Press "Enter" to skip to content

இந்தோனீசிய தலைநகர் ஜகார்த்தாவில் காற்று மாசு: அதிபர் ஜோகோ விடோடோவின் கவனக்குறைவே காரணம் என தீர்ப்பு

பட மூலாதாரம், Getty Images

இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் நிலவும் மோசமான காற்று மாசுபாட்டுக்கு அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோ மற்றும் பிற மேல்மட்ட அதிகாரிகள் இந்தப் பிரச்னையை கவனக்குறைவாக கையாண்டதே காரணம் என்று அந்நாட்டு நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.

கண்காணிப்பு நிலையங்கள் அமைக்கவேண்டும் என்பது உட்பட காற்று மாசுபாட்டை குறைப்பதற்கான பல நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்று அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2019ல் உலகின் மிக மோசமான காற்று மாசுபாடு நிலவும் நகரம் என்று ஜகார்த்தா தரவரிசைப்படுத்தப்பட்டது. இதையடுத்து நகரவாசிகள் 32 பேர் தலைநகரின் காற்று மாசு குறித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

ஆனால், அந்த வழக்கில் தீர்ப்பு அளிப்பது 8 முறை தள்ளிப்போனது. 1 கோடி மக்கள்தொகை கொண்ட ஜகார்த்தா இந்தோனீசியாவிலேயே மிகப் பெரிய மக்கள் தொகை கொண்ட நகரமும்கூட.

மிக அதிகமான போக்குவரத்து, வடிகட்டி பொருத்தாத, நிலக்கரி அடிப்படையிலான அனல் மின் நிலையம் போன்ற காரணங்களால்தான் நகரின் காற்றில் கனத்த தூசி மூட்டம் நிலவுகிறது.

நகரின் மோசமான காற்று மாசுபாடு காரணமாக நகர மக்களின் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக கூறி அதிபர் விடோடோ, ஜகார்த்தா ஆளுநர் ஆகியோர் மீதும் காடு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் மீதும் மற்றவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தேசிய காற்றுத் தர நிலையை மேம்படுத்தும்படி மாவட்ட நீதிமன்றம் விடோடோவுக்கு உத்தரவிட்டதுடன், வாகனப் புகைப் பரிசோதனை போன்ற நடவடிக்கைகளை மாகாண அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது.

அத்துடன், இந்த தீர்ப்பின் விவரம் பொதுமக்கள் மத்தியில் பரப்பப்படவேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது.

அதிபர் ஜோகோ விடோடோ

பட மூலாதாரம், Getty Images

இதனிடையே ஜகார்த்தாவில் இருந்து 1,300 கி.மீ. தொலைவில் உள்ள போர்னியோ தீவின் கிழக்கு காலிமாந்தன் என்ற இடத்துக்கு நாட்டின் தலைநகரை மாற்றும் தன்னுடைய திட்டத்தை தீவிரமாக முன்னெடுக்கிறார் அதிபர் விடோடோ.

அங்குள்ள தூய காற்றும், பசுமையான சூழ்நிலையும் அதிகாரிகளுக்கு நன்மை பயக்கும் என்று அவர் கூறியதாக உள்நாட்டுப் பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

அமைச்சர்களின் நிலை

தற்போதைய சூழ்நிலையில் ஜகார்த்தாவின் மோசமான போக்குவரத்து நெரிசலில் நீந்தி கூட்டங்களுக்கு குறித்த நேரத்தில் செல்வதற்கு அமைச்சர்களுக்கு ரோந்து போலீசின் துணை தேவைப்படுகிறது.

இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவின் கடலோரப்பகுதியில் உயரும் கடல் ஓதத்தால் தினமும் காலையில் தெருவில் நுழையும் கடல் நீர்.

பட மூலாதாரம், Getty Images

புதிதாக கட்டமைக்கப்படும் தலைநகரில் சில குறிப்பிட்ட வசதிகள் 2024ம் ஆண்டில் இருந்தே செயல்படத் தொடங்கும் என்று அதிபர் விடோடோ கூறியுள்ளார். ஆனால், இந்த திட்டத்தை முடிப்பதற்கு 20 ஆண்டுகள் தேவைப்படும் என்கிறார்கள் அதிகாரிகள்.

எரியும் பிரச்னையும், மூழ்கும் பிரச்னையும்

மக்கள் நெருக்கடியால் ஏற்படும் பிரச்னைகள், காற்றுமாசுபாடு ஆகியவை தவிர ஜகார்த்தா இன்னொரு மோசமான பிரச்னையை எதிர்கொண்டுள்ளது. அதாவது மிகவேகமாக ஜகார்த்தா கடலில் மூழ்கிக்கொண்டிருக்கிறது. 2050 வாக்கில் இந்நகரின் பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கிவிட்டிருக்கும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

கடந்த 10 ஆண்டுகளில் ஜகார்த்தா 8 அடி உயரத்துக்கு நீரில் மூழ்கியுள்ளது. இப்போதும் ஆண்டுக்கு சராசரியாக 1 முதல் 15 செ.மீ. அளவுக்கு மூழ்கிக்கொண்டிருக்கிறது. நகரின் கிட்டத்தட்ட சரிபாதி பகுதிகள் கடல் மட்டத்துக்கு கீழே உள்ளன.

நகரின் வளர்ந்து வரும் தேவைகளை நிறைவு செய்வதற்காக நிலத்தடி நீர் மிகையாக உறிஞ்சப்படுவது இதற்கான முக்கியக் காரணிகளில் ஒன்று. நகரமே சதுப்பு நிலத்தில் கட்டப்பட்டிருப்பதும், சுற்றி இருக்கும் கடல் மட்டம் உயர்ந்து வருவதும் இதற்கான வேறு சில காரணங்கள்.

டெல்லியின் காற்றுமாசுபாடு

இந்தியத் தலைநகர் டெல்லியும் இது போன்ற மோசமான காற்று மாசுபாட்டுப் பிரச்சனையை எதிர்கொண்டுள்ளதும், அதனால், டெல்லி வாசிகளின் உடல் நலனும் ஆயுள் காலமும் பாதிக்கப்பட்டிருப்பதாக வல்லுநர்கள் கூறிவருவதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »