Press "Enter" to skip to content

ஹாங்காங் ஜனநாயக ஆதரவு பத்திரிகைக்கு கண்ணீருடன் பிரியாவிடை கொடுத்த வாசகர்கள்

பட மூலாதாரம், Reuters

“மழையில் கண்ணீரோடு பிரியாவிடை கொடுத்த ஹாங்காங் மக்கள்” என்கிற தலைப்பில் ஆப்பிள் டெய்லி பத்திரிகை தன் வாசகர்களுக்கு நன்றி கூறியது.

ஜனநாயகத்துக்கு ஆதரவான கருத்துகளை பிரசுரிக்கும் பத்திரிகையான ஆப்பிள் டெய்லியின் கடைசி பதிப்பை படமெடுக்க ஆயிரக்கணக்கானோர் ஹாங்காங் நகரில் குவிந்தனர். இந்த பத்திரிகை 26 ஆண்டுகளுக்குப் பிறகு தன் சேவையை நேற்று நிறுத்திக் கொண்டது. இதன் கடைசி பிரதிகள் இன்று வெளியான நிலையில், அவற்றின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியது.

ஹாங்காங்கில் அமலில் இருக்கும் தேசிய பாதுகாப்பு சட்டத்தை மீறியதாகக் கூறி, இப்பத்திரிகை நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. எனவே இந்த பத்திரிகை தன் சேவையை நிறுத்திக் கொள்ள முடிவு செய்தது.

சீனாவின் அழுத்தத்தினால் மூடப்படும் இந்தப் பத்திரிகை, ஹாங்காங்கின் பத்திரிகை சுதந்திரத்துக்கு ஏற்பட்ட பேரிழப்பாக பார்க்கப்படுகிறது.

இன்று அதிகாலையிலேயே ஆப்பிள் டெய்லி பத்திரிகையின் கடைசி பிரதியைப் பெற நீண்ட வரிசையில் வாசகர்கள் காத்திருந்தனர். காலை 10 மணியளவில் ஆப்பிள் டெய்லி பத்திரிகைய விற்கும் முகவர்களிடம் இருந்த அத்தனை பிரதிகளும் விற்றுத் தீர்ந்ததாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன.

“மழையில் கண்ணீரோடு பிரியாவிடை கொடுத்த ஹாங்காங் மக்கள்” என்கிற தலைப்பில் ஆப்பிள் டெய்லி பத்திரிகையும் தன் வாசகர்களுக்கு நன்றி கூறியது.

“இது ஒரு சகாப்தத்தின் முடிவு எனக் கருதுகிறேன்” என்று அப்பத்திரிகையின் ஆதரவாளரான சன் ட்சங், அதன் கடைசி பிரதியை வாங்க வரிசையில் நின்று கொண்டிருக்கும் போது ராய்ட்டர்ஸ் முகமையிடம் கூறினார்.

“ஹாங்காங்கால் ஏன் ஒரு பத்திரிகையைக் கூட பொறுத்துக் கொள்ள முடியவில்லை என என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை” என்கிறார் அவர்.

ஹாங்காங்

பட மூலாதாரம், Getty Images

“நான் கடைசி வரை என் ஆதரவைத் தெரிவிக்க விரும்புகிறேன்,” என்கிறார் அம்மா யெங்.

“பல ஆண்டுகளாக இப்பத்திரிகை சமூகத்துடன் பயணித்திருக்கிறது. இதற்குப் பிறகு நாங்கள் இன்னும் கடினமான சூழலை எதிர்கொள்ளவிருக்கிறோம்,” என்கிறார்.

புதன்கிழமை ஆப்பிள் டெய்லி பத்திரிகை தன் சேவை நிறுத்தப் போவதாக அறிவித்தது. அடுத்த சில மணி நேரங்களில், கொட்டும் மழையில் அப்பத்திரிகையை ஆதரிக்கும் வாசகர்கள், ஆப்பிள் டெய்லி அலுவலகத்தின் முன் குவிந்து, தங்கள் செல்ஃபோனில் உள்ள டார்ச் லைட்டை ஒளிரச் செய்து தங்கள் ஆதரவையும், அன்பையும் வெளிப்படுத்தினர். அத்துடன் ஹாங்காங்கில் பரவலாக ஒலிக்கும் “முன்னேறிச் செல்” “விட்டு விடாதே” போன்ற கோஷங்களை ஜனநாயக ஆதரவு மக்கள் முழங்கினர்.

வாசகர்களின் ஆதரவுக்கு பதிலளிக்கும் வகையிலும், அவர்களின் அன்புக்கு நன்றி கூறும் விதத்திலும், ஆப்பிள் டெய்லி பத்திரிகை ஊழியர்கள், பால்கனி மற்றும் ஜன்னல் ஓரத்துக்கு வந்து தங்கள் கைபேசிகளின் டார்ச் லைட்டை ஒளிரச் செய்தனர். அத்துடன் ‘நன்றி ஹாங்காங்’ எனவும் குரல் எழுப்பினர்.

அலுவலகத்துக்குள் கண்ணீர், பாராட்டு, குழப்பம் என ஒரு மாதிரியான சூழல் நிலவியதாக செய்திகள் வெளியாயின.

கருத்து சுதந்திரம் குறித்த கவலை

ஹாங்காங்

பட மூலாதாரம், Getty Images

ஹங்காங்கின் மிகப் பெரிய ஜனநாயகத்துக்கு ஆதரவான பத்திரிகை ஆப்பிள் டெய்லி. இப்பத்திரிகை சீனாவுக்கு தலைவலியாக இருந்து வந்தது.

இப்பத்திரிகையில் வெளியான சில செய்திகள் ஹாங்காங்கின் தேசிய பாதுகாப்புச் சட்டத்தை மீறியதாக குற்றம் சுமத்தப்பட்டு, கடந்த வாரம் இப்பத்திரிகையின் அலுவலகத்தில் காவல்துறையினர் சோதனை நடத்தினர்.

2019 முதல் இப்பத்திரிகை பிரசுரித்த சுமார் 30 கட்டுரைகளில், ஹாங்காங் மற்றும் சீனா மீது தடை விதிக்க வேண்டும் என உலக நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதனால் அப்பத்திரிகைக்குச் சொந்தமான சொத்துக்கள் முடக்கப்பட்டன. அப்பத்திரிகையில் பணி புரியும் நான்கு உயர் பொறுப்பு வகிக்கும் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். ஏற்கெனவே இப்பத்திரிகையின் நிறுவனர் ஜிம்மி லாய் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் இருக்கிறார் என்பது நினைவுகூரத்தக்கது.

ஆப்பிள் டெய்லி பத்திரிகை மூடப்படுவதை புதன்கிழமை (23 ஜூன் 2021) மதியம் அறிவித்தது. அன்றைய இரவு தன் வலைதளத்தில் செய்திகள் பிரசுரிக்கப்படுவதை நிறுத்தியது.

வியாழக்கிழமை வெளியான தன் கடைசி பதிப்பை 10 லட்சத்துக்கு மேல் அச்சடித்தது. இது வழக்கமாக அச்சடிக்கப்படும் எண்ணிக்கையை விட 10 மடங்கு அதிகம் குறிப்பிடத்தக்கது.

“கருத்து சுதந்திரம் குறித்து பெரிய வருத்தமிருக்கிறது,” என கூறினார் ஹாங்காங் செய்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ரான்சன் சான்.

ஹாங்காங்

பட மூலாதாரம், Getty Images

“ஒரு கட்டுரை எழுதியதற்காக ஏதாவது எதிர்வினை வந்தால், நாங்கள் மிகவும் கவலைப்பட வேண்டி இருக்கும். மக்கள் தங்கள் கருத்துக்களை எழுதுவதற்காக சிறையில் அடைக்கப்படுவார்கள் என இச்சமூகத்தை உணர வைக்கும் என நான் பயப்படுகிறேன்” என்கிறார் சான்.

ஹாங்காங் அதிகாரிகள் பத்திரிகை சுதந்திரத்தை ஒடுக்குவதாக எழுந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்திருக்கிறார்கள். மேலும், அப்பத்திரிகையின் சேவையை நிறுத்த வேண்டும் என தாங்கள் கட்டாயப்படுத்தவில்லை எனவும் கூறியுள்ளனர்.

ஹாங்காங்கில் பத்திரிகை சுதந்திரத்தை தாங்கள் மதிப்பதாகவும், ஆனால் பத்திரிகை அரசின் கட்டுபாடுகளுக்கு உட்பட்டது எனவும் சீன அதிகாரிகள் கூறி வருகிறார்கள்.

தேசிய பாதுகாப்புச் சட்டம் என்றால் என்ன?

ஹாங்காங்கில் கடந்த ஆண்டு நடந்த ஜனநாயகத்துக்கு ஆதரவான போராட்டத்துக்குப் பிறகு சீனா இந்த தேசிய பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தது.

இச்சட்டம் ஹாங்காங்கின் சட்ட ரீதியிலன தன்னாட்சியை (Judicial Autonomy) குறைத்தது. போராட்டக்காரர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களை தண்டிப்பதை எளிமையாக்கியது.

இச்சட்டம் பிரிவினைவாதம், அரசை எதிர்ப்பது, வெளிநாட்டு சக்திகளோடு இணைந்து செயல்படுவது போன்ற விஷயங்களை குற்றங்களாகக் கருதுகிறது. இக்குற்றங்களுக்கு அதிகபட்சமாக வாழ்நாள் சிறை தண்டனை வழங்குகிறது

2020 ஜூனில் இச்சட்டம் கொண்டு வரப்பட்டதில் இருந்து இதுவரை 100 பேருக்கு மேல் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »