Press "Enter" to skip to content

பெலாரூஸ்: லுகஷென்கோவின் ஆட்சியில் தவறான சாக்ஸ் அணிந்தால் தண்டனை தரப்படுவது ஏன்?

பட மூலாதாரம், TUT.BY

சர்வாதிகாரிகள் ஆட்சி செய்யும் நாடுகளில் எதிர்க்கட்சிகளின் சின்னங்கள், கொடிகள் போன்றவற்றைத் தடை செய்வார்கள். ஆனால் ஐரோப்பிய நாடான பெலாரூஸில் காலில் அணியும் சாக்ஸை கூட மிகக் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

கவனக் குறைவாக குறிப்பிட்ட நிறத்தில் சாக்ஸ் அணிந்தால் அதிகாரிகளின் தண்டனைக்கு உள்ளாக நேரிடும். மேலாடைகள் என்றால் கேட்கவே வேண்டாம். அதிகாரிகளின் கண்ணில் பட்டால் பெருஞ்சிக்கல்தான்.

டோக்யோ ஒலிம்பிக் போட்டிகளின்போது கட்டாயப்படுத்தி விமானத்தில் அனுப்புவதாகக் கூறி ஒரு வீராங்கனை குரல் எழுப்பியதும் இந்த நாட்டுக்கு எதிராகத்தான். அவர் இப்போது போலாந்து நாட்டில் அவர் அடைக்கலம் புகுந்திருக்கிறார்.

1994ஆம் ஆண்டு முதல் அலெக்சாண்டர் லுகஷென்கோவால் ஆளப்படும் பெலாரூஸ் மீது, இந்தச் சம்பவம் மீண்டும் கவனத்தைக் குவியச் செய்திருக்கிறது. கடந்த ஆண்டு, அவரது சர்ச்சைக்குரிய மறுதேர்தலுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டங்கள் நடந்தன. கிளர்ச்சி செய்த மக்கள் பாதுகாப்புப் படையினரால் ஒடுக்கப்பட்டனர்.

அந்தப் போராட்டங்களில் பங்கேற்ற சிலர் தேசிய அளவிலான விளையாட்டு வீரர்கள். அவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கான நிதியுதவி நிறுத்தப்பட்டது. தேசிய அணிகளில் இருந்து நீக்கப்பட்டனர். சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

சில மாதங்களுக்கு முன்பு சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு பெண் எதிரே வந்தவர்களுக்கு “V” வடிவில் கைவிரல்களைக் காட்டியிருக்கிறார். அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தி எச்சரித்துள்ளனர். பெரிய அளவில் அபராதமும் விதிக்கப்பட்டது.

இதற்குக் காரணம் எதிர்கட்சிகளின் கொடியின் வண்ணங்களைக் கொண்ட சாக்ஸை அணிந்ததும், எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக வெற்றி என்ற குறியீட்டைக் காட்டியதும்தான்.

பெலாரூஸ்

பட மூலாதாரம், AFP

இருபதாம் நூற்றாண்டின் குறிப்பிட்ட காலத்தில் பெலாரூஸிய தேசியவாதிகள் சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்திலான கொடியைப் பயன்படுத்தினார்கள்.

அண்மைக் காலமாக பெலாரூஸிய அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டம் நடத்துவோர் இந்த நிறத்தில் கொடிகளைப் பயன்படுத்தி வருகின்றனர். குடைகள், ஆடைகள், துண்டுகள், தொப்பிகள் போன்றவையும் இந்த நிறத்தில் தயாரிக்கப்பட்டு எதிர்க்கட்சிகளால் பயன்படுத்தப்படுகின்றன.

பெலாரூஸில் எதிர்க்கட்சிகளுக்கு கடுமையான கட்டுப்பாடு இருப்பதால், அண்டை நாடுகளான போலாந்து, யுக்ரேன் உள்ளிட்ட நாடுகளிலும் பெலாரூஸ் அரசுக்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

“ஐரோப்பாவின் கடைசி சர்வாதிகாரி”

ஐரோப்பாவின் கடைசி சர்வாதிகாரி என்று அழைக்கப்படும் அதிபர் லுகஷென்கோ, ரஷ்ய அதிபர் புடினின் நண்பர்.

கடந்த ஆண்டு மே மாதத்தில் உலகமே கொரோனாவைக் கண்டு அஞ்சிக் கொண்டிருந்தபோது, எந்த விதமான கட்டுப்பாடுகளும் இல்லாமல் இரண்டாம் உலகப் போரின் வெற்றிக் கொண்டாட்டத்தை நடத்தினார் லுகஷென்கோ.

புதின்

பட மூலாதாரம், Reuters

கிழக்கில் நட்பு நாடான ரஷ்யாவையும் தெற்கில் யுக்ரேனையும் எல்லைகளாகக் கொண்டு அமைந்திருக்கிறது பெலாரூஸ். வடக்கு மற்றும் மேற்கில் ஐரோப்பிய ஒன்றிய மற்றும் நேட்டோ உறுப்பு நாடுகளான லாட்வியா, லிதுவேனியா மற்றும் போலாந்து உள்ளன.

யுக்ரேனைப் போலவே, 95 லட்சம் மக்கள்தொகை கொண்ட இந்த நாடு மேற்குலகம் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான போட்டியில் சிக்கியுள்ளது.

அதிபர் அலெக்சாண்டர் லுகஷென்கோ “ஐரோப்பாவின் கடைசி சர்வாதிகாரி” என்று அழைக்கப்படுவதற்குக் காரணம் அவரது நீண்டகால சர்ச்சைக்குரிய வகையிலான ஆட்சிமுறை. 1994-ஆம் ஆண்டு தொடங்கி 27 ஆண்டுகளாக அவர்ஆட்சியில் இருக்கிறார்.

நாட்டில் ஆட்சி மாற்றத்தையும் பொருளாதார சீர்திருத்தத்தையும் எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன. எதிர்க்கட்சிகளும் மேற்கத்திய அரசுகளும் கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் லுகஷென்கோ மோசடி செய்ததாகக் கூறுகின்றன. ஆனால் அவர் அமோக வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

எதிர்க்கட்சியினர் தேர்தல் முடிவுகளை ஏற்கவில்லை. தேர்தலில் மோசடி நடைபெற்றதாகக் கூறி பெரும் போராட்டம் தொடங்கியது. போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு எதிராக காவல்துறையின் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். பலர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்கள். பலர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்.

பேரணி

பட மூலாதாரம், Reuters

இந்த நடவடிக்கைக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையம் கண்டனம் தெரிவித்தது. 450-க்கும் மேற்பட்ட சித்திரவதைச் சம்பவங்கள் நடந்திருப்பதாகவும் குற்றம்சாட்டியது. பாலியல் வன்கொடுமைகள் நடப்பதாகவும் கூறியது.

இதன் பிறகு அடக்குமுறைக்கு அஞ்சி பெலாரஸ் நாட்டில் இருந்து ஏராளமானோர் தப்பிச் செல்கிறார்கள். யுக்ரேன், போலாந்து மற்றும் லிதுவேனியா ஆகியவை அவர்களது இலக்குகளாக இருக்கின்றன.

உலக நாடுகளின் பார்வை

கடந்த ஆண்டு நடந்த தேர்தலுக்குப் பிறகு லுகஷென்கோவை மேற்கத்திய நாடுகள் அதிபராக ஏற்கவில்லை. அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் போன்றவை அவரது அரசுக்கு அங்கீகாரம் வழங்கவில்லை. அதே நேரத்தில் ரஷ்யா, சீனா, ஈரான், கியூபா, சிரியா, ஆர்மீனிய போன்ற நாடுகள் லுகஷென்கோவுக்கு ஆதரவாக இருக்கின்றன.

கடந்த தேர்தலுக்குப் பிறகு ரஷ்யாவுக்கும் லுகஷென்காவுக்கும் இடையேயான உறவில் கசப்பு ஏற்பட்டிருப்பதாகவே நிபுணர்கள் கூறுகிறார்கள். பெலாரஸை ரஷ்யாவுடன் இணைத்துக் கொள்ள அந்த நாடு திட்டமிடுவதாக லுகஷென்கோ குற்றம்சாட்டியிருந்தார். அதற்கு ரஷ்யத் தரப்பில் இருந்த கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் புதின் எப்போதும் பெலாரூஸை விட்டுக் கொடுப்பதில்லை.

பேரணி

பட மூலாதாரம், Reuters

சோவியத் ஒன்றியத்தின் ராணுவத்தில் பணியாற்றிய லுகஷென்கோ, சோவியத் ஒன்றியத்தில் இருந்து பெலாரூஸ் பிரிந்த பிறகு நடந்த முதல் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

“நான் இடதுசாரியும் அல்ல, வலதுசாரியும் அல்ல. மக்களுக்கானவன்” என்று அப்போது அவர் அறிவித்தார். “ஹிட்லரே தமக்கு கதாபாத்திரம் மாடல்” என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். ஜெர்மனியின் வரலாறு பெலாரூஸ் வரலாற்றின் நகல் என்றும் அவர் கூறினார். எதிர்ப்பு எழுந்த பிறகும் தனது கருத்தை அவர் திரும்பப் பெற்றுக் கொள்ளவில்லை.

கடந்த ஆண்டு தேர்தல் பரப்புரையின்போது, பெண் எதிர்க்கட்சித் தலைவரை “நன்றாக சமையல் செய்வார்” என்று கூறி விமர்சனம் செய்தார்.

தொடர்ந்து ஆறுமுறை அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள லுகஷென்கோ, எதிர்கட்சினரையும் ஆட்சேபக் குரல் எழுப்புவோரையும் தேடிப்பிடித்து அழிப்பதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

இப்போது டோக்யோ ஒலிம்பிக்கில் பெண் வீராங்கனை பெலாரூஸ் அதிகாரிகளுக்கு எதிராகப் புகார் எழுப்பியிருப்பதும், அவருக்கு போலாந்து அடைக்கலம் அளித்திருப்பதும் லுகஷென்கோ அரசின் மீது பார்வையைத் திருப்பியிருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »