Press "Enter" to skip to content

பெண்கள் தங்களின் துணையை கண்டறிவதற்கான காதல் பயிற்சி

  • மேகா மோகன் மற்றும் யூசஃப் எல்டின்
  • பிபிசி உலக சேவை

காதல் பயிற்சி… கேட்கவே சற்று வித்தியாசமாகதானே உள்ளது ஆனால் இது ஒரு தொழிலாக அதுவும் ஆண்டுதோறும் வளர்ந்து வரும் தொழிலாக உள்ளது.

இந்த பயிற்சியில் பெண்களுக்கு துணை கிடைக்க உறுதி கொடுக்கப்படுகிறது. சில முயற்சிகள் வெற்றியடைந்து சில பெண்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருக்க இந்த பயிற்சி உதவியுள்ளது.

ராபர்ட் புராலே ஒரு காதல் பயிற்சியாளர். அவர் நடத்தும் `டியர் வுமன்` என்னும் நிகழ்ச்சி, தனியாக இருக்கும் பெண்கள் கணவரை கண்டறிய உதவுவதாக கூறப்படுகிறது.

சில தினங்களுக்கு முன் கென்யாவின் நைரோபியில் உள்ள தனது அலுவலகத்திற்குள் நம்மை வரவேற்றார் அவர். அந்த அலுவலகத்திற்குள் பல திரைகளில் அவரின் பயிற்சி காணொளிக்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தன. அதன்பின் அவர் தனது அலுவலகத்தை எங்களுக்கு சுற்றி காண்பிக்க அழைத்து சென்றார். அப்போது அங்கிருந்த ஒரு இளம் வரவேற்பாளர் ராபர்ட்டின் காணொளி தனது வாழ்க்கையை காப்பாற்றியதாக சொன்னார்.

அந்த மேசையில் அவரது புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ராபர்ட் சுயசரிதை ஒன்றையும் எழுதியுள்ளார். From the Strip Club to the Pulpit என்பதுதான் அந்த நூலின் பெயர். அதில் பாலியல் திரைப்படங்களுக்கு அடிமையாக இருந்தது முதல் புகழ்பெற்ற தன்னம்பிக்கை பேச்சாளரான வரையிலான பயணம் இருந்தது. ராபர்ட் ஆப்ரிக்காவில் தேவாலயங்களிலும் கூட்டங்களிலும் பேசுகிறார்.

தனது தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் வெற்றி காணவில்லை ஆனால் நீடித்த காதலை பெறுவதற்கான ரகசியம் தனக்கு தெரியும் என்கிறார்.

ராபர்ட் புராலே.

சர்வதேச பயிற்சி கூட்டமைப்பின் கூற்றுப்படி தனிநபர் முன்னேற்ற பயிற்சி தொழில் 2015ஆம் ஆண்டிலிருந்து இரட்டிப்பாக வளர்ந்துள்ளது. இதற்கு வளர்ந்து கொண்டே வரும் இணைய பார்வையாளர்களும் புவியியல் மாற்றங்களும் ஒரு முக்கிய காரணம்.

தனிநபர் முன்னேற்றத்தில் வாழ்வியல் பயிற்சிகளும் அளிக்கப்படும். குறிப்பாக தியானம், மனநலம், மற்றும் தன்னம்பிக்கை வளர்ச்சி, காதல் பயிற்சி போன்றவையும் அளிக்கப்படும். அதில் அதிகமாக டேட்டிங் குறித்து பேசப்படும். வாழ்வியல் பயிற்சியை பொறுத்தவரை வாழ்க்கைத் துணையை கண்டறிவதுதான் இலக்கு.

Short presentational grey line

ராபர்டின் ‘டியர் வுமன்’ நிகழ்ச்சிக்கு முன்னதாக, மேரியின் பக்கத்து வீட்டினர் அவர்களின் குழந்தையை குளிப்பாட்டி கொண்டிருந்ததை மேரி பார்த்தார். மேரிக்கு குழந்தை என்றால் மிகவும் விருப்பம் அவருக்கு வயது 35. திருமணம் ஆகவில்லை. உலக வங்கி தகவல்படி அந்த நாட்டில் சராசரியாக பெண்ணின் திருமண வயது 21. இது நகரங்களில்தான். கிராமங்களில் அதுவே 19. இவரது 5 தங்கைகளில் மூவருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்துவிட்டது.

“உங்கள் குடும்பத்திடமிருந்து உங்களுக்கு அதிக அழுத்தம் வரும். உங்கள் உறவினர்கள் உங்களுக்கு ஏன் திருமணம் ஆகவில்லை என தொடர்ந்து கேட்டு கொண்டே இருப்பர். நான் எங்கு தவறு செய்கிறேன் என்பதை தெரிந்து கொள்ள விரும்பினேன்” என்கிறார் மேரி.

ஆனால் அதேசமயம் அவருக்கு திருமணம் ஆகவில்லை என்பதற்கு அவர் ஏதோ தவறு செய்கிறார் என்பது அர்த்தமில்லையே. இதை அவரிடம் கேட்டோம். அதேபோன்று வேறு ஏதும் காரணங்கள் இருக்கலாம் அல்லவா? சரியான நபரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்காமல் இருந்திருக்கலாம் அல்லவா?

“எனக்கு தெரியவில்லை. பலர் நான் அதிகமாக எதிர்ப்பார்க்கிறேன் என்கிறார்கள். ஆனால் எனக்கு அது உண்மையா இல்லையா என தெரியவில்லை ” என்கிறார்.

மேரி கால் சென்டர் ஒன்றில் வேலை செய்கிறார். ராபர்ட் புராலேவின் ‘டியர் வுமன்’ நிகழ்ச்சிக்கான கட்டணம் 50 அமெரிக்க டாலர்கள். இது மேரியின் ஒருவாரத்திற்கான ஊதியம்.

மேரி

அந்த நிகழ்ச்சிக்கு செல்வது அவருக்கு பயனளிக்குமா என தெரியவில்லை ஆனால் அதற்கு செல்ல அவர் தயாராகிவிட்டார்.

Short presentational grey line

மேத்யூ ஹஸி, ஒரு சர்வதேச பயிற்சி நட்சத்திரம். நியூயார்க் டைம்ஸின் அதிகம் விற்பனையான `கெட் தி கை` புத்தகத்தை எழுதியவர். இவருக்கு யூட்யூபில் 22 லட்சம் சந்தாதாரர்கள் உள்ளனர். “3 Man Melting Phrases That Make a Guy Fall For You” என்ற அவரின் காணொளி 18 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.

அதேபோன்று நேரடியாக இவரது பயிற்சியில் கலந்து கொள்ள பல ஆயிரம் டாலர்கள் வேண்டும். கணினிமய பயிற்சிக்கே 800 அமெரிக்க டாலர்கள்.

தன் துணையிடமிருந்து பிரிந்து அந்த துயரத்திலிருந்து வெளியேற மேத்யூ ஹஸியின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்த பெண் ஒருவரிடம் நாம் பேசினோம்.

இது குறித்து ஹஸியிடம், பெண்கள் தங்கள் வாழ்கையின் சில பிரச்னையான காலகட்டத்தில் உங்களிடம் வருகிறார்கள். நீங்கள் அவர்களிடம் கனவுகளை விற்கிறீர்கள் என்றோம்.

“எனது விடியோவை ஒருவர் பார்த்து நான் கனவுகளை விற்கிறேன் என கூறமுடியாது” என்கிறார் அவர். “எது முடியும் என நான் நம்புகிறேனோ அது குறித்து நான் நேர்மையாக இருக்கிறேன். யாரேனும் என்னிடம் டேட்டிங் குறித்த அறிவுரைக்காக வந்தார்கள் எனில், அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க நான் உதவுகிறேன். ஏனென்றால் டேட்டிங் சில நேரங்களில் வேலை செய்யாமல் போகலாம்”

தெருவில் யாரேனும் என்னை பார்த்து என்னால் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் என்று சொன்னால் எனக்கு மகிழ்ச்சி என்கிறார் மேத்யூ.

“நீங்கள் விரும்பியது கிடைத்தால் மகிழ்ச்சியே ஆனால் அப்படி கிடைக்கவில்லை என்றாலும் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்.” என்கிறார்.

இதில் மேரிக்கான செய்தியும் இருக்கிறது.

ராபர்ட்டின் ‘டியர் வுமன்’ நிகழ்ச்சி நடைபெறும் நாள் வந்தது. பிரத்யேகமான மார்பிள் தரை அமைப்பு, வண்ண விளக்குகள் கொண்ட ஒரு விடுதியில் அந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த விடுதிக்கு சொந்தக்காரர் கென்யாவின் துணை அதிபர் – அவரது மகள் ராபர்ட்டின் தோழி.

அந்த கூட்டம் நடைபெறும் அறைக்கு வெளியே ராபர்ட் புராலேவின் சுவரொட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில் அவர் டிப் டாப்பாக உடை அணிந்து விலையுயர்ந்த கண்ணாடியையும் அணிந்திருந்தார்.

அறையின் உள்ளே டஜன் கணக்கான டேபிள்கள் வெள்ளை நிற லினென் துணியில் அலங்கரிக்கப்பட்டிருந்தன. டேபிளை ஒட்டி போடப்பட்டிருந்த இருக்கைகள் அலங்கரிக்கப்ப்ட்ட மேடையை நோக்கி இருந்தன.

ராபர்டின் வகுப்பு

பொதுவாக ராபர்ட் புராலேவின் நிகழ்ச்சியில் நூற்றுக்கணகானவர்கள் கலந்து கொள்வார்கள் ஆனால் தற்போது கோவிட் கட்டுப்பாடு காரணமாக வெறும் 30 பெண்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர். மேரி தனது இருக்கை நோக்கி நடந்தார்.

பிற பெண்கள் நைரோபி மற்றும் வெகு தொலைவிலிருந்தும் வந்திருந்தனர். நம்மிடம் பேசிய பெண் ஒருவர் காலை 10 மணிக்கு வருவதற்கு ஐந்து மணி நேரம் மூன்று பேருந்துகளில் பயணம் செய்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்ததாக தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் ராபர்ட் சிறப்பு பேச்சாளர். ராபர்ட்டின் நண்பரும் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளருமான ஷஸ்மீன் பாங், இருவரின் உறவில் வன்முறைகள் குறித்து பேசினார். அப்போது பலர் அழுதுவிட்டனர்.

2014ஆம் ஆண்டு சுதாதாரத் துறையின் கணக்கெடுப்பின்படி 15 – 49 வயதுக்குட்பட்ட 45% பெண்கள் தங்களின் துணையுடனான உறவில் வன்முறையை சந்திக்கின்றனர்.

ஆனால் பேச்சு தொடர்ந்து அந்த திசையில் செல்லவில்லை. நகைச்சுவையாளர் ஒருவர் வந்து தனது பேச்சால் அனைவரையும் சிரிக்க வைத்தார். அவர்கள் டேட்டிங்கில் நடைபெறும் குளறுபடிகள் குறித்து பேசினார். அதன்பிறகு `இமேஜ் கன்சல்டென்ட்` அதாவது நடை உடை பாவனை குறித்து பயிற்சி அளிப்பவர் ஒருவர் அனைவரையும் நேராக நிமிர்ந்து உட்கார சொன்னார். ஏனென்றால் நமது உடல்மொழி நமது தன்னம்பிக்கையை பிரதிபலிக்கும். தன்னம்பிக்கை உள்ளவர்களை அனைவருக்கும் பிடிக்கும் என்றார்.

அதன்பிறகு உணவு இடைவேளை. அதன் பிறகுதான் அவர்கள் பெரிதும் எதிர்பார்த்த ராபர்ட் வந்தார்.

“இது கணவரை கண்டறிவதற்கான ஒரு நிகழ்ச்சி. நீங்கள் கவனித்தால், இந்த கிறித்துமஸ் தினத்திற்குள் கணவரை கண்டறிய என்னால் உதவ முடியும்” என்றார் ராபர்ட்.

ஆனால் அது உங்களின் விருப்பமில்லை என்றால் தயவு செய்து இங்கிருந்து சென்றுவிடுங்கள் என்றார்.

“இன்று நான் உறவு குறித்து பேசப் போகிறேன். நீங்கள் ஒற்றை ஆளாக இருப்பதற்கு ஆண்கள் கிடைக்கவில்லை என்று பொருள் இல்லை. நீங்கள் உங்கள் தவறுகளால் ஒற்றையாக இருக்கிறீர்கள்” என்று பொருள் என்றார்.

அதில் ஒரு தவறாக ஆண்களுடன் விரைவில் உறவு வைத்து கொள்வதை அவர் கூறுகிறார். அதேபோன்று குறைந்த மற்றும் இறுக்கமான ஆடைகள் அணிவதும் தவறு என்கிறார். அவர் பேசுவதை குறிப்பு எடுத்து கொண்டிருந்த மேரிக்கு ஆச்சரியமாக இருந்தது தனது பேனாவை கீழே வைத்துவிட்டார்.

எவ்வாறு உணவு அருந்த வேண்டும் என ராபர்ட் பாடம் எடுக்கிறார். அதன்பிறகு ராபர்ட் வழி நடத்த பெண்கள் ஒருவரின் பின்னர் ஒருவர் நின்று கொண்டு உற்சாக நடனம் ஆடுகின்றனர் அதன்பிறகு அனைவரும் அவரவர் இருக்கைக்கு வந்துவிட்டனர்.

அதில் சில பெண்களை பேச அழைக்கப்போவதாக ராபர்ட் கூறுகிறார். அவர்கள் மேடைக்கு வந்து ஏன் ஒற்றையாக இருக்கின்றனர் என்று பேச வேண்டும். அதில் மேரியும் ஒருவர்.

நிகழ்ச்சியின்போது மேரி

நீங்கள் ஏன் ஒற்றையாக இருக்கிறீர்கள்? மேரியை கேட்கிறார்.

“எனது வீட்டு பக்கத்தில் ஒரு ஆண் இருந்தார். அவர் மிக ஆஜானுபாகுவான தோற்றத்துடன் வசீகரமாக இருப்பார். சிக்ஸ் பேக் வைத்திருப்பார்,” என்கிறார் கூட்டத்தை பார்த்து, கூட்டத்தினரும் அவரின் கதையை ஆர்வத்துடன் கேட்க தொடங்கினர்.

“நாங்கள் ஒன்றரை வருடங்களாக டேட் செய்தோம். அவருக்கு நைரோபியில் வேலை கிடைத்துவிட்டது. அதன்பிறகு ஒரு மூன்று மாதம் பேசினோம். ஆனால் அதற்கு பின் எந்த தொடர்பும் இல்லை.” என்றார் மேரி.

அவரை தொடர்பு கொண்டு பேசியபோது, “எனது வாழ்க்கைத் தரம் மாறிவிட்டது. எனது வாழ்க்கை முறை மாறிவிட்டது என்று சொல்லிவிட்டார்” என்றார் மேரி.

மூச்சு வாங்கினார்.

அதன்பின், “நீங்கள் உங்களை குறைவாக நினைத்து கொண்டீர்களா?” என்று ராபர்ட் கேட்டார்.

“ஆம் மிக குறைவாக நினைத்து கொண்டேன்.” அந்த ஆண் எனது தன்னம்பிக்கையை உடைத்துவிட்டார் என்று கூறிய மேரி அழ தொடங்கிவிட்டார்.

“அது மிகவும் கடினமான ஒரு உணர்வு. என்னிடம் ஏதோ குறை இருந்ததை போல உணர்ந்தேன்.” அதன்பிறகு அவர் யாரையும் காதலிக்கவில்லை என்றார். ராபர்ட் பேச தொடங்கினார் இந்த முறை அவரின் குரல் மெதுவாக இருந்தது.

அது மேரியின் தவறு இல்லை என்று அவர் தெரிவித்தார். அவர் தனது வாழ்க்கையில் மீண்டும் காதலை வரவேற்க வேண்டும் என்றார். இது உங்களின் நண்பர் ஒருவர் சொல்லும் அதே சொற்கள்தான். ஆனால் அந்த ஆறு மணிநேர நிகழ்ச்சிக்குப் பிறகு மேரி அது ஒரு பிரார்த்தனை கூட்டம் என்பதை போல தலையை ஆட்டினார்.

அதன்பின் தன் இருக்கைக்கு திரும்பும்போது நம்மை பார்த்து சிரித்தார். இது எல்லாம் எங்கிருந்து வந்தது என்பதை போல அவரின் தலையசைவு இருந்தது.

நிகழ்ச்சி முடிந்தது. பெண்கள் ஒருவரை தழுவிக் கொண்டனர். எண்களை பரிமாறிக் கொண்டனர்.

Short presentational grey line

‘டியர் வுமன்’ நிகழ்ச்சிக்குப் பிறகு ராபர்ட் புராலேவை நாம் சந்தித்தோம். அவர் ஒரு புகழ்பெற்ற வானொலி நிகழ்ச்சியில் பேசத் தயாராகிக் கொண்டிருந்தார். பார்க்க சோர்வாக இருந்தார். அந்த வானொலி நிகழ்ச்சிக்கு பிறகு தனக்கு ஓய்வு தேவை என்றார்.

‘டியர் வுமன்’ நிகழ்ச்சி குறித்து அவர் மகிழ்ச்சியாக காணப்பட்டார். அதில் அவருக்கு நல்ல பின்னூட்டம் கிடைத்திருந்தது. அவர் வழங்கும் அறிவுரைகளை நிச்சயமாக அவர் நம்புகிறாரா என்று அவரிடம் கேட்டோம். இந்த ‘பெண்கள் அவர்கள் செய்த தவறால்தான் ஒற்றையாக இருக்கிறார்கள் என்று நினைக்கிறீர்களா’ என்று கேட்டோம். நிச்சயம் பல காரணங்கள் இருக்கலாம் அல்லவா? என்றார்.

“அப்படி பேசினால் மட்டும்தான் பலன் கிடைக்கும். நீங்கள் நீங்களாக இருந்து உங்கள் அதிர்ஷ்டத்துக்காக காத்திருந்தால் உங்களுக்கு நிச்சயம் ஒரு கணவர் கிடைப்பார். ஆனால் நான் சொல்வதால் அது சீக்கிரம் நடைபெறும். அவர்கள் தங்கள் வாழ்க்கை தங்களின் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாக நினைப்பார்கள்” என்றார்.

“என்னை போன்ற பயிற்சியாளர்களை தேடி வருவோர் தாங்கள் ஒரு விஷயத்தை விரும்புவதாக நினைத்து வருவார்கள் ஆனால் எங்களிடம் வந்த பிறகு அவர்களின் தேவை வேறு என்பதை புரிந்து கொள்வார்கள்” என்கிறார்.

மேரி ஒரு ஆண் நண்பரை காணவுள்ளார். வெறும் நண்பர்தான். இருவரும் இரவு உணவு அருந்த செல்கின்றனர். எனவே நம்மிடம் டியர் வுமன் நிகழ்ச்சி குறித்து அதிகம் பேச அவருக்கு நேரமில்லை. இருப்பினும் அந்த நிகழ்ச்சியை அவர் விரும்பியதாக தெரிவித்தார். அவர் நிறைய கற்றுக் கொண்டதாக கூறுகிறார். அதேபோன்று ஒரு ஆண் உங்களை தீவிரமாக கருத்தில் கொள்ளும் வரை அவருடன் உடலுறவு வைத்து கொள்ள வேண்டாம் என்ற கருத்து குறித்து அவர் என்ன நினைக்கிறார் என கேட்டேன்.

Mary in Don't Panic T-shirt

“அது கொஞ்சம் பழைய யோசனை போல தோன்றியது. அதை நான் கேட்க மாட்டேன்” என்றார்.

அந்த நிகழ்ச்சி சொல்ல வந்த கருத்து ஒன்றுதான் நீங்கள் மகிழ்ச்சியாக இருங்கள். உங்களை நீங்கள் மகிழ்ச்சியாக வைத்து கொள்ளுங்கள். வேறு யாருக்கோ அன்பை வாரி கொடுக்கும் முன் உங்கள் மீதும் அன்பு செலுத்துங்கள்.

“நான் இன்னும் இளமையாகதான் இருக்கிறேன். காதல் என்னை தேடி வரும் என்கிறார்” மேரி.

ஐந்து மாதங்கள் கடந்துவிட்டன. மேரி ஒற்றையாகத்தான் இருக்கிறார். ஆனால் மகிழ்ச்சியாக இருக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »