Press "Enter" to skip to content

Great Barrier Reef: ஆபத்தில் 1,500 வகை உயிரினங்கள், 400 வகை பவள பாறைகள் – எச்சரிக்கும் ஆர்வலர்கள்

பட மூலாதாரம், Getty Images

ஆஸ்திரேலிய தரப்பின் அழுத்தத்தைத் தொடர்ந்து, “ஆபத்தில்” இருக்கும் உலக மரபுச்சின்னங்களின் யுனெஸ்கோ பட்டியலில் கிரேட் பேரியர் கடலடி பவளப்பாறை சேர்க்கப்படவில்லை.

ஐ.நா.வின் அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோவின் அறிக்கையில், காலநிலை மாற்றத்திலிருந்து பவளப்பாறைகளை பாதுகாக்க மற்றும் நீர் தர இலக்குகளை பூர்த்தி செய்ய போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என கூறப்பட்டுள்ளது.

ஆனால் யுனெஸ்கோவின் உலக மரபுச்சின்னங்கள் குழு, ஆஸ்திரேலியாவுக்கு மேலும் கால அவகாசம் அளிக்க முடிவு செய்துள்ளது.

பவளப்பாறைகளின் நலனை மேம்படுத்துவதற்கு 3 பில்லியன் ஆஸ்திரேலிய டாலரை (1 பில்லியன் பவுண்டுகள் அல்லது 2.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) செலவு செய்ய உறுதியளித்துள்ளதாக ஆஸ்திரேலியா கூறுகிறது.

உலகின் இயற்கை அதிசயங்களில் ஒன்றான இந்த பவளப்பாறை, ஆஸ்திரேலியாவின் மிக விருப்பமான சுற்றுலா அடையாளங்களில் ஒன்றாகும்.

ஆனால் பவளப்பாறைகள் வெளுத்துப்போவது மற்றும் பிற சிக்கல்கள், அதன் சீரழிவை துரிதப்படுத்தியுள்ளது.

பவளப்பாறை என்றால் என்ன? அதன் சிறப்புகள் என்ன?

கிரேட் பேரியர் ரீஃப்

பட மூலாதாரம், Getty Images

கிரேட் பேரியர் பவளப்பாறை, அதன் “மகத்தான அறிவியல் மற்றும் முக்கியத்துவம்” காரணமாக கடந்த 40 ஆண்டுகளாக உலக மரபுச்சின்னஙகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு கடற்கரையில் 2,300 கிலோமீட்டர் (1,400 மைல்) நீளத்திற்கு பரவியுள்ள இது , உண்மையில் சுமார் 3,000 தனித்தனி பவளப்பாறை திட்டுகளால் ஆனது.

இது உலகின் மிகப் பெரிய பல்லுயிர் சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஒன்றாகும். பவளப்பாறை கட்டமைப்புகளுக்குள், பல்வேறு வகையான கடல்வாழ் உயிரினங்களும், தாவர வகைகளும் வாழ்கின்றன.

இந்தப் பாறைகளின் வளமான வகைகள் மற்றும் அழகால் விஞ்ஞானிகள் பல தசாப்தங்களாக இதன்பால் ஈர்க்கப்பட்டுள்ளனர்.

400 க்கும் மேற்பட்ட பல்வகை பவளப்பாறைகள், சுமார் 1,500 வகையான மீன்கள் மற்றும் அழிவின் விளிம்பில் இருக்கும் பெரிய பச்சை ஆமை போன்ற உயிரினங்களின் வாழ்விடமாக இருக்கிறது இந்த பறந்து விரிந்த பவளப் பாறை.

ஒரு கடல் கட்டமைப்பாக இருக்கும் இது, பெரிய அலைகள் மற்றும் புயல்களுக்கு எதிரான கடலோர பாதுகாப்பு அமைப்பாகவும் விளங்குகிறது

இது ஏன் ஆபத்தில் உள்ளது?

கிரேட் பேரியர் ரீஃப்

பட மூலாதாரம், GREAT BARRIER REEF MARINE PARK AUTHORITY

புவி வெப்பமயமாதல் காரணமாக 1995 ஆம் ஆண்டிலிருந்து பாதிக்கும் மேற்பட்ட பவளப் பாறைகள் தன் நிலையை இழந்துவிட்டது.

குறிப்பாக, கடல் உயிர்களின் வாழ்விடங்களான, பெரிய கிளை கொண்ட பவள வகைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

பவளப்பாறைகளின் முதுகெலும்பாக இருக்கும் பவள தண்டுகள் (Polyps), கடல் வெப்பநிலையால் பாதிக்கப்படும் தன்மை கொண்டவை. நீர் மிகவும் சூடாக இருந்தால் அவை இறக்கக்கூடும்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் பெரிய அளவில் மூன்று முறை பவளப் பாறைகள் வெளுத்துப்போயுள்ளது.

வெப்ப உயர்வு காரணமாக பவளப்பாறைகள் தனக்கு நிறத்தையும் வாழ்வையும் தரும், தன்னுள் வாழும் பாசிகளை, வெளியேற்றுகின்றன. இதன்காரணமாக பவளப்பாறைகள் வெண்மையாக மாறும். இதை ஆங்கிலத்தில் ‘ப்ளீச்சிங்’ என்று அழைக்கிறார்கள்.

குளிர்ச்சியான நீர் திரும்பினால், திட்டுகள் மீண்டும் ஏற்படுவது சாத்தியமாகும். ஆனால் இந்த மீட்சிக்கு குறைந்தது 10 – 15 ஆண்டுகள் தேவைப்படும்.

ஆனால் கிரேட் பேரியர் பவளப்பாறை, அழிவின் விளிம்பில் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட ‘வெளுத்துப்போகும்’ நிகழ்வுகளைத் தொடர்ந்து மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர, போதுமான வயதுவந்த பவளப்பாறைகள் இல்லை என ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டில் பவளப்பாறைகளின் எதிர்காலம் “மிக மோசம்” என ஆஸ்திரேலியாவே மதிப்பீட்டை குறைத்திருக்கிறது.

காலநிலை மாற்றம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பார்க் ஆணையம் கூறியுள்ளது.

பிற ஆபத்துகள் என்ன?

க்ரவுன் தார்ன் விண்மீன் ஃபிஷ்

பட மூலாதாரம், Getty Images

கடலோரங்களில் வளர்ச்சிப்பணிகள் மற்றும் விவசாய மாசு போன்ற மனித நடவடிக்கைகள், பல ஆண்டுகளாக பவளப்பாறைகளின் ஆரோக்கியத்திற்கு சவால் விடுத்துள்ளன.

அருகிலுள்ள பண்ணைகளிலிருந்து வரும் வண்டல், நைட்ரஜன் மற்றும் பூச்சிக்கொல்லி ஆகியவை கடலில் கலந்து, நீரின் தரத்தை குறைத்துள்ளது. மேலும் இக்காரணிகள் கடல் நீரில் பாசி வளர்வதை ஊக்குவிக்கின்றன.

சட்டவிரோதமாக மீன்பிடிப்பது, சுற்றுலா பயணிகள் பவளப் பாறைகளை சேதப்படுத்துவதுதொலைபேசிற பிற பிரச்சனைகளும் இருக்கின்றன.

பவளப் பாறைகளின் இயற்கையான வேட்டைக்காரனான க்ரவுன் ஆஃப் தார்ன்ஸ் நட்சத்திர மீனும் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது.

குறைவான கடல் வாழ் உயிரினங்களே இங்கிருப்பதால், இந்த இனம் செழித்துள்ளது. ஒரு நட்சத்திர மீன் பெரிய பவளப்பகுதிகளை அழிக்க முடியும்.

பவளப்பாறைகளைப் பாதுகாக்க என்ன வழி?

2016 மற்றும் 2017 ப்ளீச்சிங்கைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அரசு, 500 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் ( 370 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அல்லது 270 மில்லியன் பவுண்டுகள்) மீட்புத்தொகுப்புக்கு உறுதியளித்தது.

நட்சத்திர மீன்களைக் கொல்லும் முயற்சிகள் மற்றும் விவசாய கழிவுகளைக் குறைக்க விவசாயிகளுக்கு பணம் அளித்தல் ஆகியவை இதில் அடங்கும்.

ஆனால் முக்கிய அச்சுறுத்தலான காலநிலை மாற்ற பிரச்னையைத் தீர்க்க இதன்மூலம் எதுவுமே செய்யப்படவில்லை என்று விமர்சகர்கள் தெரிவித்தனர்.

என்ன செய்ய வேண்டும்?

கிரேட் பேரியர் ரீஃப் இருக்கும் இடம்

பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தை உடனடியாகக் குறைப்பதுதான் பவளப்பாறைகளை காப்பாற்றுவதற்கான ஒரே வழி என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

புவி வெப்பமடைதலை, 1.5 டிகிரி செல்ஷியஸ் அதிகரிப்பில் நிறுத்தினாலும் கூட, உலகின் 90% பவளப்பாறைகள் இறந்துவிடும் என ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது.

தொழில்புரட்சிக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும்போது தற்போது உலகளாவிய வெப்பநிலை ஏற்கனவே ஒரு டிகிரி செல்ஷியஸ் அதிகரித்துள்ளது.

புதைபடிவ எரிபொருட்களைப் பயன்படுத்துவதிலிருந்து மனிதர்கள் விலகிச் செல்ல வேண்டும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

பருவநிலை மாற்றம் ஒரு உலகளாவிய பிரச்னை என்று ஆஸ்திரேலியா சுட்டிக்காட்டினாலும், அது தனது பொறுப்பை தட்டிக்கழிப்பதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

மரபுசாரா எரிசக்தி

பட மூலாதாரம், Getty Images

உலகின் மிகப்பெரிய புதைபடிவ எரிபொருள் ஏற்றுமதியாளர்களில் ஒன்றான ஆஸ்திரேலியா, நிலக்கரி, இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் பயன்பாட்டை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. பவளப்பாறைகள் “ஆபத்தில்” இருப்பதாக யுனெஸ்கோ பட்டியலிடுவதை அது எதிர்த்தது.

பவளப்பாறைகளின் முக்கிய வீடாகத் திகழும் குவீன்ஸ்லாண்ட், உலகின் மிக பெரிய நிலக்கரி சுரங்கத் தொழிலைக் கொண்டுள்ளது.

2030 ஆம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வை, 2005 ஆம் ஆண்டு அளவிலிருந்து 26% குறைப்பதாக ஆஸ்திரேலியா உறுதியளித்துள்ளது. ஆனால் இந்த இலக்கு எட்டப்படும் சாத்தியக்கூறு இல்லை என் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

2050 வாக்கில் நிகர பூஜ்ஜிய உமிழ்வு இலக்கை எட்டுவதற்கான நெருக்குதலுக்கு ஆஸ்திரேலியா இதுவரை அடிபணியவில்லை. அமெரிக்கா, இங்கிலாந்து , பல ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகள் இந்த இலக்கை எட்ட ஏற்கனவே உறுதி அளித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »