Press "Enter" to skip to content

ஜெர்மனி தேர்தல்: இடதுசாரி கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்பு – என்ன நிலவரம்?

பட மூலாதாரம், Getty Images

ஜெர்மனியில் நடந்து முடிந்திருக்கும் பொதுத் தேர்தலில் தற்போது ஆட்சியில் இருக்கும் ஆட்சித் துறைத் தலைவர் ஏங்கெலா மெர்கலின் கட்சி பின்னடைவைச் சந்தித்திருக்கிறது.

மைய இடதுசாரிக் கட்சியான சோசியல் டெமாக்ரெட்ஸ் கட்சி கூடுதல் இடங்களைப் பிடித்திருக்கிறது. இதன் மூலம் தாங்களே தேர்தலில் வெற்றி பெற்றிருப்பதாகவும், மெர்கலின் கட்சி ஆட்சியை இழந்துவிட்டதாகவும் சோசியல் டெமாக்ரட்ஸ் கட்சியின் தலைவர் ஓலாஃப் ஷோட்ஸ் கூறியிருக்கிறார்.

கிரீன்ஸ் மற்றும் லிபரல் கட்சிகளுடன் புதிய கூட்டணியை ஏற்படுத்தி ஆட்சி அமைக்க இருப்பதாகவும் ஓலாஃப் ஷோட்ஸ் கூறியுள்ளார்.

தேர்தலின் முதற்கட்ட முடிவுகளின்படி சோசியல் டெமாக்ரெட் கட்சிக்கு கன்மேலாய்வுடிவ் கட்சியான மெர்கலின் கிறிஸ்டியன் டெமாக்ரடிக் யூனியனை (சி.டி.யூ.) விட சற்று கூடுதலான இடங்கள் கிடைத்திருக்கின்றன. கன்மேலாய்வுடிவ் கட்சி இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்திருக்கிறது.

பருவநிலை மாறுபாடு மற்றும் அதைக் கையாளுவதற்கான வழிமுறைகள் பற்றி அதிகம் விவாதிக்கப்பட்ட இந்தத் தேர்தலில் கிரீன்ஸ் மற்றும் லிபரல் எஃப்.டி.பி. கட்சிகள் 30 வயதுக்கு உள்பட்டோரிடம் அதிக அளவு ஆதரவைப் பெற்றிருக்கின்றன.

கிரீன்ஸ் கட்சிக்கு இதுவரை இல்லாத அளவுக்கு 15 சதவிகித வாக்குகள் கிடைத்திருக்கின்றன.

சமீபத்திய தேர்தல்களை விட இந்தத் தேர்தலில் போட்டி மிகவும் அதிகமாக இருந்தது. இதனால் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய தேர்தல்களில் ஆதிக்கம் செலுத்தி வந்த எஸ்.பி.டி. மற்றும் சி.டி.யூ. ஆகிவற்றின் தனிப்பட்ட ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

இப்போதைக்கு மெர்கல் அதிகாரத்தில் நீடிப்பார்

கூட்டணி இறுதியாகும் வரை மெர்கலே தொடர்ந்து அதிகாரத்தில் நீடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகள் கிறிஸ்துமஸ் வரைகூட நீடிக்கலாம்.

எனினும் வரும் ஜனவரியில் ஜி-7 நாடுகள் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை ஜெர்மனி ஏற்கும்போது புதிய அரசு ஆட்சியில் இருக்க வேண்டும் என்று முக்கியக் கட்சிகள் விரும்புகின்றன.

புதிதாகத் தேர்வு செய்யப்படும் ஆட்சித் துறைத் தலைவர் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு ஐரோப்பாவின் முன்னிலை பொருளாதார நாடான ஜெர்மனியை ஆட்சி செய்வார்.

தேர்தல் முடிவுகள் குறித்து தொலைக்காட்சியில் பேசிய ஷோட்ஸ், “ஜெர்மனிக்கு சிறப்பான அரசை உருவாக்கும் பணியை மக்கள் தந்திருக்கிறார்கள்” என்றார்.

அவரது கட்சி, கிரீன்ஸ் கட்சி, லிபரல் கட்சி ஆகியவை இணைந்து ஆட்சியமைக்கும் என்ற் கூறிய அவர். ஆட்சிப் பொறுப்பில் இருந்து கன்மேலாய்வுடிவ் கட்சியினர் இறங்க வேண்டிய நேரம் இது என்றும் கூறினார்.

வரைபடம்

“கிறிஸ்டியன் டெமாக்ரெடிக் யூனியன் எதிர்க்கட்சி வரிசையில் அமர வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள் என நினைக்கிறேன். அதுதான் இப்போதைய அவர்களது முடிவு. தேர்தல் மூலம் அதை அறிவித்திருக்கிறார்கள்” என்று அவர் கூறினார்.

ஆனால் மெர்கல் சார்ந்திருக்கும் சிடியூ கட்சியின் பொதுச் செயலாளரான பால் ஸேமியாக் இதை ஏற்கவில்லை. கூடுதல் இடங்களைப் பிடித்த கட்சி ஆட்சியமைக்க அதிகாரம் கொண்டது என்று அர்த்தமில்லை. கூட்டணி அமைப்பதுதான் முக்கியம் என்று அவர் கூறினார்.

லிபரல் கட்சி மற்றும் கிரீன்ஸ் கட்சி ஆகியவை இணைந்து ஒட்டுமொத்தமாக கால் பங்கு வாக்குகளைப் பெற்றுள்ளன. அந்த இரு கட்சிகளும் இளம் வாக்காளர்கள் மத்தியில் கூடுதல் வாக்குகளை பெற்றிருப்பதாகத் தெரியவந்திருக்கிறது.

ஆயினும் இரு கட்சிகளையும் ஒரே கூட்டணியின் கீழ் கொண்டு வருவது மிகப்பெரிய சிக்கலாக இருக்கும். இது தொடர்பாகப் பேசிய கிரீன்ஸ் கட்சி செய்தித் தொடர்பாளர், இரு கட்சிகளும் நெருக்கமாக இல்லை என்பது பெரிய ரகசியம் அல்ல என்று கூறினார்.

சாத்தியமான அனைத்துக் கூட்டணிகளிலும் கிரீன்ஸ் கட்சியும் லிபரல் கட்சியும் அங்கம் வகிக்கும் எனத் தெரிகிறது.

டிராபிக் சிக்னல் கூட்டணி என்று அழைக்கப்படும் சிவப்பு (SPD), மஞ்சள் (FDP) மற்றும் பச்சை (கிரீன்ஸ்), ஜமைக்கா கூட்டணி என்று அழைக்கப்படும் கறுப்பு (CDU), மஞ்சள் (FDP) மற்றும் பச்சை (கிரீன்ஸ்) ஆகியவை முக்கியமானவை

ஜெர்மனியில் மும்முனை கூட்டணி உருவாவது இதுவே முதல் முறையாகும். நாடு ஒரு புதிய அரசியல் சகாப்தத்தில் நுழைந்துள்ளது.

இரண்டு முக்கிய கட்சிகளுக்கு மாத்திரமல்லாமல், தீவிர இடதுசாரி மற்றும் தீவிர வலதுசாரி கட்சிகளுக்கும் தேர்தல் முடிவுகள் அதிர்ச்சியையே அளித்துள்ளன.

தீவிர இடதுசாரி கட்சிக்கு நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு தேவையான 5% வரம்பை விட குறைவான வாக்குகளையே பெற்றிருக்கிறது. அதே போல தீவிர வலதுசாரிக் கட்சியின் வாக்கு சதவிகிதமும் குறைந்திருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »