப்பாறைகள் சேதமடைந்து இருப்பதால், அதை ஆபத்தான நிலையில் இருக்கும் உலக பாரம்பரிய தளங்களின் பட்டியலில் சேர்க்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் அங்கமான யுனெஸ்கோ கூறியுள்ளது.

நீரின் தரத்தை மேம்படுத்துவதற்கான முக்கிய இலக்குகள் நிறைவேற்றப்படவில்லை எனவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டி இருக்கிறது.

இதேவேளை, “ஐக்கிய நாடுகள் சபையின் வல்லுநர்கள், கடந்த கால உத்தரவாதங்களை நிறைவேற்றவில்லை,” என கூறியிருக்கிறார், ஆஸ்திரேலிய சுற்றுச்சூழல் அமைச்சர் சுசன் லே.

ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பவளப் பாறையை ஆபத்தான நிலையில் இருக்கும் உலக பாரம்பரிய தளங்கள் பட்டியலில் வைப்பது குறித்த கூட்டம் அடுத்த மாதம் நடைபெறும் எனவும், அக்கூட்டத்தில் பவளப் பாறையை பட்டியலிடுவது தொடர்பாக ஆஸ்திரேலியா தன் எதிர்ப்பை பதிவு செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் சூசன் லே தெரிவித்துள்ளார்.

“இதற்குப் பின்னால் ஒரு அரசியல் இருக்கிறது. அந்த அரசியல் ஒரு சரியான செயல்பாட்டை தகர்த்து இருக்கிறது” எனவும் அவர் கூறியுள்ளார்.

பவளப் பாறைகள்

பட மூலாதாரம், Getty Images

யுனெஸ்கோ எனப்படும் உலக பாரம்பரியக் குழு என்பது சீனாவின் தலைமையிலான 21 நாடுகள் அங்கம் வகிக்கும் குழுவாகும், இது சமீபத்திய ஆண்டுகளில் ஆஸ்திரேலியா உடன் சிக்கலான ராஜீய உறவைக் கொண்டுள்ளது.

“பருவநிலை மாற்றம் என்பது உலகின் அனைத்து பவளப் பாறைகளுக்கும் இருக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தலாகும். உலகில் மொத்தம் 83 இயற்கையான உலக பாரம்பரிய சொத்துக்கள் பருவநிலை மாற்ற அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன, எனவே ஆஸ்திரேலியாவை மட்டும் தனிமைப்படுத்துவது நியாயமில்லை,” என சூசன் லே கூறினார்.

ஐக்கிய நாடுகளின் முடிவு ஆஸ்திரேலியாவின் பலவீனமான பருவநிலை நடவடிக்கையை எடுத்துக்காட்டுகிறது என சுற்றுச்சூழல் குழுக்கள் குறிப்பிடுகின்றன.

“யுனெஸ்கோவின் பரிந்துரை தெளிவாக இருக்கிறது. ஆஸ்திரேலிய அரசாங்கம் தமது மிகப் பெரிய இயற்கை சொத்தைப் பாதுகாக்க, குறிப்பாக பருவநிலை மாற்றம் குறித்து போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை,” என நேச்சர் ஆஸ்திரேலியாவுக்கான உலகளாவிய நிதியத்திற்கான பெருங்கடல்களின் தலைவர் ரிச்சர்ட் லெக் கூறினார்.

இத்தளத்தின் நிலை குறித்து யுனெஸ்கோ அமைப்புக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே நடந்து வரும் மோதலின் ஒரு பகுதியாக சமீபத்திய சர்ச்சை உள்ளது.

ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு கடற்கரையிலிருந்து 2,300 கி.மீ (1,400 மைல்) நீளமுள்ள இந்த பவளப் பாறை, 1981 ஆம் ஆண்டில் “மகத்தான அறிவியல் மற்றும் உள்ளார்ந்த முக்கியத்துவத்திற்காக” உலக பாரம்பரிய தர வரிசையைப் பெற்றது.

பவளப் பாறைகள்

பட மூலாதாரம், Getty Images

2017ஆம் ஆண்டில் யுனெஸ்கோ தனது ஆபத்தான நிலையில் இருக்கும் உலக பாரம்பரிய சின்னங்களில் ஆஸ்திரேலிய பவளப் பாறைகளைச் சேர்ப்பது குறித்து முதன்முதலில் விவாதித்த பின்னர், ஆஸ்திரேலியா தனது பவளப் பாறைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த 2.2 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்தது. இருப்பினும், கடந்த ஐந்து ஆண்டுகளில் பவளப் பாறைகள் வெளுத்துப் போயின.

புதை படிம எரிபொருட்களை எரிப்பதால் ஏற்படும் வெப்பத்தால் கடலின் வெப்பநிலை அதிகரிப்பதே பவளப் பாறைகள் வெளுத்துப் போக முக்கிய காரணம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

2019ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியாவின் பவளப் பாறைகளை நிர்வகிக்கும் ஆணையமே, தன் ஐந்தாண்டு புதுப்பித்தல் நடவடிக்கையில், பவளப் பாறைகளின் நிலையை ‘மோசமான’ என்பதில் இருந்து ‘மிகவும் மோசமான நிலை’ என தாழ்த்திக் குறிப்பிட்டு இருக்கிறது.

ஆனால், ‘2050 க்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வு’ போன்ற வலுவான பருவநிலை நடவடிக்கைகளில் கையெழுத்திட தயங்குகிறது ஆஸ்திரேலியா.

நிலக்கரி மற்றும் எரிவாயு ஏற்றுமதி செய்யும் நாடான ஆஸ்திரேலியா, 2015 முதல் அதன் பருவநிலை இலக்குகளை புதுப்பிக்கவில்லை. அதன் தற்போதைய இலக்கு, 2030க்குள் 2005 நிலைகளில் 26-28% உமிழ்வை குறைப்பதாகும்.

ஷைமா கலீலின் பகுப்பாய்வு, ஆஸ்திரேலியா செய்தியாளர்

கிரேட் பேரியர் ரீஃப்

ஆஸ்திரேலியா மற்றும் அதன் பருவநிலை மாற்ற கொள்கைக்கு கடினமான சில மாதங்களாக இருந்தன.

2050ஆம் ஆண்டு வாக்கில் நிகர பூஜ்ஜிய உமிழ்வு என்கிற இலக்கை நிறைவேற்றுவதாக கையெழுத்திடுமாறு ஸ்காட் மோரிசனின் அரசாங்கத்தின் மீது சர்வதேச அழுத்தம் அதிகரித்து வருகிறது, பிரதமர் மீண்டும் மீண்டும் அதை செய்ய மறுக்கிறார். கடந்த வாரம் கூட பிரிட்டனில் நடந்த ஜி 7 கூட்டத்தில் கையெழுத்திடுமாறு சர்வதேச அளவில் அழுத்தம் எழுந்தது.

ஏப்ரல் மாதம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பங்கேற்ற பருவநிலை காணொளி மாநாட்டில் உரையாற்றிய ஆஸ்திரேலிய பிரதமர், “எங்களால் முடிந்தவரை விரைவாக அந்த இலக்கை அடைவோம்” என்று கூறினார். மேலும் ஆஸ்திரேலியாவைப் பொருத்தவரை, இது சாத்தியமா, எப்போது அந்த இலக்கை அடைவோம் என்பது கேள்வி அல்ல, எப்படி அந்த இலக்கை அடையவிருக்கிறோம் என்பது தான் முக்கியம் என கூறினார்.

அது தான் பிரச்னையின் ஆணிவேர். பருவநிலை மாற்றத்தைப் பொருத்தவரை “எப்போது” என்பது தான் முக்கியம்.

ஆஸ்திரேலியா போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை அல்லது போதுமான வேகத்தில் செயல்படவில்லை என விஞ்ஞானிகள் மற்றும் உலகளாவிய தலைவர்கள் கூறுகிறார்கள்.

ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ அமைப்புக்கும், ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கும் இடையிலான கிரேட் பேரியர் ரீஃப் மோதல் ஒன்றும் புதியதல்ல, ஆனால் ஆஸ்திரேலியாவின் பவளப் பாறைகள் “ஆபத்தான நிலையில் இருக்கும் உலக பாரம்பரிய தளங்கள் ” பட்டியலில் சேர்க்கப்பட்டால், அது ஆஸ்திரேலியாவுக்கு சர்வதேச அரங்கில் பெரும் சங்கடமாக இருக்கும்.

தெளிவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கைகளுடன் பருவநிலை மாற்றம் தொடர்பான பிரச்னைகளை கையாள்வதில் ஆஸ்திரேலியா தீவிரம் காட்டவில்லை எனில், அது ராஜீய உறவுகள், பொருளாதாரம் மட்டுமின்றி கலாசார ரீதியாகவும் உலகில் அதன் நிலைப்பாட்டை பாதிக்கும்.

ஒருவேளை ஆஸ்திரேலியாவின் பவளப் பாறையின் நிலை அளவீடு குறைக்கப்பட்டால், முதன்முதலாக, பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தினால் “ஆபத்தில் உள்ள பாரம்பரிய சின்னங்கள்” பட்டியலில் இயற்கையாக உருவான ஒரு பாரம்பரிய தளம் சேர்க்கப்பட்டதாகவே பொருள் கொள்ள முடியும்.

ஒரு பாரம்பரிய தளத்தை “மிகவும் ஆபத்தில் இருக்கும் தளமாக” பட்டியலில் சேர்த்தால், அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள அது உதவலாம். எடுத்துக்காட்டாக, நிதி அல்லது விளம்பரத்திற்கான உதவிகள் அதிகரிக்கும்.

ஆனால் இந்த பரிந்துரை ஆஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் ஒரு பெரிய சுற்றுலா தலத்தை பாதிக்கும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »