Press "Enter" to skip to content

ஆட்டிப் படைக்கும் கொரோனா: அரசியல் நெருக்கடியில் மலேசிய பிரதமர் மொஹிதின் யாசின்

  • சதீஷ் பார்த்திபன்
  • பிபிசி தமிழுக்காக

பட மூலாதாரம், Getty Images

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றுப் பாதிப்பில் இருந்து மீண்டு வர போராடிக் கொண்டிருக்கிறது மலேசியா. அதைவிட பிரதமர் பதவியில் நீடிக்க அதிக போராட்டங்களை எதிர்கொண்டுள்ளார் மலேசிய பிரதமர் மொஹிதின் யாசின்.

இதுவரை அவரது தலைமையிலான ‘பெரிக்கத்தான் நேசனல்’ கூட்டணி அரசாங்கத்துக்கு ஆதரவு அளித்து வந்த அம்னோ கட்சி, அந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக நேற்று இரவு அதிரடி அறிவிப்பை வெளியிட்டது.

ஏற்கெனவே கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பிரதமர் நடனம்ரீ மொஹிதின் யாசினுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக அம்னோ அறிவித்திருந்தது. பிரதமரை மாற்றும் பட்சத்தில் அரசாங்கம் நீடிக்கும் எனக் கூறப்பட்டது.

எனினும் அந்த அறிவிப்பை மீறி, அக்கட்சியை சேர்ந்த சிலர் மொஹிதின் யாசின் அமைச்சரவையில் முக்கிய பொறுப்புகளில் நீடித்து வந்தனர். குறிப்பாக, அம்னோவை சேர்ந்த மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகூப்பை திடீரென துணைப் பிரதமராக நியமித்தார் மொஹிதின்.

அம்னோ கட்சி இப்படியொரு முடிவை எடுக்க அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கடந்த சில வாரங்களாக கூறி வந்தனர் என்றாலும், பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு, சமாளித்து வந்த பிரதமர் மொஹிதின் யாசின், இம்முறையும் சிக்கலை சரிசெய்து விடுவார் என்பதே அவரது ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.

ஆனால், நாட்டில் அவசரநிலையைப் பிரகடனப்படுத்த வேண்டும் என்று அவரது அரசாங்கம் எடுத்த முடிவே இன்று அவருக்குப் பெரும் தலைவலியாகவும் உருவெடுத்திருக்கிறது.

அவசரநிலை பிரகடனத்தால் குவிந்த அதிகாரம்

கொரோனா பெருந்தொற்றுப் பரவலை முறியடிக்கவும், நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் அரசாங்கத்துக்கு கூடுதல் அதிகாரங்கள் தேவை என்றும், அதற்கு நாட்டில் அவசரநிலை அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் மலேசிய மன்னர் அப்துல்லாவிடம் பரிந்துரைத்தது பிரதமர் மொஹிதின் யாசின் அரசு.

iSmail sabri

பட மூலாதாரம், iSmail sabri officeial twitter

அதைப் பரிசீலித்த மன்னர் அப்துல்லாவும் ஒப்புதல் அளித்ததை அடுத்து கடந்த ஜனவரி மாதம், மலேசியாவில் அவசரநிலை அமலுக்கு வந்தது. எனினும், ஆகஸ்ட் 1ஆம் தேதிக்குப் பிறகு அவசர நிலை மீட்டுக் கொள்ளப்படும் என்ற உறுதிமொழியும் அளிக்கப்பட்டது.

இதனால் எதிர்க்கட்சிகள் கடும் அதிருப்தி அடைந்தன. பெருந்தொற்று மேலாண்மையில் அரசாங்கம் தோல்வி கண்டுவிட்டது, நாட்டில் பாதிப்பு அதிகரித்துள்ளது எனப் பல்வேறு புகார்களை அடுக்கி வந்த எதிர்க்கட்சிகள், வாய்ப்பு கிடைத்த போதெல்லாம், பிரதமர் மொஹிதின் யாசின் பதவி விலக வேண்டும், நாடாளுமன்றத்தில் தமக்குப் பெரும்பான்மை உள்ளது எனில், அதை நிரூபிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தன.

பிரதமராகப் பொறுப்பேற்ற நாள் முதல் இதுவரை தனது அரசாங்கத்துக்கு உள்ள பெரும்பான்மையை தனியாக வாக்கெடுப்பு நடத்தி பிரதமர் மொஹிதின் நிரூபிக்கவில்லை. இந்நிலையில், அவசர நிலை அறிவிக்கப்பட்டதால், ஜனவரி மாதம் முதல் அவர் அதுகுறித்து கவலைப்பட வேண்டிய அவசியமும் ஏற்படவில்லை.

எனினும் சில முக்கிய தீர்மானங்களை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி உள்ளது.

நாடாளுமன்றத்தைக் கூட்டத் தேவை இல்லை, தடுப்பூசிக் கொள்முதல், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பித்தல், முழு முடக்க நிலை அறிவித்தல் எனப் பல்வேறு விஷயங்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தி ஒப்புதல் பெற வேண்டிய அவசியம் இல்லை என்ற வகையில், பிரதமர் மொஹிதின் தலைமையிலான அரசாங்கத்துக்கு கூடுதல் அதிகாரங்கள் கிடைத்தன.

அவசர நிலை பிரகடனம் இத்தகைய அதிகாரத்தைப் பெற்றுக் கொடுத்தது எனில், அந்தச் சட்டம்தான் இப்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கும் வித்திட்டுள்ளது.

ஒப்புதல் பெறாத அரசாங்கம்; கடும் அதிருப்தி அடைந்த மன்னர்

மன்னரின் ஒப்புதலைப் பெற்று கடந்த ஜனவரி 12ஆம் தேதி அவசரநிலையை அறிவித்தார் பிரதமர் மொஹிதின் யாசின்.

ஆனால் பிரதமரிடம் அதிகாரங்கள் குவிந்தபோதும், நாடு எதிர்கொண்டுள்ள சுகாதார, பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கான அறிகுறிகள் தென்படவில்லை என எதிர்க்கட்சிகள் அண்மைய சில வாரங்களாக பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பி வந்தன.

இதையடுத்து, இயன்ற விரைவில் நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு அரசுக்கு அறிவுறுத்தினார் மன்னர் அப்துல்லா. மேலும், அவசரநிலை பிரகடனம் குறித்தும், அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தி இருந்தார்.

அதற்கேற்ப கடந்த 26ஆம் தேதி முதல் நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு தொடங்கியது.

IstanaNegaraOfficial

பட மூலாதாரம், IstanaNegaraOfficial /Facebook

இந்நிலையில், கடந்த 21ஆம் தேதியே அவசரநிலை சட்டங்களைத் திரும்பப் பெற்றுவிட்டதாக நாடாளுமன்றத்தில் மலேசிய சட்ட அமைச்சர் தக்கியுதின் ஹாசன் தெரிவித்தார். இதுவே தற்போதைய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

சட்ட அமைச்சர் தக்கியுதின், அட்டர்னி ஜெனரல் நடனம்ரீ இட்ருஸ் ஹாருடனான காணொளி வழிச் சந்திப்பின்போது இதுகுறித்து தமக்கு எந்தவித விவரமும் தெரிவிக்கப்படவில்லை என்றும் மன்னர் சுட்டிக்காட்டினார்.

இதையடுத்து எதிர்க்கட்சிகள் அணி திரண்டன. பிரதமர், அரண்மனைக்கு எதிராகச் செயல்படுவதாகவும், ராஜத்துரோகம் இழைத்துவிட்டதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.

ஆனால், அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டே அவசரகால சட்டங்கள் திரும்பப் பெறப்படும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மலேசிய பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.

இந்த நடவடிக்கை தொடர்பாக கடந்த 23ஆம் தேதி கடிதம் வழி மாமன்னருக்கு விவரம் தெரிவிக்கப்பட்டதாகவும் பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.

ஆனால் இதை ஏற்காத எதிர்க்கட்சிகள் பிரதமர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தின.

பிரதமர் உடனடியாக நாடாளுமன்றத்தில் தமக்குள்ள பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் இல்லையெனில் பதவி விலக வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், முன்னாள் பிரதமர் மகாதீர் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தியதால் பரபரப்பு அதிகரித்தது.

ஒத்தி வைக்கப்பட்ட நாடாளுமன்றம்

மன்னர் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியதை அடுத்து, கடந்த வாரம் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பதாக திடீர் அறிவிப்பு வெளியானது. இதனால் எதிர்க்கட்சிகள் கொந்தளித்தன. தங்களுடைய கேள்விகளுக்குப் பதில் அளிக்காமல் பிரதமர் ஒளிந்து கொள்வதாகவும் விமர்சித்தன.

வெள்ளிக்கிழமை ஒத்தி வைக்கப்பட்ட நாடாளுமன்றம் திங்கட்கிழமை கூடும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், மறுதினமே அடுத்த இரு வாரங்களுக்கு நாடாளுமன்ற நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக மற்றொரு அறிவிப்பு வெளியானது.

நாடாளுமன்ற வளாகத்தில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையின்போது 11 பேருக்கு நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாகவும், தொற்றுப் பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக, அவை நடவடிக்கைகளை ஒத்தி வைக்க பரிந்துரைத்ததாகவும் சுகாதார அமைச்சு பின்னர் விளக்கம் அளித்தது.

அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுகிறோம்: அம்னோ அதிரடி

இதையடுத்தே இப்பிரச்னை உச்சத்தை அடைந்தது. பிரதமர் மொஹிதின் யாசின் தலைமையிலான பெரிக்கத்தான் நேசனல் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை உடனடியாகத் திரும்பப் பெறுவதாக நேற்று இரவு அம்னோ கட்சி அறிவித்தது.

சாஹித் ஹமிதி

பட மூலாதாரம், SOPA Images / getty images

நடப்பு அரசாங்கம் அனைத்து நிலைகளிலும் தோல்வி கண்டுள்ளதாக அக்கட்சியின் தேசியத் தலைவர் சாஹித் ஹமிதி தெரிவித்தார்.

இந்நிலையில், அரசுக்கு அளித்து வந்த ஆதரவையும் விலக்கிக் கொள்வதாக அம்னோ உச்சமன்றம் முடிவெடுத்துள்ளது. மேலும், சூட்டோடு சூடாக இந்த முடிவு குறித்து மலேசிய மன்னரிடமும் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது அக்கட்சி.

அம்னோவின் இந்த முடிவால் மொஹிதின் யாசின் தலைமையிலான பெரிக்கத்தான் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது பிரதமர் மொஹிதின் பதவியில் இருந்து விலக வேண்டும் என அம்னோ தேசியத் தலைவர் சாஹித் ஹமிதி மீண்டும் வலியுறுத்தி்னார்.

“தனது தலைமைத்துவத்தில் எதிர்கொண்ட தோல்விகளுக்குப் பொறுப்பேற்று மொஹிதின் பதவி விலக வேண்டும். மேலும் மன்னரின் அறிவுறுத்தல்களை செயல்படுத்த தவறியதற்காகவும் அவர் பதவி விலக வேண்டும்.

“மொஹிதின் பிரதமராக நீடிக்க விரும்பாத எம்பிக்களின் எண்ணிக்கை போதுமானதாக உள்ளது. அந்த எம்பிக்களின் சத்தியப் பிரமாணங்கள் ஏற்கெனவே மன்னரிடம் அளிக்கப்பட்டுவிட்டன. இதன் மூலம் மொஹிதினுக்கு பிரதமராக நீடிக்க போதுமான பெரும்பான்மை இல்லை என்பது புலனாகிறது,” என்கிறார் சாகித் ஹமிதி.

நள்ளிரவு வரை ஆலோசனையில் ஈடுபட்ட பிரதமர் மொஹிதின்

நெருக்கடி முற்றிய நிலையில், தனது ஆதரவாளர்களுடன் நேற்று நள்ளிரவு வரை தீவிர ஆலோனையில் ஈடுபட்டார் பிரதமர் மொஹிதின் யாசின். அவரது அமைச்சரவை சகாக்கள், கூட்டணி, நட்புக் கட்சிகளின் தலைவர்க் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

அப்போது சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்பட்ட போதிலும், எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் அறிக்கையும் வெளியாகவில்லை.

வாரந்தோறும் புதன்கிழமையன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்துக்கு முன்பாக மாமன்னரை சந்திப்பது பிரதமர் மொஹிதினின் வழக்கம். அந்த வகையில் இன்றும் அந்தச் சந்திப்பு நிகழும் என்றும், அப்போது அவர் பதவி விலகல் குறித்து மாமன்னரிடம் தெரிவிப்பார் என்றும் ஆருடங்கள் நிலவின. ஆனால் மொஹிதின் விட்டுக் கொடுப்பதாக இல்லை.

அடுத்த மாதம் பெரும்பான்மையை நிரூபிப்பேன்: மொஹிதின் யாசின் அறிவிப்பு

இன்று மாமன்னருடனான சந்திப்புக்குப் பின்னர் தாம் பதவி விலகப் போவதில்லை என்றார் மொஹிதின்.

செப்டம்பர் மாதம் நாடாளுமன்றம் கூடும்போது, தமது அரசுக்கு உள்ள பெரும்பான்மையை நிரூபிக்கும் வகையில், நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உள்ளதாக அவர் அறிவித்தார்.

மன்னரை சந்தித்த பின்னர் தொலைக்காட்சி வழி மக்கள் மத்தியில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

“பிரதமர் பதவியை ராஜினாமா செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. எனக்கு இன்னும் பெரும்பான்மை பலம் உள்ளது. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் எனது அரசு வெற்றிபெறும்,” என்றார் மொஹதின் யாசின்.

மேலும், இந்த அரசியல் நெருக்கடிக்கு காரணமானவர்கள் சில வழக்குகளை சந்தித்து வருவதாகவும், தங்களை குற்றவியல் வழக்குகளில் இருந்து விடுவிக்கும் பொருட்டு, நீதித்துறையில் தாம் தலையிட வேண்டும் என நெருக்கடி கொடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

தாம் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்பதால் தன்மீது அத்தகையவர்கள் அதிருப்தி கொண்டிருப்பதாகவும் மொஹிதின் யாசின் குற்றம்சாட்டினார்.

“எனினும், நெருக்கடி கொடுத்தவர்களின் பெயர்களை அவர் (மொஹிதின்) குறிப்பிடவில்லை. நேற்று அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் 11 பேர் மொஹிதினுக்கு ஆதரவு தருவதில்லை என அறிவித்தார்கள். அவர்களில் நால்வர் நீதிமன்ற ஊழல் வழக்குகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

“நஜிப் துன் ரசாக், சாஹிட் ஹாமிடி, அகமட் மஸ்லான், அசிஸ் அப்துல் ரஹிம் ஆகியோரே அந்த நால்வராவர்,” என்று செல்லியல் இணைய ஊடகச் செய்தி வெளியிட்டுள்ளது.

தாம் தேசநிந்தனை குற்றச்சாட்டு புரிந்ததாக எழுந்துள்ள புகார்களை மறுத்துள்ள மொஹிதின், தமது நடவடிக்கைகள் யாவும் மலேசிய அரசியலமைப்பு சட்டத்தையும், மாமன்னரின் தலைமையிலான ஜனநாயக நாடாளுமன்ற அமைப்பு முறையைத் தற்காக்கவும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்று விளக்கம் அளித்துள்ளார்.

மலேசியா

பட மூலாதாரம், Getty Images

ஆனால், செப்டம்பர் வரை காத்திருக்க தேவை இல்லை என்றும், உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டி, பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.

பிரதமர் மீது அம்னோவுக்கு அதிருப்தி ஏற்பட என்ன காரணம்?

மொஹிதின் யாசின் பிரதமராக அம்னோ தலைமையிலான தேசிய முன்னணி எனப்படும் பாரிசான் நேசனல் கூட்டணி ஆதரவு அளித்தது. அந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அம்னோவுக்கு 38 எம்பிக்களும், இதர கட்சிகளுக்கு 4 எம்பிக்களும் உள்ளனர்.

அம்னோவைச் சேர்ந்த இஸ்மாயில் சப்ரி யாகூப், ஹிஷாமுதின் துன் ஹுசேன், கைரி ஜமாலுதின் உள்ளிட்டோர் தற்காப்பு, வெளியுறவு, தகவல் மற்றும் பல்லூடக அமைச்சு ஆகியவற்றுக்கு அமைச்சர்களாக உள்ளனர்.

கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் கடந்த ஆண்டு மார்ச் 1ஆம் தேதி பிரதமராகப் பொறுப்பேற்றார் மொஹிதின் யாசின். அப்போது முதல் அரசுக்கு அவ்வப்போது ஆலோசனைகள், கோரிக்கைகளை அம்னோ தலைமை முன்வைத்து வந்தது.

அக்கட்சியின் தேசியத் தலைவர் சாகித் ஹமிதி, முன்னாள் பிரதமர் நஜிப் உள்ளிட்டோர் சில ஆலோசனைகளை அரசு கண்டிப்பாக ஏற்க வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால், மொஹிதின் யாசின் தலைமையிலான அரசு இந்த நிர்பந்தத்தை கண்டுகொள்ளவில்லை.

கொரோனா நெருக்கடி வேளையில் வங்கிக்கடன் தவணை சலுகை, மக்களுக்கான உதவித் திட்டங்கள் என பல்வேறு விஷயங்களில் அம்னோ முன்வைத்த ஆலோசனைகளை அரசாங்கம் ஏற்காமல், கூட்டணிக் கட்சிகளை மதிக்காமல் செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து அம்னோவில் ஒரு பிரிவினர் அரசாங்கத்தின் செயல்பாடுகள் காரணமாக மக்கள் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளது என்றும், இதே நிலை நீடித்தால் அரசாங்கத்தின் தோல்விக்கு அம்னோவும் கூட்டாகப் பொறுப்பேற்க வேண்டியிருக்கும் என்றும் சுட்டிக்காட்டினர். எனவே, அரசுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக்கொள்ள வேண்டும் எனவும் வாதிட்டனர்.

இதையடுத்து, அம்னோ முன்வைத்த சில ஆலோசனைகளை அரசாங்கம் ஏற்க வேண்டும் என காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. அதை பிரதமர் மொஹிதின் யாசின் ஏற்காததால் கருத்து வேறுபாடுகள் அதிகரித்து, இன்று ஆட்சிக் கவிழ்ப்பு வரை வந்துள்ளது.

குதிரைப் பேரத்துக்கு வழிவகுக்கும்: இரா.முத்தரசன்

அடுத்து என்ன நடக்கும்? என்பது குறித்து அரசியல் ஆய்வாளர் இரா.முத்தரசன் பிபிசி தமிழிடம் கூறுகையில், நம்பிக்கை வாக்கெடுப்பை அடுத்த மாதம் வரை தள்ளிப் போடுவது குதிரைப் பேரத்துக்கு வழிவகுக்கும் என்றார்.

“தமக்கு பெரும்பான்மை பலம் உள்ளது என்று உறுதியாக கூறும் பிரதமர் அதை உடனடியாக நிரூபிக்கலாம். மாறாக, அடுத்த மாதம் வரை தள்ளிப்போடுவது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.

“பொதுவாக இவ்வாறு தாமதிப்பது குதிரைப்பேரத்துக்கு வழிவகுக்கும் என்பர். அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. எனவே, நம்பிக்கை வாக்கெடுப்பின் முடிவு குறித்து இப்போதே கணிப்பது தேவையற்றது.

“நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருந்திருந்தால் பலம் அதிகரித்திருக்கும். ஆனால், எதிர்க்கட்சிகளில் அடிக்கடி பிளவுகள் ஏற்பட்டுள்ளன. இன்றைய ஆட்சியாளர்கள் பதவியில் நீடிக்க எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மையே முக்கிய காரணம்.

“அடுத்த பிரதமராக பொறுப்பேற்க யாருக்கு தகுதி என்று கேட்கப்பட்ட போது, தன் மகன் முக்ரிஸை கூட முன்மொழியும் முன்னாள் பிரதமர் மகாதீர், எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் பெயரை குறிப்பிட மறுக்கிறார்.

“இன்றைய சூழ்நிலையில் மகாதீரும் அன்வாரும் மீண்டும் இணைந்து களம் இறங்குவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இதனால் ஆளும் தரப்புக்கு நெருக்கடி அதிகமாகி இருக்கும். எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருந்தால் நம்பிக்கை வாக்கெடுப்பு எனும் சோதனையை நடப்பு அரசாங்கம் சமாளிப்பது சாதாரண இலக்காக இருக்காது,” என்கிறார் இரா.முத்தரசன்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் என்ன நடக்கும்?

மலேசிய நாடாளுமன்றத்தில் தற்போது 220 எம்பிக்கள் உள்ளனர்.

பட மூலாதாரம், https://www.parlimen.gov.my/

மலேசிய நாடாளுமன்றத்தில் 222 இடங்கள் உள்ளன. இரண்டு உறுப்பினர்கள் காலமானதை அடுத்து தற்போது 220 எம்பிக்கள் உள்ளனர். எனவே, பெரும்பான்மையை நிரூபிக்க குறைந்தபட்சம் 110க்கும் மேற்பட்ட எம்பிக்களின் ஆதரவு தேவை.

ஆட்சி பொறுப்பேற்றது முதல் குறைந்தட்பட்ச ஆதரவுடன் ஆட்சியில் நீடித்து வருகிறார் பிரதமர் மொஹிதின் யாசின்.

சில வாரங்களுக்கு முன்பு வரை தமக்கு 114 எம்பிக்களின் ஆதரவு உள்ளதாக அவர் கூறி வந்தார். இந்நிலையில், 38 எம்பிக்களைக் கொண்ட அம்னோ கட்சி ஆதரவை விலக்கிக் கொண்டுள்ளது. எனினும், அக்கட்சியின் 14 எம்பிக்கள் மட்டுமே பிரதமருக்கு எதிராக அணிவகுத்துள்ளனர். மீதமுள்ள எம்பிக்கள் மொஹிதின் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.

இத்தகைய சூழலில் அம்னோ தேசியத் தலைவர் சாகித் ஹமிதிக்கு ஆதரவாக உள்ள 14 பேர்தான் மலேசிய அரசியல் களத்தின் துருப்புச்சீட்டுகளாக மாறி உள்ளனர். செப்டம்பர் மாதம் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்பு இந்த 14 பேர் எத்தகைய நிலைப்பாட்டில் இருக்கப் போகிறார்கள் என்பதே முடிவை தீர்மானிக்கும் என எதிர்பார்க்கலாம்.

அரசாங்கத்துக்கு 114 எம்பிக்கள் ஆதரவாக இருந்த நிலையில், அந்த எண்ணிக்கை இப்போது 100ஆக குறைந்துள்ளது. எனினும், இவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமை ஆதரிப்பார்களா என்பது தெரியவில்லை.

இதற்கிடையே, எதிர்க்கட்சிக் கூட்டணி தங்களுக்கு 107 எம்பிக்களின் ஆதரவு உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அண்மையில், நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்றபோது, 107 எம்பிக்களும் இருந்தனர் என்பதை அன்வார் இப்ராகிம் சுட்டிக்காட்டி உள்ளார்.

பிரதமர் மொஹிதின் யாசின் அறிவித்தபடி, செப்டம்பர் மாதம் நாடாளுமன்றம் எப்போது கூடும் என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதுமில்லை.

இந்த செய்திக் கட்டுரை வெளியாகும் இந்தத் தருணத்தில், மலேசியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு அன்றாடம் பதிவாகும் கொரோனா தொற்று எண்ணிக்கை ஆக அதிகமாக 19,819 என பதிவாகி உள்ளது.

நடப்பு அரசாங்கம் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பு கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றுப்பரவலை முறியடித்து தனது நிர்வாகத்திறனை காட்ட வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »