Press "Enter" to skip to content

நரேந்திர மோதி, பைடன் ஆகியோருடன் தாலிபன் தலைவர் பெயரும் உலகின் செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் இடம் பெற்றது

பட மூலாதாரம், Getty Images

டைம் இதழின் செல்வாக்கு மிகுந்த நூறுபேர் பட்டியலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஷி ஜின்பிங், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் இடம்பிடித்திருக்கின்றனர்.

இவர்களுடன் தாலிபன் மூத்த தலைவரும், ஆப்கானிஸ்தானின் துணைப் பிரதமருமான அப்துல் கனி பராதர் பெயரும் இடம் பெற்றுள்ளது.

தோகாவில் அமெரிக்காவுடன் நடந்த பேச்சுவார்த்தைகளில் தாலிபன்கள் சார்பில் பங்கேற்றவரும், படை வெளியேற்ற உடன்பாட்டில் கையெழுத்திட்டவரும் அவர்தான். தாலிபன்களின் அரசியல் முகமாக அவர் பார்க்கப்படுகிறார்.

அண்மையில் அறிவிக்கப்பட்ட தாலிபன்களின் அரசில் அவருக்கு துணைப் பிரதமர் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்தப் பட்டியலில் “ஆப்கானிஸ்தானின் வருங்காலத்தின் அச்சு” அவர் என்றும் அவரைப் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது.

உலகின் செல்வாக்கு மிகுந்த நூறுபேர் பட்டியலை டைம் இதழ் வெளியிட்டிருக்கிறது. பல்வேறு பிரிவுகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. தலைவர்கள் என்ற பிரிவின் கீழ் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ், சீன அதிபர் ஷி ஜின் பிங், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கு இடம் வழங்கப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு தலைவர்களைப் பற்றிய குறிப்புகளும் இதில் இடம்பெற்றிருக்கின்றன.

அப்துல் கனி பராதரைப் பற்றிய குறிப்பை பாகிஸ்தான் பத்திரிகையாளர் அகமது ரஷீத் எழுதியுள்ளார். கடந்த ஆகஸ்டில் தாலிபன்களுக்குக் கிடைத்த வெற்றி, பராதர் நடத்திய பேச்சுவார்த்தையின் ஒரு பகுதி என்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாருக்கு மன்னிப்பு வழங்குவது போன்ற அனைத்து முக்கிய முடிவுகளையும் தாலிபன் இயக்கத்தின் சார்பில் பராதரே எடுப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தாலிபன்களில் ஒப்பீட்டளவில் மிதவாதப்போக்கு கொண்டவர் அவர் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

அவருக்கும் தாலிபன்களின் அமைச்சரவையில் உள்ள வேறு சிலருக்கும் மோதல் ஏற்பட்டிருப்பதாகச் செய்திகள் வந்தன. தாலிபன்களுக்கு வெற்றி கிடைத்தது பேச்சுவார்த்தைகள் மூலமாகவா அல்லது சண்டைகள் மூலமாகவா என்பதில் முரண்பாடு ஏற்பட்டிருந்ததாகக் கூறப்பட்டது.

பேச்சு நடத்தியவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று பராதர் விரும்புவதாகவும் ஆனால் சண்டை புரிந்தவர்களே முக்கியம் என ஹக்கானி குழுவைச் சேர்ந்தவர்கள் கூறுவதாகவும் செய்திகள் தெரிவித்தன.

சில நாள்களாக காணாமல் போயிருந்த பராதர் இந்தச் செய்திகளை மறுத்திருக்கிறார்.

“நேரு, இந்திராவுக்குப் பிறகு மோதி”

மோதி

பட மூலாதாரம், PIB INDIA

மோதியைப் பற்றிய குறிப்பை எழுதியிருக்கும் சிஎன்என் செய்தியளர் ஃபரீத் சக்காரியா “அவர் நாட்டை மதச் சார்பின்மையில் இருந்து தூர விலக்கியிருக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர இந்திய வரலாற்றில் நேரு, இந்திரா காந்தி ஆகியோருக்குப் பிறகு அரசியலை ஆக்கிரமித்திருக்கும் மூன்றாவது தலைவர் நரேந்திர மோதி எனவும் கூறியிருக்கிறார்.

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பற்றிய குறிப்பில், அவர், “கடும்போக்கு அரசியலின் முகமாக விளங்குகிறார்” என்று கூறப்பட்டுள்ளது. “அவர் கட்சியை வழிநடத்தவில்லை. அவர்தான் கட்சியே” என்கிறது டைம் இதழின் குறிப்பு.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »